அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காலம் மாறிவிட்டது! கதறிப் பயனில்லை!
விசாரம், யாரைத்தான் விட்டு வைக்கிறது! விழி குளமாகி, விலா எலும்பு நொறுங்கிக் கிடக்கும் பாட்டாளிக்கு மட்டுந்தானா விசாரம்? - பல்லக்குச் சவாரி, பால் பழம் பரமான்னம், பாதகாணிக்கை, விருதுகள், எல்லாம் இருக்கும் ஜெகத்குருவுக்குக் கூட விசாரம்! ஏன் இருக்கப் போகிறது இல்லாதவன், இடுப்பொடிந்தவன் - இவர்களுக்கு விசாரம் இருக்கலாம், இவருக்கு என்னய்யா விசாரம், கூப்பிட்ட குரலுக்கு அடியேன் தாசானுதான் என்று பணிவுடன் கூறிக்கொண்டு, மேல் வேட்டியை இடுப்பில் கட்டிக் கொண்டு வந்து நின்று, காலால் இடும் வேலையைத் தலையால் செய்து முடிக்கிறேன் என்று கூறிடும் பக்தர்குழாம் இருக்க, யானை, குதிரை, ஓட்டகம், பலவண்டிகள், பலவகை வாத்தியங்கள் இருக்க, இவருக்கு விசாரம் ஏதன் பொருட்டு வரப்போகிறது என்று கேட்கத் தோன்றும்! உண்மையிலேயே அந்த உத்தமர் விசாரப்படுகிறார்! ஆற்றுவார் இல்லை, தேற்றுவார் இல்லை, ஐயனே! என்று உருகிக் கொண்டிருக்கிறார்! ஏதன் பொருட்டு? என்ன விசாரம்? என்கிறீர்கள். ஜெகத்குரு சங்கராச்சாரி ஸ்வாமிகளின் விசாரத்துக்குக் காரணம் மகாராஜாக்கள், ஜெமீன்தார்கள், மிட்டாமிராசுதார்கள் ஏன்போர் மறைந்துவிட்டார்கள் என்பதாம். அதனால் தாங்கொணாத சோகம் கொண்டவராய், விழியில் நீர்ததும்ப, உடல் பதற உள்ளம் வாட, கேட்போர் கல் மனம் படைத்தோரானாலும் பாகாய் உருகும் விதமாக, “ஐ! பரந்தாமா! இப்படியும் ஒரு சோதனையை வைக்கலாமா!! சீமான்களையும், சிற்றரசர்களையும் கோலாகலப் பிரபுக்களையும், கோலோச்சும் குபேரர்களையும் கண்டு, பரமானந்தம் கொண்டு, அவர்களைச் சீடர்களாக்கிக் கொண்டு, தங்கப் பாதக்குறடு என்ன, தங்கத்தால் செய்யப்பட்ட பல்லக்கு என்ன, முன்னோடும் சிப்பாய்கள், பின்னே வரும் பரிவாரம், மாடமாளிகை, கூடகோபுரம், நவரத்னம் எல்லாம் காணிக்கையாகப் பெற்று, வாழ்ந்து வந்த வைபோகத்துக்கு பேராபத்தை வைத்துவிட்டாயே! ஐ! பிரபோ! ஏன் சொல்லை வேதமாகக் கொண்டு ஒழுகி வந்த உத்தம பக்தர்களிடம் இருந்து வந்த ராஜ்யங்களை, சுயராஜ்யம் என்ற பெயரால் பறித்துக் கொண்டு விட்டார்களே, இனி ஏன் பக்த கோடிகளிடம் நான் பவுனாபிஷேகம் பெற முடியுமா? ஐ! லட்சுமி புத்திரர்காள்! என்று அன்போடு நான் அழைக்க, “எல்லாம் தங்கள் திருக்கடாட்ச மேன்மைதான் ஸ்வாமி!” என்று அவர்கள்ம பயபக்தியுடன் கூற, “இன்ன கைங்கரியத்தைச் செய்யவேண்டுமே” என்று நான் கூற “கட்டளையிடுங்கள், தாசன் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று அவர்கள் கூற, இவ்வண்ணம் இன்பமாக நடந்து கொண்டிருந்த பரிபாலனத்துக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதே - ராஜாக்கள், ஜமீன்தார்கள், மிட்டா மிராசுதாரர்கள், பிரபுக்கள் இனி நமது சமூகத்திலே இருக்க இடம் காணோமே - என்னமோ சமதர்மம் என்கிறார்கள், ஏன் இப்படி ஓர பித்தம் பிறந்ததோ தெரியவில்லை! ஆபத்பாந்தவா! பிரபுக்களின் ஆதரவால்தானே, தேசத்திலே தேவலாயங்களும் மடாலயங்களும், இவ்வளவு விமரிசையாக ஏற்பட்டன! குருமார்கள், வேதப்பிராமணாள், சத்புருஷாள் ஆகியவர்களை ஆதரிப்பதும ஆண்டவனுடைய அனுக்ரஹத்தை நிச்சயமாகக் பெறுகிற மார்க்கமாகும் என்ற நம்பிக்கையுடன், பிரபுக்கள் தந்த மான்யங்கள் எவ்வளவு, காணிக்கை எவ்வளவு! இனி யாரிடம் கேட்பது? யார் தருவார்? தடாகத்திலே நீர் வரண்டுபோனால், தாமரை எப்படி மலரும்! சூரியன் மறைந்து போனால் வெளிச்சம் எது? விழி பழுதாகிப்போனால், பார்வை எது! ஜெமீன்தார்களும், மிட்டா மிராசுதார்களும், சீமான்களும், இல்லாமற்போனால் மதம் எது, மதத் தலைவர்கள் எது! ஐ! கருணாமூர்த்தி! இப்படி ஒரு கஷ்டகாலத்தை ஏற்படுத்தி விட்டாயே! இனி எங்கள் கதி என்ன! என்று பிரலாபித்த வண்ணம் ஜெகத்குரு சங்காராச்சாரியார் சின்னாட்களுக்கு முன்பு ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

