அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காலக்கண்ணாடி

இந்தத் திருக்குளத்தைச் செப்பனிட்டு நீராழி மண்டபம் கட்டி, நேர்த்தியான சித்திர வேலை செய்யப் பத்தாயிரத்துக்கு மேல் செலவிட்டு, மண்டபம் கட்டி முடித்ததும், தெப்போற்சவத்தை நடத்த மற்றோர் பத்தாயிரம் செலவிட்டுப், பாண வேடிக்கையும் பாண்டு வாத்தியமும், மூன்று ஜதை நாயனமும், மூன்று நாள் வேத பாராயணக்காரருக்கு விருந்தும் தந்தார், தீனதயாள முதலியார்! பாவம்! அவருடைய திருக்குமாரன் தான், இதோ பிணமாக மிதக்கிறான் திருக்குளத்திலே! சொத்துத் தீர்ந்து விட்டது! தகப்பனார் வியாபாரி! இலாபத்தைப் பக்திப் பிரபாவத்துக்குச் செலவிட்டார், புகழ் கிடைத்தது, புகழ், வியாபாரத்துக்கு விளம்பரமாயிற்று, விளம்பரம் வியாபாரத்தை விருத்தி செய்தது, மேலும் இலாபம் கிடைத்தது! மகனோ, வியாபாரமறியான் தந்தையைச் சுற்றிக் கொண்டிருந்த பூசரக் கூட்டம், தன்னைச் சூழ்ந்திருக்கக் கண்டான், சொத்தைக் கரைத்தான், சொகுசாக விளையாடினான், சொர்ண தானம் செய்தான், தகப்பனார் துவக்கிய தெற்போற்சவத்தையும் விடவில்லை, புதிய கைங்கரியத்தை வேறு செய்தான், காளைப்பருவம், கண்ணடியால் கசங்கினான், காசை இழந்தான், கதியற்றவனானான், கடனாளியானான், கதறினான், கேட்பார் இல்லை, கஜேந்திரனுக்கு மோட்சமளித்தவனின் திருக்குளமே கதி என்று கூறி, விழுந்தான், இறந்தான், பிணம் மிதக்கிறது! தெப்போற்சவத் திருக்கைங்கரியம் செய்த பக்திமானின் பிணம், தெப்பம்போல் மிதக்கிறது. திருவிழாவுக்குத் திரளான கூட்டம் வருவது போலத்தான் இதற்கும் வந்து காண்கிறது.

தீனதயாளுவிடம் திதிக்கு வாங்கிய அரிசி பருப்பு காய்கறி, தட்சணை, சோமன் ஜோடு ஆகியவற்றைக் கொண்டு குடும்பக் காலட்சேபத்தை நடத்தி, தன்மகனைப், பெரிய படிப்புப் படிக்க வைத்தார், பார்த்தசாரதி ஐயங்கார்! அவர் மகன் பி.ஏ. படிக்கும்போதே, வரதட்சணை ஐயாயிரத்துடன் கிடைத்தாள் வத்சலா! வத்சலாவின் தகப்பனார், சர்க்காரிலே பெரிய அதிகாரி. வத்சலா மணாளன் வரதாச்சாரி பி.ஏ. ஜில்லா போலீஸ் சூபரிண்டு அவன் தான், பிரேத விசாரணைக்கு ஏற்பாடு செய்தான். அன்றிரவு வத்சலா, வரதாச்சாரி வயோதிகப் பருவத்திலேயிருந்த பார்த்தசாரதி ஐயங்கார் மூவரும் “அல்லி அர்ஜுனா” நாடகத்துக்குச் சென்று ஆனந்தமாகப் பொழுது போக்கினர். பிணமான பரந்தாமனின் மனைவி பத்மா, அழுத
குரலொலி, அவள் வசித்த வீதியையே கலக்கிவிட்டது. திருப்பணி செய்த தொண்டனைத் திருவடி நிழலில் சேர்த்துக் கொண்ட பெருமாள், தேவியுடன் நித்திரை செய்தார். அவர் காதிலே, பத்மாவின் பிரலாபம் விழவில்லை!!

20.12.1942