அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இதோ, நல்வழி!

ஆளைப் பார்க்காதே! அகிம்சா மூர்த்தி யின் படத்தைப் பார்! ``ஓட்டு'' அவருக்கு! அதைத் தெரிந்துகொள்.

என்ன செய்வார்? என்ன சாதிப்பதற்காக இவர் போகிறார்? இவருடைய திட்டம் எனன? திறமை எப்படிப்பட்டது? என்றெல்லாம் கேட்காதே! இவர், காங்கிரஸ் கட்சி-அவ்வளவு தான் நீ தெரிந்துகொள்ள வேண்டியது- மற்றவை பற்றி என்ன மனதைக் குழப்பிக் கொள்ளாதே!

இவருக்குப் போடும் `ஓட்டு' இவருக்காக அல்ல- காங்கிரசுக்காக! இவர், முன்பு, ``ஒரு மாதிரி'' ஆளாக இருந்தாரே- வட்டித் தொழிலாளி கொழுத்தவராச்சே- அதிகாரிகளிடம் குயிலாகி, ஏழைகளிடம் குக்கலாகி, விடும் குணவானா யிற்றே? என்றெல்லாம் யோசிக்காதே! இவர் இப்போது காங்கிரஸ் கட்சி- சாக்கடைத் தண்ணீ ரானாலும், கங்கையில் கலந்துவிட்டால், `பரிசுத்தான புண்ணியத் தீர்த்தம்' என்பதை மறவாதே!

நெடுங்காலமாகக் காங்கிரசில் ஈடுபட்டு, நாட்டுக்கு உழைத்த பலருடைய, கோரிக்கை களைக் குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட்டு, இவருடைய பணபலத்தின் மீது ஏற்பட்ட பாசத் துக்குக் கட்டுப்பட்டு காங்கிரஸ் கமிட்டி இவரைத் தேர்தலில் அபேட்சராக நிறுத்தி வைக்கிறதே. இது அநியாயமல்லவா என்று பேசாதே! காங்கிரஸ் முத்திரையை இவர் `தேசசேவை' டைரியைக் காட்டி அல்ல, தமது `செக் புத்தகத்தை' காட்டிப் பெற்றாராமே, என்று பேசாதே!

எப்படிப்பட்டவரானால் உனக்கென்ன! என்னென்ன செய்து காங்கிரஸ் முத்திரையைப் பெற்றிருந்தால தான் உனக்கென்ன! ஏன், அவை களைப் பற்றி யோசிக்கிறாய்! அவருக்கு எப்போது காங்கிரஸ் முத்திரை விழுந்து விட்டதோ, அப்போதே அவர், `உங்கள் ஓட்டுக் களைப்' பெறும் யோக்யதையைப் பெற்று விட்டார், என்பது பொருள்! இதிலே வாதத்துக்கு இடமில்லை!

தேர்தல் காலத்திலே, இதுபோலப் பேசித் தான், `வெற்றி' பெற்றனர். தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், அந்தத் திருவாளர் என்ன நன்மையைச் செய்யப் போகிறார், அவருக்குள்ள ஆசாபாசங்கள், யாவை, திறமை அனுபவம், என்ன, என்பது பற்றிய நினைப்பே, மக்கள் மனதிலே இருக்க முடியாதபடியான, பிரச்சாரம் நடைபெற்றது. இது, ஒரு கட்சியின் மகத்தான வெற்றிக்கு உதவிற்று- ஆனால் அதே வெற்றி, பொதுமக்களின் நலனைக் கோரி அமைக்கப்பட்ட மக்களாட்சி முறைக்கு ஊறு செய்தது. காங்கிரஸ் கட்சி வெற்றிமாலை அணிந்தது- மக்களாட்சி முறைக்கு அதுவே மரண ஓலையாகவுமாகி விட்டது.
* * *

சில தொகுதிகளில், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட அபேட்சகர்களின் `அறிவுச் சூன்யத்தை'ப் பற்றி, மக்கள் வேடிக்கையாகப் பேசிக் கொண்டே, ``ஓட்டு'' அளித்தனர். காரணம், அவர்கள் தாங்கள் தரும் ஓட்டு அந்த ஆசாமிக்கு அல்ல, காங்கிரஸ் கட்சிக்கு- என்று நம்பினர்- நம்பும்படி செய்யப்பட்டனர்.
* * *

இது வெறும் ``கைகாட்டி'' தானே பாரு.

``கல்லுப் பிள்ளையார் போல இருக்கும்- வாயைத் திறக்காது.''

``திறவாமலிருந்தால் தானய்யா நல்லது! திறந்தால், தெரிந்துவிடும். இது வெறும், பாண்டம் என்பது!''

``ஆமாம், ஆமாம்! புகையிலை விரித்தால் போச்சு!'' புண்யவான் பேசினால் போச்சு!

``உப்புச் சத்யாகிரகத்தின் போது, இந்த ஆசாமி, காங்கிரiக் கண்டபடி திட்டிக் கொண்டு இருந்தாரே...''

``இப்போது எப்படிக் காங்கிரசில் சேர்ந்தார் என்று கேட்கிறாயா? இது தெரியவில்லையா உனக்கு? காங்கிரசிலே சேர்ந்தால்தான், சட்ட சபைக்குப் போகமுடியும் என்பதனால்தான்.''