பஞ்சாங்கம் எழுதிப் பிழைக்க வேண்டிய சுபாவத்தைக் கொண்டவர்களிடம் பத்திரிகைகள் சிக்கிக் கொண்டிருப்பதால், அவைகளிலே ஜெகத்குவின் கதறல் கண்ணைப் பறிக்கும் வகையில் வெளியாகி இருக்கிறது - கண்டிருப்பீர்கள்.

பூகம்பம், பீகார், ஆசாம் ஆகிய இடங்களிலே ஏற்பட்டு நாடே ஆல்லோல கல்லோலப்பட்டது - வீடுகள் மண்மேடுகளாயின - வயல்கள் வெடிப்புகளாயின - ஆறுகள் திரை புரண்டன - இடுமாடுகள் பூச்சிப் புழுப்போல அழிந்தன, மக்கள், மாண்டனர், பலகோடி ரூபாய் பொருள் நஷ்டம்! கண்றாவிக் காட்சிகள்! கர்ணகடூரமான சேதிகள்! ஜெகத்குரு சங்காராச்சாரிய ஸ்வாமிகள் உடல் பதறி உள்ளம் வெதும்பி இப்போது பதைப்பது போலப் பதைபதைத்து, அறிக்கை வெளியிடவில்லை!

தீ விபத்து!
பெருவெள்ளம்!
கடும்பஞ்சம்!
கொலை, கொள்ளை கொடுமை!
வகுப்புக் கலகம்!

இவைகளின் போதெல்லாம் உருகாத மனம், பதறாத உடல், ஜெமீன் முறையும் பிரபுக்களின் அந்தஸ்தம் ஒழிகிறது என்ற உடன், என்ன பாடுபடுகிறது பார்த்தீர்களா! துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்கிறது.

துப்பாக்கி பிரயோகம் - பத்துப்பேர் மாண்டனர்.

தடியடி - நாற்பது பேருக்குப் படுகாயம்.

ரயில் விபத்து - நூறுபேர் மாண்டனர்.

விமானம் வெடித்தது - அறுபது பேர் பிணமாயினர்.

இவ்விதமான செய்திகள் வருகின்றன - மக்கள் பதைபைத்து, ஒயோ! பாபம்! பரிதாபம்! என்று கூறுகிறார்கள்.

ஜெகத்குரு, அப்போதெல்லாம், கேவலம் லோக மாயையில் நமக்கென்ன “ஸ்ரத்தை” என்று இருந்து விடுகிறார்.

ஒருதுளி அனுதாபம் - ஒரு சொட்டுக் கண்ணீர் - ஒரு சிறு நல்லுரை, வெளிவருவதில்லை.

ஜெமீன்முறை ஒழிகிறது. பிரபுக்களின் ஆதிக்கமும் இனிச் செல்லாது என்ற உடன், பாருங்கள், கங்கையாகிவிடுகிறது கண்கள் “ஸ்ரீமுகம்” பறக்கிறது உள்ளம் கொதிக்கிறது.

