அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஜனவரி 4!

தம்பிமார்கள், தத்தமது வெற்றிப்பட்டியலை, மகிழ்ச்சியுடன் காட்டினர் - மகிழ்ந்தேன். மக்கள், இந்த நாளன்று எவ்வளவு களிப்பும், புதிய நம்பிக்கையும் பெற்றனர் என்பதை, நான், திருச்சியில் கண்டேன். கண்டு, மக்களின் மனம் மேலும் உற்சாகம் பெறத்தக்க விதமான தொண்டு புரியும், வாய்ப்பும் வலியும் பெற்றாக வேண்டும், திராவிட முன்னேற்றக் கழகம் எனற் பாடம் கற்றேன்.

வீதிகளிலே விற்பனை, என்று திட்டம் - ஆனால், யாராலும் எல்லா வீதிகளுக்கும் செல்ல முடியவில்லை நேரம் கிடைக்கவில்லை.

திருச்சியில், நான், நண்பர்கள் பொன்னம்பலனார், வில்லாளன், அனிபா, பராங்குசம், மணி, தர்மு, திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணன் போன்றவர்களுடன் சென்றே - ஒரு 6 வீதிகளுக்கு மட்டும் - அதுபோன்றேதான், மற்ற ஊர்களிலும் குறிப்பிட்ட சில தெருக்கள் மட்டுமே, போய்வந்தனர், மற்றவர்கள்.

சென்ற இடங்களிலும், மக்களின் தேவைகளை முழுவதும் கவனித்து விற்பனையைப் பெருக்க, முடியவில்லை. கேட்பவர்கள் ஏராளம் - பெற்றவர்கள் சிலர் மட்டுமே - அடுத்த இடம், அடுத்த இடம், என்று கூறியபடி, மேலால் செல்ல நேரிட்டது. ஒரு சிறுவன், இந்த நிலைமையை விளக்கினான், விம்மும் குரலில், நான் வெட்கப்படும்படி!

“என்ன அண்ணா! சிந்தாமணியில் கேட்டேன். மலைக்கோட்டை வா, என்றீர்கள், மலைக்கோட்டை வந்தேன், பெரிய கடைவீதிக்குப் புறப்பட்டு விட்டீர்கள், இங்கேயும் தராமல், வேறு இடம் குறிக்கிறீர்களே! ஒரே ஒரு துண்டு, எட்டரை ஆணா துண்டு கொடுத்துவிடுங்கள்” பல ரகத்துணிகளைப் போதுமான அளவு எடுத்துச் செல்லவும் முடியவில்லை, ஒரு ரகம் செலவாகிவிட்டதும், மேலும் அதே ரகம் துணிகளைக் கொண்டுவந்து சேர்க்கவும் முடியவில்லை! முறையோ, புதிது! வியாபாரிகளோ, வாங்கி வாங்கிப் பழக்கப்பட்டவர்களே தவிர, விற்பனை நடத்திப் பழக்கப்பட்டவர்களல்ல. கடையோ, மோட்டார்வான், ஓடிக்கொண்டே இருக்கவேண்டிய நிலை, இவ்வளவுகிடையே, விற்பனை! ஆனால், என்ன உற்சாகம்! எத்தணை விழிப்புணர்ச்சி! மக்கள் காட்டிய ஆர்வம் தான் எப்படிப்பட்டது! நாமல்லவா, அந்த ஆர்வத்தைக் காணும் வாய்ப்பை அடிக்கடி பெறத் தவறிவிடுகிறோம் என்று எண்ணினேன்.

“தம்பி, எட்டரை அணாதுண்டு, இல்லை”

“சரி, பதினைந்தணா துண்டு, கொடு”

“அம்மா! வாடாமல்லி கலர்சேலை தீர்ந்துவிட்டது”

“அப்படியா! பாக்குக் கலர் சேலை ஒன்று கொடு”

“கரை போட்டதுண்டு ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது”

“சரி- அது ஒன்றும், கரை போடாத துண்டு ஒன்றும், தந்து விடுங்கள்.”

இவ்வண்ணம் உரையாடல், பாதை ஓரத்தில் நின்று கொண்டு கையைக் காட்டி, மோட்டார் வானை நிறுத்தி, துணிகளைக் கேட்டு வாங்கின நிகழ்ச்சிகள், உண்மையிலேயே நாட்டு மக்கள், கைத்தறி நெசவாளரின் துயர்துடைப்பது தங்கள் மேலான கடமை என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதாக அமைந்திருக்கின்றன. திருச்சியில் நான் கண்டவைகளும், மற்ற ஊர்களில் சென்றிருந்த தோழர்கள் தந்த செய்திகளும், தி.மு.க. தயாரித்த ஜனவரி 4 திட்டம் மிக வெற்றிகரமாக நடைபெற்றிருக்கிறது, என்பதை மட்டுமல்ல, முயன்றால் இந்த வெற்றியின் தன்மையையும் அளவையும் பெரிதாக்கலாம் என்ற நம்பிக்கையையும் தருகிறது.

