அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இதற்காகவா போராட்டம்!

ஈராறு கரமன்றோ
ஈசனார் புதல்வர்க்கு?
ஓராறு முகத்தார்க்கு
ஈராறு கரம் என்னல்
மாறாமோ உண்மைக்குச்
சீராரே, செப்புவீரே!!

இராகபாவத்துடன், புராணப்பிரசங்கி, இதுபோல் பாடி, வாதாடி, பொய்யை அழகாக மெய்யாக்க முயல்வதுண்டு. ஆறுமுகமுடையார் முருகன்! எனவே, பன்னிரண்டு கரம் இருந்தாக வேண்டுமல்லவா, இதை எவரேனும் மறுப்பரோ! - என்று கூறிப் புராண ஆபாச விளக்கம் கூறுவோரை, எள்ளிநகையாடுவர்!

கேளுமய்யா விந்தையை! முருகனுக்குப் பன்னிரண்டு கைகள் உண்டோ! - என்று, கேட்கின்றன, சில மனித உருவங்கள்! மனிதனுக்கு ஒரு முகம் - இருகரம் - இதை அறியாதார் ஏதும் அறியாதாரே! எனதப்பன் வேலனுக்கு, ஆறுமுகம் - முகத்திற்கு இரு கரம், ஆறு இரண்டு, பன்னிரண்டு - தவறா! இதையும் மறுக்கின்றனரே, மாபாவிகள்! என்று விளக்கமும் கூறுவர். ஆறுமுகம், என்பதற்கு என்ன அத்தாட்சி எப்படி அமைப்பு - இவை பற்றி வாய்திறவார். ஏதேனும் ஒரு விஷயத்தைத் தாமே தயாரித்து வைத்துக் கொண்டு, அதை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற வழிதரும் விதமாகக் கேள்வியைத் தயாரித்துக் கொள்வர். அதே முறையை அரசியல் புராணீகர்களும் பின்பற்றிப் பேசி வருகின்றனர்.

கட்டாய இந்தியை எதிர்த்து நாம் நடத்தும் அறப்போர், நாட்டு மக்களின் நல்லெண்ணத்தை நம்பக்கம் திரட்டிய வண்ணமிருக்கிறது. சிறுவர் மீது மும்மொழி திணிப்பதா என்று, நாடு கேட்கிறது.

இந்தியே வேண்டாம் என்று கூறவில்லையே, திராவிடர் கழகத்தார், கட்டாயப்படுத்தும் முறை எப்போதுமே கூடாது என்றும் அவர்கள் கூறவில்லையே, இந்தியைக் கட்டாயப்படுத்தாதே சிறு பிள்ளைகளுக்கு என்றுதானே கூறுகிறார்கள்! இவ்வளவு நியாயமான கோரிக்கையைக் கூடவா ஒரு ஜனநாயக சர்க்கார் உரிமைப்போர் நடத்தியவர்களால் நடத்தப்படும் சர்க்கார், மதிக்கக்கூடாது - அதற்காகப் பிடி! சிறையில் அடை! எடு தடியை! உடை மண்டையை! போடு144! என்றெல்லாமா கூறுவது, சேச்சே! மக்களாட்சிக்கு உள்ள இலட்சணம் இதுதானா! - என்றெல்லாம், பொதுமக்கள் பேசுகிறார்களல்லவா, இது, தமிழ்நாட்டுக் காங்கிரசின் தலைமைப் பீடத்தில் வீற்றிருக்கும் காமராஜருக்குக் கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது. ஏதாவது கூறிப் பிரச்னையை மறைக்க வேண்டும் என்று முயல்கிறார் - அதற்குப் புராணப் பிரசங்கியின் முறையே அவருக்குத் தக்கதெனத் தெரிகிறது - புராணம் பேசுகிறார்.

மாயவரத்திலே பேசுகிறார் களம் பல கண்ட காமராஜர் - அறப்போர்க் களத்துக்குத் தயார் என்று அரை இலட்சம் தமிழர்கள் ஈரோட்டில் கூடிய அதே சமயத்தில் - மக்களுக்கு, விளக்கம் தருகிறாராம்! எம்முறையில்?

போராட்டம் தேவையற்றது - போராடுவதற்கு ஏற்ற அளவு பெரிய விஷயம் ஏதும் இல்லை. வேண்டுமென்றே, அவர்கள் சாதாரண விஷயத்துக்காகப் போராடுகிறார்கள் - வீணாக, வீம்புக்காக, விரோதத்தால் என்று கூறுகிறார்.

புராணீகரின் உருக்கமான பேச்சு முறைப்படி, காமராஜர், “சர்க்கார் முதல்பாரத்திலிருந்து இந்தியைப் போதிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர், நான்காம் பாரத்திலிருந்து இந்தி போதிக்க வேண்டும் என்கிறார். இந்தச் சொற்ப வித்தியாசத்துக்காகவா, போராட்டம் ஆரம்பிப்பார்கள்?” என்று கேட்கிறார் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்.

