அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பேரறிஞர் அண்ணாவின் மீது “ஜப்தி வாரண்ட்!”

‘சுயராஜ்ய’ சர்க்கார் நடவடிக்கை!

‘ஆரியமாயை’ வழக்குத் தீர்ப்பையொட்டி தி.மு.க. பொதுச் செயலாளர் சி.என்.ஏ. வையும், பெரியாரையும் சிறையிலே தள்ளி, பிறகு தண்டனையை ‘ரத்து’ செய்து விட்டதாக, அறிவித்த காங்கிரஸ் சர்க்கார், அவர்கள்மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூ.700ஐயும் வசூலிக்க மும்முரமான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.

‘ரூபாய் 700 அபராதம் கட்டத் தவறினால் ஆறுமாதம் சிறை வாசம்’ என்பதே, தீர்ப்பு அபராதம் கட்ட முடியாதென்று மறுத்தே இருவரும் சிறைக்குச் சென்றனர்.

பொதுச் செயலாளர் மேற்படி அபராதத் தொகையை கட்ட மறுத்துவிட்ட காரணத்தால், அவருக்குச் சொந்தமான பொருள்களை ‘ஜப்தி’ செய்யுமாறு, சுயராஜ்ய சர்க்கார், ‘வாரண்ட்” பிறப்பித்திருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளையெடுக்க அதிகாரிகள் முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

(திராவிடநாடு 3.12.50)