அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காயமே, இது, பொய்யடா!

“காயமே, இது, பொய்யடா!

கருத்து வெல்லுது, மெய்யடா!”

“இது ஒரு புதிய கோஷமய்யா! ஐதோ ஒரு சூட்சமத்தைக் கண்டுப்பிடித்து விட்டவர்கள்போலப் பேசுகிறார்கள், வடநாட்டான் ஆதிக்கம் என்று. வடநாடாவது - தென்னாடாவது. இப்படி எல்லாம் பேதபுத்தி கூடாது. இதுகள், ஏதேனும் இப்படிப் பேசிக் கொண்டே தான் கிடக்கும். தள்ளுங்க, சார்! யார் கேட்கப் போகிறார்கள், இதுகளின் கூச்சலை - கதறலை.”

சிரமமின்றிக் கூறிவிட முடிகிறது இதுபோல.

சிலருக்கு, இந்தச் சொல் வீச்சு மட்டும் போதுமென்று தோன்றுவதில்லை - கல் வீச்சிலும் உடுபடுகின்றனர்.

வீசும் கல்லும், ஐசலும், உடலையும் உள்ளத்தையும் தைக்காமலில்லை. என்றாலும், அந்த வேதனை ஏதனால் குறைகிறது? எங்கிருந்து கிடைக்கிறது, மன வலியையும் மாற்றும் மருந்து? இதனை வேறு கட்சியிலுள்ள, நண்பர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. ஒரு சிறுகதை - பழைய கதைதான் - ஆனால் புதிய பாடம் கிடைக்கும். இதோ, அது.

ஆஸ்தான வித்வானொருவன், மகா ஆணவக்காரன் - காரணம், தன் கீதத்தின் மூலம், கல்லையும் உருகச் செய்தவன்.

பல நாட்டு ஆஸ்தான வித்வான்களும் கூடி இருந்தனர், கோயில் மண்டபத்தில், அவன் பாடினான். பலரும் வியந்தனர், அவன் கெம்பீரக் குரலில் சொன்னான். “கோயிலின் மூலவரைச் சென்று பாருங்கள்” என்று. சென்று பார்த்தனர் - சிலையின் கண்களிலிருந்து நீர் தாரைத்தாரையாகப் பொழிந்து கொண்டிருக்கக் கண்டனர் - அவன் காலடி வீழ்ந்து, “கல்லையும் உருகச் செய்த கலாவாணர் நீர் - உமது கால்தூசும் எமக்குப் பரிசு!” என்று கூறிப்போயினர். பன்னெடு நாட்கள், இந்த வித்வான், பட்டத்தரசரகர்களும் பயப்படும் அளவுக்குப் புகழ்பெற்றுச் செல்வாக்குடன் வாழ்ந்து வந்தான். ஆணவம் அதிகரித்தது.

இரு சகோதரர்கள், சிற்றூர் வாசிகள்.

ஒருவன் சிற்பி, மற்றவன் ஆசைவாணன்.

புகழ் பெறாதவர்கள். பல நாடுகளிலும் சென்றுவிட்டு ஆணவமிக்க வித்வானின் ஊர் வந்தனர்.

அரசஅவை சென்றனர், பாடி ஏதேனும் பரிசு பெற. ஆஸ்தான வித்வான், பாடவந்தவனை ஏற இறங்கப் பார்த்தான்.
“யார் முன் நிற்கிறீர் என்பதை அறிவீரோ?” என்று கேட்டான்.

“நான் ஆசை பயின்றவன், இராகு கேது தெரிந்தவனல்லவே!” என்று விடை அளித்தான் இளம் பாடகன்.

“ஐடா, மூடா! விகடமோடா பேசுகிறாய். யாருடைய முன்னிலையில்! கல் உருகக் கானம் பாடிடும் வித்வான், நான்!” என்றான்.

“கல்லை உருகச் செய்தீரோ? நான் அறியேன்! நான் கல்மனம் கொண்டோரையும் உருகும்படி மட்டுமே பாடவல்லேன்!” என்றான்.