சொற்ப வித்தியாசம்! சர்க்கார் கூறுவதற்கும், திராவிடகழகத் தலைவர் கூறுகூதற்கும்! இந்தச் சொற்ப வித்தியாசத்துக்காகவா, போராட்டம் என்று கேட்கிறார் - தமிழரும் இதையே கேட்கிறார்கள், இந்தச் சொற்ப வித்தியாசத்தைப் போக்கும் பெருங்குணம் ஏன் சர்க்காருக்கு இல்லை! இந்தச் சொற்ப வித்தியாசத்தை நாட்டு மக்களுக்குச் சட்டத்துக்கு உட்பட்ட முறையிலே எடுத்துக் கூறியதற்கா சோளக்கஞ்சிக் கலயத்தை எங்களிடம் தருகிறீர்கள்!

பெரியார், பலமுறை கூறினார் - முதலமைச்சரிடம் நேரிலும் சொன்னார், நான்காம் பாரத்திலிருந்து, இந்தியைக் கட்டாயமோ, இஷ்டமோ, எதையோ செய்து கொள்ளுங்கள், முதல் மூன்று பாரங்களில், மாணவர்கள் சின்னஞ் சிறுவர்களாக உள்ள நிலையில், இந்தியைக் கட்டாயமாக்க வேண்டாம் என்று கூறினார்.

சர்க்காருக்குப் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நோக்கமிருந்தால், என்ன செய்திருக்க வேண்டும் - இவ்வளவுதானே! சரி, செய்கிறோம் உமது கருத்தின்படியே! - என்று கூறிவிடவேண்டுமல்லவா?

காமராஜர் நம்மைக் கேட்கிறாரே, அந்தச் சொற்ப வித்தியாசத்துக்காகவா, போராட்டம் என்று. அவரை நாம் கேட்கிறோம், இந்தச் சொற்ப வித்தியாசத்துக்காக, ஏன் இவ்வளவு பிடிவாதம் காட்டுகிறதய்யா, உமது சர்க்கார்?

“பைத்தியக்காரா! ஓர் அரை அணாவுக்காகவா இப்படி மூச்சுத் திணறும்படி பேசுகிறாய், போடா போ!” என்று ஏழைப்பாட்டாளியின் வயிற்றிலடிக்கும் கனவான்போலப் பேசுகிறீரே, காமராஜரே! வித்தியாசம் சொற்பமானது என்கிறீரே, இந்தச் சொற்ப வித்தியாசத்துக்காகவா, உம் நண்பர்களால் நடத்தப்படும் சர்க்கார் இவ்வளவு பிடிவாதம் செய்கிறது - அடக்குமுறைப்படையை ஏவுகிறது - எங்களைச் சிறையில் அடைக்கிறது - எம் தாய்மார்களை நடுக்காட்டில் தவிக்கவிடுகிறது - கர்ப்பிணியையும் காட்டுக்குத் துரத்துகிறது - சொற்ப வித்தியாசம் என்கிறீர்! சொல்லொணாக் கொடுமையும் புரிய வைக்கிறீர்!!
இந்தச் சொற்பவித்தியாசத்தை நீக்கக்கூடவா, ஒரு ஜனநாயக சர்க்கார் பிடிவாதமாக முடியாது என்று சொல்லும் என்றுதான் நாங்களும் முதலில் எண்ணினோம் - மாநாடுகள் - மகஜர்கள் - மதிவாணர்களின் அறிக்கைகள் - இவையே போதும், சர்க்காரின் மனத்தைமாற்ற என்று எண்ணினோம்! ஆனால், இந்தச் சொற்ப வித்தியாசத்தை, எங்கள் கண்ணீர் கொண்டும், போக்கமுடியாது போனபிறகுதான், உரிமைப்போர் வீரரே! எங்கள் இரத்தம் கீழே சிந்தட்டும் என்று நாங்கள் துணிய நேரிட்டது. ஆட்சியாளரின் ஆணவக்கரையைத் தூய உள்ளம்கொண்ட எமது இரத்தத்தாலாவது, போக்கப்பார்க்கிறோம்.

கேலி பேசுகிறீரே, இந்தச் சொற்ப வித்தியாசத்துக்காகவா போராட்டம் என்று. வித்தியாசம் சொற்பம் என்பது உண்மையானால், எங்கே, அதை நீக்கிவிடுமே - போராட்டம், ஏது பிறகு; ஒரு சிறு மாற்றம்தானே கேட்டோம், மதிக்க மறுத்தீர்களே.

சொற்ப வித்தியாசத்துக்காகக்கூட உங்கள் ஆட்சியிலே, போராட்டம் நடத்தித் தீரவேண்டி இருக்கிறது, அவ்வளவு நல்லவர்கள் நீங்கள்!!

அடிப்படையைக் கெடுக்கக்கூடிய, அந்தஸ்தைப் பாழாக்கக்கூடிய, ஏட்டிக்குப்போட்டியான, காரியத்திற்கு உதவாத யோசனையை, எதிர்க்கட்சி கூறினால், ஆட்சியாளர் எப்படி ஏற்பது என்று எண்ணவும், ஒருக்காலும் இணங்கமுடியாது என்று கூறவும், பிறகும் எதிர்ப்புக் கிளர்ச்சி ஏற்பட்டால் அடக்கவும் முற்படும்.

