அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஜாரைத் தோற்கடித்தார் நேரு

மேளம் முழங்கிற்று! வாத்தியங்கள் இன்னிசை வழங்கின.

அலங்கார உடையணிந்து அந்தப் பேரழகி புறப்பட்டாள்! அவள் அன்று மணக்கோலத்தில் நின்று கொண்டிருந்தாள்!

ஆனால் அவள் உடன் நின்றவர்களோ கண்கலங்கினர்! மனங் குழம்பிநின்றனர்!

அவர்களைக் கண்ட மணமகளோ என்ன செய்வதென்று தெரியாது மயங்கினாள்! மனமாழ்கினாள்!

தேம்புவதா, திகைப்பதா, திரு திருவென விழிப்பதா என்று அவளை ஒரு முடிவுக்கு வரவிடவில்லை, அவளது நிலை!

அவள் மணம் முடிக்க ட்ரான்ஸ்வாலுக்குப் போகவேண்டும்! அங்கு தான் மணமகன் வீடிருக்கிறது.
அவள் ரயிலேறவில்லை! உள்ளங் குமுறினாள்!

விடிந்தால் திருமணம்! புறப்பட்டுப்போகவேண்டும்! ஆனால் அவள் அழும் நிலையிலிருக்கிறாள்! வீட்டாரோ, விழிகளிலே நீரைத் தேக்குகின்றனர்! அவர் தம்மொழிகளிலே, பரிதாபத்தை குழைக்கின்றனர்!

மணம் முடிக்க அவள் தனித்தே தான் செல்லவேண்டும்! உறவினர் எவரும் உடன் போகக்கூடாது!
அதனால்தான் மணமகளைச் சுற்றியிருந்தோர் தேம்பினர்!
சமூகக் கட்டுப்பாட்டால்தான் இந்த சஞ்சலம் என்று எண்ண வேண்டாம்-சர்க்கார் தரும் சங்கடம் இது!

ஆட்சியாளர் செய்யும் இந்த அலங்கோலத்தைக் கண்டால், அந்த மணமகளைப் போல, நாமும் மயக்கமடையத்தான் வேண்டும்!

தென் ஆப்ரிக்காவில் மலான சர்க்கார், நம் நாட்டவருக்கு இழைத்து வரும் இன்னல்கள், மின்னலைப் போலத்தோன்றி மறையக்கூடியன அல்ல. அழியாத ஆறாத புண்ணை ஏற்படுத்தக்கூடியன!

அதிலே ஒன்றுதான் மணமகளை, மற்றவர்கள் தொடர்ந்து உடன் செல்லக்கூடாது என்ற தடையும்!

இந்த மணவேதனையைக் கேட்டும் மனவேதனையால் பிணமாகாமலிருக்கிறோம் இன்னமும்!

நிறவெறிகொண்ட மலான் சர்க்கார் இத்தகைய தகாத சட்டமிட்டு, நம் நாட்டோர் இதயத்தைக் கீறிப் புண்ணாக்கி, பூரிக்கிறது!

தென் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல இத்தகைய கொடுமைகள் கூத்தாடுவது, ஜகமெங்கும் உள்ளன!
ஆள்வோர் நடந்து செல்லும் அக்கிரமப்பாதை, வரலாற்று ஏடுகளைப் புரட்டியோருக்குப் புரியாமல் போகாது.

களவாடச் செல்பவன், குறிப்பிட்ட வீட்டையடைந்ததும், கன்னக்கோல் தேடுகிறான், மதிலைத் துளைக்க!

சாளரங்களின் வழியே செல்லப் பார்க்கிறான், சிலசமயங்களில்!

கதவுகளைப் பிளந்து தள்ளுகிறான், இன்னும் சில சந்தர்ப்பங்களில்!

உளவால், உள்தாழ்ப்பாளை ஆள்வைத்து திறப்பதும் உண்டு, வேறு சில நேரங்களில்!

அவன் செல்வது திருட-அதற்கு இப்படிப் பல முறைகளில் முயற்சி செய்கிறான் கள்ளன்.

கன்னக்கோல் வைக்கிறான்! சாளரங்கள் வழியே தாவுகிறான்! கதவுகளை உடைக்கிறான்! தாழ்ப்பாளைத் தளுக்காகத் தள்ளுகிறான்! எல்லாம் கள்ளத்தனம் செய்யத்தான்!

