அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காலம் கெட்டுப் போச்சு!
காலம் கெட்டுப்போச்சு! காலத்தின் கோலாகலத்தினால் வரும் தீமைகளினாலேயே உலகிலே துயரம் மிகுந்துவிட்டது

பொய்யும் புரட்டும அதிகமாகிவிட்டன. சூதும் சூழ்ச்சியும் அரசாள்கின்றன. கொலையும் கொள்ளையும் கோரத்தாண்டவர் புரிகின்றன. எங்கும் அமளி, எங்கே நோக்கினும் அல்லல்! தொல்லை! சமர்! சச்சரவு! சஞ்சலம்! அமைதி இல்லை! அறநெறி இல்லை! அன்பு இல்லை, அருள் இல்லை! மருள் கொண்ட மக்கள் பொருள் திரட்டுவதிலேயே ஈடுபட்டுவிட்டனர். சேவை செய்பவர் காணோம், தேசோமயானந்தத்தைத் தேடுபவரைக் காணோம். தேசத்துககுத் தேசம் சண்டை! தேசத்திற்குள்ளாகவே சண்டை! உடைவதோ நிரபராதியின் மண்டை!! ஜாதிச் சண்டை சமயச் சண்டை, குலச் சண்டை, குடும்பச் சண்டை எண்ணவும் முடியவில்லை, ஏக்கம் மேலிடுகிறது, எங்கும் இரத்தமயம், பிணநாற்றம், பாதகம் பட்டத்தரசனாகிவிடவே, மடமை மந்திரியாகி, கொடுமை படைத்தலைவனாகிவிட்டது, பஞ்சமா பாதகமே படைவீரர்களாக உள்ளனர், என்னென்பது இந்தக் கோரத்தை.

இந்நாடு பொனாடு, ஈசனே பொழி வளர்த்த நாடு இன்றோ இது அடிமைக்கூடு; வேடுவனிடம் சிக்கிய பறவை, சிறகொடிந்து கிடப்பது போச் சன்மார்க்கம் துன்மார்க்கரிடம் சிக்கிச் சிதைந்து கிடக்கிறது, வம்மின் அதனை விடுவிப்போம், சமரசத்தை ஸ்தாபிப்போம் தரணியிலே தருமம் நிலைக்கச் செய்வோம். நாமார்க்கும் குடியல்லோம் என்ற நாயன்மார் வாக்கைச் சட்டமாக்குவோம். அறநேறியைக் கடைப்பிடிப்போம் அநீதிகளைப் பொடியாக்குமோம் அமைதி! அமைதி! அமைதி! என்று முழக்கமிடுவோம்.

நாட்டுக்கு எந்தச் சமயத்திலே எது தேவை, எந்தப் பிரச்சினையைக் கவனிக்க வேண்டும் என்பது பற்றி அக்கரை கொள்ளாமல், நாட்டுமக்களிடம் பாட்டுமொழி பேசி நாவலர் என்று புகழ் ஈட்டி வாழ வேண்டும் என்று எண்ணும் பேச்சாளர்களின் பாலபாடம், மேலே நான் தீட்டியிருப்பது, இன்சொல்பேசி, எவர் மனமும் புண்படாமல் விஷய விளக்கமாற்றி, எல்லாருக்கும் நல்லவராக நடந்து கௌள வேண்டுமென்று எண்ணுபவருக்கு எற்றபாடம்! மேற்கொண்டு தெரிந்து கொள்ள விரும்புவோம், சென்னை ராயப்பேட்டை, சாது அச்சுக்கூடத்திலே சடாட்சரத்தை நிலைனத்துக்கொண்டு காலந்தள்ளும், காவியச்சுவையைப் பருகியதால் கருத்து அயர்ந்து கிடக்கம் கலியாணசுந்தரனாரிடம் பாடங்கேட்கக் கோருகிறேன். அவருடைய அருமையான முறை, லோதியான முறை, முன்றாது குறையாது இருந்திடக் காண்கிறோம். எந்த நேரத்திலே, எந்த இடத்திலே, அவரைப் பேசச் சொன்னாலும், இந்தப் பேச்சைக் கேட்கலாம். அந்நாள் போலாகுமா, மறன்றோ மலிந்து கிடக்கிறது என்று கூறாமலிரார். அவர் மட்டுமல்ல! புதிய உலகைக் காண, பழைய சக்திகளோடு மோதிக் கொள்ளப் பயப்படும் எவரும், இதைக் கூறித் தானேயாக வேண்டும்!! அன்பர் கலியாண சுந்தரனார் சென்ற கிழமை சேலம் மாவட்டத்திலே சென்று தமது சமரசத் திட்டத்தைப் பாப்பாரப்பட்டி என்ற கிராமத்திலே பேசிவிட்டு வந்துவிட்டால். பெரும்பாரத்தைக் கீழே இறக்கிவிட்டோம் என்று அவர் ஆனந்தப்பட்டிருக்ககக் கூடும். ஆம்! அவருக்கு ஆனந்தம், அழகாகப் பேசிவிட்டோம், யார் மனமும புண்படாதபடி பேசிவிட்டோம்! ஆன்றோர்களின்வழியைக் காட்டிவிட்டோம் என்று, கேட்டவர்களுக்கும் ஒரு திருப்தி சமரசமாக இருககச் சொன்னார், சாந்தி நிலவ வேண்டுமென்று சொன்னார். சன்மார்க்கம் போதித்தார். கேட்கக் கேட்க இனித்திடும் விதத்திலே, குறளைக் கொட்டினார். நாலடியாரைக் காட்டினார். திருவாசகத்தால் நம்மை உருக வைத்தார். அருட்பாவின் அழகும் தாயுமானவரின் தத்துவமும் கூறிப்போந்தார். நல்ல மனிதர், படிப்பாளி, நாவலர் என்ற கூறிவிட்டுப் போயிருப்பார். வட்டத்திலே அரகர மகாதேவாவும் அன்பு நெறி உலகமெலாம் தழைத்தோங்க வேண்டுமென்றம் முழக்க மிட்டிருப்பார். வழக்கமான மகேஸ்வர ஜையும் நடந்திருக்கும். இழுக்கு ஒழிக்கப்பட்டு, அழுக்குத் துடைக்கப் பட்டு, சழக்கரும் சன்மார்க்கியாக்கப்பட்டு விடும் காலம் விரைவிலே வர வேலை செய்ய ஒரு சாது சமாஜம் நிறுவிவிட்டு, அதற்கு ஒரு உண்டிப்பெட்டியும், உட்கார்ந்து பேச ஊர்க்கோடியிலிருக்கும் விநாயகராலயமும் குறிக்கப்பட்டு, கூட்டம் கலைந்து போயிருக்கும்! பாப்பாரப் பட்டியில் மட்டுமல்ல, எந்தப் பட்டியிலே இத்தகைய பண்பினர் கூடிப்பேசினாலும் இதுபோல்தான் நடந்திருக்கும். ஆனால், விருந்தின் விளைவு என்ன? சமரச போதனையின் பலனாக ஏற்படுவது என்ன? ஜாதிச் சமயச் சண்டை ஒழிந்து, நான் எனும் அகங்காரம் அழிந்து, நானாவிதமான கேடுகள் நீக்கப்பட்டு மக்களின் வாழ்விலே அமைதியும் ஆனந்தமும் உண்டாகும் வழி பிறக்கிறதா? இல்லையே! ஏன்? பிறக்காது! பிறக்காதா? ஏன் பிறக்காது? வழி ஏற்படக்கூடிய விதத்திலே மருத்துவரின் மதி செல்லவில்லை! மருத்துவருக்கு நோயின் தன்மையே தெரியக்காணோம். எனவேதான், சிவநேசச் செல்வர்களால் சந்தம் அமைக்க, விருத்தம் பாட முடிகிறது. ஆனால் மக்கள் துயர்போக்கும் வழி வகுக்க முடிவதில்லை. அவர்கள் மீதும் குற்றமில்லை. அவர்களின் படிப்பின் தன்மை அது. சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்!