கைத்தறி நெசவாளர்களின் துயர் இன்று எல்லா ஊர்களிலும், நடமாடிக்கொண்டிருக்கும் திடீர்ப் பிச்சைக்காரர்கள் உருவிலே, தேய்ந்து போன கட்டழகர்கள், மாய்ந்து போகும் நிலையில் உள்ள தாய்மார்கள், எலும்புந் தோலுமாகிவிட்ட சிறுவர்கள், துவண்டு தவிக்கும் குழந்தைகள், உருவிலே தெரிகின்றன - பொது மக்கள், பிரச்சனை பயமூட்டக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்டிருக்கிறது என்பதை உணர்ந்துள்ளனர் - எனவேதான், கைத்தறியாளர் ஆதரவு நாளன்று, தாமும் தம்மாலான கடமையைச் செய்யத் தவறக்கூடாது, என்பதிலே அந்த அளவு அக்கரை காட்டினர்.

மிகச் சாமான்யரக்ளே, இந்த அக்கரையை அதிகமான அளவிலே காட்டினர்.

பெரிய புள்ளிகள் என்று சமுகத்திலே குறிக்கப்படுபவர், ஒருவரைக்கூடத் திருச்சி நிகழ்ச்சியில் நான் சந்திக்கவில்லை - அவர்கள், மாளிகைகளிலே, வேடிக்கையாக ஒருவேளை பேசிக்கொண்டிருந்திருக்கக் கூடும், “என்ன! இதுகள் இப்ப, துணி விற்குதுகளாமே! என்று கண்ணீருக்கு அஞ்சாத கண்ணியர்கள் அவர்கள்! இருக்கட்டும் - சமூக அமைப்பு, நீதிமுறையின்படி பிரித்துப் புதுப்பிக்கப்படும் வரையில்!

மற்றவர்கள் காட்டிய மட்டிலா ஆர்வத்துக்கு, என் மனமார்ந்த நன்றி.

உழைத்து தோழர்கள், உற்சாகமூட்டிய நண்பர்கள் என் உள்ளத்தில் புதியதோர் மகிழ்ச்சி எழச் செய்தனர். என் நன்றி, அவர்களுக்கெல்லாம்.

தகுந்த ஏற்பாடுகளுடன் சென்றிருந்தால், ஆங்காங்கு சிறு அளவிலேனும் கடைகள்போல் அமைத்திருந்தால், பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனை ஆகியிருக்கும்.

ஜனவரி 4ந் தேதி திட்டம் பொதுமக்களக்குத் கைத்தறி நெசவாளர்கள் படும்துயரை விளக்கவும், அன்னிய இடைகளை மக்கள் வாங்குவதால், தாயகம் தேய்ந்து வரும் கொடுமையை எடுத்துரைக்கவும், திராவிட முன்னேற்றக் கழகம் அந்தச் சங்கடமும் சிக்கலும் நிறைந்த பிரச்சனையைத் தன் முக்கியப் பிரச்னையாகக் கொண்டிருக்கிறது என்பதை விளக்கவும், அமைந்தது. விற்பனையின் அளவைவிட, பொதுமக்களிடம் புதிய ஆர்வத்தை மலரச் செய்வதே முக்கியமான நோக்கம் ஜனவரி நாலாம் தேதி துவக்க நாள்! பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விழா! பொது மக்களைத் திரட்டி, கைத்தறியாளர் துயர் தீர்க்கச் சொல்லி எடுத்துரைக்கும், தனிமாநாடு!! இந்த நோக்கம் நேர்த்தியான முறையிலும் பெருமை தரத்தக்க அளவிலும் நிறைவேறி இருக்கிறது, மகிழ்ச்சி, இந்த வெற்றியைத் தேடித் தந்த எல்லாத் தோழர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடம், வடநாட்டினிடம் சிக்கிக் கிடக்கிறது - சீரழிகிறது - சித்ரவதைக்கு ஆளான நிலையில் செந்தமிழ் நாட்டுக் கைத்தறியாளர் இருப்பது, இந்தப் பயங்கர உண்மையை எடுத்துக் காட்டும், சிகப்புப் புள்ளி!