மாடி வீட்டைக் கண்டால்தான் திருடன் இப்படிப் பலவழிகளில் முயற்சி செய்கிறான். இப்படிப் பல முறைகளில் ஏதேனும் ஒருமுறை உபயோகப்படுத்திப் பலன் பெறலாம் எனப்பார்க்கிறான்!

அதுவும், மாடிவீடு, அவன் கவனத்தையும், கருத்தையும் பறிக்கக் கூடிய அளவு செல்வம் செழித்தோர் வாழுமிடமாக இருக்க வேண்டும்.

அப்படித்தான், எதேச்சாதிகார ஆட்சியில், நாட்டின் தலைவர்கள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள்!
இலட்சிய வீரர்களை ஒருமுறையிலல்ல, பலவழிகளில் அடக்கப் பார்த்திருக்கிறது, ஆணவ ஆட்சி.
சிலரை, நாட்டிலிருப்பதே ஆபத்து என நாடு கடத்தியிருக்கின்றனர்.

இன்னும் சிலரை நாட்டிலே உலவுவது கூடாது எனக் கூட்டிலே அடைத்திருக்கின்றனர்.

சிலர் பேசக்கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளனர். சிலர் பேனா அசையக்கூடாது என்று பேசியிருக்கிறார்கள்.

சிலரைக் கூட்டங்களுக்குப் போகக் கூடாதெனத் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்!

இப்படி, வழிபல கண்டுள்ளனர், நாட்டுக்கு வாழ்வளிப்போரை வாட்டி வதைக்க!

ஆனால், இத்தனைக்கும் தப்பித்தான் அவர்கள், உலகவரலாற்றிலே, தாங்கள் எண்ணியதை முடித்து, நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளனர்!

கன்னக் கோல் வைத்து, சுவரைத் துளைத்து, சாளரத்தில் வழியே நுழைந்து, பெட்டிக்கதவை உடைக்கும் பொழுதே பிடிபடுகிற கள்ளனைப் போல, எதேச்சாதிகாரிகளைப் பிடித்துக் கொடுத்துள்ளனர் அவர்கள்.

செல்வம், கள்ளர்கள் கையில் சிக்காமல் போகச் செய்தது மட்டுமல்ல, அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து, கூண்டிலேற்றி, விசாரித்துத் தண்டனையும் வாங்கித் தந்துள்ளனர்.

அவர்களை அடக்கத்தான் ஆயிரம் வழிகளில் ஆணவ ஆட்சி, முயற்சி செய்து, முகாரி பாடிற்று, கடைசியில்!

இதனை, வரலாற்று ஏடு கூறுகிறது-கருத்துள்ளோர் கண்டு தெளியட்டும்.

பாட்டாளிகள் படுந்துயர் கண்டுபதைத்தான்.

அவர்கள் கண்ணீர்த்துடைப்பதே தன் வாழ்வின் இலட்சியம் என இடி முழக்கம் செய்தான்.

ரஷ்ய மண்ணிலே பிறந்த எவரும் கஷ்டப்படுவதைக் காண நான் சகியேன் எனக் கூவினான்!

அவன் பேச்சு எரிமலை வெடிப்பாகவே இருந்தது. ஜாரின் கண்களுக்கு!

அவன் செயல், கொந்தளிக்கும் கடலெனவே கருதினான், அந்த வாலிப வீரன் லெனின், பாட்டாளி மக்களுக்கு வாழ்வளிக்க, படை திரட்டிய பொழுது!

கி.பி.1885 ம் ஆண்டு லெனின், பாட்டாளித் துயர் நீக்கும் கழகம் துவக்கினான்.

ஐõரோ, அடக்குமுறை அம்புகளில் மிக்க கூர்மை வாய்ந்த வேதனைப் பட்டான்!

ரஷ்யாவில் லெனின் இருப்பதே, வெடி மருந்துச் சாலையிலே நெருப்பு இருப்பது போல என்று கூறி நாடு கடத்தினான்.

வீரனை விரட்டினான்! அவன் தன் வீண் வெறியாட்டத்தைப் பரப்பினான்!