இந்த மெய்யன்பர்கள், மேதினி உய்ய வழிவகுக்காது போனது பெரு நஷ்டமல்ல! ஆனால், பிறர் வழி வகுக்க முயற்சிக்கும்போது இவர்கள், பாலில் ஈ வீழ்ந்து தானும் பாழாகிப் பாலையும் கெடுக்கும் பான்மை போலப் பலப்பலப் பேசி வருகின்றனர். பாமரரின் மனது பாழ்ப்டச் செய்கின்றனர். பழையகாலம் மிக நல்லகாலமெனறும், ந்தக் காலம் கெட்டகாலமென்றும் கூறி, மக்கள் மனதை, வேறு வழியிலே திருப்பி விடுகின்றனர். காலம் கெட்டுவிடடது, கேடு மலிந்துவிட்டது, தர்மம் நசிந்துவிட்டது, அதர்மம் மேலோங்கிவிட்டது என்ற இந்தப் பேச்சு இன்று நேற்றல்ல பேசப்படுவது, முத்தனின் தகப்பன் முருகன், இதுபோல இன்று கூறுகிறார். ஆனால், முருகனின் அப்பன் முனியனோ முன்னாளிலே முற்றத்திலே முருகனின் அப்பன் முனியனோ முன்னாளிலே முற்றத்திலே முருகன் சிறுவனாக வினைடிக் கொண்டிருந்தபோது, காலம் கெட்டுப்போச்சு என்ற பேச்சு, தலைமுறை தலைமுறையாக பேசப்பட்டு வருகிறது. ஏதோ ஒரு காலம் இருந்ததாகவும், அந்தக் காலத்திலே பசுவும் புலியும் ஒரே துறையிலே நீர் பருகியது என்றும், மக்கள் நரைதிரை இன்றி வாழ்ந்தனரென்றும், மாதம் மும்மாரி பொழிந்து மானிலம் செழித்து இருந்தது போலவும், மக்கள் அனைவரும் சாந்த சீலர்களாக இருந்தனரென்றும், மேளியே அந்த நாட்களிலே கிடையாது என்றம் பேசப்படுகிறது. இதே முறையிலேதான் கலியாண சுந்தரனால் பேசியிருக்கிறார்.

இந்த வகையான பேச்சின் பயனாக, மக்கள் மனதிலே, ஏமாளித்தனம் ஏற்பட முடியுமேயொழிய, உலகைத் திருத்தும எண்ணம் உண்டாக முடியாது, அறிந்தோ அறியாமலோ அன்பர்கள், இந்த அநியாயத்தை வளர்த்துககொண்டு வருகிறார்கள். அதே அதிசம் ஏது? என்ற பேச்சும், அதெல்லாம் அந்தக் காலத்திலே, உருட்டி மிரட்டிவாழ முடிந்தது, இப்போது முடியாது, அந்தக் காலம் மலையேறிவிட்டது என்ற உரிமை முழக்கமும், அந்தக் காலம் போலவா இப்போது பயம் இருக்கிறது, இப்போது பாதுகாவல் எவ்வளவு! ஒருவருக்கொருவர் ஏன் பயப்பட வேண்டும் சட்டம் இல்லையா? இது என்ன காட்டு ராஜா காலமா? என்று பேசுவதும் நாட்டிலே கேட்கிறோம். உலகம், காலம் தரும் கரு ஊலத்தைப் பெற்றுக் கவர்ச்சியுள்ள காரிகை கண்ணுக்கும் கருததுககும் விருந்தாக இருப்பதுபோல வளர்ந்து கொண்டிருக்கிறது. சிலர் மூலையிலே முணுமுறக்கிறார்கள். காலம் கெட்டுவிட்டது, கெட்டுவிட்டது என்ற.