அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காடிக் கழகம்!

‘யாரப்பா பரதன் என்ற பேர்வழி?’
* * *

“ஏன், நான்தான், என்ன விசேஷம்?”
* * *

கேள்வி கேட்டவரின் கோபம் என் பதிலால் கொஞ்சம் குறைந்ததுபோல் காணப்பட்டது. கோபக்குறிமாறிக், கொஞ்சம் பரிதாபக்குறி உண்டாயிற்று. “நீதானா? ஆளைப்பார்த்தால் சாதுவாகத் தெரிகிறதே” என்று அந்தக் கதருடையார் கூறிவிட்டு, என்னை ஏற இறங்கப்பார்த்தார். ஒரு சமயம், தன்னுணர்வாளர் களின் அன்றாட வாழ்க்கையைப்பற்றி விசாரிக்கக் கிளம்பிய “புதுக்கூட்டு” அனுப்புவித்த பரிசோதகரோ என்று ஐயுற்றேன். வந்தவர், எதிரே இருந்த நாற்காலியிலே உட்கார்ந்துகொண்டு, ‘தம்பி பரதா! முன்பு, இந்தி எதிர்ப்பு நடந்ததே அக்காலத்திலே நான் உங்கள் கூட்டங்களுக்கெல்லாம் வருவதுண்டு. இப்போது நீங்கள் செய்யும் காரியத்தைப் பார்த்தால்...” என்று கூறி பெருமூச்செறிந்தார். “என்ன செய்வது பெரியவரே! உலகிலே, எல்லோருக்கும் பிரியமான, பிடித்தமான காரியத்தைச் செய்ய முடிகிறதா! நாங்கள் துவக்கும் காரியம், யாரைத் தாக்குகிறதோ அவ்வப்போது அவரவர்கள் மனம் கசப்படைகிறது. அதைப் பார்த்து, அவருக்கு இது பிடிக்காதே, இவருக்கு அது பிடிக்காதே என்று தலையைச் சொரிந்துகொண்டு யோசித்து யோசித்துக் காரியத்தைச் செய்ய வேண்டுமானால், நாங்கள் தலையாட்டித் தம்பிரான்களாகி, உடலூட்டி வளர்க்கும் இடந்தேடி அதற்கேற்ற முறையிலே இயல்புகளை அமைத்துக் கொள்பவர்களாகி, உள்ளத்தைக் கள்ளர் குகையாக்கி, உடலைச் சுமையாக்கித் திரியவேண்டுமே தவிர, உலகுக்குப் பயன்படக்கூடிய ஒரு காரியமும் செய்ய முடியாதே! கதை தெரியுமோ உமக்கு, தந்தையும் மகனும் கழுதை விற்கப் புறப்பட்டு, வழியிலே போவோர் வருவோரின் யோசனைகளை கேட்டுப்பட்டபாடு! ‘என்று நான் உரைத்துக்கொண்டிருக்கையிலே, அந்தப் பெரியவர், இடைமறித்து, “கதை கிடக்கட்டும் தம்பி! அந்தக்காலத்திலே உங்களோடு சேர்ந்து, ஊரூருக்குவந்து, பேசியிருக்கிறேன்” என்று தன் கதையைத் துவக்கினார். “உண்மைதான்! இப்போது நாங்கள் செய்வது பிடிக்காது ஒதுங்கி நிற்கிறீர் போலும்” என்று நான் கூறினேன். தலையை அசைத்தார் வேகமாக, தடியைத் தட்டினார் கோபத்தோடு. மடியை அவிழ்த்தார், திருநீற்றுப் பொட்டலத்தை எடுத்தார், பிரித்தார் முருகா, முருகா, முருகா என்று மும்முறை மூன்று விதமாகக் கூவினார், நெற்றியிலே பூசிக்கொண்டார்.

