அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இருட்டறையில் கண் சிமிட்டி!

அமெரிக்காவிலே, வாஷிங்டன் நகரிலே, முப்பத்தெட்டு நாட்டு மாணவர்களின் பிரதிநிதிகள் கூடிய மாநாட்டிலே, இந்திய மாணவர் பிரதிநிதியாகவும், காங்கிரஸ் வாதியாகவும் சென்றிருந்த சந்திரசேகரர் என்ற தோழர் இந்த மாதம் ஐந்தாம் தேதி பேசுகையிலே, “நான் பிரிட்டனின் நண்பன். பிரிட்டனை ஆதரிப்பவன். ஜெர்மன் ஆதிக்கத்தைவிட பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா சுதந்திரம்பெற அதிக வசதியுண்டு. ஆனால், இந்தியாவிலுள்ள 39 கோடி மக்களுக்கு அவ்விஷயம் தெரியாது” என்று சொன்னாராம். வெளிநாட்டார் நம்மைப்பற்றி என்ன எண்ணிக்கொள்வார்கள்! நமது நாட்டுப் பெரும்பான்மையான மக்களுக்குள்ள அறிவுசூன்யத்தை, அமெரிக்காவிலே போய்ப் பேசுகிறார், ஒரு காங்கிரஸ்வாதி. ‘எனக்குத் தெரியும் என் மக்கள் அறியார் என்றுரைக்கிறார்’ நாட்டு மக்களுக்கு இந்த நல்லறிவு இல்லையே என்று நொந்து கொள்கிறாரோ, நையாண்டி செய்கிறாரோ நாமறியோம், ஆனால் வெளிநாட்டவர் பலர்கூடிய மாநாட்டிலே, நம் நாட்டவரைப்பற்றி ஏளனம் பிறக்கும் விதத்திலே பேசுவோரை, நாம், நாட்டுக்குரிய நண்பனென்று கருதிடோம். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்து சுயாட்சி பெறுவது சுலபம், ஜெர்மன் ஆட்சியிலே அது முடியாது என்பதை காங்கிரஸ் மாணவர் நம்புகிறாரே, மற்ற 39 கோடி மக்கள் அதனை நம்ப மறுக்கிறார்கள் என்றும் கூறுகிறாரே, ஏன் இவர், நாட்டு மக்கள் இதனை நம்பும்படி பிரசாரம் செய்யவில்லை என்று நாம் கேட்கிறோம். இதே கருத்தைக் கூறிடும் லீகினரை, ஜஸ்டிஸ்காரரை, நாக்கில் நரம்பின்றி திட்டுவதையே பாரதமாதாவின் திருப்பள்ளி யெழுச்சியென்று கருதும் நண்பர்களே! கேளுங்கள், ஒரு காங்கிரஸ்வாதி, கடல் கடந்துசென்று, நமது நாட்டு மக்களின் அறியாமைபற்றி அங்கு பேசுகிறார். ஆனால், இங்கு அந்த அறியாமையை வளர்க்கும் திருப்பணியையே சந்திர சேகரர்கள் சதாகாலமும் செய்து வருகிறார்கள். மக்களின் மடமையைப் போக்குவதைத் தம் கடமை என்று கருதும் அறிவுடமை பிறக்காதவர்கள் மக்களை அடிமை மனப்பான்மையோராக்கு கின்றனர், என்று நாம் கூறுவதில் தவறுண்டா, சொல்லுங்கள். தேசீயத்தின்பேரால், கடவுளின் பெயரால், சன்மார்க்கத்தின் பெயரால், தோழர் சந்திரசேகரர் குறிப்பிட்ட 39 கோடி மக்கள் மனதிலே புகுத்தப் பட்டுள்ள மூடக்கருத்துகளை என்னென்று விவரிப்பது! ஆபாசக் களஞ்சியம்! அஞ்ஞானப் பெட்டகம்! சூட்சிச்சூழலில் சிக்கியதாக வன்றோ மக்களின் மனம் ஆக்கப்பட்டுவிட்டது. இதனைச் செய்தவர்களை, இதற்கு உடந்தையாக இருந்தவர்களை, இதற்குத் தத்துவார்த்தம் கூறமுற்பட்டு, தான் தோன்றிகளைத் தட்டிக் கொடுத்தவர்களை, ஆபாசம் தெரிந்தும் ஏனோ தானோவென்று இருந்தவர்களை இவர்களையே நாம், நாட்டைக் காட்டிக் கொடுத்தோர், நயவஞ்சகர், என்று கூசாது கூறுவோம். குன்றேறிச் சொல்வோம், குற்றுயிராக இருக்கும்போதுங் கூறுவோம், கொடியவர் இவரே என்போம். அவர்களுடன் பிறக்கநேரிட்டதை எண்ணி வெட்கத்தால் தலை குனிவோம்.