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இழுத்துவாடா அந்த இளித்தவாயனை என்று மிரட்டிக் காதைத் திருகிக் கன்னத்தைக் கிள்ளித் தலையிலே குட்டி, தகப்பன் தன்மகளை வளர்த்தான், இருபது ஆண்டுகள் சென்றதும், வாலிபனுடைய கருக்கு மீசையும், முறுக்கு நடையும் காண்கிறான். இப்போதும் காதைப் பிடித்திபத்துக குள்ள முடியவில்லையே என்பதற்காக, மகன் கெட்டுவிட்டான் என்ற தகப்பன் கூறினால், அவனுக்கு என்ன பட்டம் கிடைக்கும்! தான் உண்கையிலே பிடிசோறு எடுத்துச சிறுவாயில் திணித்துக குழந்தைக்கு ஊட்டும தாய், தன் மகனுக்குப் பெண் தேடும் பருவம் வந்த காலத்திலே, என் மகன் கெட்டுவிட்டான் முன்பு போல் இல்லை என்று மொழிவாளா? மடிமீது உறங்கிய குழந்தைகள் மஞ்சத்திலே உறங்குவதும் அதுகண்டு, மகிழ்வதுந்தானே உலகிலே நடக்கக் காண்கிறோம். அதுபோலத்தான், ஒரு காலத்தில் உலகம் ஒரு சிலரின் உருட்டல் மிரட்டலுக்கு அடங்கியோ, ஒரு சிலரின் பராமரிப்புக்குக் காத்துககொண்டோ கிடந்தது. இன்று, உலகிலே ஒரு சிலரின் ஆதிக்கம் நிலைக்க முடியாதபடி, காலம் செய்துவிட்டது. இதனால் உலகம் கெட்டுவிட்டது என்ற உரைப்பது உண்மைக்கு மாறானது. பண்பின் பாற்பட்டதாகாது, பாமரரை நல்வழியே செலுத்துவதாகாது.

நான் கேட்கிறோன், இன்ற எதையெதைக் குற்றமென்றும் கொடுமை என்றும் கலியாண சுந்தரனார்கள் குறிப்பிடுகிறார்களோ, அவைகளிலே எது, அவர்கள் புன்னகையும் பெருமசும் கலந்து பாவத்துடன் கூறுகிறார்களே அந்தக் காலத்திலே இல்லமற்போய்விட்டது? பொய்யும் வழுவிம், கொலையும் களவும் சூதும், சூழ்ச்சியும், காமாந்தகாரமும சோரமும், அன்று இல்லையா? தேவலோகத்திலும் இருந்ததாகத்தானே, அந்த நாட்களில் பெருமையைக் கூறும் ஏடுகள் எடுத்துக் காட்டுகின்றன. குருவின் பத்தினியிடம் கூடிய சந்திரனும், நிர்வாணப் பிச்சை அகட்ட திருமூர்த்திகளும், மாறுவேடத்திலே கலவி செய்த இந்திரனும், மானுருவிலே மையலலைத் தீர்த்துக்கொண்ட மகரிஷிகளும், இந்தக் காலத்து ஆசாமிகளா? மானிடரும் அல்லவே, தேவர்களல்லவோ செய்தனர். இந்தக் காரியங்களை, இன்று இத்தகைய செயல்களைக் காட்டுமிராண்டிகளும் செய்யக் கூசுவர். செய்திடினோ சட்டம் அவர்களைச் சுட்டெரிக்கும். தாயைப் புணர்ந்து தகப்பனாரைக் கொண்ற மாபாவிகளோ, அவர்களை மன்னிக்கும் நீதியின் சொரூபங்களோ, இந்தக் காலத்திலே