“வாலிபனடா நீ.”
“ஆமாம், வாலிபன்தான்.”
“வேண்டாமடா உனக்கு இந்தப் புத்தி.”
“அக்ரகாரம் முழுவதும் அதையேதான் கூறுகிறது.”
“நாயக்கருடன் சேர்ந்து பாழாகாதே.”
“பாழகவில்லை. சேர்ந்து, சீரிய தொண்டாற்றப் பழகுகிறேன்.”
“என் கோபத்தைக் கிளறாதே.”
“நான் கிளறவில்லையே! நீரே கிளறிக் கொள்கிறீர்.”

இந்த உரையாடலும் முடிந்தது. பிறகு அவர் சாந்தமாகப் பேசலானார். ‘அன்று நான் பெரியாரைப் போற்றினேன். இன்றோ, கண்டால் வண்டி வண்டியாக வைதிட வார்த்தைகள் உள்ளன’ என்றார்.

“அது புதிதா! அதுபோல், நம் நாட்டிலே பலர், அவரை ஒரு சமயம் புகழ்வதும், மற்றோர் சமயம் தூற்றுவதுமாக இருப்பதை நான் அறிவேன். வேலூர் கோட்டை வெளியிலே இராமகாதையைக் கண்டித்துப் பெரியார் பேசுகையிலே, கோபித்தெழுந்து கூவி, தன் குள்ள உடல் குலுங்க ஆடி, குழப்பம் விளைவித்துப் பிறகு கோலிழந்து, மேலாடை இழந்து, காலின் நிலை இழந்து தவித்த ‘ஒரு துறவி,’ அந்தக் கோபத்தைத் துறந்து, சுயமரியாதை இல்லத்தில் நுழைந்து, தூபதீபமேந்தி உழைத்து, துதிபாடி ஊரைவலம் வந்து, ‘பெருமை அறியாது பிழைபல செய்தேன்! பெரியாரின் அருமை தெரியாது ஆத்திரங்கொண்டேன். இன்றே கண்டேன் அவர் குணத்தை அதை உமக்கு விண்டேன், அவர் முன் தெண்டனிட்டேன்’ என்று திருத்தாண்டகம் பாடினார், திரு உண்டி சேர்த்துத் திருமடம் அமைத்துத் திருத்தொண்டு புரிவேன் தீர இராமசாமிப் பெரியாருக்கு என்று பேசி, பெரியாரை எதிர்த்தோரை ஏசி, போய்விட்டது என்னைவிட்டு பழையமாசு என்றுகூறி, சிறையும் புகுந்து வெளிவந்து, சிறையிலே நான் கண்ட காட்சியை என்னென்பேன் என் ஐயனை! தமிழரின் தலைவனை! நித்தநித்தம் கண்டேன். சிறைக்கூடத்திலே, மணற்பரப்பிலே, மாலை நேரத்திலே அவருடன் பேசி மகிழ்ந்தேன், மட்டற்ற இன்பம் கொண்டேன்’ என்று மக்களிடம் கூறினார், ஆனால் இன்றோ பெரியாராம் பெரியார்? எதிலே? பேய்க்குரல் கிளப்புகிறார் என்று தூற்றுகிறார், இந்த முதுமையில் மூன்றாவது கட்டம் அவருக்கு இருக்கக் காண்கிறேன், மற்றொருவர் பெரியார் பற்றுக்கொண்டு, பித்தம் தெளிய ஈ.வெ.ரா. எனும் மருந்தொன்றிருக்குது என்று பாடியவர் இன்று, ‘என்ன தெரியும் இந்த நாயக்கருக்கு! இராமசாமி என்ற பெயரை வைத்துக்கொண்டு, இராமாயணத்தைக் கொளுத்துவதா! தன்னையே கொளுத்திக் கொள்வது போன்றதல்லவா அது? என்று கூறிக் குமுறுகின்றார். இங்ஙனம், பலர் பலவித மாறுதலை அடைந்தனர். அதுபோல் தாங்களும் மாறினீர் போலும் என்று நான் கூறினேன், வந்தவர், ‘பலர் பெரியாரிடம் இப்போது கோபித்திருப்பதைத் தெரிந்து கொண்டுதான் இருக்கிறாயா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். “நன்றாகத் தெரியும்! கோபத்தால் அமைக்கப்படும் புது கூடாரத்திலே கூடிடுவோர் ஒருவரை ஒருவர் நம்பாத ஓங்காரச் சொரூபிகள் என்பதும் தெரியும்’ என்று நான்கூறிவிட்டு, ‘காங்கிரஸ் பார்ப்பன சபை என்று அவர் கூறியதும், பார்ப்பனர் கோபித்தனர், ஜஸ்டிஸ் கட்சி சீமான்களின் சிங்காரக் குழவியாகக் கிடக்கிறது, வெளியே வர மறுக்கிறது என்று பேசியதும், சீமான்கள் சீறினர், வர்ணாசிரமத்தைக் கண்டித்ததும், குளக்கரைகள் கூவின, பழமையைக் கண்டிக்கிறார், இது கண்டு பழமை விரும்பிகள் பதறுகின்றன. இது சகசந்தானே! என்று நான் சொன்னேன். ‘சரி! சரி! இனிமேல் நான், இந்தக் கிளர்ச்சிக்காக என் மூச்சைப் பிடித்துக்கொண்டு, மூலை மூலையாக ஓடி, உள்ளே இருக்கும் புலவரைப் பிடித்துக் கட்டுரை தொடுத்திடச்செய்து, அதைப் பத்திரிகைகளிலே போட்டுப், படித்து மகிழப் போகிறேன்’ என்று கூறிவிட்டு வெளியே போய்விட்டார். போகத்தால் வெளியே அவசரமாகப் போனதால், அவர் மடியிலிருந்து கீழே விழுந்து விட்ட துண்டுக் கடிதத்தை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டார். கூப்பிட்டுக் கொடுக்கத் தெருவரை சென்றேன். வந்தவரின் வண்டி வேகமாகச் சென்று விட்டதால், துண்டுக் கடிதத்தை என்னவென்று பார்த்தேன்.