சைபீரியா பனிக்காடுகளுக்கு அனுப்பப்பட்டான்.

லெனின் மட்டுமல்ல, ஜாரின் புன்னகை பெறாதோர் பலர் அப்பனி வயலிலே தான் திரிந்துவந்தனர்.

பனிக்காட்டிலே தான் லெனின் பாட்டாளிப் போருக்குத் திட்டம் தீட்டினான்!

தன்னைப்போல, நாடு கடத்தப்பட்டோரையும் கண்டான். நாட்டின் நிலையைக் கூறிப் புலம்பினான். அவர்களும் அவன் காட்டிய வழிநடக்க ஒப்பினர்!

புனல் வழிந்த கண்களில், அனலைத் திரட்டிக் காட்டினான் லெனின்.

பனிக் காட்டிலே, அவன் பவனி வந்தான். அந்தப் பவனியே. இந்த அவனியே கண்டு வியக்கும் புரட்சிக்கு, அடிப்படையாயிற்று!

ஐந்தாண்டுகள் சைபீரியாவிலேயே இருந்தான்!

ஓயாது, உழைத்தான். அதன் பலன். இன்று பொதுவுடைமை பூங்காவாக, ரஷ்யா விளங்குகிறது!

நாடு கடத்துவது தண்டனையென்று கருதித்தான் ஜார் லெனினை சைபீரியாவுக்கு விரட்டினான்.

கி.பி.1900 ல் அவன் பனிமலைவிட்டுப் புறப்பட்டான்.

பிறகும் அவன் சொந்த மண்ணிலே, சுகமுடன் வாழவிடவில்லை.

பாரிஸிம், லண்டனில், ஸ்விட்சர்லாந்தில் என்று இப்படி அலைந்தபடியே இருந்தான்.

அந்த நாடு கடத்தப்பட்டோன்தான், நாட்டையே, தன் நா அசைந்தபடி ஆட்டுவிக்கும் சக்தி படைத்தவனானான்!

அந்த மாவீரனை, நாடு கடத்திய மமதையாளன் ஜார் தான் அழிந்தான்.

பனிக்காட்டுக்கு விரட்டினான், பட்டாளித் தலைவன் லெனினை! எதிர்த்துக் கேட்டோரை மிரட்டினான். அதனால் நாட்டிலுள்ள பெரும் பாலானோரின் பகையும் வெறுப்பையும் திரட்டினான்! பிறகு மண்ணிலே சுருட்டிக் கொண்டு விழுந்தான், புழுப்போல!

லெனின் வாழ்விலே மட்டுமல்ல, இந்த நாடு கடத்தும் தண்டனையை நாம் பார்ப்பது!

நாட்டுக்குத் தொண்டு செய்யப்போகிறோம் என்று தங்களை அர்ப்பணிக்க வந்தவர்கள் பலரின் வாழ்விலே, இந்தப் பகுதி உண்டு!

இந்த நாடு கடத்தும், நாசகாலத்தண்டனைக்கு, அவனியிலே ஆயிர மாயிரம் உதாரணங்கள் காட்டலாம்!

ரஷ்ய ஏகாதிபத்தியத்திலே லெனின் அனுபவித்தார் அந்தக் கொடுமையை!

அதுபோலக் கொடுமை அனுபவித்தவர்கள் பட்டியல், மிகப்பெரிது, இவ்வுலகில்!

ஏகாதிபத்திய விஷத்தைக் குடித்துக் கும்மாளம் போட்ட எதேச்சாதிகாரிகள், நாட்டு நலந்தேடிகளை அடக்க கையாண்ட முறைகள் பல.

அவைகளில் முக்கியமானவை, குறிப்பிடக் கூடியவை இரண்டு.

சிலரை நாட்டைவிட்டே விரட்டுகிறார்கள்.

சிலரை நாட்டை விட்டு வெளியில் செல்ல விடுவதில்லை.

சிலர் நாட்டிலிருப்பதால் ஆபத்து, இன்னுஞ்சிலர் வெளிநாடுகளுக்குப் போவது ஆபத்து!

இந்த ஆபத்திற்கு மாற்றுமருந“து நாடு கடத்துவதும், நாட்டை விட்டு வெளிச்செல்லக் கூடாதென தடுத்து நிறுத்துவதுமே மார்க்கமெனக் கருதுகின்றனர், சர்வாதிகார ஆட்சியில்!

