அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காலக்கண்ணாடி - தடித்தாண்டவராயன்

யாரப்பா அது? கண் செரியாத் தெரியல்லை. அடெடே! தாண்டவராய முதலியா? வாப்பா, என்ன விசேஷம்? தடித் தாண்டவராயனுண்ணு நம்ம பையன் எப்போதும் உன்னைச் சொல்லுமே கவனமிருக்கோ!

ஏனில்லிங்க! நேத்து இராத்திரி வந்தேன் ஊருக்கு, சாமியைப் பார்த்தூட்டுப் போவலாம், பத்து வருஷமாச்சேன்று வந்தேனுங்க. க்ஷேமந்தானுங்களா?

இருக்கேன் பகவத் சங்கற்பத்தாலே. ஏண்டாப்பா தாண்டவராயா? ஊரை விட்டே போயிட்டே, போன இடத்திலாகிலும் ஏதோ காலட்சேபம் சரியாக நடக்கிறதோ?

இழுத்துப் பறிச்சிக்கிட்டு இருக்குதுங்கோ. ஏழரை நாட்டான் விலகி ஏழு மாசந்தானுங்களே ஆவுது. பட வேண்டிய பாடு பட்டாச்சி. பூமி வீடு எல்லாம் இங்கேயே போச்சிங்களே. அங்கே ஒரு மவராசன் கிடைச்சாருங்கோ. அவர் வீட்டிலே தான் கணக்கு எழுதறேன்.

உன் மகன் என்ன செய்திண்டிருக்கான்?

அந்தக் கண்ராவியை ஏன் கேக்கறிங்க? சினிமா ஆடராங்களே அந்தப் பசங்க கூடச் சேந்துகினு சுத்தறான்.

பொண்ணு, பொன்னி, என்னமா இருக்கா?

புலம்பிகிட்டுக் கிடக்குது! போன வருசம் தாலி அறுத்துட்டுதுங்களே!

கர்மபலன். என்ன செய்றது? நீ மகா உத்தமன். உனக்கு ஒரு குறையும் வராது. ஊருக்கு எப்போ போகப் போறே?

காலங்காத்தாலே புறப்படறேன் சாமி. சின்ன ஐயரு எங்கே இருக்கிறாரு. கண்ணிலேயே இருக்குதுங்க, பாக்கணும்னு ஆசை.

சின்ன ஐயர், சீனம் போயிருக்கான், டாக்டர் பரீட்சைக்குப் படிக்க. அடுத்த வருஷம் வருவான். ஆயிரம் ரூபாய் சம்பளம் அவனுக்கு.

ரொம்ப சந்தோஷம். அவருக்கென்ன, தங்கக்கம்பி.

மாட்டுப்பொண்ணு பெரிய இடண்டா தாண்டவா! உனக்குச் சொல்றதிலே எனக்குப் பரம திருப்தி. ஜட்ஜ் ஜம்புகேச ஐயருன்னு, பெரிய ஆசாமி, அவர் மக. ஒரே பொண்.

நம்ம தம்பி எங்கேங்கோ?

யாரைக்கேக்கரே? இரண்டாம் பிள்ளையா! அவன் சினிமாவிலே பெரிய “ஆக்டர்.” நீ இருக்கிற ஊரிலே சினிமா இருக்கோ? அதிலே பார்க்கலாமே, சந்திரன் என்று சினிமாவிலே பெயர் அவனுக்கு. போனமாசம் வந்திருந்தான் நன்னாத்தான் இருக்கான். என் மகள் மரகதம், அது தான் கர்மம், விதவையாகிவிட்டது, அது ஒரு பெரிய மனக்குறை, மெட்ராசிலே படிக்கிறா இப்போ டாக்டர் வேலைக்குத்தான் போகணும்னு பிடிவாதம் செய்யறா!

தள்ளாத வயதிலே நீங்க மாத்திரம் ஏன் சாமி இங்கே தனியா இருக்கணும். சினிமா எஜமானரு கூடவே இருக்கலாமே.

வீடு வாசல், தோட்டம், துரவு, நிலம், புலம், இவைகளை விட்டுட்டு எப்படிப் போறது? என்ன செய்றது? கோயில் வேலை ஒண்ணு இருக்கேடா, அதை விட முடியுமோ? பொண்ணை யார் கண்டா, பிள்ளையை யார் கண்டா? இறக்கை முளைத்தா, தானா பறக்கறது; அது கிடக்கு, நீ இருக்கிற ஊரிலே, என்னென்ன சாமான் விசேஷம்?

அது சுத்தப் பட்டிக்காடு, சாமி!

பட்டிக்காடா இருந்தா பச்செனு இருக்குமே காய்கறி. நல்லதா கிடைச்சா, அனுப்புடா தாண்டவா! பழைய விஸ்வாசத்தை மறந்துடாதே. போய் வா! சுகமா இரு!

ஊர் பெரியதனக்காரராக இருந்து உத்தமன், பக்திமான் என்று பெயரெடுக்க, சொத்தைச் செலவிட்டுக் கடனாளியாகி, வீடு வாசலை விற்று விட்டு வேற்றூர் போய், கணக்கனாகிக் காலங் கழிக்கும் தாண்டவராய முதலி, பத்து வருஷங்களுக்குப் பிறகு, சொந்த ஊர் வந்து, ஊருக்கு ஜோதிடர், புரோகிதர், அர்ச்சகர், தகராறுகளைத் தீர்க்கம் தரகர், ஆகிய எல்லாம் உருண்டு திரண்டு ஓருருவாக இருக்கும் சுந்தர சர்மாவைத் தரிசித்து, க்ஷேமம் விசாரித்த சம்பவம் மேலே தீட்டப்பட்டிருக்கிறது.

தாண்டவராய முதலி சுகமாக இருக்கிறார், ஐயர் சொல்படி.

ஐயர், ஏதோ கிடக்கிறார், மகன் ஓரிடம், தானோரிடம் என்று!!

வாழ்ந்து கெட்ட முதலியார், பச்சை காற்கறி அனுப்புவதாகக் கூறினார். செய்வார்!!

27.12.1942