மேதைகளான உங்கள் ஆட்சியிலே, நீங்களே எதைச் சொற்பவித்தியாசம் என்று கூறுகிறீர்களோ, அதற்குத் திராவிட கழகத்தலைவரையே 151-ஆவது செக்ஷன்கொண்டு தாக்கித் தனிப் பெருமை தேடிக் கொண்டீர்கள்.

சொற்ப வித்தியாசந்தானே! இதற்காக நாங்கள் போராடுகிறோம் என்கிறீரே, நீக்கிவிடுமே, இந்தச் சொற்பவித்தியாசத்தை!

இந்தியை, நான்காம் பாரத்திலே, கொண்டுபோய் நிறுத்தினால் என்ன கேடு நேரிட்டுவிடும் என்று அஞ்சுகிறீர்கள்? மதிப்பு மங்கிவிடுமா? பாரதமாதா சபித்திடுவாளா என்ற பயமா? எது கெட்டுவிடும், சொற்ப வித்தியாசந்தானே சர்க்காரின் திட்டத்துக்கும், எங்கள் தலைவர் கூறுவதற்கும் - இதற்கு, ஏன் வீண்பிடிவாதம்! இதற்கா போராட்டம் என்று கேட்கப்பயன்படும் அறிவைக் கொஞ்சம் ஆளவந்தார்களின் போக்கைத் திருப்பவும் உபயோகித்துப்பாருமே!

நமது திட்டத்துக்கும் அந்த இராஜகோபாலாச் சாரியாரின் யோசனைக்கும், அதிக வித்தியாசம் இல்லையே, சொற்ப
வித்தியாசந்தானே, இதற்காக ஒருபோராட்டத்தை உண்டாக்கிக் கொள்வானேன்? போலீசை ஏவுவானேன்? மாற்றிவிடலாமே பாடத்திட்டத்தை என்று, ஏன் மந்திரிசபைக்குக் கூறக்கூடாது? மாயவரத்தில் மக்கள் முன்பு, மதிமிகுந்த பேச்சுப் பேசுவதாக மனப்பால் குடித்து உரைத்த அந்த வாதத்தைச் சற்று, ஆட்சியாளர்களின் பக்கம் திருப்பி வீசிப்பாரும், முடிந்தால் - துணிவுமிருந்தால்!

சொற்ப வித்தியாசமாம், சொற்பம்! ஒருவாரம் முதல், மூன்றுமாதம் வரை, பலரகச் சிறைத்தண்டனைகள் இந்தச் சொற்பத்துக்கு!! தடியடிகள் இந்தச் சொற்பத்துக்கு!! கூட்டம் கூட்டமாகப் பிடித்துச் சிறையில் தள்ளுவது இந்தச் சொற்பத்துக்கு.

இந்தச் சொற்ப வித்தியாசத்துக்கே இவ்வளவு அடக்குமுறை வீசுகிறார்களே, அற்ப அதிகார போதையினால் தம்மை மறந்து, ஏன் என்று, அறிவுலகம் கேட்கிறது, உம்மைப் பார்த்து!

இதற்காகவா, இந்தப் போராட்டம் - என்று கேட்கிறீர், வேறு காரணமும், காட்டுறீர், எமது போராட்ட நோக்கமென. நானும் கேட்கிறேன். இந்திக்காகவா ஆளவந்தார்கள் இவ்வளவு பிடிவாதம் செய்கிறார்கள்! அதிலும், சொற்ப வித்தியாசமே இருக்கும்போது, பாடத்திட்டத்தை மாற்றிவிட்டால், கேடு ஏதும் வாராது என்ற நிலையில், இவ்வளவு பிடிவாதம் காட்டுகிறார்களே, இந்தி மட்டுமா, இதற்குக் காரணம்! அல்ல! அல்ல!!

இதற்காக அல்ல இந்தப் போராட்டம். காங்கிரஸ்மீது உள்ள கெட்ட எண்ணம்தான் இவ்வாறெல்லாம் செய்யச் சொல்கிறது - என்று மாயவரத்தில், எம்மீது பழி சுமத்திப் பேசினீர்.
இந்திக்காக அல்ல நீங்கள் இவ்வளவு பிடிவாதம் காட்டுவது - எதையாவது சாக்காகக் கொண்டு, எதிர்க்கட்சியை ஒழித்துவிடவேண்டும் என்ற கெட்ட எண்ணம் உங்களைப் பிடித்து ஆட்டுகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன் - மறுப்பு உண்டா, மதிவழி நிற்கும் காரணத்தோடு கூடிய மறுப்பு!