இலாபம்
1. கம்ப இராமாயணத்தைக் கொளுத்த வேண்டுமென்று நாயக்கர் கூட்டம் கூறுகிறது. இதனைச் சாக்காக வைத்துக்கொண்டு, கம்ப இராமாயணத்தையும், கலையையும் காப்பாற்றுவதற்
காகக் கிளம்பினோம் என்று சொல்லி, நாயக்கரைத் திட்டச் சந்தர்ப்பம் உண்டாக்கிக் கொள்ளலாம்.

2. புராணப் பிரியர்களைக் கூட்டி இலக்கியப் பாதுகாப்புக்காக வேலை செய்ய வேண்டுமென்று பேசி, உண்டி குலுக்கிப் பணந்திரட்டலாம்.

3. புலவர்கள் கூட்டத்தோடு உலவி, நம்மையும் ஒரு புலவன் என்று பாமர மக்கள் நம்பும்படி நடந்துகொண்டு புகழ் தேடலாம்.

4. கோயில்கள், மடங்கள், பஜனைக் கூடங்கள், சத்திரம், சாவடிகளில், நமது ஆதிக்கம் வளரச்செய்யலாம்.

5. மதத்திற்கு ஆபத்து என்று மாரடித்தழுது மடாதிபதிகளிடம் திருவோடு நீட்டிப்பணம் பறிக்கலாம்.

6. பார்ப்பனப் பத்திரிகைகள் நம்மைப் பாராட்டி எழுதும்.

7. பக்திமான் என்று பெயரெடுத்துப் பழைய நாற்றத்தை மறைத்து விடலாம்.

8. அந்திய காலத்தில் அரோகரா கூறி, வயிறார உண்டு, உடலாற உருண்டு, சுகமாகச் சுருண்டு கிடக்கலாம்.

நஷ்டம்
1. புலவர்கள், நமக்கிருக்கும் இலக்கிய அறிவுபூஜ்யம் என்பது தெரிந்து கேலி செய்வார்கள்.