இருக்க முடியுமா? இன்றைய உலகிலே இத்தகைய இழுக்குடையோருக்கு இடமில்லை. இது காலம் கெட்டுவிட்டதையா காட்டுகிறது? என்று நெஞ்சறிந்த பொய்யுரைக்கும் நேயர்களைக் கேட்கிறோம். புனிதமான காலம், பொற்காலம் என்று இவர்கள் புகழுகிறார்களே அந்தக் காலத்திலே நடந்த எந்தக் காரியத்தையாவது, மக்கள் செய்தது, மன்னர்கள் செய்தது, மகேஸ்வரன் செய்தது ஆகிய எதையாவது இவர்கள் பண்பின்பாற்பட்டது என்று கூற முடியுமா? வேடமிட்ட கதையும், விடமிட்ட கதையும், பிறன் இல் நுழைந்ததும் திருவிளையாடல்களாகவன்றோ கொண்டாடப்படுகின்றன. காமலீலைகளையன்றோ கடவுட் தன்மைபெற்றவர்கள் களிப்போடு நடாத்தி வந்ததாகக் கதைகள் உள்ளன. அந்தக் காலம் கெட்டுவிட்டது என்று கூறுவதிலே அர்த்தமில்லையே! பொருளற்றவைகளைப் பேசிவிட்டுப் புலவர் எனும் பட்டமும் வேண்டுமென்ற கேட்கின்றனரே, இவர்களை என்னென்பது?

ஒழுக்கத்தைப் போதிப்பது மதம், மதத்தின் சிகரம் மகேஸ்வரனைத் தொழுவது. மகேஸ்வரனின் மனைவி பார்வதி. என் கருத்தல்ல. எல்லாம் அறிந்த மதவாதிகள் கூறுவது. அந்த உமையின் திருக்கோயிலிலே ஒரு திருமதி பிறைநுதலும் மலர்விழியும் கார்நிறக் கூந்தலும் கனககலசமும பெற்ற கவர்ச்சி தரும் மங்கை; பெயர் பிங்கலை அந்தப் பாவையே உமாதேவிக்கும் பக்க நின்று பரிவோடு கவரி வீசுபவளாம், அந்த அம்மை உமைக்குப் பணிவிடைசெய்வதோடு தனது சேவை முடிந்துவிடக்கூடாது என்று கருதினார்கள். அப்படியா சரி, யாரையோ மணம் செய்து கொண்டார்கள் என்ற கதை இருக்கிறது போலும் என்று நினைப்பார்கள். அதுவல்ல நடந்தது. அப்படி நடந்திருந்தால் நான் ஒன்றும் சொல்லமட்டேன். அதிலும் ஆயிரம் தேவ ஆண்டுகள் அன்ன ஆகாரமின்றி அரனுடன் கலவியில் ஈடுபட்டிருந்ததாக எந்த உமாதேவியாரைப்பற்றிக் கதை இருக்கிறதோ, அந்த உமைக்குப் பக்க நின்று பணிவிடை புரியும் பிங்கலை, மணிமேகலையாக இருக்கவேண்டும் என்ற நான் எதிர்பார்க்கவில்லை. இச்சைக்கு உகந்தவனோடு குடும்பம் நடத்தட்டும், முறையே என்று கூறுவேன். ஆனால் கவரி வீசுபவளான பிங்கலை, கண்டவர் மீது கண் வீசினாளாம், யாரும் அந்த ஓயா மடத்திலே விருந்துண்ணலாம். விபசார விடுதி என்ற கூறு, பரதா ஓயாமடம் என்ற ஒய்யாரப் பெயர் வேறு ஒரு கேடா இதற்கு என்று கூறுவீர்கள் கோபத்தோடு. என் செய்வேன் தோழர்களே! சிவநேசச் செல்வர்கள் சீறுவர். சிற்றம்பலத்தைக் கோருவர். உள்ளதை