``அதுசரி- இப்படிப்பட்ட ஆளை, ஏன் காங்கிரஸ் கட்சி, சேர்த்துக் கொண்டது.''

``ஊரிலே பெரிய ஆள்- பணக்காரன் என்பதனாலேதான்.''

``பாவம்! பண்டரி, படாதபாடு பட்டுவந்தான் காங்கிரசுக்கு- அவளை நிற்க வைத்திருக்கலாம்.''

``ஆமாம்! அவன் கூடக் கேட்டானாம்- கொஞ்சினானாம்!''

``கடைசியில், `எதற்கும் உதவாததை'ப் பிடித்து நிற்கவைத்து விட்டார்கள்.''

``இது போய், அங்கே என்ன செய்யும்!''

``செய்வதாவது, மண்ணாவது! தூக்கு கையை, என்றால் தூக்கும்! மற்ற நேரத்தில் தூங்கி விழும்!''
* * *

பல தொகுதிகளிலே, பொதுமக்கள் இது போலப் பேசிக் கொண்டனர்- அபேட்சகர்களின் `யோக்யதாம்சங்களை'ப் பற்றி `ஓட்' மட்டும், போட்டனர்- ஆளுக்காக அல்ல, கட்சிக்காக, இது கட்சிக்குள்ள சக்தியை, பிரசாரத்துக்குள்ள பலத்தை விளக்கிற்று- ஆனால் அதேபோது, மக்களாட்சி முறையின் மாண்பையும் மாய்த்து விட்டது. குன்றின் மீது மூலிகையும் உண்டு, முள்ளும் உண்டு! ஆனால் குறைமதியாளர் தவிர மற்றையோர், குன்றின் மீது உள்ளதெல்லாம் மூலிகை என்று கொள்ளார்- மூலிகை இது. முள் அது, என்று பிரித்து எடுத்துப் பயன்படுத்துவர்! ஆனால் `குன்றுக்கு' ஒரு `மகிமை' கற்பித்து, அதன் மீது இருக்கும் `எதை' எடுத்து உப யோகித்தாலும் `புண்யம்' என்று கூறிவிட்டால், பெரும்பாலான மக்கள், மூலிகையாமுள்ளா என்று ஆராயமாட்டார்கள், கிடைத்ததைக் கொண்டு களிப்படைவர். அது போலாயிற்று, தேர்தல்! யாரும் `வரமுடிந்தது' மூலம் பூசிக் கொண்டதும்!
* * *

மக்கள் அளித்த `ஓட்டு' தமக்கு அல்ல, தம்மைத் தழுவி உள்ள கட்சிக்கு- என்பது, அபேட்சகர்களுக்கும், ஒரு அசட்டுத் தைரியத் தைக் கொடுத்தது- யாரும் தம்மை ஏதும் கேட்க முடியாது, என்ற தைரியத்தை! அவர்களில் பலர், வெளிப்படையாகவே ``எனக்கா ஓட்டு தந்தனர்- என்ன செய்தாய், ஏது செய்தாய் என்று என்னைக் கேட்க! காங்கிரஸ் கட்சிக்குத் தந்தனர்!'' என்று பேசிக் கொண்டனர்.

தேர்தல் முடியும் வரையில், இந்தக் கருத்தை அடக்கத்துக்குப் பயன்படுத்தினர். பிறகு, ஆர்ப்பரிப்புக்குப் பயன்படுத்தினர். ``நான் சாமான்யன்- எனக்காக ஓட்டு கேட்கவில்லை- மகத்தான காங்கிரஸ் கட்சிக்காகக் கேட்கிறேன்'' என்று அடக்கமாகப் பேசி `ஓட்டு' பெற்றனர்- பிறகு, ``என்னய்யா இது, ஓயாமல் வந்து, என் பிராணனை வாங்குகிறாய்! ஓட்டுப் போட்டேன் ஓட்டு போட்டேன் என்று சொல்லிச் சொல்லி பாத்யதை கொண்டாடுகிறாய்! இதோ பார்! நீ ஒன்றும் எனக்குப் போடவில்லை ஓட்டு! தெரிகிறதா? காங்கிரஸ் கட்சிக்குப் போட்டாய். ஆமாம். போய், உன் குறைகளைக் கட்சியிலே, சொல்லிக் கொள்- போக்கும்படி சொல்லு- இங்கே வந்து என் உயிரை வாங்காதே, போ'' என்று கடுகடுப்புடனும் பேசலாயினர். மக்களாட்சி கேலிக் கூத்தாக்கப்பட்டது. பெரும்பாலான தொகுதிகளில், பொதுமக்களுக்கு, `ஓட்டு' பெற்றுக் கொண்டு போய், வெல்வெட் மெத்தை மீது உட்கார்ந்து கொண்டிருக்கும் `உயர்ந்தவர்களின்' உருவம் கூடச் சரியாகத் தெரியாது! தாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு, மஞ்சள் பெட்டிக்கு `ஓட்' போட்டதுதான். பெரும்பாலான மக்களுக்கு நினைவிலிருக்கிறது! இப்படி, பெட்டிக்குள் புகந்து கொண்டு சட்டசபை சென்ற பெருமான்களின் ஆட்சியிலேதான் நாடு இருக்கிறது.
* * *

