அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காட்டாட்சி!

“அடிப்போம், மடல் கொடுப்போம்!
முகத்திடிப்போம், குடம் எடுப்போம்!
இடுப்பு ஒடிப்போம், சிரம் உடைப்போம்!
பொடிபொடிப்போம், வசை துடைப்போம்!
உயிர் குடிப்போம், வழிதடுப்போம்!
பழி முடிப்போம், இனி நடப்போம்”

நாற்படைகளுக்கு, மன்னன் ஜீவகன், மாற்றானை இன்னவிதமாகச் செய்வோம் என்று முரகு கொட்டி, தோள்தட்டி, புறப்படுக, என்று வீரஉரை புகன்றான், என்று ஆசிரியர் சுந்தரம் பிள்ளை, மனோன் மணீயம் எனும் நறுமலர்த் தேனினுமினிக்கும் நாடகத்திலே தீட்டியுள்ளார்.

நாட்டுக்கு ஆபத்துஎன்றால், நாட்டுப்பற்றுடமை, ஆண்மை, தன்மானமுடமை கொண்டோர், இங்கனமே கூறிடுவர், சீறிடுவர், போரிடுவர்.

நாட்டபிமானம் மூட்டிடும் தீ, வீரர்களை எஃகுக் கம்பங்களாக்கிவிடும்! அத்தன்மையினருக்கு, மூச்சு நாட்டுப்பற்றே, பேச்சு அதைப்பற்றியதே, வாழ்வு, அதன் பாதுகாப்பின் பொருட்டே! வலிமை, இளமை, உடைமை, திறமை, உயிர், ஆகிய எதுவும், அதற்கே செலவிடப்படவேண்டும் என்றுரைப்பர், ஆண்மையறிவினர்! அலி இயல்பினரோ, ஆகுமோ என்று அயர்வர், அஞ்சிடுவர், வாழ்ந்திட வளைவர், தமிழ் இயல்பை இழப்பர்.

நாட்டுப்பற்று, மற்றையச்சமயங்களிலே, வெளிப்படுவதைவிட, அதிகமாக, நாட்டுக்கு எதிரியின் வேட்டுபாயும் என்ற நிலை வந்திடுங்காலை, வெளிப்படும்! மாஸ்கோவுக்கு ஆபத்து, என்றசெய்தி கேட்டதும், சென்ற ஆண்டு சினந்தெழுந்தனர் வீர ரஷியர்! ஸ்டாலின் கிராடுக்காக நடுக்கம் சமரிலே, சளைக்காது நின்று, மலைக்கு உளிபோல், மாற்றாரை மாய்த்து, மானத்தைத் தேய்த்துவிடும் மடத்தனத்தை மணக்கோ மென்றுரைத்து, மார்த்தட்டினர் அம்மக்கள்! இத்தகைய வீரர்களின் வரலாறு, என்றும் அழியாப்புகழ்பெறும்!

“ஜப்பான் இந்தியாவைத்தாக்க அநேகமாகத் தயாராகிவிட்டது. இன்னம் 3-அல்லது 4-வார காலத்தில் தாக்குதல் ஆரம்பமாகவிடுமென நான் நிச்சயமாக எண்ணுகிறேன்” என்று அமெரிக்காவிலுள்ள இந்தியா லீக்தலைவர் சர்தார் ஜே.ஜே, சிங் செப்டர்பம் 13 தேதி தெரிவித்துள்ளார்.

