அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இதிலென்ன தவறு?
ஆரியர்களால் வடமொழியில் எழுதப்பட்ட நூல்களெல்லாம் நூற்றுக்குநூறும் அவர்களுடைய ஆதிக்கத்தை எல்லாத்துறைகளிலும் உயர்த்தவும், ஆரியரல்லாதாரைத் தாழ்த்தி அடிமைப்படுத்தவுமே எழுதப்பட்டதென்பதை, நாம் பலகாலமாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறோம். நாம் மட்டுமல்ல, மேல் நாட்டு பேரறிஞர்களான கால்டுவெல், இ.ஜெ.சாபின்ஸன், சார்லஸ், இ.கவர், ஆகியவர்கள் இந்தியாவைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய நூல்களில் எல்லாம் இவ்வுண்மைகளை நன்கு தெளிவுபடுத்தியுமிருக்கின்றனர் என்பதை ஆராய்ச்சி உலகம் நன்கு அறியும்.

நாம் நாட்டில் ஒரு சாதியினர் உழைப்பற்ற உயர்ந்த வாழ்வில் இருக்கவும், மற்றச் சாதியினர் உழைத்தும் உண்ண உணவின்றி ஊசலாடவும் காரணமாக நிற்பவை ஆரியர்களால் எழுதப்பட்ட நூல்களே என்பதையும் நாம் பன்முறை எடுத்துக் காட்டியிருக்கிறோம். இந்த உண்மையையே டாக்டர் அம்பேத்கார் அவர்களும் அண்மையில் எடுத்துக்காட்டியுள்ளார். ஆரிய வேதங்களும் கீதையுமே நம்மவர்களுடைய முன்னேற்றத்திற்கு பெரும் தடைகற்களாக உள்ளனவென்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். இந்நூல்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அளவு கடந்த முறையில் தாக்கியிருக்கின்றனவென்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். இந்நூல்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அளவு கடந்த முறையில் தாக்கியிருக்கின்றனவென்பதை அறிவுறுத்தியதோடு இங்ஙனம் ஒரு சாராரை உயர்த்தியும் இன்னொரு சாராரைத் தாழ்த்தியும் எழுதப்படும் நூல்கள் எந்த வகையிலும் தெய்)வகம் பொருந்தியதாக இருக்கமுடியாதெனறு டாக்டர் அம்பேத்கார் கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்.

ஆரியர்களால் எழுதப்பட்ட ஒவ்வொரு நூலும் அரசியல் ஆதிக்கத்தைப் பெற்று, அதன் வாயிலாகப் பொருளாதாரத் துறையில் சிறந்து விளங்குவதற்கே எழுதப்பட்டனவென்பது அந்நூல்களில் வரும் சுலோகங்களால் தெரியக்கிடக்கின்றனவென்பதும், வேதங்களின் வழி நூலாகப் பின்னர் எழுதப்பட்ட கீதையும் அரசியல் ஆதிக்கத்தைப் பெறுவதற்காகவும், வேதங்களுக்கு உயர்வு கற்பிக்கவும், பார்ப்பனியத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரவுமே எழுதப்பட்டதென்று டாக்டர் கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்.

வேதங்களில் நூற்றுகணக்கான சுரோகங்கள் திராவிடர்களை அழித்துத் தங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவரவேண்டுமென்று ஆரியர்கள் இந்திரனை நோக்கி வேண்டிக்கொள்ளும் பாடல்களாகவே உள்ளன. இந்த உண்மைகள் வேதங்கள் மறைகளாக, அதாவது மறைபொருளாக, இன்னம் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் வேதங்களில் உள்ள உண்மைகளை வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படாமலிருந்தவரையில், அவைகளுள் என்னென்ன கூறப்பட்டுள்ளன என்பது பிறருக்குத் தெரியாதிருந்தது. அவை பல மொழிகளில் மொழிபெயர்க்கம் வாய்ப்புக் கிடைத்த பின்னர் - அவை எதற்காக எழுதப்பட்டதென்பதைத் தெரிந்தபின்னர், டாக்டர் அம்பேத்கார் மட்டுமல்ல, அவ்வேதப்பொருட்களால் அடிமைப்பட்டு அல்லற்படும் ஒவ்வொருவரும் அவற்றைத் தங்கள் நூலாக ஒரு போதும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள் என்பதை நாம் வலியுறுத்திக் கூறுகிறோம்.

(திராவிடநாடு - 03.12.1944)