இந்தியைப் புகுத்துவது இந்திக்காக அல்ல - இந்நாட்டை வடநாட்டுக்கு ‘எடுபிடி’ ஆக்குவதற்காக, அடிமை முறிச் சீட்டில், வடநாட்டினருக்குத் தெரிந்த மொழியிலே கையொப்பம் இடச் செய்ய வேண்டும் திராவிடமக்களை என்பதற்காக, இந்தியைத் திணிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறேன். இல்லை என்றால், ஏன் இந்த இந்திக்காக இவ்வளவு பிடிவாதம் காட்டுகிறீர்கள்!! நாலைந்து வைதீகர்கள், இரண்டொரு பணம் பிடுங்கி வக்கீல்கள் போட்ட கூச்சலைக் கேட்டு, உமது நண்பர்கள் கூட அல்ல, உமது எஜமானர்களான மேலிடத்தார்கள், இனாம்தாரை, ஜமீன் இனாம் ஒழிப்புச் சட்டத்திலிருந்து நீக்கினார்கள் - சிங்கமெனச் சீறிய சர்க்கார், பிறகு பங்கப்பட்டதைக்கூட மறந்துவிட்டு, இனாம்களை விலக்கிவிடவில்லையா! வீரம், ரோஷம், ஏதாவது குறுக்கிட்டதா! ஆளவந்தார்கள் கொண்டுவந்த ஜெமீன் இனாம் ஒழிப்புத் திட்டத்துக்கும், டெல்லி திருத்தி அனுப்பிய திட்டத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம், சொற்பம் கூட அல்லவே, அடிப்படையே மாறுகிறதே, இருக்கும் சரி, என்றுதானே சொன்னீர்கள்! இந்தி விஷயத்தில், சொந்த நாட்டினர், சொற்ப வித்தியாசமுள்ள மாற்றத்தைக் கூறும் போதும் மட்டும் ஏன் பிடிவாத குணம் கொள்கிறீர்கள்! காரணம் வேண்டுமே!! கூறுமே. யாராவது விஷயமறிந்தவர்களைக் கேட்டுப் பார்த்து, நீராவது தெரிந்து கொள்ளும்.

இந்தி விஷயம், மொழி சம்பந்தமானது மட்டுந்தான் என்றால், அதற்கு எந்தச் சர்க்காரும் இவ்வளவு பிடிவாதம் காட்டாது. வேறு ஏதோ, உள் எண்ணம் இருக்கவேண்டும் இந்தப் பிடிவாதத்துக்கு!

நள்ளிரவில், கொல்லைப்புறக் கதவின் தாளை ஓசைப்படாமல் நீக்கிடும் கள்வனைக் கையும் பிடியுமாகக் கொண்டு வந்தால், அவன், “நான் என்ன செய்தேன் வீட்டுக்குடையவரே! நீர் தாளை ஓசைப்படத் திறப்பீர் - நான் ஓசை எழாதபடி திறந்து பார்த்தேன் - இந்தச் சொற்ப வித்தியாசத்துக்காகவா, அடியேனைப் பிடித்துப் போலீசில் ஒப்படைப்பது , உங்களுக்கு, என்மீது ஏதோ ஒரு கெட்ட எண்ணம், அதனாலேதான், இந்தச் சொற்ப வித்யாசத்துக்காக என்னை இப்படிச் செய்தீர் - என்றா கூறுவது!

இந்தியை நுழைப்பது இந்திக்காக மட்டுமானால், நாலாம் பாரத்திலே நுழைத்தால் என்ன? ஏன் சிறு பிள்ளைப் பருவத்திலேயே - விளக்கம் அறியாத குழந்தைகளாகப் பார்த்துப் புகுத்தவேண்டும்?

இந்தி, இந்திக்காக அல்ல! இந்தி, வடநாட்டுக்கு இந்நாட்டை அடிமைப்படுத்த. ஆகவேதான், இந்திப் பாடத் திட்டத்திலே சொற்பவித்தியாசமுள்ள மாற்றமும் செய்ய உமக்கு மனம் இல்லை - இந்தச் சூட்சமத்தைத் தெரிந்ததால்தான், இந்தச் சொற்ப வித்யாசத்துக்குப் போராட்டம் நடத்தவேண்டி நேரிடு
கிறது எங்களுக்கு! நாங்கள் இப்போராட்டத்தினால் பாதிக்கப்படுபவர்கள் - எங்களை நீர், கேலியும் செய்கிறீர், இதற்கா போராட்டம் என்று பேசி-எங்கள் போராட்டத்திற்கு, உட்காரணமும் கற்பிக்கிறீர்!

சொற்ப வித்யாசம் என்பது உண்மையானால், பிடிவாதத்தை விட்டுவிடச் சொல்லும் ஆளவந்தார்களை, போராட்டம் தானாக நின்று விடுகிறது. செய்து பாருமே! இல்லையானால், உண்மையையாவது பேசும் வடநாட்டுக்குத் தென்னாட்டை அடிமைப்படுத்துவதே எமது வேலை, அதற்காகவே நாங்கள் ஆளவந்தோம் என்று கூறும். ஏன், மாய வேடம் புனைகிறீர், புராணம் பேசுகிறீர்! இந்தி ஏன்? அதிலே இவ்வளவு பிடிவாதம் காட்டக் காரணம் என்ன? சொற்ப வித்யாசந்தான், போராடும் தலைவருக்கும், அடக்குமுறை வீசும் சர்க்காருக்கும் இடையே என்று கூறுவது, நாணயமான பேச்சாக இருக்குமானால், ஏன், சொற்ப வித்தியாசத்தைப் போக்க முன்வரக்கூடாது!

