அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இதோ ஒரு தேசியத் திட்டம்

தெரியாதா, உங்கள் அண்ணாத்துரை சொன்ன திட்டம்! கசாப்புக்கடை நடத்தச் சொன்னார்!! என்று காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியதாகப் பத்திரிகைகளில் பார்த்தேன்.

அமைச்சர் அவைமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எழுந்தபோது, காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள், தமது கட்சியை ஆதரித்துப் பேச முனைவது இயற்கைதான்!

ஆனால், அந்தப் பேச்சு எப்படி அமைந்திருக்கும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன் என்றால், காங்கிரஸ் அரசின் வெற்றிப் பட்டியலை விளக்கிப் பேசுவதாக இருக்கும் என்று தான்.

அமைச்சர் அவையினை ஆதரித்துப் பேசிடும் அத்தனை பெரிய செயலில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என்னைப் பற்றிய நினைப்பு எழும் என்று நான் எதிர்பார்க்கவுமில்லை; அவ்விதம் எழுந்தாலும் அவர்களுக்கு, நான் சொன்ன பலவற்றிலே, இந்தக் கசப்புக் கடை பற்றிய நினைப்பு மட்டுமே துடிப்புடன் எழும் என்று துளியும் எதிர் பார்க்கவில்லை.

கசாப்புக் கடைத் திட்டம்தானே உங்கள் அண்ணாத்துரை தந்தது? என்று பேசுவதும், கேலி செய்வதும், சட்டசபையிலே மட்டுமல்ல, வெளி மேடைகளிலும், இப்போது மட்டுமல்ல, முன்புகூட, நடைபெற்று வந்துள்ள நேர்த்தி மிகு நிகழ்ச்சியாகும்.

அன்றும் சரி, இன்றும் சரி, எவர் எத்துணைக் கேலி பேசிடினும், நான் கூறிய திட்டம் குறித்து நான் வெட்கப்படவில்லை, அதனைக் கசாப்புக் கடைத் திட்டம் என்று சொல்லுவதாலேயே அது கேவலமானதாகிவிடாது.

தவளைக் கால்கள், பாம்புத் தோல்கள், ஆமைக்கறி இவற்றை விற்பனைப் பொருளாக்குவதும், அவை பற்றிய புள்ளி விவரங்களைச் சர்க்கார் சேகரித்து வைத்திருப்பதும், அனைவருக்கும் தெரியும். ஆட்டு இறைச்சியை விற்பனைப் பொருளாக்குவதோ, அதனை ஒரு பெருந்தொழில் அளவுக்குக் கொண்டு செல்வதோ, அதனைச் சர்க்காரே மேற்கொள்வதோ, கேவலமானது என்று நான் கருதவில்லை; பொருளாதார நூற்களைப் படித்தவர் எவரும் அங்ஙனம் கருதமாட்டார்கள்.

இதனை நான் சட்டமன்றத்திலும் விளக்கி இருக்கிறேன்.

கடை - தொழிற்சாலை - தொழிற் கூடம் என்ற சொற்கள், அளவுகளைக் காட்டுவன.

நாள் ஒன்றுக்கு நாலு தகர டப்பாக்கள் தயாரித்துவரும் இடம் தரக் கடை.

நாளொன்றுக்கு நானூறு டப்பாக்கள் தயாரிக்கும் இடம் தகரத் தொழிற்சாலை.

நாளொன்றுக்கு நாலாயிரம் டப்பாக்கள் தயாராகும் இடம் தகரத் தொழிற் கூடம்!

நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் இறைச்சியாக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இடம், இறைச்சித் தொழிற்சாலை.

ஆஸ்திரேலியாவிலும், நியுஜிலாந்திலும், இத்தகைய தொழிற்சாலைகள் பெரிய அளவிலே உள்ள பெருத்த இலாபமும் கிடைக்கின்றன.

இந்த விவரங்களையும் நான் சட்டமன்றத்திலே கூறி இருக்கிறேன். என்றாலும் கசாப்புக் கடைத்திட்டம் என்று கேலி பேசும் நிலையிலிருந்து காங்கிரசார் மாறவில்லை என்பது இப்போது ஒரு காங்கரசார் பேசியதிலிருந்து தெரிகிறது.