2. உண்டி குலுக்கினாலும் பணம் அதிகம் சேராது, அவர் பணம் திரட்டி மோசம் செய்தார், இவர் எடுத்துக்கொண்டு ஏப்பமிட்டார் என்று கூறியிருப்பதால், நாம் போய்ப்பணம் கேட்டால், யாரும் நம்பமாட்டார்கள். முன்பு ஒரு தலைவரின் பெயரைக் கூறிப் பணந் திரட்ட முடிந்தது, பத்திரிகைகள் சில விளம்பரந்தந்து நம்மைத் தூக்கிவிட்டன, இரதம் ஜோடித்துக் கூட ஊர்வலம் வைத்தனர், இன்று அத்தகைய “வலிமை” கிடைக்காது, எனவே பணம் சேராது.

3. பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும்! யாராவது கூப்பிட்டால்தானே! அப்படிக் கூப்பிட்டாலும், “வாழ்க” ஒலிகூறி, சுற்றிநின்று பாதுகாப்புதர யாரிருக்கிறார்கள்! பட்டை நாமங்களும் பூச்சுப்பொட்டுகளும், பகவான்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நம்மைவிட்டு ஓடுவார்கள், குழப்பம் வந்தால், தள்ளாத பருவத்திலே, ஏன் நமக்கு வம்பும் வல்லிடியும்.

4. பார்ப்பனப் பத்திரிகை, நமது பழைய பேச்சுத் தெரிந்தால், நம்மைப்பற்றி ஓர் எழுத்தும் புகழாது!

5. மடாபதிகளை மிரட்டினால், பக்தர்கள் “நீயும் சு.ம. போல் பேசுகிறாயே” என்று கோபிப்பர். மடாதிபதிகளோ, நமக்கு வாய்க்கரிசி போடாமல், ஆரிய ஏடுகளுக்குத் தூபமிட்டால், நமக்கு என்ன கிடைக்கும்.

6. எவ்வளவுதான் “பக்திமான்” என்று வேடம் போட்டாலும், சீக்கிரத்தில் கலைந்துவிடுமே.

7. நாயக்கரைத்திட்ட இது ஒரு சந்தர்ப்பமாகக் கொள்ளலாம் என்று ஆசைதான் இருக்கிறதே தவிர, வழி இல்லையே! அந்தப் பயல்கள் இருக்கிறார்களே சு.ம.க்கள்! சும்மாவிடமாட்டார்களே! எங்கே போய்ப்பேசித், தப்பித்துக்கொண்டு வரமுடியும்?

8. நமது பழைய விஷயங்களை சு.ம.க்கள் பகிரங்கமாக்கத் தொடங்கினால், என்ன செய்வது?

நான் படித்து முடிப்பதற்குள், என்னுடன் வாதாடிவிட்டு வெளியே போன தோழர், மேல் மூச்சு வாங்க வாங்க, ஓடிவந்து, என் கையிலே இருந்த கடிதத்தைச் சரேலெனப் பிடித்திழுத்தார், ஒரு பாதி அவரிடமும் மறுபாதி என்னிடமும் தங்கிவிட்டது. அந்தப் பாதியையும் அவரிடமே தந்துவிட்டு “இலாப - நஷ்டக் கணக்குச் சரியாகத்தான் பெரியவரே எழுதியிருக்கிறது. இதை யோசித்துப் பார்த்துவிட்டுப் பிறகு, காரியத்திலே இறங்குவதே யுத்தம். ஆழந்தெரியாது காலைவிட்டு விட்டுப்பிறகு அவதிப்பட வேண்டாம். “மாஜி” என்பதற்காக, நெடுநாட்களுக்கு, நாங்கள் உன் போன்றாரின் மதிகெட்ட செயல்களைக்கண்டும் சும்மா இருந்துவிட முடியாது. குலைக்கும் நாய்மீது கல் விழும், கழுதை கத்தினால் தடிதாக்கும், ஆனால் அடிவிழும்வரை அந்தப் பிறவிகள் தமது கீதத்தை யாரும் அடக்க மாட்டார்கள் என்றே எண்ணுவது வழக்கம். ஒரு காலத்தில், சு.ம.வுடன் இருந்தவர் என்ற “யோக்யதை”யை, இன்று ஈனச்செயல் புரிந்து இழந்துவிட வேண்டாம். இன்று பெரியார் துவக்கியுள்ள கிளர்ச்சி பிடிக்கவில்லையானால் ஒதுங்கி நிற்பது புத்திசாலித்தனம் மோதிக் கொள்வது பைத்தியகாரத்தனம், தூற்றுவது போக்கிரித்தனம்; வாதிடத் தெரிந்து, வகையறிந்த “விவேகிகளே” வாய்மூடிக் கொண்டனர், வறட்டுக் கூச்சலிடவே கற்ற மண்டூகங்களின்கதி, என்னாவது! - இதை யோசித்துப் பாருமய்யா! - என்று கூறினேன். அந்தக் கிழவர், இக்கடிதத்தை நீ ஏன் படித்தாய் இது எங்கள் கழகக்கூட்ட நிகழ்ச்சியாயிற்றே என்று குளறினார். பேஷ்! கழகமா! பெயர் என்ன கழகத்திற்கு? என்று கேட்டேன். கிழவர் பதிலுரைக்காமலே வெளியே ஓடலானார் அவர் காதில் விழும்படி கூவினேன், உங்கள் கழகத்துக்குச் சரியான பெயர் தருகிறேன், சூட்டிக் கொள்ளுங்கள், காடிக்கழகம்! அதுதான் சரியான பெயர்.

