அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘இருவரை‘ இழந்தோம்

நீதிக்கட்சியின் வெற்றித் தூண்களில் ஒருவராக விளங்கிய நெடும்பலம் சாமியப்பா அவர்கள், பிரிந்துவிட்டார் எனும் செய்தி கேட்டு, அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்கு முன்னதாகவே, தூத்துக்குடி நண்பர் வி.வி.தனுக்கோடி அவர்களும் போய்விட்டார் எனும் திடுக்கிடக்கூடிய செய்தி கிடைத்திருக்கிறது.

சாவின் விசித்திரங்களைப்பற்றி யாவரும் அறிவோமென்றாலும், நம்முடன் நெருங்கிப் பழகியோரின் பிரிவுபற்றி அறியும்போது, நெஞ்சம் திடுக்கிடத்தான் செய்கிறது.

நீதிக்கட்சியின் உயர்வுக்குப் பாடுபட்டுத் தக்க சமயங்களிலெல்லாம் தன்னுடைய தளராத ஒத்துழைப்பைத் தந்து, மக்கள் மன்றத்தில் தனியிடம் பெற்றவர், நெடும்பலம் சாமியப்பா. அவர், கூட்டுறவு இயக்கத்துக்காகவும், தறியாளர் இயக்கத்திலும், சாகும்வரை பொறுப்புகள் ஏற்றுப் பணிபுரிந்தார். பல தடவைகள் அரசு மன்றத்தின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அந்தக்கால நீதிக்கட்சியின் வரலாற்றைப் புரட்டினால், சகோதரர்கள்போலப் பவனிவந்த பன்னீர்ச் செல்வமும் – சாமியப்பாவும், தென்படுவார்கள். ஓமான் கடல், செல்வத்தை விழுங்கிய பின்னர், சாமியப்பாவே, நீதிக்கட்சியின் தொண்டர் களுக்கும் பெரியார் அவர்களுக்கும் ‘செல்வமாக‘ விளங்கினார்.

அத்தகைய நல்லதோர் நண்பரை இனி, நாம் காண முடியாது என்றெண்ணும்போது, உள்ளம் விம்மத்தான் செய்கிறது. அவரது, பிரிவால் வருந்தும் சுற்றத்தாருக்கும் அவருடைய புதல்வர்கள் என்.எஸ்.இராமலிங்கம், அருணாசலம் ஆகியோருக்கும் நம்முடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளும் இந் நேரத்தில், தூத்துக்குடி தோழர் வி.வி.டி. அவர்களிறந்த செய்தி நம்மைக் கலங்கச் செய்கிறது.

கடந்த ஆண்டு இதே திங்களில்தான் நமது பழம்பெரும் வீரர் பாண்டியனைப் பறிகொடுத்தோம். இப்போது நண்பர் தனுக்கோடி அவர்களை இழந்துவிட்டோம் நண்பர், நம்மீதும் நமது கழக அறப்போரின் விளைவாகச் சிறையில் கிடந்துழலும் தூத்துக்குடி கழக வீரர்கள் மீதும்வைத்திருந்த அன்பினை எண்ணும்போது துக்கம் நெஞ்சைத் துளைக்கிறது.

அவரது பிரிவால் வருந்தும் நண்பர் வி.வி.ராமசாமி அவர்களுக்கும் வி.வி.டி. அவர்களின் புதல்வருக்கும், குடும்பத்தாருக்கும் எந்த வகையில் ஆறுதுல் கூறுவதென்று தெரிவயில்லை. அத்தகைய பண்புடன் பழகினார்! பிரிந்து விட்டார்! அவரது பிரிவு பலருக்கு நஷ்டம் அவர்கள் அனைவருக்கும் நம்முடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திராவிட நாடு – 7-3-54