அதுவும், இந்திய ஏகாதிபத்தியத்தில் இந்தக் கொடுமையைப் பார்க்கிறபொழுது நாம் அனலில் புழுப் போலத் துடிக்கிறோம்.

வெள்ளையர்கள் இந்த நாட்டை, தங்களின் சுரண்டல் பூமியாக வைத்திருந்தபொழுது, இப்பொழுது ஆள்பவர்கள் கூவிய கூச்சல், இன்னமும் மக்களின் செவிகளில் ரீங்காரமிட்டபடி தானுள்ளது!

அவர்கள் காலத்தில் சுதந்திரப்போர் நடத்திய பலரை நாட்டை விட்டோட்டியிருக்கின்றனர்.

வங்கம் தந்த சிங்கங்கள் பல. இந்த பிரிட்டிஷாரின் கொடுமைத் தீயிலே சிக்கின!

பாட்டால், சுதந்திர நாதத்தை மக்கள் நரம்புகளிலே மீட்டிக் காட்டிய பாரதியார் புதுவை போனதை மக்கள் மறக்கவில்லை.

அண்மையில் ஆவி பிரிந்த அரவிந்தர், ஆசிரமவாசியாகுவதற்கு அடிப்படைக் காரணம் அறியாதோரில்லை.

அந்தமான் தீவுகளையே, இந்த அக்கிரம காரியத்திற்காக வைத்திருந்தனர்.

கி.பி.1858 வரை, அது குற்றவாளி புரமாகவே இருந்தது!

இப்பொழுதுதான் அதிலே, மக்களைக் குடியேற்றுவித்து, அவர் களுக்கு, நிலமும், பணமும் கொடுத்து புதுவாழ்வு பிறக்கச் செய்யலாம் என்று முயற்சி யெடுத்துள்ளனர்.

நாடு கடத்திடும் தண்டனையை வெள்ளை வெறியர்கள் ஆண்ட நேரத்தில் அள்ளி வீசினர்.

இன்று ஆட்சியிலே உள்ள ஆளவந்தவர்களோ தாண்டிக் குதித்தனர்! கண்டன மழையே பெய்தனர், அன்று!

நாடு கடத்துவது, நாம் மட்டுமல்ல, நல்லாட்சி விரும்புவோர் எவரும் ஏற்க முடியாத திட்டம்!

இதைவிடக் கொடுமையானது, இன்னொரு நாட்டுக்குப் போவதைத் தடுப்பது!

இரண்டும் கொடுந் தண்டனைகள்! கொடுமையின் அளவில் ஒன்றையொன்று மிஞ்சக் கூடியவை!
ஒன்று தீ, மற்றொன்று பெருவெள்ளம்!

தீயில் இறங்கினால் பொசுங்கிப்போவர், வெள்ளத்தில் மூழ்கினால் அமிழ்ந்துபோவர்.

ஆனால் இரண்டிலும் சாவுக்கிடைப்பது மட்டும் நிச்சயம்!

ஆகவே, இரண்டு தண்டனைகளையும் எவரும் ஒப்பார்.

இந்திய ஆட்சியிலே, நாம் காண்கிறோம் இந்தக் கொடுமைகளை!

நாடு கடத்தினாலாவது, நிம்மதி கிடைக்கும்!

ஆனால் இவர்கள் பிறநாடு செல்கிறோம் என்று அனுமதி வேண்டியவர்களுக்கு அனுமதி மறுத்து விட்டனர்.

ஜார் கையாண்ட முறையைக்கூட ஒப்பலாம்! ஆனால் பிரதமர் நேரு, கடைப்பிடித்த முறையை ஏற்க முடியவில்லை.

ஜாரைத் தோற்கடிக்கிறார் நேரு. இதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை, நம்மால்.

ஜாரை நல்லவராக்குகிறார். இந்தியப் பிரதமர் நேரு.

ஜார், லெனினை நாடுகடத்தினான். அதைக் கண்டு நாம் வியப்படையவில்லை.

ஏனெனில் அவன் எதேச்சாதிகாரி.

மதுவும், மாதுவுமே, மாநிலத்திலே தனக்கு மகத்துவமளிப்பவை என எண்ணிக் கிடந்த மமதையாளன்.