வழக்கப்படி கோயிலிலே கூடினர். ஆஸ்தான வித்வான் பாடினான் - சிலை, கண்ணீர் பொழிந்தது. சிற்பி சிரித்தான் - ஆசைவாணன், “என்னால் இது இகாத. ஆனால்...” என்று கூறிவிட்டு பாடலானான், சோகமிக்க ஓர் பாடலை சபையிலே, அனைவரும், ஆணவ மிக்க வித்வான் உள்பட, இழலாயினர். சிலை மட்டும் கண்ணீர் பொழியவில்லை.

“அண்ணா! சிலையும் அழவேண்டுமோ?” என்று கேட்டான் சிற்பம் தெரிந்த தம்பி.

“ஆழட்டுமே! சிந்தையிலே செருக்குக்கொண்ட இவனே அழும்போது....” என்றான் ஆசைவாணன்.
சிற்பி, “சிலை, முன்போல ஆழாது” என்று கூறிச் சிரித்தான். சபையோர், வித்வானைப் பார்த்தனர். மன்னர், பாடச் சொன்னான், வித்வான், பாடிப்பாடிப் பார்த்தான் - சிலையின் கண்களிலே நீர் கசியவுமில்லை. சிற்பி பிறகு கூறினான், சிலையின் கண்களிலே நீர் பொழியும் வித்தை சிலைக்கு அருகே அமைத்து வைத்துள்ள ஒரு நீர்ப் பொறியால்தான் என்பதை - அந்தச் சூட்சமத்தை, ஆஸ்தான வித்வானும் அர்ச்சகனும் சேர்ந்து கையாண்டதை - அதைத்தான் கண்டறிந்து, நீர்ப்பொறியை அடைத்ததை - இவைகளைக் கூறியதோடு, மன்னரைக் கொண்டே பரீட்சிக்கவும் செய்தான். வித்வானும் தன் தவறை ஒப்புக்கொண்டான்.

இந்தப் பழங்கதைபோல, நமது மாற்றுக் கட்சித் தோழர்கள், இத்தனையோ அற்புதங்களைச் செய்பவர்கள் - அவர்களின் பேச்சுக்கு உலகமே மதிப்பளிக்கும் - தேர்தல் அவர்கள் காட்டும் திக்கு நோக்கித் தாண்டவமாடும் - எல்லாம் சரி - ஆனால், அவை போன்ற அற்புதங்களைச் செய்யும் சக்தியற்ற நம்மால், ஒன்று செய்ய முடிகிறது - நாம் எண்ணுவதையும் கூறுவதையும், அவர்கள் எண்ணும்படியும் கூறும்படியும் செய்ய முடிகிறது! கல்லை உருகச் செய்த வித்வானையே, உருகச் செய்த ஊர் பேர் தெரியாத ஆசைவாணன் போல.

இந்த நம்பிக்கைத்தான், நொந்த நமது உள்ளத்துக்குத் தக்க மருந்தாக அமைந்து, உற்சாக மூட்டுவதுடன், நமது வேலை பலனளிக்காமல் போகாது என்று உறுதி பிறக்கச் செய்கிறது.
வடநாடு - தென்னாடு என்னும், பேதம் பேசாதே என்று கூறும் நண்பர்கள், கொஞ்சம், திடுக்கிடாமல் படிக்கவேண்டும், இதை ஓட்டி வெளிவரும் விஷயத்தை.