கழைக் கூத்தாடி, நாம் நமது கழுத்து வலியெடுக்கும் விதமாகப் பார்க்க வேண்டிய அளவு உயரமுள்ள கம்பியின் மீது ஏறிக்கொண்டு, ஆடிக் காட்டுகிறான்- கயிற்றின் மீது ஓடிக் காட்டுகிறான்- கத்திக் கெண்டு வயிற்றில் குத்திக் காட்டுகிறான். காணும் நாம், கை கொட்டுகிறோம்- சபாஷ் கூறுகிறோம்- ஆச்சரியமடைகிறோம்- அவன் திறமையை மெச்சுகிறோம், அதுகேட்டு அவன், ``என் திறமையைக் கண்டீர்களல்லவா! இப்படிப்பட்ட என்னை ஏன் நீங்கள் ஊர்த் தலைவனாகக் கொள்ளக் கூடாது!'' என்று கேட்க மாட்டான்- கேட்கத் துணிந்தால் கம்பியின் மீது ஏறி வித்தை பல செய்தவன், தரையின் மீது நிற்கவும் முடியாதபடி, புத்தி கற்பிக்கும் வித்தையில் மக்கள் ஈடுபடுவர்! வைத்தியத்தில் நிபுணர் ஒருவர்- ஆனால் அதற்காக அவரிடம் நோயாளியைக் கொண்டு போய்க் காட்டுவார் களேயொழிய, இடிந்த பாலத்தைக் காட்டி, இதை எப்படிப் புதுப்பிப்பது என்று கேட்கமாட்டார்கள்! நூலிலுள்ள சிக்குகளைச் சுலபத்திலே நீக்கும் நிபுணர் இவர். இப்படிப்பட்டவருக்கு, எதுதான் சாத்யமாகாது, எல்லாம் செய்யவல்லவர் என்று எண்ணமாட்டார்கள். போருக்குப் பயன்படும் `வீரன்'. சோறு செய்யப் பயன்பட்டே தீருவான். ஏனெனில் அவள் அவ்வளவு தீவிரமாகப் போராடியவன் என்று கருதமாட்டார்கள்- ஏமாளி கள் தவிர, ஒரு துறைக்குத் தேவையான பண்பும் பயிற்சியும் பெற்று நிபுணராகி விடுபவரைக் கொண்டு, எல்லாத் துறைகளிலும் பணிபுரிய வைத்துப் பயன் காணலாம் என்று எண்ணுவது பேதைமை. ஆலும் வேலும் பிளக்க உபயோக மாகும் கோடரி, வாழைக்குப் பயன்படுவதில்லை! பாறையைப் பிளக்கும் உளிகொண்டு, பச்சைக் காய்கறியை நறுக்க மாட்டார்கள்! ஒவ்வோர் துறைக்கு, ஒவ்வோர் செயலுக்கும், ஏற்ற தேவையான, திறனும், கருவியும் வேறு வேறு! ஒன்று, மற்றொல்லாவற்றுக்கும் பயன்படும் என்று எண்ணுவது ஏமாளித்தனம். ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர் புரியும் பயிற்சியும் பக்குவமும் பெற்ற ஒரு கட்சி, நாட்டை ஆளவும், பயன்பட்டே தீரும்- போரில் பெற்ற வெற்றி போலவே, ஊராள்வதிலும் வெற்றி கிடைக்கும் என்று எண்ணுவ, `தேசீயமாகக்' கருதப்பட்டது! அதனாலேதான், யாரும் வரமுடிந்தது- ஏதும் செய்யாதிருக்கும் போக்கு வளர்ந்தது- மக் களாட்சி முறை கேலிக்கூத்தாயிற்று.
* * *

பெரும்போர் முடிந்ததும் படை கலைக்கப் படுகிறது- சமயம் காரியம் முடிந்ததும், நம் வீட்டு அடுப்பு நெருப்பைக் கூடத்தானே அணைத்து விடுகிறோம்! அதுபோலவே, ஏகாதிபத்ய எதிர்ப் புக்காகவெனத் திரட்டப்பட்ட `படை'யை, அந்தக் காரியத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு, பிறகு கலைத்துவிட்டிருக்க வேண்டும்- ஆனால், நடந்தது வேறு- விபரீதமானது, அந்தப் படை கலைக்கப்படவில்லை என்பதுமட்டுமல்ல மக்களின் வாழ்வு, அந்தப் படையிடம் ஒப் படைக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, அந்தப் படைக்கு என ஏற்பட்ட சின்னத்தைப் பொறித்துக் கொண்டு கிளம்பிய கழுகுகளை எல்லாம் கிளிகளெனக் கருதிக் கொண்டனர் மக்கள்- நயவஞ்சகர்கள் பலர், அந்தச் சின்னத்தைப் பொறித்துக்கொண்டு, நாடாளும் வாய்ப்பைப் பெற்றனர்! கிளிக்கென இருந்த பொந்துக்குள் கருநாகம் குடிபுகுந்த கதை போலாயிற்று! நல்லாட்சி முறை பற்றிய அக்கறை அடியோடு அழியலாயிற்று. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள், கதர் உள்ளபோதே தேடிக் கொள்- என்று இலாப வேட்டை, ஆடக் கிளம்பிவிட்டனர். சட்டசபை சென்ற சீலர்கள்! பொறுப்புள்ள தலைவர்கள் பயப்படும் அளவுக்கு, நற்குண வான்கள் கதறும் அளவுக்கு, பதை பதைக்கும் நெஞ்சினர் பட்டினி கிடக்கும் அளவுக்கு, கமிட்டிகள் அமைத்து விசாரணை செய்ய வேண்டிய அளவுக்கு, இலாப வேட்டை வளர்ந்து விட்டது.
* * *