காகசசைக்கடந்து, இந்தியாவில் கால் ஊன்றிக் கொள்ள ஜெர்மாயியரும், அசாமில் புகுந்த இந்தியாவை இறைகொள்ள ஜப்பானியரும், என்று நாள் கிட்டுமோ என்று ஆவலுடன் பசிநிறைந்த கண்களுடன், படைப்பலத்துடன் நிற்கும் நேரம்! வாரக்கணக்கோ மாதக்கணக்கோ, அன்றி நாள் கணக்கோ மணிக்கணக்கோ, கூறிட இயலாது, ஆனால், ஆபத்து வட்டமிட்ட வண்ணம் இருக்கிறதென்பதைத் திடமாகக் கூறிடலாம், மறுக்கார் மதியுடையோர், ஆனால் மண்டியிடார் மானத்திலே அக்கரை கொண்டோர் குதர்க்கர்கள், கோமாளிக்காரணங் கூறுவர், குடிலர்கள், கெடுமொழி பேசுவர், கோழைகள் கும்பிட்டு நிற்பர், நாட்டுப்பற்றுடையோர், மன்னன் ஜீவகன் மொழிவழி நிற்பர்! படைதிரட்டுபவர், பாசறை அமைபர், அணிவகுப்பர், போரிடுவர்.

இந்தியாவுக்கு ஆபத்து என்பதற்காக, இன்று நாட்டுப்பற்றுக்கு நாங்களே நாயகர்கள் என்று நாவின்றிடும் தோழாகளே, எதிரிவருகிற நேரமாயிற்றே என்பதனை எண்ணிடாது, தன்னாட்சித் தீவர்த்தி பிடித்துக்கொண்டு, தகர்ப்போம், இடிப்போம், எறிப்போம் புடைப்போம், என்று கூவிக்கொண்டு, உள்நாட்டில் கலகத்தீயை மூட்டிவிட்டனர்.

தன்னரசுத் தீவட்டியைத் தபாலாபீசில் வீசுவோரும், போலீஸ் ஸ்டேஷனைப் பொசுக்கி, அதில் கிளம்பும் புகையிலே “சுயறாஜ்ய சுகந்தரம்” காண்போரும், தந்திக்கம்பிகளை அறுத்துவிட்டு, பிரிட்டிஷ்காதி பத்தியமெனும் அடிமைச் சங்கிலி அன்னை பாரக தேவியின் அடிகளிலிருந்து அறுத்தெரியப்பட்டது என்று கருதி அகமகிழ்வோரும், இன்று, “இந்திய விடுதலை வீரர்களாக”ப் பேசப்படும் அளவு, பித்தம் நாட்டிலே சத்தமிட்டு வாழ்கிறது! எவ்வளவு ஆபத்து தலைமீது! எத்தகைய கூத்து நாட்டிலே! ஜப்பானை தடுக்க இதுவா வழி? நாட்டினிடம் காட்டும் பற்று இதுதானா! இதற்கா, சுதந்திரப்போர் என்று பெயர் போக்குவரத்துகளைத் தாக்குவது, முதல்தரமான ஐந்தாம்பட்டாள வேலை! எதிரியிடம் கைக்குலிவாங்கினோரி, ஐரோப்பாவிலே, பலஇடங்களில், இதனைச் செய்தனர், இன்று நாஜி இடுக்கியிலே சிக்கி, இழிவும் துயரும் மிகுந்து வாடுகின்றனர்! அந்தக்காரியத்தை இங்கு செய்வோரை, நல்லறிவு படைத்தோர், எங்கனம் ஆதரிக்கமுடியும்! நாட்டுக்கு ஆபத்து சூழும் வேளையிலே, நாசவேலையில் இறங்குவதா! வெள்ளம் வருகிற வேளையிலே, அணையை அழிப்பதா! விவேகத்தானா? நாட்டுப்பாதுகாப்பு கெட்டு, போக்குவரத்துச் சாதனம் சிதைந்து, யுத்தமுயற்சி கெட்டால் பிரிட்டனுக்கா, நமக்கா, நஷ்டமும் கஷ்டமும், பீதியும் தொல்லையும், ஆபத்தும் அலைச்சலும் என்பதனை கூட எண்ணிப்பார்க்க நேரம் இல்லையா! ஏனோ கெடுமதி!

கலகத்தைக் கிளப்புவது கடினமான காரியமல்ல அதிலும் கருத்துகனியாத உள்ளங்கொண்டோரிடம் கபடர்கள் செல்வாககு பெற்றிருந்தால், கலகத்தை கிளப்புவது, மிகமிகஎளிது! விளைவு, விபரீதமாகும்.