“சுயராஜ்யம் வந்துவிட்டது! சுயராஜ்யம் முழுதும் வராமல் கொஞ்சந்தான் வந்திருக்கிறது, வடக்கேதான் வந்திருக்கிறதே தவிர இங்கே வரவில்லை” இப்படியெல்லாம் பலர் பேசும்படி நமக்கு சுயராஜ்யம் வந்துவிட்டது. இந்த அதிர்ச்சியில் ஏற்படும் குழப்பங்கள் பலவாக இருக்கின்றன. வெள்ளைகாரர் பிடுங்கலும் ஆதிக்கமும் தொலைந்தன. ஆனால் பதிலுக்கு வடநாட்டார் தென்னாட்டை வளைத்துக் கொண்டு விட்டனர் என்ற கூக்குரல் செவிடுபடுகிறது. வடநாட்டான் யார்? அவனும் நம்முடைய சகோதரனல்லவா? என்று பதில் கூறப்படுவதை நாம் கேட்கிறோம். வெள்ளைக்காரன் புலி கரடியின் இனத்தைச் சேர்நதவனல்ல. நம்முடைய ஒன்றுவிட்ட மனித சகோதரன்தான். ஆனாலும் அவன் செய்த அநியாயம் பொறுக்க முடியவில்லை, போகச் சொன்னோம். வடநாட்டு சகோதரன் கழுகு மாதிரி காரியம் நடத்த ஆரம்பித்தால் நாம் செய்வதென்ன? சென்னையைப் பார்க்கலாம். ஒரு இருபது ஆண்டுகட்கு முன்பு சென்னை தமிழர்களின் சென்னையாக இருந்தது. இப்பொழுது தலைப்பு மாறியிருக்கிறது தெலுங்கர் ஐதோ சமீப எல்லையே உத்தேசித்து மனதே வழக்குக் கோருகிறார்கள். ஆனால் அங்கே பேராதிக்கம் வகிப்பது வடநாட்டார் என்பதை உணரவேண்டும். வடநாட்டு வியாபாரிகள் உள்பகுதியிலுள்ள சிறுபட்டினங்களிலும் புகுந்து வியாபாரத் துறையில் ஆதிக்கம் பெற்று வருகின்றனர். வடநாட்டுப் பாங்கிகள் பல வேரூன்றியிருக்கின்றன. வடநாட்டார் கம்பெனிகளில் நம்முடைய மூலதனம் குவிந்திருக்கிறது. சென்னை மார்க்கெட்டுக்கு இறகு கிடையாது. பம்பாய் மார்க்கெட்டும், கல்கத்தா மார்க்கெட்டும் சென்னை மாகாணத்தின் குரல்வளையில் கைவைத்துக் கொண்டிருக்கின்றனவென்றால் அது மிகைப்பட்ட செய்தியல்ல.

“இதையெண்ணிப் பார்க்கும்போது தென்னாடு தனிப்பட வேண்டுமென்று அன்பர் பலர் விரும்புகின்றனர். இந்த இயக்கம் நாட்டில் அரும்பி ஏழுகின்றது. இந்த வடநாட்டுப் பிடியிலிருந்து கழலுவதற்குத் தென்னாட்டு சமஷ்டி தேவை என்பதொரு வாதம்”.

விடுதலையா? அல்ல! திராவிடக் கழக ஏடுகளிலே ஏதேனும் ஒன்றா? அல்ல.

காங்கிரஸ் ஏடு! ஆமாம்! அதிலும் காந்தீயத்தைத் தனவணிகர் நாட்டிலே பரப்பும் கைங்கரியத்தைச் செய்யும் காரைக்குடி, குமரன்!

எழுதிய தலையங்கம், இது.

ஒருபுறம், இப்படி, நமது கருத்து எடுருவி மாற்றுக் கட்சியின் ஏடுகள் வாயிலாகவே, நாட்டு மக்களுக்குப் பரவும்போது நம்மீது வீசப்படும் கல், உண்டாக்கும் தழும்புகளை, சிறப்புச் சின்னங்களாகத்தானே, நாம் கருதவேண்டும்!

வடநாட்டின் ஆதிக்கம் வளருவது உண்மை என்பதை காங்கிரஸ் ஏடு, எடுத்துக்காட்டும்போது, எதிர்க்கட்சி வக்கீலும், நமக்குச் சாதகமாகக் கூடிய மிக முக்கியமான குறிப்புத் தரும் போது, களிப்பு மட்டுமல்ல, பெருமையுமன்றோ ஏற்படுகிறது. களிப்பும் பெருமையும் கூடக்கிடக்கட்டும் ஒருபுறம் - காரியம் பலிக்க வழி பிறக்கிறதே, அதைக் கவனித்தால் எவ்வளவு உறுதியும் நம்பிக்கையும் ஏற்படுகிறது.

