அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காணாத காட்சி

எதிர்ப்பு கோஷம் கூட கேட்கில்லை; “ஒரு கருப்புக் கொடியும் பிடிக்கவில்லை”
- தினசரி.

புலி கிளம்பினால், மானும் மயிலும் மருண்டோடி ஒளியுமாம்! காடு சஞ்சாரமற்றதாகக் காணப்படுமாம்!

அது போல இருந்தது 24.10.50 அன்று சென்னையில் சி.ஆர் சென்ற விடமெல்லாம் ஆச்சாரியார் தென்னாட்டைச் சேர்ந்தவர். ஆனால் டில்லி மந்திரி! அவர் வந்தார், மக்களைக்காண, மக்கள் மத்தியில் பேச, ஆனால், அவர் மக்களைக் காணவில்லை மக்களும் அவரைப்பார்க்கவில்லை!

பாலைவனம் போலக் கிடந்தன. வீதிகள். போலீசாரே எங்கும் நிரம்பிக்கிடந்தனர். மக்களை எதிர்பார்த்த மந்திரியை போலீசாரின் கூட்டமே வரவேற்றது.

தடியடி! தாக்குதல்! இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஆயுதப் படை! ஏராளமான லாரிகள்! கைது! கலவரம்! இவைகள். அவரால் சென்னையிலே நிகழ்ந்தன. அவர் வருகையால், சென்னையே அலங்கோலமாயிற்று.

ஆச்சாரியார் எவருக்கும் விரோதியல்ல. ஆனால் அவர் தாங்கி நிற்பது, டில்லி ஆட்சியை! ஆகவே, கருப்புக்கொடிகாட்டி, தங்கள் இலட்சிய ஆசையைக் காட்டிடத் திட்டமிடப்பட்டது.

அது, அவர் கண்ணில் படாமல் தடுக்க, பட்டாளம் வந்தது! சர்க்காரின் பணமும் வாரிச் செலவிடப்பட்டது! சென்னை நகரமும், சின்னா பின்னப் பட்டது!

ஆச்சாரியாரின் வருகைக்கு அந்த அளவு பாதுகாப்பு அல்ல! அல்ல!! அப்படிச் சொன்னால் ஆட்சியாளருக்குக் கோபம் வரும்-ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆச்சாரியார், சென்னைக்கு வந்த இரவு நிம்மதியாகத் தூங்கி யிருப்பார் என்று எவரும் எண்ணமுடியாது. படுக்கையில் அன்றைய காட்சிகள் அவர் இதயத்தைத் துளைக்காமலா இருந்திருக்கும்? ‘என்னை வரவேற்க வேண்டிய மக்கள் இல்லை. ஆனால் மகத்தான போலீஸ் பாதுகாப்புடன் நான் உலவ வேண்டியதாயிற்றே! எத்தனை மண்டைகள் உடைந்தனவோ யாரார் என்னகெதி ஆகினரோ!’ என்ற துயரம், அவர் இதயத்தில் எழும்பாமலாயிருந்திருக்கும்!

துயரம் மட்டுமல்ல-அச்சமும் அவருக்கு உண்டாகியிருக்கும் ‘நானும் மந்திரியாயிருந்து மாகாணத்தை ஆண்டேன். கவர்னராகவுமிருந்தேன். கவர்னர் ஜனரலாகவும் விளங்கினேன். அப்போது கூட இவ்வளவு பாதுகாப்பு இருந்ததில்லை. இப்போதோ, நான் ‘பொறுப்பில்லாத மந்திரி!’ இருந்தும், இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதே இனி எதிர்காலம், என்ன ஆகுமோ?” என்று அவர் எண்ணாமல் இருந்திருக்கமாட்டார். ஏனெனில் அவர் ஒரு அரசியல் ஆரூடக்காரர்!

மக்கள் சர்க்காரின் மந்திரி. ஆனால் அவர் மக்களைப் பார்க்கவில்லை! அந்த அளவுக்கு கருப்புக்கொடி நாள், செய்து விட்டது ஆளவந்தாரை.

அவர் புலி அல்ல. ஆனாலும் அவர் பவனியை மக்கள் காணாதவாறு தடுக்கப்பட்டனர். அவர் இருந்த இடம் நோக்கிப் போனோரையெல்லாம் தாக்கி!

இந்தக் காட்சி, டில்லி மந்திரியை, மகிழ்வித்திருக்காது. மாறாக, வேதனையையே தந்திருக்கும். அவரும் மனிதர்தானே! கலங்கியே போயிருப்பார். தனக்கு வெற்றியைத் தந்திருக்கிறது. இப்போது.
காங்கிரஸ் சர்க்காரின் தடியடி தர்பார்-மக்களையும் விழிப்புறச் செய்திருக்கிறது. வந்த மந்திரியாரின் இதயத்தையும் வேதனைக் காளாக்கியிருக்கிறது. இந்த வெற்றி மகத்தானது! திவாகர் கண்ட காட்சியின் எதிரொலியை விட மகத்தானது!!!

(திராவிடநாடு 29.10.50)