அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வேவலாயுதம் பலிக்கவில்லை
தேர்தல் வருகிறது, தயார்!
ஜனாப் ஜின்னா முரசு
தேர்தல் நடைபெறும், விரைவில், முஸ்லிம்கள், லீக் ஆதரவாளரா அஜாதுகளா என்பது, தேர்தல் முடிவினால் விளங்கிவிடும். பாகிஸ்தான் பிரச்னை மீதே, லீக் தேர்தலை நடத்தும், எனவே அகில இந்தியாவிலும் முஸ்லிம்கள் உடனே தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும். அதற்காகப் பணம் தேவை, பிரச்சாரம் தேவை, கட்டுப்பாடு தேவை - என்று ஜனாப் ஜின்னா முழக்கமிடுவது கேட்டு முஸ்லிம் உலகம் வீறுகொண்டெந்துவிட்டது. பம்பாய் நகரில் மட்டும், முஸ்லிம் மரக்கடை வியாபாரிகள் நிதி திரட்டி ஒரு இலட்ச ரூபாய் கொண்ட பணமுடிப்பை ஜனாப் ஜின்னாவிடம் ஆகஸ்ட் 6ல் அளித்தனர். மேலும் பணளம் திரட்டப்படுகிறது. தேர்தல் பிரச்சாரச் செலவுக்கும், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற இடங்களில் லீக் கொள்கை பற்றியும், பாகிஸ்தான் பிரச்னை பற்றியும் பிரசாரம் செய்யும் பணம் தேவைப்படுகிறது. சிம்லா மாநாட்டு முறிவினால் முஸ்லிம் லீக் துளியும் சோர்வடையவில்லை. காங்கிரஸ், சிம்லாவிலே, வேவல் பிரபுவைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க விரும்பிய போக்கும், லீகைப் புறக்கணித்து விட்டுக் காங்கிரசின் விருப்பப்படி இடைக்கால சர்க்கார் அமைக்கும்படி இதுபோது காங்கிரசார், சர்க்காருக்குத் தூபம் போடுவதும், பிரிட்டனில் தொழிற்கட்சி மந்திரிசபை ஏற்பட்டதும், இந்தியா மந்திரியாக பெதிக் லாரன்ஸ் நியமிக்கப்பட்டதும் “சுபசகுனம்” என்று காங்கிரசாரால் பேசப்படுவதும், நாட்டைத் துண்டாடுவது கூடாது என்று பண்டித ஜவஹர் பேசுவதும், லீகின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்து விட்டது.

ஆகஸ்ட் 6ந்தேதி, ஒரு இலட்ச ரூபாய் பணமுடிப்பு பெற்ற ஜனாப் ஜின்னா சிம்லா மாநாடு பற்றி வீர உரையாற்றினார்.

இடைக்கால சர்க்கார் வேண்டும் என்று இன்னமும் கேட்டுக் கொண்டிருப்பானேன்? போரின் போக்கு மாற்றிவிட்டது. ஐரோப்பாவிலே போர் இல்லை. ஜப்பான் சண்டையும் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. சண்டையோ இந்தியாவுக்கு வெகு தொலைவிலே, ஜப்பான் தாயகப்பகுதியிலே நடக்கிறது. இந்தச் சமயத்திலே இடைக்கால சர்க்கார் ஏன்? நிரந்தரமான சர்க்கார் ஏற்பட, அரசியல் திட்டம் வகுப்போம் வாரீர், பாகிஸ்தானை ஒப்புக் கொண்டு, மேற்கொண்டு பேசும், கேட்போம், எதைச் சொல்லியாவது என்ன செய்தாவது, பாகிஸ்தானைக் கருவிலே கொல்ல முனைவீரேல், இந்தியாவில் சுதந்திரம் என்பது கிடைக்காது. பாகிஸ்தான் எமது பிறப்புரிமை, அதை விட்டுக் கொடுக்க மாட்டோம். அந்தப் பிரச்னை சம்பந்தமாக யாருக்கும் பணிய மாட்டோம்” என்று ஜனாப் ஜின்பா, பேசினார். அவர் மேலும் பேசியதாவது “சிம்லாவிலே, முஸ்லிம் லீகைக் குறை கூறி, இழிந்தும் பழித்தும் பேசி எப்படியாவது வைசிராய் லீகைப் புறக்கணிக்கும்படி செய்ய வேண்டுமென்றே காங்கிரஸ் முயன்றது. வைசிராய் அதற்கு இணங்கவில்லை. அவர் இணங்கினாலும், அவராலும், முஸ்லிம் லீகைப் புறக்கணிக்க முடியாது” என்று கூறினார்.