சட்டசபை சென்றுள்ளவர்களிலே `பல வகையினர்' உள்ளனர். அவர்கள் ஒரே கட்சியினர், என்ற போதிலும்! பல வகையினர், என்றால், அவர்களின் நிறம், நிலை, இவை பற்றி அல்ல, நாம் குறிப்பிடுவது, அரசியலைப் பற்றி, மத இயலைப் பற்றி, சமூக பொருளாதார இயல்களைப் பற்றி பல்வேறு வகையான எண்ணங்களைக் கொண்டவர்கள், சென்றிருக் கிறார்கள். மக்களாட்சி முறையில், பல துறை களிலே உள்ள கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான் கட்சிகள் அமையும். கிராமங்கள் நகரங்களாக வேண்டும் என்று கொள்கை கொண்டோர் ஒரு கட்சி நகரங்கள் நாசத்தின் இருப்பிடம், எனவே கிராமீய வாழ்க்கை முறையே எங்கும் இருக்க வேண்டும் என்று கொள்கை கொண்டு மற்றோர் கட்சி, இவ்விதம் கட்சிகள் அமைந்தால், இந்த இரு கட்சிகளில், எதற்கு நாடு ஆதரவு தருகிறதோ அந்த விதமாக நாடு உருவாக்கப்படும். இந்த இருவகைக் கொள்கையையும் கொண்டவர்கள் ஒரே கட்சி யிலிருந்து, அந்தக் கட்சியே நாட்டை ஆளத் தொடங்கினால், நாடு என்ன உருவம் கொள்ள முடியும். கட்சியின் உருவம்கூட எப்படிக் காணச் சகிக்கும்! திருநீரும், திருநாமம் ஒருசேர நெற்றியில் அணிந்து கொண்டு, சிவராமசங்கீர்த் தனம் பாடினால்,வேடிக்கையாக இருக்குமல்லவா! அதுபோலாகிவிட்டது ஆளும் வாய்ப்ப் பெற்ற கட்சியின் போக்கு. இதிலே, யானையிடம் மாலையைக் கொடுத்து, அது யார் கழுத்தில் மாலையைப் போடுகிறதோ அவரை அரசனாகக் கொண்டு அந்த அரசனை ஆண்டவனுக்கு அடுத்தபடி என்று நம்பி அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற விதமான அரசியல் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் களும் உள்ளனர். அமெரிக்க நாட்டு அரசியல் முறையைத் திருத்தி, ஆஸ்திரேலியா நாட்டு ஆட்சி முறையில் ஒரு பகுதியைப் புகுத்தி, சோவியத் முறையைச் சிறிதளவு கலந்து, பிரிட்டிஷ் பிடிவாதத்தையும் பிரன்ச்சு பசப்பை யும் சம உடையாகக் கலந்து புகுத்தி, அதேபோது, ``இந்தியப் பண்பாட்டை இழந்து விடாதபடியும் பார்த்துக் கொள்ளும் விதமான அரசியல் தத்துவத்தை நாடுபவர்களும் இருக்கிறார்கள். ஜில்லா போர்டுகள் ஒழிய வேண்டும் என்று கூறுபவர்களும் -ஒழியக் கூடாது, போர்டுகளுக்கு மேலும் அதிகமான அதிகாரம் அளித்து அமைக்க வேண்டும் என்பவர்களும் இருக் கிறார்கள்! அரிசியைத் தீட்டிச் சாப்பிட வேண்டும் என்பார் உண்டு! தீட்டுவது தீது என்பாரும் உண்டு! ஆலைகள் வேண்டும் என்பார் உண்டு. ஆலைகள் வேண்டாம் என்பார் உளர். விவாக விடுதலை என்ற பேச்சே விநாச காலத்தால் ஏற்படும் விபரீத புத்தியின் விளைவு என்று பேசுபவர் உண்டு! தசரதனைக் காட்டி `ஏகதாரம்' என்ற கட்டுப்பாடு கூடாது என்று வாதிடும் பேர் வழிகள் உண்டு. அவர் மகன் ராமன் மீது ஆணையிட்டு `ஏகதாரம்' எனும் முறைதான் சட்டமாக வேண்டும் என்று கூறுவோர் உண்டு! ஜான்சி ராணியை சாட்சிக்கு அழைக்கும் வீரர்களும் சாவித்திரியைச் சாட்சிக்கு அழைக்கும் பக்தர்களும், புதுமை விரும்பிகளும் பழமைக் கொள்கையினரும், சகல வகையின ரும், கொண்டதாகிவிட்டது காங்கிரஸ் கட்சி. ஆகவே, அதன் ஆட்சிக்கு உட்பட்ட நாடு, என்ன உருவம் பெறும் என்று எவ்வளவு பெரிய நிபுணராலும் கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் எல்லோருமே, கதருடையினர். காங்கிரஸ் கட்சியினர். எனவே ஒவ்வொருவரும் தமது நினைப்பே சரி, என்று கருதுகிறார். அந்த நினைப்பின்படி நாடு ஆளப்பட்டால்தான் நன்மை கிடைக்கும் என்று எண்ணுகிறார். அந்த முறைதான் காங்கிரசின் உண்மையான திட்டம் என்று கருதுகிறார். இது, மக்களை மருளச் செய்யும் முறை- வாழவைக்கும் முறையல்ல! எல்லோரும் ஒரே கட்சியின் பெயரைக் கூறிக் கொண்டு, ஒரே பெட்டிக்குள் பதுங்கிக் கொண்ட வர்கள், என்பது தவிர, இவர்களுக்குள் ஒன்றுபட்ட கருத்து, அரசியல் நிர்ணய சபை விவகார முதற்கொண்டு அரிசிப்பிரச்சினை வரையிலே எதிலும் இல்லை- எதிலும் இருக்க முடியாது- காரணம், இவர்கள் யாரும்,