அது குறித்து, மறுபடியும் என்ணிப் பார்த்தேன்; ஏன் இது கேலிக்கு உரியதாக, கேவலமானதாகத் தெரிகிறது? காங்கிரஸ்காரர்களுக்கு, ஆட்சி இறைச்சித் தொழிலில், கேலி பேச, கேவலப்படுத்த என்ன இருக்கிறது, என்பதுபற்றி, எண்ணிப்பார்த்தேன்.

அமெரிக்கவும் இரஷியாவும், சந்திர மண்டலத்துக்கும் செவ்வாய் கிரகஹத்துக்கும் பயணம் செய்யத்தக்க ராக்கட்டுகளையும், அண்டத்தை அழிக்கத்தக்க நீர்வளிக் குண்டுகளையும் தயாரித்து, உலகச் சந்தையில் விற்பனைக்கு அனுப்பிவைக்கும் விதமான ‘பெரிய திட்டங்களை’க் கூறிடக் காங்கிரஸ்காரர்கள் துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கும் போது நான் அவற்றை எல்லாம் திட்டம் என்று ஏற்றுக்கொள்ளாமல், எல்லாத் திட்டத்திலும் மேலான திட்டம் இறைச்சித் தொழிற்சாலைத் திட்டம் என்று பேசிவிடவில்லையே, அப்படியிருக்க, இந்தக் காங்கிரசாருக்கு ஏன், நான் சொன்ன திட்டம் இவ்வளவு எரிச்சலை மூட்டுகிறது, இத்துணைக் கேலிக்குரியதாகவும் கேவலமானதாகவும் தெரிகிறது என்று யோசித்துப் பார்த்தேன்.

நாங்கள் எத்தனை பெரிய அரசு நடாத்துகிறோம், எமது வல்லமை எத்தகையது, என்னென்ன அற்புத அற்புதமான திட்டங்களை எல்லாம் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்; அப்படிப்பட்ட எம்மையா, கேவலம் ஆட்டு இறைச்சித் தொழிலை மேற்கொள்ளச் சொல்வது என்று கூறுவது போலிருக்கிறது அவர்களின் கோபத்தைப் பார்க்கும்போது.

உண்மையில், தமக்குப் பிடித்தமானது, தமது கருத்தின் படி நேர்த்தியானது என்று ஏதேனும் ஒருபொருளோ, முறையோ, தொழிலோ திட்டமோ இருந்துவிடுமானால், வேறு ஒருவர் வேறு ஏதேனும் ஒரு பொருள் பற்றியோ, தொழில் குறித்தோ பேசினால், கோபமாகத்தான் இருக்கும்; கேவலமாகத்தான் தோன்றும்.

வெண்ணெய் காய்ச்சிய நெய்யில் முந்திரிப்பருப்பைப் பதமாக வறுத்தெடுத்துத் தின்றிட உட்காரும் சீமானிடம், சோளப் பொறியை ஒரு தட்டிலிட்டு நீட்டினால், எப்படி இருக்கும்!!
புதிய ‘பாக்கார்டு’ காரில் ஏறக்கிளம்பிடும் கனவானைப் பார்த்து, நம்ம வண்டியிலேயே போகலாம் வாருங்களேன் என்று கூறி, நம்முடைய இரட்டை மாட்டு வண்டியைக் காட்டினால், கனவான் என்ன எண்ணுவார்; அப்படி, ஏதேதோ பெரிய பெரிய நேர்த்திமிக்க, தொழில் திட்டங்களிலே ஈடுபட்டிருக்கும் காங்கிரசார், நான் அவர்களை இறைச்சித் தொழிற்சாலை நடாத்தச் சொல்லி அழைப்பதாக எண்ணிக்கொண்டு, கோபப்படுகிறார்கள் போல இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு, அவர்கள் அவ்விதமான பெரிய பெரிய, நேர்த்திமிக்க தொழில்கள் என்னென்னவற்றிலே சர்க்காரை ஈடுபடுத்தி இருக்கிறார்கள், என்னென்ன புதிய திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முனைந்தேன். ஏனெனில், நான் கூறிய ஆட்டு இறைச்சித் தொழிற்சாலையைக் காட்டிலும், அதிஉன்னதமான, மிகக் கௌரவமான, வேறு தொழில் திட்டங்கள் அவர்களிடம் இல்லாமல், அவர்கள் ஆட்டு இறைச்சித்தொழிலைக் கசாப்புக் கடை என்று கேவவமாகப் பேச முற்படமாட்டார்கள் அல்லவா!