சொற்ப வித்யாசம் - சரி - நீக்கிவிடும் என்று சொன்னால், கெட்ட எண்ணக்காரர்கள் நாங்கள் என்று கூறுகிறீர். தமிழ்ப்புலவர்கள் சொன்னால், அவர்கள் வயிற்றுச் சோற்றுக்காகத் தமிழைப் படித்தவர்கள், அவர்களுக்கு என்ன தெரியும் என்று அமைச்சர் அவினாசியார் கூறுகிறார் - (அவருக்கு வயிறும் இருக்கிறது, சோறும் தேவைப்படுகிறது, சொந்தத்தில் சோறு கிடைக்கச் செல்வமும் இருக்கிறது - மந்திரி வேலைக்குச் சம்பளம் மட்டும் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்.) தமிழரசுக் கழகத்தார் கூறினால், ம.பொ.சி, ஈரோடு போய்வந்தார் - என்று கூறுகிறீர்! காங்கிரசிலே பற்றுக்கொண்ட பலர்கூட, இந்தி கட்டாயப் பாடம் வேண்டாம் என்று கூறுகிறார்கள் . பல இதழ்கள், இந்தித் திட்டத்தைக் கண்டிக்கின்றன! அவற்றையோ, அடங்காப் பிடாரிகள் என்று கூறிவிடுகிறீர். இப்படி இந்தித் திட்டத்திலே, மாற்றம் வேண்டும் என்று கேட்கும் ஒவ்வொரு வருக்கும் ஏதேனும் ஒரு பழியைச் சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்கிறீர்! சொற்பவித்தியாசத்துக்காகப் போராடும் எங்களை மறந்துவிடும், “போராடாத” வேறு பலர், கூறியதற்கு, மதிப்பு அளித்தீர்களா? அளித்திருந்தால், போராட்டம் தொடங்கியிருக்க முடியுமா? வித்தியாசமும் சொற்பம், இந்தித் திட்டத்தை மாற்றும்படி கேட்டுக்கொள்பவர்களும், பலர், பல வகையினர்; திராவிட கழகத்தார் மட்டுமல்லர்! சொற்ப வித்தியாசந்தானே, சர்க்காரின் திட்டத்துக்கும் நாம் கூறும் மாற்றத்துக்கும் இருக்கிறது, மக்களை மதிக்கும் பொறுப்புள்ள இந்த ஜனநாயக சர்க்கார், நமது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்றுதான், அவர்களெல்லாம் நம்பினர். திராவிட கழகம் அறியும் இந்தி இந்திக்காக அல்ல, என்ற சூட்சமத்தை. எனவேதான் அறப்போர் தொடத்திருக்கிறது.
***

குற்றம் புரிந்தவனைக் கூண்டிலே நிறுத்திக் கேள்விகளைப் பூட்டினார் வழக்கு மன்றத் தலைவர். அவன் அசகாய வீரன் - ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு ரகமான பதிலளித்தான்.

பக்கத்து வீட்டுக்காரர் கூறுகிறாரே, பாண்டுரங்கம் ஒரு பக்காத் திருடனென்று - என்ன சொல்லுகிறாய், அதற்கு-?

பொறாமை காரணமாக அப்படிச் சொல்லுகிறார் பக்கத்து வீட்டுக்காரர்.

அவர், பக்கத்து வீட்டுக்காருக்குப் பந்து, அதனால் அப்படிக் கூறுகிறார்.

உன் அண்ணன் கூடத்தான் அயோக்கியன் நீ, என்று கூறுகிறான்?

பாகப் பிரிவினைத் தகறாரின் காரணமாக அந்தப் பழி சுமத்துகிறான், என் அண்ணன்.

பரந்தாமன் உன்னைப் பற்றிச் சொல்வது?

பங்காளிக் காய்ச்சலின் விளைவு.

உன் மனைவியே, ஒருநாள் அழுதுகொண்டே சொன்னாளாமே, தன் தங்கையிடம்?

அவள், பதிபக்தியற்ற பஜாரி!

பழைய ரிகார்டு, இருக்கிறதே, முன்பொரு முறை நீ, களவாடியவன் என்று காட்ட!

முன்பிருந்த அதிகாரி, தவறாக நடந்துகொண்டார், என்பதற்கு, அந்த ரிகார்டே, சாட்சி!
***

இப்படி எங்கும் நடைபெறவில்லை. ஆனால், இந்தி விஷயமாக, நீங்கள் பேசுவதும் பதிலளிப்பதும், இது போலிருக்கிறது.

யோசித்துப் பார்க்கவேண்டும் - இந்தி கூடாது என்பதை மொழி நிபுணர்கள், தமிழ்ப் புலவர்கள் கல்வித் துறை வல்லுநர்கள், காங்கிரசுக்குத் தோழைமைக்கட்சியினர், காங்கிரஸ் கட்சியினரிலேயே சில பலர், எடுத்துக் கூறினர் - போராடவுமில்லை - மனுச் செய்து பார்த்தனர். ஒவ்வொருவர் சொல்லுக்கும், ஒரு காரணம் ஒரு பழியும் சுமத்தத் துணிந்தீர்கள். எல்லோருடைய, வேண்டுகோளையும் நிராகரித்தீர்கள். எந்த எச்சரிக்கையையும் துச்சமென்று கூறிவிட்டீர்கள். திராவிட கழகத்தாராகிய நாங்கள் யோசிக்கலானோம், இந்தி ஒரு சாதாரண மொழித் திட்டம் என்ற அளவிலே ஆளவந்தார்கள் கருதினால், இவ்வளவு பேருடைய எதிர்ப்பையும் கண்டு, சொற்ப வித்யாசமும் செய்ய முடியாது என்று பிடிவாதம் காட்டுவாரா - இதில் ஏதோ சூட்சமம் இருக்கவேண்டும், என்று யோசிக்கலானோம், அதன் பயனாகத் தெரிந்தது, இந்தித் திட்டம், மொழித் திட்டமல்ல, நாட்டை அடிமைப்படுத்தும் சூழ்ச்சித் திட்டம் என்பது. எனவேதான் அறப்போர் தொடுத்தோம்!