சீமான்களிடையே இருந்து சிறுமதியினர் போதனைகளைக் கேட்டு நாட்டையே, கேடுகளின் கோட்டையாக்கிய கோமாளி அவன்.

குங்குமநிற அதரங்களே அவனுக்குக் குல தெய்வமாகிவிட்டன!

அவர் கொஞ்சு மொழிகளே, சட்டங்கள்!

அவர்தம் குலுங்கு நடையே, ஆட்சிமுறை!

இப்படி, போக போக்கியங்களில் புரண்டுகிடந்த புல்லன் அவன். ஆகவே, அவன் நாடு கடத்தினாலும், தூக்குமேடைக்குத் துரத்தியடித்தாலும் நாம் ஆச்சர்யப்படமாட்டோம்.

ஆனால் நேரு ஜாரல்லவே! அவர் நாட்டு மக்களின் இதயத்துடிப்புகளை அறிந்தவர்.

அவர், இந்திய மக்களின் எண்ணங்களைப் புரிந்தவர்.

அவர் மக்கள் தலைவரே தவிர, மதோன்மாக்கர்கள் வழிவந்த வரல்ல!

அவர் பொதுவாழ்க்கைத் தோட்டத்து புத்தம் புதிய ரோஜா! எதேச்சாதிகார புதருக்கிடையே முனைந்துள்ள களையல்ல!

அவர் மக்கள், தங்களின் துயர்துடைக்கும் மகான் எனக் கொண்டாடும் நிலை பெற்றவர்.

காந்தியின் வாரிசு என்று பேசி, தோய்ந்த வாழ்வினரும், ஒரு தெம்பு தேடுகின்றனர்.

அவர்கள் ஆட்சி பீடமேறு முன் தித்திக்கும் மொழி பேசினர். அதற்குத் தலைமை வகித்தார் நேரு.

அத்தகைய நேரு, ஜாராகிடும் போக்கைக் காணவும் நாணுகிறது மனம், நடுங்குகிறது உடல்!

நேரு, ஜாராகக்கூட ஆகவில்லை, ஜாரை மிஞ்சுகிறார். தோற்கடிக்கிறார்! இதனைக் காணும் நல்லவர் நெஞ்சு வெடித்துவிடும்!

அக்கா ஊமை, தங்கை பைத்தியம்! ஊமையை மணந்தவனையே மேலெனலாம் பைத்தியத்தைக் கட்டிக்கொண்டு எவன் தினமும் அடியும் இடியும் படுவது!

நாடு கடத்துவதையாவது தாங்கிக் கொள்ள முடியும் ஆனால், பிற நாடு செல்வதைத் தடுப்பதைச் சகிக்க முடியாது.

அதுவும், அதனை ஜார் செய்யலாம். பொறுத்துக் கொள்ள முடியும்! நேரு செய்கிற பொழுதுதான் நெஞ்சு வேகிறது!

கோட்டானிடம் குரலினிமை நாம் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் குயில், கோட்டான் போலக் கூவினால், நாம் என் செய்வது!

ஜார், நாடு கடத்தலாம், ஏனெனில், அவன் அதைத்தான் செய்வான், செய்யத்தெரியும். அவனுக்கு, அவன் எதேச்சாதிகாரியாதலால்!

ஆனால் நேருவிடம் எதிர்பார்த்தது குயிலிடம் எதிர்பார்த்து போல!

நேருவை நாம் குயிலென எண்ணியிருக்கும் பொழுது அவர் கோட்டான் குரல் எழுப்பினால் எப்படி நாம் வியப்பால் மூர்ச்சை யடையாமலிருக்க முடியும்!

பாம்பு கடிக்கும் அதனால் சாவும் நம்மைத் தழுவும்.

ஆனால் பச்சைக்கிளி கொத்தி, செத்திடும் நிலை பிறந்தால் என் செய்வது!

நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக நடக்கும் பொழுதுதான் நாம் வியப்படைகிறோம், வேதனைப்படுகிறோம்.

நேரு, குயிலுமில்லை, பச்சைக் கிளியுமில்லை! அவர் கோட்டானாகிறார் குயிலை, பச்சைப்பாம்பாகிவிட்டார் குணத்தில் என்று கூறிடத்தோன்றுகிறது.