அசலும் வட்டியும் சேர்த்துத் திருப்பித் தருவது என்பார்களே அதிலே ஜனாப் ஜின்னா கைதேர்ந்தவரல்லவா! லீகின் மீது தூற்றல் பிரசாரத்தைத் துவக்கியுள்ள காங்கிரசுக்குப் பலமான கசையடி தந்தார் அன்றையக் கூட்டத்தில்.

“இந்தியாவை விட்டு வெளியே போ! - பரிபூரண சுதந்திரம் வேண்டும், - என்றெல்லாம் முழக்கமிட்டும், ஆண்டு விழாக்களின் போது ஆர்ப்பரித்தும் வருகிற காங்கிரஸ் தலைவர்கள், தோற்றுத் துயருற்று, தொல்லை தாங்காது திணறித் தத்தளித்து எப்படியாவது சில பதவிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்து சிம்லா சென்று, வைசிராய் வேவலின் திருவடியிலே வீழ்ந்தனர்” என்று கூறினார். சாந்தியாரைப் பற்றி, “காந்தியார் ஏன் சிம்லா வர வேண்டும்? வந்த பிறகு மாநாட்டிலே ஏன் சிம்லா வர வேண்டும்- வந்த பிறகு மாநாட்டிலே ஏன் கலந்து கொள்ளவில்லை? கலந்து கொள்ளாதவர், அங்கு ஏன் ஆலோசகராக அமர்ந்திருந்தார்! ஆலோசகராக அமர்ந்திருந்தார்! ஆலோசகராக இருந்ததிலும் காங்கிரசுக்கு மட்டுமின்றி இருந்ததிலும் காங்கிரசுக்கு மட்டுமின்றி பிரிட்டிஷாருக்கும் ஆலோசகராக இருந்து ஏன்?’ என்று கேட்டுவிட்டு, “சூத்திரக் கயிற்றைப் பிடித்திழுத்து காங்கிரஸ் தலைவர்கள் என்ற பொம்மைகளை ஆட்டி வைக்கவே அவர் அவ்வாறு செய்தார்” என்று பதிலும் கூறினார்.

“காந்தியார் ஒரு புதிராக இருக்கிறார். ஒரு சமயம், நான் காங்கிரசிலே நான்கணா மெம்பர்கூட அல்லவே என்று பேசுகிறார், பிறிதோர் சமயமோ, காங்கிரசுக்குச் சர்வாதிகாரியாகிறார். இப்படிப்பட்டவரிடம், எப்படி ஒரு சமர ஏற்பாட்டுக்கு வர முடியும் - நம்பிக்கையுடன்? என்று கேட்டுவிட்டு,” இந்துஸ்தானிலே பூரண சுதந்திரத்துடன் இந்துக்கள் வாழட்டும், அதுபோலவே பாகிஸ்தானில் முழு சுதந்திரத்துடன் முஸ்லிம்கள் வாழட்டும், என்பதுதான் லீக் கொள்கை,- இதை ஏற்றுக் கொண்டாலொழிய நாட்டுக்கு விடுதலை கிடையாது” என்று விளக்கரைத்து விட்டு, விழித்தெழுந்து, வீணரை விரட்டி, தேர்தலிலே வெற்றி கிடைக்கும்படியாக இப்போதிருந்தே வேலை செய்யுங்கள் என்று முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டார்.

சிம்லா மாநாட்டின் போது, முஸ்லிம் லீகை ஒழித்துக் கட்டவும், முடியவில்லையானால், மூலைக்காவது அனுப்பவும், காங்கிரசார் முயன்றனர், தோற்றனர். இந்த முயற்சியிலே, அவர்கள் தமது முன்னாள் முடுக்கையும் மறந்து, வெள்ளையருக்கு விசுவாசிகளாகி, வேவல் பிரபுவின் தயவைப் பெற்று, அதன் மூலம், லீகைத் தகர்த்துவிடத் துணிந்தனர். ஆனால் வேலலாயுதம் பலிக்கவில்லை. இதனை ஜனாப் ஜின்னா விளக்கிக் கூறிவிட்டார்.

(திராவிடநாடு - 12.8.1945)