இலாபம் இல்லாதார் தந்த 5 கோடி!
இலாபமில்லை! எனவேதான், தொழிலிலே ஆர்வமில்லை.
கூலி உயர்ந்துகொண்டே போகிறது, தொழிலாளரின் கிளர்ச்சிகளும் ஓய்வதாகக் காணோம். அவர்களின் திருப்தியைப் பெறக்கூடிய விதமாகக் கூலி கொடுத்து, முற்போக்காளர்களின் யோசனைகளுக்குத் தக்கபடி தொழிலாளர்களுக்கு, வசதிகள் செய்து கொடுத்து, வருமான வரியையும் கொட்டித் தந்து, மிச்சம் என்ன இருக்கிறது என்று பார்த்தால், பாடுபட்டதும், திட்டம் தீட்டியதும்தான் மிஞ்சுகிறது. இலாபம் இல்லை, தொழிலில், எனவே, தொழில் நடத்த ஊக்கம், உற்சாகம் ஏற்படுவதில்லை.

மாடோ, மலடு! மதுரமான பால், தேவை என்றால், எங்கிருந்து தருவது! மாடே, வேண்டாம், மகராஜனாக, நீயே கொண்டு போ? இந்தக் ‘கோணைக் கொம்பனை.’

சந்தேகமிருந்தால், எங்கள் புள்ளி விவரத்தைப் பார்! மூலப்பொருள்களின் விலை, விஷம்போல் ஏறிவிட்டது. தொழிலாளர் கூலியோ உயர்ந்துவிட்டது. வரியோ, சொல்லமுடியாதபடி ஏறிவிட்டது. இலாபம் எப்படிக் கிடைக்கும்! சர்க்கார் தாராளமாக, தொழில்களை எடுத்து நடத்தட்டும், எங்களுக்குச் சேரவேண்டிய பணம் கொடுத்துவிட்டு. இலாபம், கருகிவிட்டது; ஆர்வம் அழிந்துவிட்டது! -

இது, முதலாளிகளின் முகாரி - சர்க்கார் சற்றுக் கண்டிப்பாகப் பேசும்போதும் சரி, தொழிலாளி தன் துயரத்தைக் காட்டிப் பரிகாரம் கேட்கும்போதும் சரி - இலாபம் இல்லை, இலாபம் இல்லை, என்றே, அழுகுரலில் பேசுகிறார்கள் - அதற்கான, கணக்குகளைக் கூடக் காட்டுகிறார்கள்.

விலைவாசி ஏறிவிட்டதால், ஏழை புழுப்போலத் துடிக்கிறானய்யா! அவனுக்குத் தரும் கூலி போதவில்லை, சற்று அதிகமாகக் கொடு - உன் யந்திரம்கூட அதற்குத் தேவையான ‘தீனி’ போட்டு, வசதி செய்யாவிட்டால் வேலை செய்யாதே சரியாக! ஏழை உயிருக்கு ஊசலாடும்படியான நிலையில் வைத்துவிட்டு, வேலை வாங்குகிறாயே, சரியா, முறையா, என்று யாராவது துணிந்து கேட்டுவிட்டாலோ, “ஏழை அழுகிறான், என்ன செய்வது? இலாபம் இல்லையே தொழிலில், எப்படிக் கூலியை உயர்த்த முடியும்,” என்று கூறிக் கைவிரித்து விடுகின்றனர், இந்தக் கண்ணியர்கள்.

உண்மை என்ன? இலாபமே இல்லையா? பண மூட்டைகளுக்குப் பக்கத்தில் இருந்துகொண்டே, பஞ்சப் பாட்டுப் படிக்கிறார்களா, அல்லது உண்மையிலேயே, தொழிலிலே இலாபமே கிடைப்பதில்லையா? என்று சிந்திக்கத் தொடங்கினால், திகைப்பு உண்டாகும் - நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு.

ஆனால், உலகம் அறிந்த நேருவே, திகைத்துவிடக்கூடிய ‘சம்பவத்தை’ இலாபமில்லை என்று முகாரி பாடும் முதலாளிமார்கள், நடத்திக்காட்டினர்.

நேரு, இதுவரை பார்த்திராத அளவு தொகை குறிக்கப்பட்டிருந்த ‘செக்’ ஒன்றை, அவரிடம் தந்தனர், இலாபமே பெறாத, பரோபகாரிகள்! அவருக்காக அல்ல, காந்தியார் நினைவு நிதிக்காக! ரூபாய் 5 கோடி!! ஆமாம், இலாபமே கிடையாது, இந்த ‘நன்கொடை’ தந்த நல்லவர்களுக்கு!!