ரஷ்யா, இந்திய நாட்டிலுள்ள சிலருக்கு அழைப்பு அனுப்பியிருந்தது.

அழைப்புப்பெற்றவர்களில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் இன்னும் பல திறத்தினர் இருக்கின்றனர்.

இவர்கள் ரஷ்யா செல்ல அனுமதி கோரியிருந்தனர்.

இது குறித்து சென்ற திங்களில் நேரு குறிப்பிட்டுள்ள செய்தியை இன்னமும் நினைவில் கொண்டுள்ளோர் நிச்சயம் வேதனைப்படுவர்.

முப்பத்தொன்பது பேர் ரஷ்யா செல்ல அனுமதி கோரியிருந்தனர்.

இதில் முப்பதுபேர்கள் செல்லலாமென அனுமதிக்கப் பட்டுள்ளது.

இதில் சிலர் அரசாங்க ஊழியர்களுமிருக்கிறார்கள் அவர்கள் பணிமனை அனுமதித்தால் போகலாம்.
ஆனால், ராஜ்ய சர்க்கார்கள் இதனை முடிவு செய்ய வேண்டும்.

சிலருக்கு அனுமதியளிக்கவில்லை. அவர்களுக்கு முன்னாள் நடவடிக்கைகளைப் பொறுத்தே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது!

இதனை நேரு குறிப்பிட்டுள்ளார்.

தன் நாட்டிலுள்ளோரை ரஷ்யா செல்ல அனுமதிக்கவில்லை.

ரஷ்யா இவர்களுக்குப் பகை நாடல்ல!

இன்னமும் ரஷ்யா உணவளித்து உதவி வருகிறது.

ரஷ்யப் பிரதிநிதி இங்கேயும், இந்தியப் பிரதிநிதி அங்கேயும் இருக்கின்றனர்! என்றாலும் அனுமதி மறுத்துள்ளனர்.

ஜார் நாடு கடத்தினான்! நேரு, நாடு கடந்து செல்லாதே என்கிறார்!

மத்திய ஆட்சி இதனைச் செய்து விட்டு, மாகாண ஆட்சியாளர்குக்கும் மறைமுக உத்திரவிட்டு விட்டு ஒன்றுந் தெரியாதது போலப் பேசுகிறது தான் வேடிக்கை!

திராவிட முன்னேற்றக் கழக அமைப்புக் குழுச் செயலாளர் தோழர் என்.வி.நடராசனும் சட்டதிட்டக் குழுச் செயலாளர் கே.ஏ.மதியழகனும் இலங்கை செல்ல அனுமதி கோரியிருந்தனர்.

அவர்களை அழைத்து எல்லா விசாரணையும் நடத்தினர்.

கடைசியில் அனுமதி மறுத்துவிட்டனர்.

காரணந் தெரியவில்லை. ஆனாலும், இலங்கை செல்ல முடியாது!

மாகாண ஆட்சி மத்திய ஆட்சியைக் காட்டுவது, மத்திய சர்க்கார் மாகாண சர்க்காரைக் காட்டுவதுமாக, கண்ணாமூச்சி ஆட்டம் போடுகிறார்கள். இது விஷயத்தில்!

இலங்கையும் இந்தியாவிற்கு எதிரிகள் நாடில்லை.

தோழர்களும் பெரும் பயங்கரத் திட்டத்தை ஏந்திச் செல்லவில்லை.

ஆனாலும் அவர் இலங்கைச் செல்லக் கூடாதெனக் கூறிவிட்டனர்!

இந்தக் கொடுமையைக் காணும் பொழுது தான் நமக்கு நேருவை ஜாரைவிட கொடுங்கோலர் என்று கூறத் தோன்றுகிறது!

இந்தியா ஜார் நேரு-இப்படி மக்கள் கூவிடுகின்றனர்!

நாடு கடத்துவதைவிட நாடு கடந்து செல்லாதே என்பது மிகமிக கண்டிக்கத்தக்கது!

ஜார் செய்யாததை, நேரு செய்கிறார்! இதைக் கருத்துள்ளோர் கண்டு, கண்கலங்குகின்றனர்.

(திராவிடநாடு 26.8.51)