மக்களை, மாட்டுச்சாணத்தை மகத்துவமானது என்று நம்பும்படி செய்து, மடத்தனத்தை மதமெனக்கொண்டு மனமயக்கில் ஆழ்த்திய, கயவர்களின் கபடத்தை காலம் ஓரளவுக்கு வெளிப்படுத்திவிட்டது என்ற போதிலும், நாட்டு மக்களிலே பெரும்பான்மையினர், தெளிவு பெறவில்லை. நாட்டுத்தலைவர்கள், காட்டுத்தீயைக் கிளறிவிடுவதுபோல், வாலிபர் உள்ள எழுச்சியைக் கிளப்பிவிட்டு, ஓட்டு வேட்டைக்கு உபயோகித்துக் கொள்கின்றனரேயன்றி, இத்தகைய ஆபாசம் அழிந்துபட, மூடமதி முறியடிக்கப்பட்ட, வைதீகம் வீழ, இன்றுவரை, தமது சிறுவிரலை அசைத்தனரோ! வெள்ளையராட்சி ஏன்? வீண் செலவு ஏன்? கவர்னருக்குப் பங்களா ஏன்? கலெக்டருக்குக் கொள்ளைச் சம்பளம் ஏன்? என்று பேசிடும் கனல் கக்கிகள், வைதீகத்திற்கு இத்துணை திமிர் ஏன்? மடாதிபதிகளுக்கு ஊரை வளைத்துக்கட்டிய மாளிகை ஏன்? சங்கராச்சாரிக்கு பாதகாணிக்கையும் பரிவாரமும், பல்லக்கும் ஏன்? என்று கேட்டதுண்டா?

ஜாதித்திமிர் கூடாது என்று ஜப்பான் பிரசாரம் செய்கிறது. எனவே, பிரிட்டன், இந்திய ஜாதிக்கு அதிகாரத்தைத் தரவேண்டும் என்று இன்றும் மித்திரன் வாதாடுகிறதேயொழிய மனுமாந்தாதா காலமுதற்கொண்டு தன் இனத்தவர், சொந்தக்காரரை, நயவஞ்சகத்தால், நசுக்கியதுபற்றி ஒரு வார்த்தை கூறுமா! ஆங்கில ஆட்சி போய்விடவேண்டும் என்று ஆர்ப்பரிக்கிறதேயொழிய ஆரிய ஆதிக்கம் அழியவேண்டும் என்று கூறுகிறதா? இல்லை! கூறாது! கூறும் அளவு தெளிவு ஏற்படவில்லை என்று நாம் கூறோம். கூரிய மதி உண்டு மித்திரன் இனத்தவருக்கு! எனவே அவர்கள் மக்களின் கூன் உள்ளம் நிமிர்ந்துவிட்டால், தமது நிலை குலையும் என்பதை அறிந்தே வைதீகத்தை வளர்த்து வருகிறார்கள், போலி மார்க்கத்தைப் புகுத்துகிறார்கள், கோல்கொண்டோன் முன் நின்றாடும் குரங்குபோல் மக்கள் - நாம் - திராவிடர் ஆரியர்முன் அஞ்சிநின்று ஆடவேண்டும் என்ற கருத்து, மித்திரன் இனத்தவருக்கு மெத்த உண்டு. அவர்களின் நித்திய கர்மானுஷ்டாமை இதற்கே நடைபெறுகிறது.

நாட்டு மக்களுக்கு, வெள்ளையராட்சியிலே விடுதலைக்கு மார்க்கமுண்டு என்பது தெரியவில்லை என்று கூறினாரே ஒரு விவேகி வாஷிங்டனிலே, அவரைக் கேட்க ஆசைப்படுகிறோம் அகப்பட்டால், நாட்டு மக்களுக்கு உலகம் உருண்டை என்பதும் தெரியாத அளவு அஞ்ஞானத்தை, ஆயிரந்தலைகொண்ட ஒரு பெரும் பாம்பு இந்தப் பூமியைத் தாங்குகிறது ஏன்? கட்டுக்கதையை, தேவரும் மூவரும் ஏதேதோ திருவிளையாடல்கள் புரிகிறார்கள் என்ற தீயகதையை புகுத்தியவரகள் யார் எதற்காகப் புகுத்தினர், என்பதையும் நம்மக்கள் அறியமாட்டார்கள்

13.9.1942