ஏழை எளியவர்களை உடேற்ற, அவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கச் செய்ய, மதம் இல்லை.

ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் உல்லாச புருஷர்கள், ஊர்க்குடி கெடுத்து ஊப்பரிகை அமைத்துக் கொள்வோர், எளியோரை வாட்டிடும் வல்லூறுகள், இவர்களின் சார்பாக வாதாட, ஆதரவு தேடவே, மதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏழையின் பெருமூச்சு, மாளிகைவாசிய்ன செவியிலே விழாதபடி தடுக்கவே மதம் பாடுபடுகிறது.

நல்வினை, தீவினை, கொடுத்துவைத்தவன், ஆண்டவன் சோதனை, ஐயன் கட்டளை, அவன் இணை - என்ற பேச்செல்லாம், உழைத்து உருக்குலைந்த போகும் உத்தமர்களை எத்தர்களிடம் சிக்கிச் சீரழிய வைக்கும் சதிக் செயலுக்குச் சன்மானம் பெறும், தரகர்களின் கற்பனைகள்.

ஒழுக்கம், உயர் பண்பு, இரக்கம், உகை - என்றெல்லாம் ஒவ்வொர சமயம் பேசுவது, பெறும் பகட்டு.

அக்ரமம் அரண்மனையில் பிறந்தால், வாயடைத்துக் கிடப்பர்.

ஆநீதி செய்வோன், அஷ்ட ஒஸ்வர்யம் படைத்தவானானால், அடிபணிவர்.

மாளிகையிலே மதுக்குடம் இருக்கும் - கண்டிக்கத் துணிவு பிறக்காது!

மங்கையரின் கற்பு சூறையாடப்படும் - கண்களை பொத்திக் கொள்வர்!

ஏழை இம்சிக்கப்படுவான் - ஏதமறியாதவர் போலிருந்து விடுவர்.

இந்தப் போக்குக்குச் சன்மானம் தரப்படும் - மான்யம், மடம், கோபுரம், திருக்குளம், தேர்த் திருவிழா, ஆபிஷேகம் இராதனை, பல்லககு, பாத காணிக்கை இத்யாதி இத்யாதி.

மதத்தின் விளைவு இதுதான் - ஏடுகளிலே தத்துவங்கள் இருக்கலாம் ஏராளமாக. அவைகளுக்கு விசேஷ விளக்கம் அளிப்போரின் பேச்சிலே தேனின் இனிமை இருக்கலாம், ஆனால் நடைமுறையில், இன்று நேற்றல்ல, நீண்டகாலமாகக் காணக் கிடப்பது - ஏழை இம்சிக்கப்படுவதும், பிரபுக்கள் இசீர்வதிக்கப் படுவதுமாகிய கொடுமைதான்!

எனவேதான், ஏழையின் கண்ணீரை, எளியோரின் வியர்வையை, இம்சைக்கு ஆளானோரின் இரத்தத்தைக் கண்டபோது பதறாத மனம், பிரபுக்களின் எதிர்காலம் பாழ்படும் என்று தெரிந்ததும், பதறுகிறது - கண்ணைக் கசக்கிக் கொள்கிறார் ஜெகத்குரு - கைகளைப் பிசைந் கொள்கிறார்!
மதம், எவ்விதமான மனப்பான்மையை குருபீடங்களுக்குத் தந்து விட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

குப்பையைக் கிளறும் பேர்வழிகளின் போக்கு கிடக்கட்டும், இதோ ஜெகத்குருவின் போக்கு இருக்கிறது பாருங்கள்!

பிரபுக்கள் - இல்லையென்றால் மதம் இல்லையாம்!

என்ன ஆழகான வாதம், கவனித்தீர்களா!

மதம் என்றால், பஞ்சமா பாதகத்தைத் தலைகாட்ட விடாமல் செய்து, பகவானின் அருளைப் பெறுவதற்கான வழிவகை கண்டறிவது, என்கிறார்கள்.

இதற்குப் பிரபுகள் ஏன்?

உண்மையைச் சொல்லுவதானால், பிரபுக்களின் பொழுதுபோக்கே, பஞ்சமா பாதகம்!