ஆபத்து சூழ்ந்து கொண்டிருக்கிறது - திராவிடம் அமைத் தளைகளால் கட்டுண்டு தத்தளிக்கிறது - விடுதலை கிடைத்தாலொழிய மக்களுக்கு வாழ்வு இல்லை என்ற கோரமான உண்மை தெரிகிறது.
எனவே, நாட்டுப்பற்று, நாட்டுப் பொருளை உபயோகிப்பது நமது கடமை என்ற உறுதி, தாயகத்தின் தளைகளை உடைத்தெறிந்தாக வேண்டும் என்ற எழுச்சி கொந்தளிக்க வேண்டும்.

ஜனவரி 4ல், தமிழகத்தில் பல பகுதிகளில் இந்தக் கொந்தளிப்பு ஒன்றாக - எதிர் வரிசையினரும் உணர்ந்து கொள்ளும் அளவுக்குத் தெரிந்தது.

ஜனவரி 4 - துவக்க நாள், என்றேன் - திராவிட முன்னேற்றக் கழகம் இந்த ஆர்வத்தை, ஆதரவை, நாட்டுப்பற்றை, தொடர்ந்து, காட்டும்படிப் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

தி.மு.க. தோழர்கள், வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் ஜனவரி 4 என்று கருதிக் கொண்டு பணியாற்ற வேண்டும்.

வாய்ப்புகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.
இனிச் செய்ய வேண்டிய பெரும்பணிக்கு, முன்னறிவிப்பு என்றே ஜனவரி 4ந் தேதிய திட்டத்தைக் கொள்ள வேண்டும். ஜனவரி 4, தந்த உற்சாகத்தைத் துணை கொண்டு, தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

பொது மக்களும், குறிப்பாக, கைத்தறி நெசவாளர்களும், தி.மு.கழகத்திடம் பெரும் அளவுக்குத் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளனர் - மகிழ்ச்சிக்குரியது தான் - ஆனால் இது புதியதோர் பொறுப்பு என்பதை உணர வேண்டும் - நமது பணியின் தரமும் அளவும் உயர வேண்டும் - உயர்ந்த வண்ணம் இருக்க வேண்டும் - தாயக விடுதலைக் நாம் பொறுப்பாளர்கள் என்ற எண்ணத்துடன் நாம் பணியாற்ற வேண்டும் அதற்கு உற்சாகமூட்டும் நாளாக ஜனவரி 4 அமைந்தது.

நம்மிடம், பொது மக்கள், அதிலும் குறிப்பாக, கைத்தறியாளர்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சி ஒன்று கண்டேன் - கண்ணீரை என்னால் அடக்க முடியவே இல்லை.

மலைக்கோட்டை அருகே துணிகளை விற்பனை செய்து கொண்டிருந்தோம்.

தோழர் அனிபாவின் இசைமுரசு.

உடுமலை நாராயணக் கவியின் உயர்தரமான பாடலிலே மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

திடீரென்று, அந்தக் கூட்டத்திலிருந்து, ஐம்பதாண்டுள்ள ஒருவர், வறுமையால் தாக்கப்பட்டவர், கைத்தறி நெசவாளர், சின்னாளப்பட்டியைச் சார்ந்தவர், உணர்ச்சிவசமாகி, தன் தலையில் இருந்த கைத்தறித் துணி மூட்டையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, அடியற்ற தருவென என்முன் வீழ்ந்தார் - கண்ணீர் பெருகிற்று - கைத்தறியாளரைக் காப்பாற்றுங்கள் - காப்பாற்றுங்கள் என்று கதறினார்.

விற்பனைக்காகப் பல வீதிகள் சென்றபோதும் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போதும் நான் ஒரு நடுத்தர வயதுடைய தோழர் ஒருவரின் முழக்கத்தைக் கேட்டேன் என் கண்ணெதிரே அந்த உருவம் இதோ தெரிகிறது. அந்த முழக்கம் என் செவியில் ஒலித்தபடி இருக்கிறது.

கைத்தறியாளரைக் காப்பாற்றுங்கள்.

வடநாட்டு ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டுங்கள் என்பது தான் அந்த முழக்கம். அவர் தி.மு.க. அல்ல, விழிப்புணர்ச்சியும் வீர உணர்ச்சியும் கொண்ட விடுதலை வீரர் - அத்தகையவர்களை அணிவகுப்பிலே கொண்டு வந்து சேர்க்க, துவக்க நாள், ஜனவரி 4, அன்று நாம் கண்ட வெற்றி, நாம் பெற வேண்டிய பெரிய வெற்றியை நமக்கு நினைவூட்டும் விதமாக அமைந்தது கண்டு மகிழ்கிறேன் - வெற்றி தேடித் தந்தவர்களைப் பாராட்டுகிறேன் - நன்றி கூறிக்கொள்கிறேன்.

(திராவிடநாடு - 11.1.53)