வரியாகவோ, நன்கொடையாகவோ, இவ்வளவு பெரும் தொகை பொதுநிதிக்கு, அவர்களிடமிருந்து வந்ததுபற்றி, மகிழ்கிறோம். ஆனால், ஐந்து கோடி ரூபாய் நன்கொடையை, ‘அனாயாசமாக’க் கொடுக்கும் நிலையிலுள்ள இவர்கள், தொழிலிலே இலாபமே கிடைப்பதில்லை என்று கூசாது பேசினரே - இலாபமே இல்லை என்றால், ஏது இவ்வளவு பெரிய தொகை! கதை கூறுவார்களே, அலாவுதீன் தீபம், அதுவா? இல்லையானால், காந்தி நிதியின் அவசியத்தை உணர்ந்து, தங்கள் மூலதனத்திலேயே ஒரு பகுதியைக் கொடுத்தனரா? எப்படித் தரமுடிந்தது, ஐந்துகோடி ரூபாய் நன்கொடை? எப்படி மனம் வந்தது, கருணை பிறந்தது என்று கேட்கவில்லை. கருணை அல்ல, அதற்குக் காரணம் - தங்கள் ‘சக்தி’ இதுவென்று சர்க்காருக்கு அவர்கள் ‘ஜாடை’ காட்டுகிறார்கள் என்பதுதான் உண்மை. எதுவாயினும் சரி, ஏழைத் தொழிலாளிக்குக் கூலியை உயர்த்த முடியாது, இலாபம் கிடைப்பதில்லை என் று கூறியவர்கள், இவ்வளவு பெரிய தொகையை எப்படித் தர முடிந்தது?

நன்கொடையைப் பெற்றுக் கொண்டு நன்றி செலுத்திய தலைவர்கள், இதைக் கேட்டிருக்கலாமே!

இது, இந்த ஆண்டு, அல்லது இதற்கு முந்தைய ஆண்டு கிடைத்த இலாபத்தில் அல்ல - பல ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த இலாபத்தை நாங்கள் மிச்சம் பிடித்து வைத்திருந்தோம், அதிலிருந்து, இந்தத் தொகையைத் தருகிறோம் என்று அவர்கள் சாக்குக் கூறினால்கூட, தலைவர்கள் கேட்கலாமே, இலாபத்திலே சேர்ந்த தொகைதானே இது - இலாபமே இல்லை என்று கூறினீர்களே, ஐயன்மீர்! இவ்வாண்டு இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், முன்னாலே குவித்து வைத்திருக்கும் இலாபக் குவியலிலே இருந்து ஒரு சிறு தொகையைச் செலவிட்டுத் தொழிலாளியின் துயரைக் குறைக்கலாம் என்ற எண்ணம் ஏன் படவிடவில்லை. தொழிலாளியின் உழைப்பின் மிச்சம்தானே, அந்த இலாபக்குவியல்! உன் ‘சமர்த்தும்’ அவனுடைய வெள்ளை உள்ளமும் சேர்ந்துதானே, இலாபக்குவியலாக மாறிற்று - அதிலே ஒரு பகுதியை அந்தப் பாட்டாளிக்குச் செலவிடச் சொன்னால், முகாரி பாடினீரே, இதோ இப்போது, எங்கள் முகமும் அகமும் மலரவேண்டும் என்று, ஐந்து கோடி தருகிறீர்களே, ஏனய்யா பொய்பேசினீர் கூசாது) - என்று இடித்துப் பேசியிருந்தால், இனியும் தங்கள் இறுமாப்பும், இரட்டை வாழ்வுப் போக்கும் நடைபெறாது என்பதை உணர்ந்து, முதலாளிகள் திருந்தியிருக்கக்கூடும். ஆனால், தலைவர்கள், நன்றி கூறினர் – நமது கூட்டுறவு பலப்படவேண்டும் என்று உபசாரம் பேசினர் - இவ்வளவு பெரும் தொகை தந்த பெரியவர்களின் பெருங்குணத்தைப் பாராட்டிப் பேசினர்.

உணவுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு மாறாக அதிகம் விருந்தாளிகள் கூடியிருந்தது கண்டு, விருந்தில் கலந்துகொள்ள மறுத்து, கவர்னர் ஆனே வெளி ஏறினார் என்றொரு செய்தி கண்டோம் சின்னாட்களுக்கு முன்பு; இது சரியானபாடம் கற்பித்திருக்கும், மேட்டுக் குடியினருக்கு! இதுபோல ஏழைக்கு இதம் செய்யப் பணம் இல்லை என்று கூறி, எந்தத் தொழிலாளர்களின் வியர்வையைக் கொண்டு, இந்தப் பணந்தேடிகள் இலாபம் பெற்றனவோ, அந்தத் தொழிலாளிக்குக் கூலி சிறிதளவு உயர்த்தவும் முடியாது என்று கூறிய, கடின சித்தர்களின் ‘நன்கொடை’யைப் பெற மறுத்து, அந்தக் கூட்டத்திலிருந்து, நேருவும் படேலும் வெளி ஏறி இருந்தால், நிச்சயமாகப் பயத்தாலும் வெட்கத்தாலும், அந்தப் பணந்தேடிகள் நடைப்பிணங்களாகி இருப்பர் - நாடு மட்டுமா? உலகமே சிரித்திருக்கும்.