அதிகமாகக்கூட நான் கஷ்டப்படவேண்டி வரவில்லை, வெகு எளிதாக ......... விட்டது; அன்று வெளிவந்த ‘தினமணி’யில், காங்கிரஸ் அரசு, நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் பற்றிய குறிப்புப் பார்த்தேன்.

அதைப் பார்த்த பிறகுதான் ஏன் நான் கூறிய ஆட்டு இறைச்சித் தொழிற்சாலையை, கசாப்புக் கடை என்று கேவலப்படுத்துகிறார்கள் காங்கிரஸ்காரர்கள் என்பது புரிந்தது; வேறு நேர்த்திமிக்க, மிக்க மதிப்பளிக்கத்தக்க திட்டம் அவர்கள் கைவசம் இருக்கிறது; மிக நேர்த்தியான வேறு திட்டத்திலே அவர்கள் மனத்தைப் பறிகொடுத்து விட்டிருக்கிறார்கள்; அதனால்தான் அவர்களுக்கு ஆட்சி இறைச்சித் தொழில், கசாப்புக்கடை என்று கூறிக் கேலி செய்யத்தக்கதாகத் தோன்றுகிறது.
அவர்களின் மனம் இப்படி ஒரு திட்டத்தின் மீது சென்றுவிட்டிருக்கிறது என்பது எனக்கு முன்னதாகத் தெரியாமல் போய்விட்டதற்காக உள்ளபடி வருந்துகிறேன்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளில், தொழிலில், முறையில், விருப்பமும் மதிப்பும், பற்றும் பாசமும் ஏற்படுவது சகஜம். எனக்கு மதிப்பாகத் தோன்றிடும் ஒரு பொருளோ, முறையோ, தொழிலோ இன்னொருவருக்கு மதிப்பானதாகத் தோன்றாமல் இருக்கலாம், தவறு இல்லை.

கசாப்புக்கடைத் திட்டம் என்று கேவலப்படுத்தப்படும் திட்டம்போல அல்லாமல், நேர்த்தியான மிக்க மதிப்பளிக்கத்தக்க வேறு திட்டம் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்று கண்டறிந்துகொண்டேன் என்கிறேனே, என்னதிட்டம் அது, என்று அறிந்துகொள்ள ஆவல் எழுகிறது அல்லவா! கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்; கூறுகிறேன்.

இறைச்சித் தொழில் கேவல மானது, அதிலும் ஒரு பெரிய அரசு மேற்கொள்ளத்தக்கது அல்ல அத்தகைய தொழில், என்ற அடிப்படை எண்ணத்திலேதான் அவர்கள் கேலி பேசுகிறார்கள்.

கற்பூரக்கடை வைத்திருக்கிறேன் என்று கூறத் தயக்கம் எழுவதில்லை; கருவாட்டுக்கடை நடத்துகிறேன் என்று கூறும்போது ஒருவிதமான கூச்சம் எழக்கூடும்; ஏனெனில், கற்பூரம் மதிப்பான, உயர்வான பொருள்; கருவாடு கேவலமான பொருள் என்பது பொதுவான கருத்து.

ஆனால், பீடிக்கடை வைத்திருக்கிறேன் என்று சொல்லக் கூச்சப்படுவதைப் பார்த்திடும் நாமே பார்க்கிறோம். அதே பொருளை மிகப்பெரிய அளவில் தயாரித்து விற்பனை நடாத்தும் தொழிலதிபர்கள், தம்மைப் ‘பீடிச் சக்ரவர்த்தி’ என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்வதை.

எனவேதான் நான், பெரிய அளவில் ஆட்டு இறைச்சித் தொழிற்சாலை நடத்துவது, கூச்சப்படத்தக்கது அல்ல, கேவலமானது அல்ல என்று எண்ணினேன்; கூறினேன். ஆனால், இப்போதுதான் புரிகிறது காங்கிரஸ் அரசு, மிக உன்னதமான வேறு பொருளின் மீது, மிக்க மதிப்பளிக்கத்தக்க வேறு தொழிலின் மீது நாட்டம் கொண்டிருக்கிறது என்பது.