இன்னின்ன முறைகள் கொண்டு ஆட்சியை நடத்தப் போகிறோம் என்று மக்களிடம் கூறி, ஓட்டு வாங்கினவர்களல்ல! திருப்பதி மலை மீது ஏறும்போது, திருட்டுக் கந்தனும், பக்த முத்தனும் ஒரே விதமான குரலிலேயே, ஏழுமலை யானுக்குக் கோவிந்தா போட்டார்கள்! திரும்பும் போது முத்தன் இழந்தது முன்னூறு ரூபாய் பெறுமானமுள்ள மோதிரம், கந்தனுக்கு வரவு அந்தத் தொகை, எல்லாம் ஏழுமலையான் திருவருள்தான்!- என்பது போல, எல்லோரும் ஒரே கட்சியின் பெயரைக் கூறிக்கொண்டு சென்றவர்களே தவிர, அவர்களில், பலவகையி னர் உண்டு- அவரவர்களின் திறமைக்கு எற்றபடி பலனையும் தேடிக் கொள்கிறார்கள்.

கலெக்டரையும் கன்ட்ரோல் ஆபீசரையும், மிரட்ட, கதர் பயன்படுகிறது. போதாதா இது என்று எண்ணிப் பூரிக்கும் `புண்ணியவான்கள்' மிகுந்து விட்டனர். மந்திரிகளை மடியில் வைத்திருக் கிறேன்- கவர்னரைக் கைக்குள் வைத்திருக்கி றேன்- நேருவிடமிருந்து நேற்றுக் கூட ரிப்ளை கார்டு வந்தது. படேலுக்கு பழனியாண்டவர் விபூதி பார்சல் செய்திருக்கிறேன். பக்தவச்லம், என்னைப் பார்க்காவிட்டால் தூங்க மாட்டார் அவ்வளவு பிரியம் என்னிடம், என்று, இது போன்ற பலவகைப் பேச்சுப் பேசி, மிரட்டி மயக்க பயிற்சி பெறும் அளவுக்கு, இந்த சட்டசபை மெம்பர்கள், பிரச்சினைகளை விவாதிக்க, திட்டங்களைத் தீட்ட மசோதாக்கள் தயாரிக்க, பயிற்சி பெற்றனரா என்று யோசித்தால் நேர்மையுள்ள எந்தக் காங்கிரஸ்காரரும், வெட்கமும், துக்கமடைய வேண்டியதுதான். பண்பற்றவர், பயிற்சியற்றவர், பொறுப்பை மறந்தோர், பொதுமக்களை காணாதார், அக்கறை யற்றவர், ஆள்விழுங்கி இச்சகம் பேசுவோர், உருமாறிகள் என்று இவ்விதமாக ஒரு பட்டியலே தயாரிக்கலாம். ஆளவந்தோம் என்று கூறிக் கொண்டவர்களை. இது, மக்களாட்சி முறையல்ல- கட்சிப் பற்று காரணமாக இந்த நிலையை வளர விடுகிறார்கள். இது மிகமிக ஆபத்து என்பதை நாம் பலமுறை வலியுறுத்திக் கூறிவந்தோம். சட்டசபை அங்கத்தினர்களின் தான்தோன்றித் தனத்தைத் தட்டிக்கேட்கும், கடமை மக்களைச் சார்ந்தது, என்பதை எடுத்துக்காட்டினோம்.

``பொதுமக்கள், இப்படித் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் சட்டசபையினரை, என்ன செய்ய முடியும்? அடுத்த தேர்தல் வரையிலே, இவர்கள்தானே இருப்பார்கள்- இவர்களைப் பொது மக்களால் இப்போது நீக்கவும் முடியாதே- இவர்களை மிரட்டி வேலை வாங்க ஒரு எதிர்க்கட்சி இல்லையே, என்ன செய்வது என்று கேட்பார்கள் பலர்.