உதவாது உலுத்தரின் பணம்! என்று ஒரு வார்த்தை கூறிவிட்டு, ஆனே, வேறோர் சம்பவத்தின்போது தைரியமாகச் செய்தது போல இவர்கள் செய்திருந்தால், பணந்தேடிகள், பதுங்க இடந்தேடிக் கொள்ளவேண்டிய நிலைமை பிறந்திருக்கும்.

சாதாரண மனித சுபாவம் - (உயர் பண்பு அல்ல) - படைத்தவர்கள், எந்தத் தொழிலிலும், வகையிலும், பணம் திரட்டினாலும், முதலில், தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள அதனைச் செலவிட்டு, பிறகு, அந்த வாழ்க்கைத் தரம், குறைந்தது இரண்டு மூன்று தலைமுறைக்காவது குறையாது இருக்க வேண்டும் என்பதற்கான, ‘சொத்துச் சேகரிப்பு’ திட்டத்துக்குச் செலவிட்டு, பிறகு களிப்பு, கேளிக்கைக்குச் செலவிட்டு, பிறகு, மேல் உலகில் இடம்பெற, மதக் காரியத்துக்குச் செலவிட்டு, இவ்வளவும் தீர்ந்த பிறகே, பொது நலனுக்கான நன்கொடை தர, இசைவார். இதுதான் ‘அந்த உலகின்’, நடைமுறைத் திட்டம்.

பொதுநலத்துக்கான நன்கொடை தருவதற்கு முன்பு, இவ்வளவு ஆசைகளும் தீர்க்கப்பட்டாக வேண்டும் - அந்தச் செலவுகள் நடந்தும் மிதமிஞ்சிப் பணம் இருந்தால், நன்கொடை தருவர்.

இந்தத் திட்டத்தின்படி, எவ்வளவு கோடி ரூபாய் இலாபம் கிடைத்திருந்தால், இவர்கள் ஐந்து கோடியை நன்கொடையாகத் தந்திருக்க முடியும் என்பதை யூகித்துக்கொள்ள வேண்டுகிறோம்.
அரண்மனை போன்ற வீடு, அரசிளங்குமரிகள் உலவும் நந்தவனம், போன் தோட்டம், புத்தாண்டு மாடல் மோட்டார் என்னும் வாழ்க்கை மெருகுகள் பெறச் செலவு செய்தது போக, மிச்சமாகி இருப்பதில் ஒரு சிறு பகுதி, இந்த ஐந்து கோடி!

இவ்வளவு இலாபம் பெற்றவர்கள், ‘பஞ்சை’ வேஷம் போட்டுக் கொண்டு, பாட்டாளியை ஏமாற்ற, இலாபம் இல்லை, என்று கூசாது பொய் கூறினர். துரைத்தனத்தாரையும் திகைக்க வைத்தனர், இலாபம் இல்லை என்ற புள்ளி விவரம் காட்டி! அவர்களே புன்னகையுடன், ஐந்து கோடி ரூபாய் நிதியைத் தருகின்றனர்!! - இதைப் பெற்றுக்கொண்ட ‘தலைவர்கள்’ பூரித்துப் போயினர் - யோசித்துப் பார்க்கும் போது, ஆத்திரமல்லவா பொங்கி இருக்கும் அவர்களுக்கு.

ஐந்து கோடி ரூபாயைக் கொடுக்கும்போது, முதலாளிகளின் முகத்திலே , எத்தகைய குறும்புப் பார்வை இருந்திருக்க வேண்டும்! அதைப் பெற்றுக்கொண்ட தலைவர்களின் முகபாவம், எப்படி இருந்திருக்கும்! மனக்காமிராவால், படம் பிடித்துப் பாருங்கள்!

என்ன பொருள் இந்த நன்கொடைக்கு? நாட்டை ஆளும் தலைவர்களே! மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மாணிக்கங்களே! நீங்களும் ஓயாது பேசி அறிக்கை மேல் அறிக்கைவிட்டு, கமிட்டிகள் அமைத்து, உருக்கமான விளம்பரங்கள் வெளியிட்டு நாடு சுற்றிப்பார்த்தீர்கள்! எவ்வளவு நன்கொடை பெற முடிந்தது உங்களால்! இதோ பார்த்தீர்களா? எங்களிடம் உள்ள பண பலத்தை - ஐந்து கோடி, ஐயா, ஐந்து கோடி! - என்று கூறி, இந்தப் பலத்தை எதிர்த்து நிற்க முடியுமா உங்களால், எண்ணிப்பாருங்கள், என்று கேலி பேசுவது, என்றே பொருள், இந்த நன்கொடைக்கு! பணத்தால் அடித்துக் காட்டுகிறார்கள், தலைவர்கள்!!

(திராவிட நாடு - 01.05.49)