வீரன் அதே நேரம் உள்ளே நுழைந்தான், விஷயத்தைக் கூறினேன், விலாநோகச் சிரித்து விட்டு, காடிக் கழகம் என்று பெயர் தருவானேன், என்று கேட்டான். “பழமை இருக்கிறதே வீரர் அதுகாடி போன்றது! அதைப்பருகிய போதையால் உளறிக்கொண்டு கிடக்கும் கூட்டத்துக்கு அது பொருத்தமான பெயர்தான்! மேலும் ஒரு பழமொழி யுண்டல்லவா, “எல்லாம் சொல்லுமாம் பல்லிகாடிப் பானையிலே விழுமாம்” என்று, அதுபோல, முன்பு நம்முடன் சேர்ந்து, ஆரியத்தை அழிக்க வேண்டும். தமிழ் வீரியத்தை வளர்க்க வேண்டும், பார்ப்பனப் புரட்டைப் பொசுக்க வேண்டும், அதைப் பெரியார் இப்படி இப்படிச் செய்யவேண்டும் என்று பேசிக் கொண் டிருந்துவிட்டு, இன்று அதே ஆரியத்திலே போய் வீழ்ந்துவிட்ட வீணர்களின் கூட்டத்திற்கு வேறென்ன பெயரிடுவது. காடிக்கழகம் மேலும் தனது வெறிமொழியைக் கூறிடின், சாடிட வேண்டும். ஆகவே வீரா, நீ அதுகளின் போக்கைக் கவனித்துக் கொண்டிரு, மீண்டும், அக் குடுக்கைகள் கூவினால், உன் பழைய சவுக்கை எடுத்துவீசி, சவுண்டிகளுக்குச் சவுக்கடி கொடுக்க வேண்டும்’ என்றேன் நான். ‘வந்தாயா வழிக்கு’ நான் ஆரம்ப முதலே சொன்னேன், இதுகளுக்குச் சவுக்கடிதானப்பா தரவேண்டும், நீ ஏதோ அறிவுரை கூறுகிறாயே அந்த மரமண்டைகளுக்கு ஏறுமா? என்று கூறினேன், கேட்கவில்லை. சரி! இனி நீ, உண்மையிலேயே கலை உணர்ந்து பேசும் கண்ணியர்களுக்குப் பதில் கூறுவதோடு இரு, காடிக்கழகத்தார் கத்த ஆரம்பித்தால், நான் எடுக்கிறேன் என் சவுக்கை, நானும் சவுண்டிகளுக்குச் சவுக்கடி தந்து நெடுநாட்கள் ஆகிவிட்டன.’ என்று கூறினான். “செய்யப்பா” என்று சம்மதித்து விட்டேன், அதைச் சவுண்டிகளுக்குத் தெரிவிக்கின்றேன்.

21.3.1943