அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஜார் பாதை

பத்திரிகைக் கட்டுப்பாடு சட்டம் என்று இந்திய பார்லிமெண்டில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஆட்சேபகரமான முறையில் பத்திரிகைகள் எழுதாமல் தடுப்பதே இச்சட்டம் என உள் நாட்டு மந்திரி ஆச்சாரியார் கூறினார்.

ஆனால் இச் சட்டம் பத்திரிகைகளின் சுதந்திரத்தை ஒழித்துக் கட்டும் அக்கிரமச் சட்டம் எனப் பலர் கூறுகின்றனர்.

ஆட்சேபகரமானது என்பதை அரசாங்கம் தீர்மானிக்குமாம். எந்தப் பத்திரிகையாவது ஆட்சேபகரமாக எழுதுகிறது என்று தோன்றுமேயானால் இச் சட்டத்தை வீசுவராம்!

பத்திரிகைக்கு ஜாமீன் கோரப்படுவது மட்டுமின்றி, அச்சகத்தாரும் அபராதத்துக்கும் தண்டனைக்கும் உள்ளாவாராம்.

இந்தச் சட்டம் ஏற்பட்டு விட்டால், பத்திரிகை நடத்துவோர் திண்டாடவேண்டியதுதான். எழுத்தாளர்கள் எதையெழுதினால் ஆட்சேபமிருக்காது என்று யோசித்துத் திணற வேண்டியதுதான்.
மனதில் படுவதை மக்களுக்குத் தெரிவிக்க எவருக்கும் உரிமையுண்டு. இதையே எழுத்துச் சுதந்திரம் எனக் கூறுவர்.

ஆனால், அது பறிக்கப்படுகிறது. எழுத்தாளர்கள் கையை முறிக்கின்றனர்.

இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற நேரமில்லை!

ஆனால் இந்த அக்கிரம அடக்குமுறை மசோதாவை சட்டமாக்க மட்டும் நேரமிருக்காது!

கடைசி காலத்தில், ஜார்பாதையில், வெகு வேகமாக ஓடுகின்றனர்! ஜனநாயகத்தையும் மனித உரிமைகளும் மண்ணுக்குள் புதைக்கின்றனர்!

(திராவிடநாடு 7.10.51)