இதுபற்றி, காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உழைத்த உண்மை ஊழியர்கள் சிந்தித்து, சற்றுக் கடமையிலே கவலைகொண்டால், அவர்களைத் திருத்தமுடியும், பொதுமக்களைத் திரட்ட வேண்டும் அதற்கு.

சட்டசபையிலே சென்று அமர்ந்து விட்ட தாலேயே, அடுத்த தேர்தல் வரையிலே, அவர்களை யாரும் அசைக்கவே முடியாது என்று எண்ணத் தேவையில்லை, தேர்தல் தவிர, வேறு ஆயிரம் வழிகளுண்டு அவர்களைத் திருத்த பொதுமக்களின் நம்பிக்கையை அந்த மெம்பர்கள் இழந்துவிட்டனர் என்பதை அவர்கள் உணரும்படி செய்ய முடியும்- கண்டனக் கூட்டங்கள் மூலம்- மகஜர்கள் மூலம்- பேட்டி கண்டு பேசுவதன் மூலம்.

உமது கடமையைச் செய்யத் தவறி விட்டீர்- உமக்குச் சட்டசபை வேலையிலே அக்கறையும் காணோம் திறமை இருப்பதாகவும் தெரியவில்லை- நமது தொகுதியின் தேவை களைப் பற்றி, இதுவரை, சட்டசபையிலே, பேசக்கூட இல்லை- இப்படிப்பட்ட உம்மை, எமது பிரதிநிதியாகக் கொண்டு, நாங்கள் என்ன பலனை அடைய வேண்டும்? ஆகவே, தயவு செய்து ராஜிநாமாச் செய்துவிடுங்கள்- என்று விளக்கிட மக்கள் முன்வரவேண்டும்.''

என்று 7-11-48ல் எழுதினோம். எழுதும் நாம் வேறு கட்சியினர் என்பதற்காக, உண்மையை உட்கொள்ள மறுக்கும் `உத்தமர்கள்' ஏராளம் இங்கு! ஆனால், பொறுப்புணர்ச்சி அடியோடு போய்விடவில்லை! பண்பு பட்டமரமாகி விட வில்லை! அங்கொன்றும் இங்கொன்றுமாகத் துளிர் விடக் காண்கிறோம்- களிக்கிறோம்.

தமிழ்நாடு காங்கிரசின் தலைவர், அமைச் சர்களை ஆக்கவும் அழிக்கவும் ஆற்றலிருப்ப தாகக் கூறிக்கொள்ளும் ஆண்மையாளர், காமராஜ்- அருப்புக்கோட்டைத் தொகுதி மக்களின் அன்பையும், ஆதரவையும் கொண்டு தான் சட்டசபை சென்றார். அருப்புக் கோட்டைப் பொதுமக்கள் அவரால், தமது பகுதி நலன் பல பெறும் என்று நம்பினர்- இலவு காத்த கிளிகளா யினர் - தவறு தவறு- கிளிகல்ல, அவர்கள் விழிப்புணர்ச்சியுள்ள வீரர்கள், எனவேதான், அருப்புக்கோட்டை சென்று அரசியல் மாநாடு நடத்தி இந்தி எதிர்ப்பாளரைக் கண்டிக்கும் பணிபுரியக் காமராஜர் சென்றபோது மக்கள், திரை மறைவில் அல்ல, கூட்டத்தில் குழப்பம் விளை வித்து அல்ல. சுவரிலே கீறி அல்ல வெளிப் படையாக, அச்சடித்த தாளின் மூலம் தமது அதிருப்தியை, கண்டனத்தைத் தெரிவித்தனர். ``ஐயா, எம்.எல்.ஏ. அருப்புக்கோட்டை வட்டார மக்களிடம் ஓட்டு பெற்றுச் சென்ற ஆண் சிங்கமே! இதுவரை, எங்கே போயிருந்தீர்? என்ன செய்து கொண்டிருந்தீர்? உம்மாலே, எமக்கு ஏற்பட்ட உருவான பலன் ஏதேனும் உண்டா, விரலை விடும்? எமது நலனைப் புறக்கணித்து விட்டு, ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறீரே! இது நியாயமா? எங்கள் நம்பிக்கையை இழந்து விட்டீர், என்பதை அறியுங்கள்!'' என்று அச் சடித்துக் கொடுத்தனர். அடியும் பட்டனராம் பிறகு, போலீசிடம், ஓட்டுகளைப் பெற்றுக் கொண்டு, அன்பு ஒழுக ஒழுகப் பேசிவிட்டுச் சென்ற காமராஜர், பிறகு ஒரு காரியமும் செய்யாதது கண்டு, அந்தமக்கள் கொண்ட வேதனையை விடப் போலீசார் அடித்தபோது ஏற்பட்ட வேதனை, குறைவானதுதான் என்றே கூறுவோம். ஜனநாயகக் கோட்பாட்டுக்காக அந்த மக்கள் அடிபட்டனர் அந்த வீரத்தை நாம் பாராட்டு கிறோம்- பொறுப்புணர்ச்சியைப் போற்றுகிறோம். ஓட்டுகளைக் கொடுத்துவிட்டதாலேயே எமது உரிமைகள் யாவும் போய்விட்டன என்று எண்ணாதீர், எமது நம்பிக்கையைப் பெற்று இருக்கும் வரையில்தான், நீர் எம்.எல்.ஏ.வாக வீறறிருப்பது கண்ணியமான செயல்! எங்களுக்கு உம்மிடம் நம்பிக்கை இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுக- ராஜிநாமச் செய்க! என்று கூறிய, அந்த வீரர்களின் பண்பைக் கண்டு பூரிக்கிகிறோம். தமது தொகுதி வாக்காளர்கள், தம்மிடம் நம்பிக்கை இல்லை என்பதை, பட்டப் பகலில், வெட்ட வெளிச்சமாக, பளிச்செனத் தெரியும் விதத்தில் அச்சடித்துக் கொடுத்தும், இன்னமும், தமது பதவியை ராஜிநாமாச் செய்யாதிருக்கும், காமராஜரின் பண்பும், விளங்குகிறது! நன்றாக! மிக மிக நன்றாக! நாம் எது நடைபெற வேண்டுமென்று, கோரினோமோ, அந்த முறை, அருப்புக்கோட்டை அளவோடு அல்ல, மேலும் பல இடங்களிலும் பரவி வருகிறது. ஜனநாயகம் பிழைக்க வழி கிடைத்து வருகிறது.