மதத்தின் மேம்பாட்டினைக் காணவேண்டும் என்ற தூய எண்ணம் உள்ளபடி வலலேசமாவது இருக்குமானால், பஞ்சமா பாதகங்களின் இருப்பிடங்களாக, நீண்ட காலமாக இருந்துவரும், குகைளை அழித்திடும் காலம் இப்போதாவது வந்ததே என்றெண்ணி மகிழ்வர்! ஜெகத்குருவோ, ஆயாசப்படுகிறார், மதம் மாய்ந்துபடமோ என்று சோகிக்கிறார். ஏன்? அவரும் அவர் போன்றாரும், மதம் என்று கருதுவதும், மற்றவர்களைக் கருதும்படிச் செசால்வதும், தாளச் சத்தம் மேளச் சத்தம், ஆதிர்வேட்டுச் சத்தம், இவைகளைத்தாம். இவைகளுக்குப் பணம் தேவை ஏராளமாக - இதைத் தாராளமாகத் தரக்கூடியவர்கள் தனவான்கள் எனவே தனவான்கள் அழிந்துபட்டால் மதம் நாசமாகி விடும் என்று கதறுகிறார்கள்! பேதைமை! பேதைமை! பெரிய இடமானால் என்ன, பேதைமைதான், நிச்சயமாக.

ஒரு ஊசி போட்டுக் கொண்டால் போதுமாம் - காலரா ஒழிந்தே போகிறது - என்கிறான் மருத்துவன்.

ஐயயோ! அப்படியா! காலராவா ஒழிந் போகிறது பிறகு, சுடுகாடு என்ன கதியாவது - என்கிறான் வெட்டியான்.

உண்மையில் வெட்டியான் இவ்விதம் பேசமாட்டான் அவனுக்கு வேதம் தெரியாது, உபநிஷத் தெரியாது, துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்றால் புரியாது. ஆனால் அவனுக்கு இதயம் இருக்கிறது, எனவே, மக்களை மாளவைக்கும் காலரா ஒழியவேண்டும் என்று எண்ணுவானே தவிர, சுடலையில் தனக்கு வேலை குறைந்துபடுமே என்று எண்ணமாட்டான்!
மதத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ளுமன் இந்த மாகானுபாவர்கள், ஒன்றைத் தெளிவாக, திட்டமாக, ஒளிவுமறைவு இன்றி, உள்ளொன்று புறமொன்று ஏன்றில்லாமல், இருபொருள் மறைபொருள் என்ற போக்கின்றிக் கூறவேண்டும், மதம் யாருக்கு? எதற்காக - என்பதை.

மதம் மக்களுக்காக - அவர்தம் நல்வாழ்வுக்காக - அந்த நல்வாழ்வுக்குத் தேவையான நற்பண்பு வளர - என்றால், அக்ரமும் ஆநீதியும், எங்கு தலைகாட்டினாலும், நாலு ஆடுக்கு மாடியானாலும், நாலுவேதம் கற்றவன் வீடானாலும், கோபுரம் கட்டியவன் மாளிகையானாலும் ஆளும் கட்சியின் கொடிதாங்கியின் கூடமானாலும் வைரக்கடுக்கன் மின்னிடும் சீமனானாலும், அவனைப் பம்பரமாக்கிடும் சீமாட்டியின் இல்லமானாலும், எங்கு அக்ரமம் தெரிந்தாலும் கண்டிக்க முன்வர வேண்டும்.

வருகிறார்களா? வருவார்களா? வந்தால் பீடம் நிலைக்குமா?

அவ்விதம் வரக்கூடியவர்களானால், ஏன், ஜெமீன்தாரனும், மிட்டாதாரனும் இனி இருக்க மாட்டார்களாமே என்று ஆழப்போகிறார்கள்!

மதம், யாருக்காக என்பது வெட்ட வெளிச்சமாகிறது. ஜெகத்குருவின் அறிக்கையால்.

மற்ற மற்ற மதக்காரர்களுக்கு - ஆஸ்லாத்துக்கும், கிருஸ்தவத்துக்கும், ஆதரவு இருக்கிறதாம், பல அவதார மான்மீயமும், அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் எனும் அற்புதமும் கொண்ட இவருடைய இந்து மதத்துக்குத்தான் ஆதரவு இல்லையாம் - ஆதரவு தந்துவந்த பிரபுக்களின் வாழ்வும் ஆஸ்தமிக்கிறதாம்.

மற்ற மற்ற மதக்காரர்களைப் பற்றிப் பேசுமுன், அச்சமும் கூச்சமும் ஏன் இவருக்கு ஏற்படவில்லை என்று கேட்கத் தோன்றுகிறது.