உள்ளபடியே உரைத்தால், பெயர் எப்படியோ போகட்டும். நடந்த விஷயம் கேளுங்கள். அந்த நாரிமணி, யார், விருமபினாலும் அவர்களிடம் கூடிடும் குணவதியாக இருந்தாளாம். கூடுவது என்றால் சும்மாவல்ல திருக்கைலாயம் சென்றால், இப்படிப்பட்ட விருந்து இலவசத்திலே கிடைக்குமென்று எண்ணி சிவநாமத்தை மேலும் கொஞ்சம் ஜரூராக ஜெபிக்க வேண்டாம் சிவநேயர்கள். அந்தக் காரிகையின் கலவிக்குக் கட்டணம் உண்டு, 100 பொன், நூறு பொன், கொடுத்தால் நூபுரம் கலிர் கலீரென, அந்த ரூபவதி நடந்து வருவாள். மஞ்சமீது பச்பாணன் விடுகணைதரும் துயரைத் தீர்ப்பாள். சிவனார்மீது பாரத்தைப்போட்டுவிட்டு இப்படிப்பட்ட பிங்கலைகள் பரமனின் பாரியைக்குப் பணிப்பெண்களாகி, கடவுட்கடாட்சத்தை நாடி வருவோருக்குக் கலவியின் மாட்சியைக் காசுக்கு விற்கும் கண்ணியமான, காரியத்தைச் செய்து வருவதாக நமது நாட்டுப் புண்ணியக் கதை கூறுகின்றனவே, அந்தக் காலத்தையா நல்ல காலம் என்று கூறுவது? இந்தக் காலம் கெட்டுவிட்டதாமே. அந்தக் காலத்திலேதான் ஒரு தருமன், சூதாட்டத்திலே மனைவியைப் பந்தயம் கட்டினான். ஒரு மங்கை ஐவருக்குப் பெண்டானாள், அந்தக் காலத்திலேதான் தகப்பன் பேச்சைக்கேட்டுப் பெற்றவளின் தலையை ஒரு மகன் வெட்டினான். அந்தக் காலத்திலேதான் தவம் செய்த தமிழனுக்குத் தலை போயிற்று, அந்தக் காலத்திலேதான் அசுவத்திற்கும் ஆரணங்குக்கும் சம்பந்தம் நடத்தும் புண்யச் சடங்கு நடந்தது. இந்தக் காலம் கெட்டுவிட்டது என்ற கூறுபவரைக் கேட்கிறேன். இந்தத் தீயச் செயல்கள் நிரம்பிக் கிடந்த காலத்தைப் போற்றுவதும், பொது அறிவும் ஒழுக்கக் கோட்பாடுகளும் வளர்ந்து, மக்கள் இவ்விதமான செயல்புரிவதைத் தடுக்கச் சட்டம் இருக்கும் இக்காலத்தைக் கெட்டுப்போன காலம் என்ற கூறுவதும் அறிவுடைமையாகுமா என்று கேட்கிறேன். யாரை ஏமாற்றப் பேசுகின்றனர் இதுபோல.

கொலைத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகிறதாம் இன்று விஞ்ஞானம், கோவனென்று அழுகிறார் கலியாண சுந்தரனார். விஞ்ஞானம் நாசக் கருவிகளைச் செய்ய உதவுகிறது என்று நையாண்டி செய்யும் நாவலர், தமது பேச்சின் பயனாகப் பாமரர் மனதிலே விஞ்ஞானத்தைப் பற்றிய வெறுப்பை முளைக்கச் செய்யலாம் என்ற நம்பினால், அவர் நிச்சயம் ஏமாந்து போவார்.