``நாங்குனேரி, அம்பாசமுத்திரம் ஏரியா சட்டசபை மெம்பர் ஸ்ரீமதி லட்சுமி அம்மாள், இந்த ஏரியாவுக்கு வராமலும், ஜனங்கள் குறைகளை கவனியாமலும் இருப்பதைக் குறித்து அவர் உடனே தாம் வகிக்கும் பதவியை ராஜிநாமாச் செய்யும்படி கோருகிறது. அவர்மேல் நம்பிக்கை இல்லை என்பதாக இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

* இந்தத் தொகுதிக்கு வந்ததில்லை.
* மக்கள் குறைகளைக் கவனித்ததில்லை!
* ஆதலால் நம்பிக்கை இல்லை!
* எனவே இராஜிநாமா செய்ய வேண்டும்.

தமது தொகுதி வாக்காளர்களை, தம்மைத் தேர்ந்தெடுத்தனுப்பிய மக்களை, தேர்தலுக்குப் பின்னர் சந்தித்ததில்லை. அவர்கள் நிலை என்ன- குறை என்ன- தேவை என்ன- ஒன்றும் கேட்ட தில்லை. வாக்காளர்களை மதித்து நடக்கவில்லை. அவர்கள் வாக்குகளைப் பெற்று, அவ்வாறு வாக்களித்தவர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய கடமையிலுள்ள, தோழியர் இலட்சுமி அம்மாள், கடமையைத் தவறிவிட்டதால், வாக்காளர்கள் அம்மையாரின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இஇழந்துவிட்டார்கள். எனவே தீர்ப்பு அளிக்கப்படுகிறது வாக்காளர்களால்.

இவ்வாறு தீர்ப்பளிக்கிறவர்கள் யார் என்று எண்ணுகிறீர்கள்? இம்மாதம் முதல் தேதி, திசையன் விளை எனும் ஊரில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், சுமார் ஆயிரம் மக்களுக்கு முன்னால் கொணடுவரப் பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும் இது. 5.11.48 `தினசரி' இதழில் இது இருக்கிறது.

இதோ மற்றொன்று!

திருநெல்வேலி- பாளையங்கோட்டை தொகுதியின் பிரதிநிதியாக வழக்கறிஞர் தோழர் வி.எஸ்.சங்கரசுப்பிரமணிய முதலியார் சென்னை சட்டசபை அங்கத்தினராக இருந்து வருகிறார். இவர்மீது பல குற்றங்களைக் காட்டி, எனவே நம்பிக்கை இல்லை என்று குறித்திருக்கிறார்கள். தீர்மானம் இதோ-

``இவர் மீது திருநெல்வேலி- பாளையங் கோட்டை பொதுஜனங்களிடையே ஏராளமான புகார்கள் இருந்து வருவதாலும், தொகுதி மக்களின் நன்மைக்காக உழைக்கவில்லையாத லாலும், ஜவுளி- நூல் கண்ட்ரோல் விஷயத்திலும் மற்றும் பல விஷயங்களிலும் நெசவாளர்களும் பொது மக்களும் புகார் கூறக்கூடிய முறையில் அவர் நடந்து வருவதாலும், அவர் பேரில் நம்பிக்கை இல்லை என்றும், அவர் எம்.எல்.ஏ. பதவியை உடனே ராஜிநாமா செய்ய வேண்டு மென்றும்.''

தீர்மானம் ஒன்றும் நிறைவேற்ற, பாளையங் கோட்டையிலும், திருநெல்வேலியிலுமாக இரு கூட்டங்களை (13.11.48)ல் கூட்டுவதாக விளம்பரம் செய்திருந்தார்கள். அவ்வாறு அறிவித்திருந்த வர்கள் பட்டியலைக் கீழே தருகிறோம். தோழர்கள்,

1. சு. துரைசாமி, பேட்டை காங்கிரஸ் ஊழியர்.
2. வி.கே.அப்துல் அமீது முனிசிபல் கவுன்சிலர்.
3. பி.சோமாயஜிலு- த.கா.க. அங்கத்தினர்.
4. வை. சிவராமன், முன்னாள் செயலாளர், நெல்லை ந.கா.க.
5. வி.சுப்பிரமணிய ஐயர், பாளையங் கோட்டை ந.கா.க. தலைவர்.
6. டி.என். வேல், செயலாளர், பாளையங் கோட்டை ந.கா. கமிட்டி.
7. எம்.ஆர்.மேகநாதன், ஜில்லா கா.கமிட்டி அங்கத்தினர்.