சாதாரண காலத்திலாகிலும், விளைவுபற்றி கவலை கொள்ளாதிருக்கக்கூடும். உலகின் இன்றைய நிலையிலே, நாட்டுக்கு இதுபோது வந்துள்ள ஆபத்தான சமயத்திலே, கலகத்தின் விளைவு, எதிரிகளின் கதவைத் திறந்திடுவதாகவே இருக்கமுடியம். எனவே தான் வீரத்தோடு விவேகமும் கொண்டோர் இன்றையக் காந்தீயக் கிளர்ச்சியிலே கலக்கவில்லை.

“இவர்களுக்கு நாட்டு விடுதலையிலே அக்கரை இல்லை” என்று தூற்றிடும் தோழர்கள், தமது செயலைச் சரியெனக் கருதும் தவறை இழைப்பதோடு, மற்றைதாளே மறியல் நடந்தால். தொல்லைவளர்ந்தால், இந்துரைமார் சர்க்கார், சுயறாஜ்யம் கொடுக்காமல் போவார்களா? அதுதான் சூட்சமம்!” என்று கூறு.

தந்திக்கம்பியை அறுத்தால் நமக்குத்தானே நஷ்டம் இது சுயறாஜ்யமாதரும்?” என்று தந்திக்கம்பி அனுப்பவனைக் கேட்டால், “சூட்சுமம் இதிலேதான் இருக்கிறது. தந்தி அறுத்தால், சேதிபோகாது; சேதி போகாவிட்டால் சர்க்கார் நடக்காது’ சர்க்கார் நடக்காவிட்டால், பேசாமல் சுயறாஜ்யம் கொடுப்பார்கள் என்று கூறுவான்.

இவைகள் சட்டத்திற்கு விரோதம்; பொதுமக்களுக்குப் பாதகம்; ஆகவே தண்டனை தரப்படும்” என்ற உடனே, உரிமை உடுக்கைகள் என்று விளம்பரம் பெற்ற பத்திரிகைகள், “பரிதாபம்! சர்க்கார், அடக்குமுறைகொண்டு சுயறாஜ்யக் கிளர்ச்சியை அடக்குகின்றனர்” என்று எழுதுகின்றன. நாசவேலை செய்பவர், செய்யும் காரியத்தை சுயறாஜ்யக்கிளர்ச்சி என்று சொல்லிவிட்டது, மித்தரன் எழுதிவிட்டது எனவே, மேலும் செய்வோம்” என்று எண்ணிக் கின்றனர்.

ஏத்தக்குடியிலே சாஸ்திரிகள் வீட்டிலே கொள்ளை அடித்தவர் நாளைக்கு, “கொள்ளை அடித்தது சட்ட விரோதமா? சரி! நான் சர்க்காருக்குத் தொல்லைகொடுத்ததுதனால், சுயறாஜ்யம் பெறவே, இதைச் செய்தேன் என்றும் கூறலாம் போலும்! அதற்கும் ஆதரவுகாட்ட, “சுதந்திரவேட்கை கொண்ட ஏடுகள்” முன்வரும் போலும்!!

கிளர்ச்சி இவ்வளவு கோணலாக இருக்கும் என்பதையும், கிளர்ச்சியின் விளைவுகள் வேதனைதருவனவாக இருக்குமென்பதனையும், தன்னாட்சிக்கு வழி செய்வதை விட, காட்டாட்சி
யைக் கூட்டிவரும் என்பதையும் உணர்ந்தே, லீகும் நீதிக்கட்சியும், கிளர்ச்சியில் கலக்க மறுத்துவிட்டன. மக்கள், நாட்டு நிலைமை மோசமாகி, எங்கும் ஏத்தக்குடிகள் தோன்றாமுன்னம், சட்டம் நிலவ உதவி செய்யவேண்டும், நாசகாரியம் செய்வோரை அடக்கவேண்டும் என்று எச்சரிக்கிறோம்.

(திராவிடநாடு - 20.9.42)