அரசு கட்டிலில் அமர்ந்திருக்கும் பெரியவர்களை ஆடு வளர்த்து, இறைச்சித் தொழிற்சாலை நடத்தச் சொல்ல முற்படலாமா? அவர்களின் அந்தஸ்து எப்படிப்பட்டது? நிலை எவ்வளவு உயர்ந்தது? நினைப்பு என்னென்ன உயர்தரமான திட்டங்களிலே பதிந்திருக்கிறது! அதனை அறியாமல், அரசாள்வோர் முன்; ஆடு கொண்டுபோய் நிறுத்துகிறாயே; அவர்கள் ஆட்டை ஒரு பொருளாக மதிப்பார்களா! ஏறெடுத்துப் பார்ப்பார்களா! ஏற்றுக் கொள்வார்களா ஆட்டு இறைச்சித் தொழிற்சாலையை! என்றெல்லாம் காங்கிரசின் ஆதரவாளர்கள் பேசிய போது எனக்குச் சங்கடமாகக்கூட இருந்தது. இப்போதுதான் புரிகிறது உண்மையில்; அரசு நடாத்துபவர்கள், வேறு ஒரு தொழிலின மீது நாட்டம் கொண்டுவிட்டிருக்கிறார்கள், என்பது.

ஆடா? என்று கேலியாகக் கேட்டிடும் நிலையில் காங்கிரசார் இருக்கத்தக்கவிதமாக அவர்கள் கொண்டுள்ள மதிப்பு மிக்க தொழில் திட்டம் என்ன? அத்திட்டத்திற்கு அடிப்படையாக அமைந்திருப்பது என்ன? என்கிறீர்கள். ஆச்சரியத்தால் மூர்ச்சையாகாதீர்கள்; ஆத்திரத்தால் வியர்த்துக் கொட்டும் நிலைக்குச் செல்லவேண்டாம் என்று காங்கிரசாருக்கும் சொல்லுங்கள்; ஆடு, அதன் இறைச்சி, இது கேவலம் கேலிக்குரியது என்று கூறிவிடும் காங்கிரசார், நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று குறித்திருக்கும் தொழிலுக்கு மூலப் பொருளாக அமைந்திருப்பது, ஆடு போன்ற கேவலம் அல்ல, மதிப்பு மிக்க பன்றி, ஆமய்யா ஆம்! பன்றி!!

என் மீது கோபித்துக்கொண்டு என்ன பலன்?

பன்றி வளர்க்கவும், பன்றி இறைச்சி தயாரிக்கவும், நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஏற்பாடு ஆகி இருக்கிறது.

பன்றிப் பண்ணைகள் பல நடத்தப் போகிறார்கள் - ஆம்! ஐயா! ஆம்! ஆட்சி இறைச்சியா விற்கச்சொல்கிறாய் என்று என்னைக் கேட்டிடும், கோபமிக்க காங்கிரஸ்காரர்கள் நடாத்திவரும் அரசு, தீட்டியுள்ள திட்டந்தான், பன்றிப் பண்ணைகள் - பன்றி இறைச்சி தயாரிப்பு - இவை.
பன்றியா..! பன்றிப் பண்ணைகளா! இப்படி ஒரு திட்டமா! இது அரசு அறிவிக்கும் திட்டமா! எமது காங்கிரஸ் அரசு அறிவிக்கும் திட்டமா என்று கேட்டுக்கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தாதீர்கள் - இதோ ‘தினமணீ’யில் வெளிவந்துள்ள செய்தி.

“நாட்டில் 14-பன்றி இறைச்சித் தொழிற்சாலைகளை அமைக்க, நாலாவது திட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும்.

இவற்றில் 10-தனியார் துறையிலும், மீதி 4-பொதுத்துறையிலும் இருக்கும்.

பன்றி இறைச்சித் தொழிற்சாலைகள் அமையும் இடத்துக்கு அருகே 14-பெரிய பன்றி வளர்ப்புப் பண்ணைகளையும் 140-தீவிர பன்றி அபிவிருத்தி பிளாக்குகளும் அமைக்கப்படும்.

தீவிர பன்றிவளர்ப்புப் பிளாக்குகள் அமைக்கப்படாத இடங்களில், பன்றி வளர்ப்புக்கான 12-சிறிய பண்ணைகளும், 60-பன்றி வளர்ப்புப் பிளாக்குகளும் ஆரம்பிக்கப்படும்.

இது காங்கிரஸ் அரசு, நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்காகத் தேர்ந்தெடுத்துள்ள தொழில் திட்டம்.