பொருளாதாரத்துறையிலே, வடநாட்டு ஆதிக்கம் செலுத்துகிறது - ‘குமரன்’ வாசகப்படி, “குரல்வளையில் கை வைத்துக் கொண்டிருக்கிறது”. -

இந்த உண்மையைக் காங்கிரஸ் ஏடு ஒப்புக் கொள்வதற்கு, நாம் கொடுக்கும் விலைதான் - கல்லடிபட்டதும், சொல்லடி கேட்பதும். கிடைத்திருக்கும் பொருளின் மதிப்பைப் பார்க்கும்போது, கொடுத்திருக்கும் விலை கொஞ்சந்தான்! பாதையில் கல் இடறிக் கீழே வீழ்ந்தாலும்தான், காயம் ஏற்படுகிறது. கண்ணியத்தை மறந்த புண்யவான்கள், வீசும் கல்லும், அதே காரித்தைச் செய்கிறது. ஆனால், கருத்து எங்கெங்கே பரவுகிறது என்பதைக் கவனிக்கும்போதுதான் ‘காயமே’ இது பொய்யடா என்று ஆனந்தகளிப்பு பாடத் தோன்றுகிறது. காயமே என்பது வேதாந்த வாசகப்படி உடலைக்குறிப்பது - நாம் இங்கு உடலில் ஏற்படும் காயத்தைக் குறிப்பிட்டோம்.

‘குமாரன்’ காங்கிரஸ் ஏடு என்றாலும், அது மாஜி சுயமரியாதைக்காரரால் நடத்தப்படுவது, எனவே, அதிலே திராவிட வாடை வீசிற்று என்று வாதிடலாமா என்று தோன்றும், கல்வீசும் நண்பர்களுக்கு.

அந்த வாதம் பயனற்றது. இதோ வேறோர் ஏடு கூறுவது.

“சுப்பிரமண்ய பாரதியார் இருந்த காலத்தில்தான் வடநாட்டில் ரவீந்திரநாத் தாகூர், இக்பால் இருவரும் இருந்தார்கள். அவ்விருவர்களும் அகில இந்தியக் கவிகளானார்கள். பாரதியார் தமிழ்நாட்டின் தேசீயக்கவியாகப் போற்றப்படுவதற்கே ததிங்கணைத்தோம் தாளம் போட வேண்டியதாகிவிட்டது. ஏன்? தமிழரின் சுய அபிமானமற்ற நிர்குண நிர்தோஷ சுபாவமே காரணம்.
“யதீன்தாஸ் பட்டினி கிடந்து இறந்தார். அதைக் குறித்துக் குறைவாக மதிக்கவில்லை. அவருக்குத் தலைவணங்கி, அவர் தாள்களை நம்சென்னி மேல் தாங்கவேண்டும். ஆனால், அதே சமயத்தில் திருச்சியில் வாஸ்பேயர் இறந்தார். அவருடைய ஒரு நேத்திரம் அழுகி உதிர்ந்தது. உயிர்போகும்போது ராஜாஜியைத் தரிசிக்க விரும்பினார். ராஜாஜியும் சென்றார். தியாகி கை கூப்பினார். புன்முறுவல் செய்தார். விடை பெற்றார். உயிர் நீத்தார். கடைசி வரை ‘மன்னிப்பு’ என்ற வார்த்தை சொன்னால் போதும். விடுதலை செய்கிறோம் என்று சர்க்கார் மன்றாடினார்கள். வீரன் மனம் தளரவில்லை. அப்படிப்பட்டவரின் புகழ் தமிழ்நாட்டிலும் ஆலைமோதிப் பரவவில்லையென்றால் வடநாட்டில் எங்கே தலைகாட்டப் போகிறது!