விஞ்ஞானம் அவ்வளவு தூரம் இன்று மக்கள் மனதை வென்றுவிட்டது. இன்றியமையாததாகிவிட்டது. விஞ்ஞானம் விபரீதத்துக்குப் பயன்படுவது கண்டு மனம் நொந்து கொள்கிறாரே அன்பர், அவரைக் கேட்கிறேன். மெய்ஞ்ஞானம் இந்த மேதினியில் என்னென்ன விபரீதக் காரிங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்படிச் சம்பந்தரின் மெய்ஞ்ஞானம் 8000 சமணர்களைக் கழுவிலேற்றத்தானே உதவிற்று, சிவஞானம் பெற்ற சீலர்கள் மற்ற மதக்காரர்களைச் செய்த கொடுமைகள் எவ்வளவு. மெய்ஞ்ஞானப் போதகர்கள் தமது ஞானத்தை எவ்வளவு நாச சாரியங்களுக்குப் பயன்படுத்தினார்கள். மதவெறி காரணமாக. அதுபோல, மண்ணாசை கொண்டவர்கள் விஞ்ஞனாத்தை நாசகாரியத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காகக் காலத்தைக் குறைகூறுவானேன்? காலம் கெட்டுவிட்டது என்று கேலி பேசுவானேன்?

இன்று நடப்பது போலவே, அன்றும் போர் நடந்தது. அன்று வேலும் வில்லும் செய்த காரியத்தை இன்று வெடிகுண்டும் விஷப்புகையும் செய்கிறது. கருவியிலே மாறுபாடு காட்டலாமேயொழிய விளைவிலே மாறுபாடு காட்ட முடியாது. இந்தச் சீலர்கள் சிந்தா கூலர்களாகி அந்தக் காலம்போல் ஆகுமா? இது கெட்டுப்போன காலம் என்ற கூறுவது பொருள் இல்லை. காலத்தைக் குறைகூறும் கருத்தற்ற காரியத்தைக் கண்ணியமாக நிறுத்திக்கொள்ளுங்கள். அந்தக் கற்றறிந்தவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். காலம் கெடவில்லை. காலத்தை அறிந்தோர் அறிவர். வசதிகள், வளங்கள், வல்லமை யாவும் இன்று அதிகரித்துள்ளன. தெளியும் அறிவும் ஆராய்ச்சியும் மன எழுச்சியும் உரிமை உணர்ச்சியும் இன்ற ஒன்று பத்து நூறாக அதிகரித்துள்ளன. கபடரும் புரட்டரும் தமது காரியம் பலக்காது என்பதை உணர்ந்து கொண்ட காலம். கொடுங்கோல் மன்னர் வாழும் நாடைவிடக் கடும்புலி வாழும் காடு மேலென்று கருதிய தியாகிகள், காலங்கூட! அல்லது இது கோலைக் கொண்டு ஒருவன் கொடுமை செய்தால் போலைப்றிப்போம்; அவன் தலையை அறுப்போம் என்று கூறும் புரட்சி வீரர்கள் அணிஅணியாகப் புறப்படும் காலம். அந்தப் புரட்சி வாடையினால் நடுங்கும் பேர்வழிகளின் நாவில் இருந்து வரும் பேச்சு காலம் கெட்டுப்போச்சு என்பது. ஆம்! காலம் கெட்டுத்தான் போச்சு. கபடருக்கு இருந்த காலம், கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டு முழுக்கோடு வாழ்ந்தவர்கள் காலம் சீலமென்றம் ஜாலமென்றம் பேசி மக்களின் ஓலத்தைக் கண்டும் மனம் இரங்காத மதோன்மத்தர்களின் காலம் போய்விட்டது. அடங்கி நடந்தவர்கள் அடிபணிந்தவர்கள், எடுபிடியானவர்கள், ஏமாளிகள், ஏய்த்துப பிழைப்பவரால் தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோர் இன்ற நிமிர்ந்து நின்று உரிமைக்காகப் போரிடும் காலமிது.

(திராவிடநாடு - 13.08.1944)