பன்றி வளர்க்கப்போகிறார்கள்! தீவிரமாக!! பெரிய அளவில் பண்ணைகள் அமைக்கப்போகிறார்கள்.
பன்றி இறைச்சித் தொழிற்சாலைகள் நடத்தப்போகிறார்கள் - பெரிய அளவில்.

இப்போது என்ன சொல்கிறீர்கள் - நண்பர்களே! காங்கிரஸ்காரர்களாக இருந்தால் என்ன, நியாயம் என்பது பொதுதானே! நான், ஆட்டு இறைச்சித் தொழிற்சாலை நடத்தலாம் என்று கூறியபோது, சேச்சே! இது ஒரு திட்டமா! இதைச் சொல்பவன் ஓர் அறிஞனா! கசப்புக்கடை நடத்தச் சொல்பவன் ஒரு கழகம் நடாத்துபவனா! கேட்கச் சகிக்கவில்லையே! மிகக் கேவலமாக இருக்கிறதே! என்றெல்லாம் பேசியவர்கள், இப்போது காங்கிரஸ் அரசு, பன்றி இறைச்சி தயாரிக்கவும் திட்டமிடுகிறது என்று அறிந்து கொள்ளும்போது, என்ன சொல்லப் போகிறார்கள்! இது என்னகடை?

ஆட்சி இறைச்சித் தொழிற்சாலை நடாத்துவது கேவலம் என்றால், பன்றி இறைச்சி தயாரிப்பது எப்படிப்பட்டது! புனிதமான, மேலான, மதிப்புமிக்க, தேசியத் தொழிலோ!! விளங்கவில்லையே!!

போகட்டும், பெயரையாவது மாற்றிக்கொள்ளச் சொல்லுங்கள் - பன்றிப் பண்ணை என்பது என்னமோ போல இருக்கிறது - வராக விஹாஙத! நல்ல பெயர்!! சுலபத்தில் விளங்காது!!

பன்றிக் கறி என்று சொல்லச் சொல்லாதீர்கள் - வராகப் பிரசாதம் - வசீகரமான பெயர்!!

இவர்களுக்கு இந்த அளவுக்குப் பன்றிகளிடம் மனம் இலயித்துப் போயிருக்கிறது என்று தெரியாமற்போய்விட்டது எனக்கு- நான் ஆடுபற்றிச்னேன்! இப்போது தெரிகிற பண்ணைத் திட்டம் பற்றி!

பன்றிப் பண்ணைகள் அவை எண்ணம் கொண்டவர். நானோர் ஏமாளி, கோவை ஆட்சி இறைச்சி தயாரிக்கும் படம் பற்றிச் சொன்னேன். பண்ணைகளைப் பரிபாலிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்! தியான திட்டம்! மதிப்பு திட்டம்!!

ஆடு, ஒரு குட்டி இரண்டுகள்தான் போடும்! அரசு நம்புவோர், பல குட்டிபோடும் ஆடுகளால், ஆடு மூலம் கிடைப்பதைவிட அதிக ஆதாயம் கிடைப்பது என்பதனை அறிந்திருக்கிறார்கள்.

நம்முடைய நாட்டில் பன்றி மிகக் கேவலமாகக் கருதுவார்கள் என்பீர்கள் - இருக்கட்டும தொடர்ந்து ஒரு பத்து நாளைப் பேசச் சொன்னால் போகிற நாவுக்கரசுகளை - சுவை சொட்ட சொட்டப் பேசி, பன்றி இறைச்சி என்பது பாகு என்று மக்கள் நம்பிடச் செய்கிறார்கள்.

பன்றி இறைச்சி தின்றவர்யார் ஆண்டிருக்கிறார்கள்!

பாவாணர் பலருக்கு முதல் உதிப்பதே, பன்றி இறைச்சியைச் சுவைத்த பிறகுதான் என்றெல்லாம் பேசிடுவர்!

உலகிலே எந்தெந்த நாடுகளில், எத்தனை எத்தனை அளவு பன்றி இறைச்சி சாப்பிடுகிறார்கள் என்ற புள்ளி விவரம் வேண்டுமா - தருவார்கள்!!

ஆட்டு இறைச்சித் தொழிலை கசாப்புக் கடைத் திட்டம் என்று கேலி பேசினார்களே. அதுபோல அல்ல - அது நான் சொன்னது - இது தேசியத் திட்டம்!!