“பம்பாய் நகரத்தில் பாபுகனுலாரி சக்ரத்தினடியில் சிக்குண்டு மாண்டார். திருப்பூரில் குமரன் மண்டை உடைந்து மாய்ந்தார். குமரன் பெயர் அகில இந்தியாவில் அடிபடுகிறதா? இல்லை. ஏன்? முன் சொன்ன காரணம்தான். தமிழர்களுக்கு சுய அபிமானமற்ற நிர்குண நிர்தோஷ மனோபாவம் இருப்பதனால் தான்! இம்மாதிரியான சம்பவங்கள் ஒன்று இரண்டல்ல. பல சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், என்ன பிரயோஜனம்? தமிழர்களின் பிறவிக்குணம் மாறுமா? அது பிறவிக்குணமாக இருந்தால் மாறாதுதான். உண்மையில் அது பிறவிக் குணமல்ல. வெகுகாலமாக அடிமைப்பட்டிருந்த காரணத்தினால் ஏற்பட்ட குணம். ஆகவே முயற்சி செய்தால் அந்தக் குணம் மாறிவிடக் கூடும்.”

குமரன், பொருளாதாரத் துறையிலே, வடநாடு செலுத்தும் ஆதிக்கத்தைக் குறிப்பிட்டு எழுதியது.

இந்த வாசகம், தமிழ்நாட்டு வீரர்கள் தியாகிகள் கூட, வடநாட்டிலே மதிக்கப்படுவதில்லையே, வடநாட்டுத் தலைவர்களுக்குத் தானே, இங்குள்ளோரும் சேர்ந்து, சாமரம் வீசுகிறார்கள் என்ற விசாரத்தை வெளியிடுகிறது.

இரண்டையும் கூட்டிப் பாருங்கள்.

தமிழன் மதிப்பிழந்திருக்கிறான் - செல்வத்தை இழந்து நிற்கிறான்.
பொருளும் இல்லை, புகழும் இல்லை.

வெட்கமும் துக்கமும் சேர்ந்து தாக்கும் நிலை அல்லவா இது! பொருளும் புகழும் வடநாட்டு ஆதிக்கக்காரர்களிடம் போய்ச் சேர்ந்து விட்டது, என்பது இந்த இரு ஏடுகளின் ஊரையினின்றும் விளக்கமாக்கப்படுகிறது. மறந்தேனே, சொல்ல! புகழ்பற்றிய செய்தி மாஜி, சு.ம.வின் ஏடுமல்ல, திராவிடரின் பேனா ஓடும் ஏடுமல்ல, நாராயண ஐயங்காரின் பேனாவால் நடைபெறும், இந்துஸ்தான் எனும் காங்கிரஸ் ஏட்டில் இருப்பது.

இப்படி, இரு காங்கிரஸ் ஏடுகள், இடைவிடாது நாம் செய்துவரும் பிரசாரத்திலே பொதிந்துள்ள அடிப்படையை, அறிந்தோ அறியாமலோ, ஏற்றுக்கொள்ளும்போது, நமக்கு வெற்றிக் களிப்பு வரத்தானே செய்யும்.

இங்கு மட்டுமல்ல இந்த உணர்ச்சி. எங்கும் பரவி இருக்கிறது. வடநாட்டு ஆதிக்கம் தலைவிரித்தாடுவது மட்டுமல்ல, ஆதிக்கக்காரர்கள், தமிழர்களிடம் அலட்சியமாகவும் நடந்து கொள்கின்றனர். வடநாட்டு காங்கிரஸ் தலைவர்களின் விழாக்களைக் கொண்டாடுவது போல, விமரிசையாகத் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களின் விழாக்களைக் கொண்டாடு வதில்லை என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரத்திலே கிளம்பி இருக்கிறது. தொலைவில் உள்ள மலாயாவில். அங்கு நடைபெற்ற வ.ஊ.சி. விழாவில் மலாய் நாட்டுக் காங்கிரஸ் கட்சி தக்கவிதமாக நடந்து கொள்ளவில்லை என்று, மனம் வருந்தி, கோலாலம்பூர், ‘ஜனநாயகம்’ எனும் தினத்தாள் 27-11-47ல் தீட்டியிருக்கிறது.