மற்ற மற்ற மதக்காரர்கள் - மக்களுக்கு மதம் பணியாற்ற வேண்டும். மதி அளிக்க வேண்டும், வழிகாட்ட வேண்டும் இதம் தரவேண்டும், ஏற்றம் அளிக்க வேண்டும் என்று எண்ணி, திட்டமிட்டு அவ்வழியே காரியங்களைச் செய்கிறார்கள். கல்விக் கூடங்களையும் மருத்துவமனைகளையும் ஏழையர் விடுதிகளையும், எளியோருக்கு வாழ்வளிக்கும் அமைப்புகளையும், மதத்தின் பெயரால் ஏற்படுத்தி மகிழ்கிறான், மகிழ்விக்கிறான், மனிதனைத் தேவனாக்குகிறேன் என்று வாக்களிக்கிறான்! இந்துமதம், கட்டிய கல்லூரிகள், மருத்துவமனைகள் எத்தனை! விரலை மடக்க யோக்யதை உண்டா! வெட்டிய குளங்கள் ஆனந்தம்! அதிலே மிதந்த விதவையின் இன்பப்பெருக்குப் பலப்பல ஏழைக்கு இதம் தரும் ஏற்பாடு எங்கே?

ஏன் இதுவரை, அந்தத்துறையிலே கண் செல்லவில்லை!

பிரபு காணிக்கை தருவான் - அந்தக் தகுதியைப் பெற ஆயிரம் குடிகளை அழித்திருப்பான்!

பிரபு தந்த காணிக்கை, கோயிலாகும், கோபுரமாகும், மதத்தலைவருக்குக் கொலு வீற்றிருக்கும் மண்டபமாகும்! அவன் தந்த காணிக்கையிலே தொக்கிக்கடக்கும் பாபம் யாருக்குத் தெரியாது! யார், கண்டிக்க முன் வந்தார்கள்!

அமெரிக்காவிலிருக்கிறான் ஏசுவின் விசுவாசி - அவன் ஆள்ளித் தந்த பணம், ஆம்பாசமுத்திரத்தில் ஆஸ்பத்திரியாகிறது!

இங்கே இஷ்டவாகு பரம்பரைக் காலமுதல் இருக்கிறது இந்துமதம் - கட்டிய மருத்துவமனை எத்தனை மடப்பள்ளிகள் ஏராளம் - கோயில் பிரசாதம் தயாரிக்கும் இடங்களைக் கூறுகிறோம்!

மதம் - மடாலயங்கள், ஜெகத் குருக்களின் பீடாலயங்கள் ஆகிய இடங்களிலிருந்த மட்டுமே பிறக்கக் கூடிய ஒளி என்று நம்பி வந்த காலம், மலை ஏறிவிட்டது.

சமூகத்தில், நீதியும் நேர்மையும் நிலைத்திருக்க வழிவகைகளைச் செம்மைப் படுத்தினால், மதம், மக்களின் இதயத்திலிருந்த கிளம்பும்.

மணி அடித்தாக வேண்டும், மார்கழித் திருநாள் வேண்டும், அர்த்தராத்திரிப் பூஜை, ஆதிர்வேட்டு விழா, இவைகள் இருந்தாக வேண்டும் என்பதில்லை. அன்பும் அறமும் ஆரசோச்ச, இத்தகைய இகா வழிகள் தேவையில்லை.

அன்பும் அறம் சுரந்திடும் வகையில் சமூகத்தில் அறிவு பரப்பிடுதல் வேண்டும் - இதற்கு ஆண்டிக்கோலம் பூணத்தேவையில்லை - அதிலும் பல்லக்கில் பவனிவந்தபடி பவழ பஸ்பமும் தங்க ரேக்கும் சாப்பிடும் குருமார்கள் தேவையில்லை.

ஏழையை இம்சிக்கும் ஏற்பாடுகளைத் தகர்த்திடும் துணிவும், நீதிக்காகப் போராடும் நெஞ்சு உரமும், அறியாமையை அழித்திடும் பழைமையைச் சாடிடும் வீரமும் படைத்துக் களம்புக அஞ்சாத கடமை வீரர்கள் தோன்றிப் பணியாற்றிட வேண்டும்.

அவர்கள் பிரபுக்களின் பவுன்களை அல்ல, நல்லோரின் இதயத்தைக்தான் பெரிதென மதிப்பர்.

அவர்கள் குருபீடங்களை அல்ல, குடிசை வாழ்வோரைத் தேற்றுவதைத் தேவகாரியம் என்று கொள்வர்.

அவர்கள் வளருகிறார்கள்! வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள்! மேலும் வளருவார்கள்!

அவர்களின் காலம் இது - பிரபுக்களின் காலம் அல்ல!

காலம் மாறிவிட்டது - கதறிப் பயனில்லை!

(திராவிட நாடு - 8.5.55)