அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இதோ ஒரு மேதாவி!
இன்றைய உலகிலே மேதாவி யார்? என்ற அறியப் பலர் அவாக் கொண்டுள்ளனர் என்று எண்ணினார் போலும், ஆப்பிரிக்க நாட்டு அரசியல் தலைவர் ஒருவர். தமது மேதாவித்தனத்தை மேதினி தெரிந்து கொள்ளவேண்டுமென்று கருதி, அருமையான ஒரு அபிப்பிராயத்தைத் தெரிவித்திருக்கிறார். ஐயர்லாந்துத் தலைவர் திவேலரா, அச்சுக் கூட்டுறவை அகற்ற மறுத்து வருகிறார், அதனால் நேசநாடுகள் ஐயர்லாந்துடன் தொடர்பு வைத்துககொள்ள முடியாதென்று கூறுகின்றன. ஆப்பிரிக்கா மேதாவி, ஐயர்லாந்து தீரருக்கு ஆசிச் செய்தி அனுப்பினாராம். அபூர்வமான மூளையிலே உதித்த அருமையான கருத்தையும் கக்கியிருக்கிறார்.

பாலைக் கீழே கொட்டிவிடப் போகிறேன் என்று கோபமாகக் கூறினான் கோணல்புத்திக் கோபாலன் ஏனடா பாலைப் பாழாக்க நினிக்கிறாய் என்று கேட்டான் பலராமன். கோபாலன் ஏன தெரியுமா பாலைக் கீழே கொட்ட வேண்டுமென்று கூறுகிறேன். அந்தப் பாலைத் தந்த பசுமாடு என்னை வாலால் அடித்தது என்றானாம், இந்தக் கோணல் புத்திக் கோபாலனுக்கு, ஆப்பிரிக்க மேதாவி மாலன், அண்ணனாக வேண்டும், தெளிவு அவ்வளவு இருக்கிறது.

இன்றைய போரிலே, நேசமாடுகள் வெற்றி பெறுவது ரஷியாவுடன் கலந்துறவாடுவதன் மூலமாகத்தான் என்கிறாகி, இதன் பயனாக உலகிலே பொதுவுடைமை பரவி, தென் ஆப்பிரிக்காவுக்கும் பரவுவதாக இருக்குமானால், ஜெர்மனியே வெற்றிபெற வேண்டுமென்று முறியடிக்கப்படுமானால், நான் ஜேர்மனியே வெற்றிபெற வேண்டுமென்று விரும்புவேன்? இதுதான் மேதாவி மாலனின் பேச்சு! எவ்வளவு பேதமை பாருங்கள்! பொது உடைமை மீதுள்ள மோகம், ஜெரமனி ஜெயிக்க வேண்டும் என்ற மோகத்தை ஊட்டுகிறது, மாலன் எனும் தென் ஆபபிரிக்க அரசியல் தலைவனுக்கு! வாலால் என்னை அடித்ததால், அந்தப் பசுவின்பால் எனக்கு வேண்டாம் என்று கூறின அறிவிலிக்கும், பொதுஉடைமை மீது, வீணான துவேஷங்கொண்டு மனப்பிராந்தி அடைந்து, அதனைத் துடுக்க வித்தியாசம் இருக்கிறதேயொழிய, மன அமைப்பிலே அதிகமில்லை என்று எண்ணுகிறோம். இத்தகைய மதியிழந்த மேதாவிகளும், இன்றும் ஒரோரிடத்திலே இருக்கின்றனர். தமது நாவை அசைக்கின்றனர், வெட்கமின்றி.

(திராவிடநாடு - 26.03.1944)