அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காட்சியும் கருத்தும்

``ஜனாப் ஜின்னா, சுயராஜ்யம் வர விடாமல் தடுக்கிறார், சுயராஜ்ய இரதத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார், பாதையை மறிக்கிறார்'' என்று கூறும் தோழர்களுக்கு, நமது சித்திரக்காரர், இக்காட்சியைக் காட்டுகிறார்.

``ஐயா! ஜனாப் ஜின்னா, உங்கள் சுயராஜ்ய இரதத்தைத் தடுக்கிறார் என்று கூறுகிறீரே. அந்த இரதத்தின் (அவ) இலட்சணத்தைக் கண்டீரா? இதோ பாரும், காந்தியார் லகானைப் பிடித்து ஓட்டி வரும் இரதத்திலே, பூட்டப்பெற்றுள்ளவை களை! ஒட்டகம், குதிரை, புலி, நரி, இவைகளை ஒரே இரதத்திலே பூட்டி ஒட்டுகிறார். அதாவது முஸ்லீம், திராவிடர், பனியா, பார்ப்பனர் என்றுள்ள இனங்களை ஒரே இயக்கத்திலே பிணைத்து ஓட்டப் பார்க்கிறார். அது நடக்குமா? போக விரும்புகிற பாதையிலே உள்ள பாலமோ பிளந்திருக்கிறது! பாலத்தின் கீழே உள்ள அகழியிலேயோ முதலைகள்! இந்த ஆபத்தானப் பாதையிலே, அர்த்தமில்லாத முறையிலே, பல்வேறு மாறுபாடுள்ளவர்களுக்குத் தானே தலைவர் என்று கூறித் தேரைச் செலுத்தினால், விபத்துதானே நேரிடும், அந்த விபத்தைத் தடுக்கத்தான், ஜனாப் ஜின்னா பாலத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு, ``காந்தியாரே! இரதத்தை ஓட்டாதீர்! ஆபத்து!'' என்று எச்சரிக்கிறார். இதிலே `தவறு என்ன ஐயா!' என்று கேட்கிறார்.

(திராவிட நாடு - 26-8-1945)