அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கா. சுப்பிரமணிய பிள்ளை
இரு மொழிகளிலும் வல்லவர்
பல்கலைக் கழகப் புலவர் தோழர் கா.சுப்பிரமணியம் எம்.ஏ., எம்.எல். அவர்களின் மறைவால் வருந்தாத தமிழ் மக்கள் ஒருவரும் இரார் என்பது எனது துணிவு. அவர் அறிஞர்க்கு ஆசிரியராகவும், புலவர்களுக்குத் தலைவராகவும், தன்னுணர்வாளர்களுக்கு அன்பராகவும் இருந்த காரணத்தால்!

ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் துறைபோகக் கற்ற, இரு மொழிகளிலும் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சட்டக் கல்வியைச் சரிவரக் கற்றுத் தமிழ் மக்களுள் முதல் முதலாக எம்.எல். பட்டம் பெற்ற பேரறிவுப் பெருமையும் இவருக்கு உரியது. இவருடைய அறிவாற்றல் இவரைச் சட்டக் கல்லூரியின் பேராசிரியர் ஆக்கியதுடன், தாகூர் சட்ட விரிவுரையாளர் பட்டத்தையும், பதினாயிரம் வெண் பொற்காசுகளைப் பரிசாகவும் பெறச் செய்தது.

மாணவர்களுக்குத் தமிழறிவை ஊட்டியவர்அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இரு தடவைகளில் பேராசிரியராக அமர்ந்து மாணவர்களுக்குத் தமிழறிவை ஊட்டியவர். இவருக்கிருந்த சட்டக் கல்லூரிப் போசிரியப் பதவிக்கு ஏற்பட்ட எதிர்பாராத முற்றுப்புள்ளி நிகழ்ந்திராவிட்டால், இவரது அறிவாற்றல் உயர்நீதி மன்றத் தலைவரின் பதவிக்கும் மேற்பட்ட நிலையை அடையச் செய்திருக்கும்.

சட்டக் கல்லூரியின் தலைவர் பதவிக்குத் தகுதியானவர்சட்டக் கல்லூரிக்கு ஒரு நிலையான தலைவர் இருத்தல் நலம் என்றும், அதற்குத் தோழர் கா. சுப்பிரமணியம் அவர்களே தகுதி வாய்ந்தவர் என்றும் பேசப்பட்டபோது, அந்த நோக்கம் அவ்வளவு இன்றியமையாதது அல்ல என அப்போது சட்டக் கல்லூரியில் இருந்த பலர் கருத்து வெளியிட்டு அவ்வப்போது ஒருவரைத் தலைவராக்குவதே நல்லதென்ற முடிவுக்கு வந்ததால், தோழர் கா.சு. அவர்கள் சட்டக் கல்லூரியினின்றும் விலக வேண்டியவரானார்.

சாதிப் பித்தத்தைத் தெளிய வைத்தவர்.

தோழர் கா.சு. அவர்கள் சாதிப்பூசல் ஒழிய வேண்டும் என்பதிலும் கருத்துடையவராய் இருந்தார் என்பதற்கும் ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறேன்.

தோழர் கா.சு. அவர்கள் வீட்டுக்கு, ஒரு நாள் சைவர் ஒருவர் வந்தார். சாப்பாடு நடந்தபோது அங்கிருந்த மற்றொரு சாதிக்காரர் தாம் சாப்பிடுவதைப் பார்க்கக் கூடாது என்றார். அதற்குத் தோழர் கா.சு. அவர்கள், “அந்த வேற்றுச் சாதிக்காரன் சோற்றைப் பார்த்தால் அதை யாரும் மறுப்பதில்லை. தங்களுடன் பேசினால் அதற்கும் தடையில்லை. ஆனால், தங்களையும் சோற்றையும் சேர்த்துப் பார்த்துவிட்டால் மட்டும் எங்கிருந்து தீட்டு வந்து விடும்?” என்று கேட்டார். வந்த சைவர் மனம் வெந்து, பதில் சொல்ல முடியாது திகைத்து விட்டார்.

சீர்திருத்தத் செம்மல்தோழர் கா.சு. அவர்கள் கலப்பு மணமே நாட்டு முன்னேற்றத்திற்கு நல்வழி என்றும், கைம்பெண் மறுமணம் செய்துகொள்வதில் தடை இருக்கக்கூடாது என்றும், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்து முதலான எல்லா வகையான உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும், கோவில்களிலும் மடங்களிலும் வறிதே முடங்கிக் கிடக்கும் பெருந்தொகைப் பொருள்களையெல்லாம் முடியுமானால் சட்ட வாயிலாகவேனும் எடுத்து, ஏழைகளின் கல்வி நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் பல முறைகளில் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறார்.

அவரால் அளவுகடந்த பயன்களைப் பெற்ற சைவ சித்தாந்த உலகம், அவரின் வாழ்நாட்களை வறுமையாலும், அது காரணமாக ஏற்பட்ட நோயாலுமே கழித்து மறையும்படி செய்துவிட்டது என்பதையும் இங்குக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

சைவமாம் கடலில் நீந்திச் செல்லும்பொழுது, எதிரே வந்த சில சீர்திருத்தமாம் ‘பொற்றுரும்புகளை’ எம்மிடம் வீசி எறிந்துவீட்டு, மீண்டும் அச்சைவக் கடலிலேயே நீந்திச் சென்றவரை - சைவ உலகம் கைவிட்டது என்றால், அது பெரிதும் வருந்தக் கூடிய ஒரு நிகழ்ச்சியாகும்.

(திராவிடநாடு - 20.5.1946)