இவ்வளவு காங்கிரஸ் தோழர்களும் கூட்ட விளம்பரத் தாள்களில் கையெழுத்திட்டிருந்தனர். நகரத்தில் 144 தடையுத்தரவு அமுலில் இருக்கிறது. எனவே, கூட்டங்களுக்கு அனுமதி கோரி, ஜில்லா மாஜிஸ்ரேட்டுக்கு காலையில் மனு கொடுத்தனர். கூட்டம் கூட்டுவதற்கு அனுமதியும் கிடைத்தது. ஆனால் மாலையில், காலையில் அனுமதி கொடுத்த அதே ஜில்லா மாஜிஸ்ட்ரேட் கூட்டம் கூட்டக் கூடாதெனக் கொடுத்த அனுமதியைப் பறித்துக் கொண்டனர். ஆதலால், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இருந்தா லும், நிறைவேற்ற இருந்த தீர்மானமும் மற்ற விவரங்களும் `தினசரி' 15.11.1948 இதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
ஜனநாயகக் கோட்ட்பாட்டிலே நம்பிக் கையும், அதன் கண்ணியத்திலே பற்றும் இருக்குமானால், பொதுமக்களின் நம்பிக்கை யில்லாத் தீர்மானங்களைக் கண்டும், காரியம் பெரிதா வீரியம் பெரியதா, என்று இராமல், இவர்கள் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அதுதான் குணவான்களுக்கு அழகு! போலீசை விட்டு விரட்டுவேன்- கலெக்டரைக் கொண்டு தடுப்பேன் - போட்டிக் கூட்டம் போட்டுக் கலகமூட்டுவேன்- எதையோ செய்து இடத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொள் வேன்- அட்டை போல ஓட்டிக் கொள்வேன் என்று எண்ணுபவர்களை, ஜனநாயகக் கோட்பாட்டை உணராதவர்கள், என்று மட்டுமல்ல, சாதாரண மனிதத் தன்மையையும் மறந்தவர்கள் என்றே அறிவுலகம் கருதும்.

அருப்புக்கோட்டை! திசையன்விளை! திருநெல்வேலி! எச்சரிக்கைகள்! அபாய அறிவிப்புகள் ஆம் ஆளவந்தார்கள் அறிய வேண்டுகிறோம். தம்மை வீழ்த்த ஒரு எதிர்க் கட்சி இல்லாதிருக்கலாம்! உண்மையைக் கூறுவோரைப் போட்டு அடைக்கச் சிறை இருக்கலாம்! ஆனால், பொதுமக்களே முன்வந்த பிறகு என்ன செய்யப் போகிறார்கள்! அருப்புக் கோட்டையும், திசையன் விளையும், இனி பற்பல இடங்களிலும் தோன்றும்- தோன்ற வேண்டும்- பொதுமக்களுக்கு, அந்த உரிமை உண்டு- நாடு வாழ, அதுதான் வழி! விழிப்புற்ற சமுதாயத்திலே தான் ஜனநாயகம் வளருமாம்! மந்த மதியினரும், சொந்தப் புத்தியைச் சோரம் போகவிட்டவர் களும், அதிகமானால், மக்களாட்சி முறை என்பது மந்தியிடம் சிக்கிய மலர் மாலையாகும். மக்கள், ஒரு சில இடங்களிலேனும், இந்த அளவு விழிப்புணர்ச்சியும், வீரப்போக்கும் கொண்ட னரே, என்று களிக்கிறோம். வாழ்க ஜனநாயகம் என்று கூறுகிறோம். வாழ்த்துகிறோம், உரிமையை இழக்க மறுக்கும் அந்த உண்மையாளர்களை! மற்றவர்களுக்குக் காட்டுகிறோம்- இதோ நல்வழி- ஜனநாயகம் பிழைக்கும் வழி, என்பதை!

சட்டசபைக் கூட்டத்துக்குப் போகுமுன்பு, கூட்டம் போட்டுக் கவனப்படுத்துங்கள். அந்தச் சிங்கார புருஷர்கள் செய்ய மறந்ததை செய்ய வேண்டியதை! கூட்டம் முடிந்து, வீட்டுக்கு வந்ந்ததும், கூட்டம் போட்டுக் கேளுங்கள், ``போனாயே புண்யவானே! என்ன செய்தாய்! எமது குறையை எடுத்துரைத்தாயா? ஏதேனும் கவைக்குதவும் காரியம் செய்தாயா?'' என்று கேளுங்கள். உமக்கு அந்த உரிமை உண்டு! அவர்கள் ஊராள்வது, உங்களிடம் அதிகாரம் பெற்றுத்தான்!

(திராவிட நாடு - 21.11.1948)