“மலாயாவிலுள்ள இந்தியவர்களின் ஏகஸ்தாபனமாக விளங்கும் மலாயா இந்தியர் காங்கிரஸ் வடநாட்டுத் தலைவர்களின் விழாக்களை மட்டும் உற்சாகமாகக் கொண்டாடிவிட்டுத் தமிழ்நாட்டு வீரத்தியாகியான பாரதி, வ.ஊ.சி., வீர விளக்கு வ.வே.சு. ஆய்யர், தாயின் மணிக்கொடிக்காக உயிர் துறந்த திருப்பூர் குமரன் போன்ற தியாகிகளின் தினங்களைக் கொண்டாடுவதில் அக்கரை செலுத்துவதில்லை யென்ற ஆபவாதமேற்பட்டுள்ளது.

“குறிப்பாக இந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களில் 100-க்கு 90 சதவிகிதம் தமிழ் மக்களென்பதை மறந்துவிடக் கூடாது. எனவே தமிழ்நாட்டுத் தியாகிகளின் தினங்களை மலாயா இந்தியர் காங்கிரஸ் கொண்டாட முயற்சி எடுத்துக் கொள்ளாதிருப்பதற்குத் தகுந்த முகாந்திரமிருக்க முடியாது.

“கோலாம்பூரில் நடைபெற்ற வ.ஊ.சி நினைவுநாள் கொண்டாடத்துக்கு 64 இந்தியர்களின் ஸ்தாபனங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தும், 18-ஸ்தாபனங்கள் மட்டும் பங்கெடுத்துக் கொண்டனவென்பதை அறிய நாம் வருந்தாதிருக்க முடியவில்லை.

“வ.ஊ.சி. அவர்களின் நினைவு நாள் கொண்டாட்டத்தில் ம.இ. காங்கிரஸ் எடுத்துக் கொண்ட முயற்சி என்ன? ஒன்றுமில்லை என்று கூறி வருந்துவதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை. இதைத் தமிழர்கள் சிந்திப்பார்களானால் அவர்களுடைய மனம் புண்படாதிருக்க முடியுமா?”

இவை, அந்தத் தலையங்கத்திலே உள்ள வாசகங்கள்.

இதுமட்டுமா! சின்னாட்களுக்கு முன்பு, திருநெல்வேலிப் பகுதியிலே, வைத்தியர்கள் மாநாடு நடைபெற்றது. அதிலே சென்னை சுகாதார மந்திரி, தனம் ஷெட்டி கலந்து கொண்டார். அவர் பேசும்போது, இந்திய சர்க்கார், வைத்தியத் துறையிலே, விசேஷ மேல்படிப்புப் பெற, 5 வைத்தியர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்த ஒவரில், ஒருவர்கூட, சென்னை மாகாணத்தவரல்ல என்று கூறிவிட்டு, ‘இதற்காக நான் வருந்துகிறேன்’ என்று பேசியிருக்கிறார்.
‘குமரன்’, குமுறுகிறது, இந்துஸ்தான் இடித்துரைக்கிறது, ஜனநாயகம் சஞ்சலப்படுகிறது, அமைச்சர் வருந்துகிறார், வடநாட்டு ஆதிக்கத்தின் ஒவ்வொர் பகுதிகளைத் துண்டுத் துண்டாகக் கூறியும், விளைவுகள் பற்றி விசாரத்தோடு பேசியும்.
நம்மீது வீசப்படும் கற்களைவிட, இவர்கள் வீசும், கருத்துக்கள் உள்ளனவே, அவை, நமது கவனத்தைக் கவர்ந்து, அஞ்சாதே! உன் கருத்துப் பரவுகிறது! என்ற உறுதியை எட்டுகிறது.

(திராவிடநாடு - 21.12.47)