அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காரியமாற்றக் கிளம்புவீர்!

ஏழை பங்காளனாகப் பேசி பதவி பெற்றதும் படாடோபத்தால் துள்ளுபவனைத் ‘துரோகி’ என்றே எவரும் அழைப்பர். இந்தப் பட்டத்துக்கு அருகதையாகி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியாளரும் அவர் தம் சகாக்களும் கூறிய உறுதி மொழிகளைக் காற்றில் பறக்கவிட்டது மட்டுமல்ல ‘கூர்வாளை’ மக்கள் மன்றத்தின் மீது வீசத்தலைப்பட்டுவிட்டனர். பிரிட்டிஷ் ஆட்சியை விடக்கேவலமான அளவில்!

நாட்டின் பல பாகங்களில், நமது கழகக் கூட்டங்களுக்குத் தடையுத்தரவு போடுவதில் ஆங்காங்குள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், பிரமுகர்களும் கவனமாயிருக்கிறார்களாம்! அதிகாரிகளை மிரட்டி, ‘மந்திரியிடம் சொல்வேன்’ என்று பயமுறுத்தி, நமது கழகத்து நடவடிக்கைகள் மீது அடக்குமுறை ‘ஈட்டியை’ வீசச் செய்கிறார்களாம்!!

அதிகாரிகள் எப்போதும் இருப்பார்கள் ஆளவந்தார்கள் அப்படியல்ல ஆயினும் ஆளவந்த கட்சியினரின் கெடுபிடித்துக் தலைசாய்க்கவேண்டியவர்களாகி விட்டார்கள். அதிகாரிகள். இந்தத் துயரக்காட்சியை இங்கன்றி வேறு எங்கும் காண முடியாது! நாடு ‘இவர்கள்’ ஆட்சியில் கேவலமானதோடு ஆட்சி இயந்திரமும் சுக்கு நூறாக்கப்பட்டு வருகிறது! அதிகாரம் நம்மிடம் என்ற ஆர்ப்பரிப்பால் காங்கிரஸ் பிரமுகர்கள். அதிகாரிகளை ஆட்டுவித்து, ஆங்காங்கு 144 போன்ற தடைகளை வீசுகின்றனர்!

பேச்சுரிமை, எண்ண உரிமை எல்லோருக்கும் உண்டு.

சமாதான முறையில் ஆயுதமில்லாது எல்லோரும் கூடலாம்.

இது, புதிதாகச் சட்டமான இந்திய அரசியலமைப்பின் 19 வது விதியாகும். இந்திய மக்களின் சுதந்திர உரிமைகள் பற்றி, இவ்விதி விரித்துச் சொல்கிறது.

ஆனால், பேச்சுரிமை கூட்டம் போடும் உரிமை மறுக்கப்படுகிறது. மேற்படி சட்டத்தை வகுத்த காங்கிரஸ் ஆட்சியினரால், வேதனை தரக்கூடிய காட்சி! வெட்கப்பட வேண்டிய சம்பவம் எனினும் நாள் தோறும் விரிந்துகொண்டே யிருக்கிறது!

பலாத்காரமின்றி, அமைதியாக, பல்லாண“டு காலமாக பணியாற்றி வரும் நம்மை நோக்கிப் பாய்கின்றனர். தடையுத்தரவுகளை வீசுகின்றனர். அதற்குக் காரணமாக, நம்மைப்பற்றி ‘துவேஷ பிரச்சாரம்’ செய்கின்றனர். நம்மால் அமைதிக்குப் பங்கம் விளையுமாம்! சமாதானத்துக்கு இடையூறு ஏற்படுமாம்! துணிந்து சொல்கிறார்கள். ஓராண்டில் 2000 க்கு மேற்பட்ட கூட்டங்கள் நடத்தியிருக்கும் நம்மைப்பற்றி!

நமது எழுத்துரிமை பேச்சுரிமை ஆகியவைகளை இழந்துவிட்டு உலவ, நாம் ஏமாளிகளல்ல! இடுப்பு ஒடிந்த கோழைகளுமல்ல! இந்த அடிப்படை உரிமைகள் நமது ஜீவநாடி ஆகவேதான் இவைகளைக் காப்பதென முடிவு செய்துவிட்டோம்.

நாடகங்கள் நடத்துவது எழுத்துரிமை காப்பது சம்பந்தமாக தலைமை நிலையத்துக்குத் தகவல் கோரி, விளக்கம் பெற்று காரியமாற்றக் கிளம்புங்கள் என்று அழைக்கிறோம். வீரகீதம் எழும்பட்டும் வீணர் நம்மை உணரட்டும்!

(திராவிடநாடு 15.10.50)