அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கடமை அறியாக் கரந்துகள்!

பொதுமக்கள் வெறுக்கிறார்கள்!
ஊழல்கள் மலிந்துவிட்டன!
பதவிப் பித்தம் பிடித்தாட்டுகிறது!
சுயநலம் தாண்டவமாடுகிறது!

இந்தப் பலமான குற்றச்சாட்டுகளைக் காங்கிரசின் மீது, நாம் கூறினால் காங்கிரஸ் நண்பர்களுக்குக் கடும் கோபம் வருகிறது- கல்லைத் தேடுவதா அல்லது ஏதேனும் பழிச் சொல்லைத் தேடுவதா என்று கிளம்புகிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சி மீதுதான், நாம் மேலே பொறித்துள்ள குற்றச்சாட்டுகளை வீசுகிறார்! - நமது கட்சித் தோழரல்ல- பொது உடைமைக் காரர்கள் ஜெயப்பிரகாஷ் கூட்டத்தாருமல்ல, அசல் காங்கிரஸ் தலைவரொருவர் முன்னாள் மந்திரியாகவுமிருந்தவர்.

பட்டாபி வெற்றி பெற்றதைப் பாராட்டிப் பேசும்போது, காங்கிரஸ் சாட்சியின் போக்கையும் கண்டித்துப் பேசினர், காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் மந்திரியுமான கரந்த்.

``மத்ய சர்க்கார், மாகாண சர்க்கார்கள், ஆகிய எங்கும், காங்கிரஸ் ஆட்சி மேலும், மேலும் பொதுஜன வெறுப்பைப் பெற்ற வண்ணம் உள்ளனர். நமது வார்த்தைகளிலே, மக்கள், மெள்ள மெள்ள, ஆனால்நிச்சயமான நம் பிக்கையை இழந்து வருகின்றனர். ஏனெனில், நாம் வாக்களித்தது அதிகம்- நடவடிக்கையில் உள்ள பலனோ மிகமிகக் குறைவு. அதிகார மோகம் வேண்டும். இலாப வேட்டைக்காகவும், காங்கிரசிலே பலர் வந்து குவிகிறார்கள். எங்கு பார்த்தாலும், சுயநலத்துக்காக, சர்க்கார் நட வடிக்கையைப் பயன்படுத்திக் கொள்ளும் காரியமே நடைபெறுகிறது.
* * *

தர்ம ஆஸ்பத்திரியிலே நோயாளியின் உடல் நிலையைப் பற்றி, அங்கு இருக்கும் நர்சுகளோ, அல்லது பணியாட்களோ பேசிக் கொள்வதுண்டல்லவா, இனிப் பிழைப்பது ஏது! ஈளை கட்டிவிட்டது! நீர் போகவில்லை! பார்வை மங்கிவிட்டது- என்று அதுபோல, கரந்த் பேசுகிறார். மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது- காங்சிரஸ் ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள் என்று.
தர்ம ஆஸ்பத்திரி, ஊழியர் போன்ற நிலையில் உள்ளவரல்ல, கரந்த். பொறுப்பான பதவி பார்த்தவர்- அதைவிட அதிகமான பொறுப்பு இப்போதும் உண்டு அவருக்கு- பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்பதால் காங்கிரஸ் ஆட்சி மோசமாகப் போகிறது என்பதை, ஏதோ பத்தினித் தனத்துடன் கூறிக்கொள்வது மட்டுந்தானா, இவர் கடமை?

இவரே இதைச் சொல்வதால் இந்தக் குற்றச்சாட்டை, எதிர்க்கட்சிக்காரனின் வீண் கண்டனம் என்று கூறிவிட முடியாது. கரந்த் இன்றும் காங்கிரசிலே ஒரு முக்கியஸ்தர்.

அவர் கூறுகிறார், பகிரங்கமாக, இன்றைய காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருப்பதும் சரி, மாகாணங்களில் இருப்பதும் சரி, மகா மோசமாகி விட்டது என்று இப்படிப்பட்ட குற்றச்சாட்டை எப்படிப் பொறுத்துக் கொள்கிறார்கள், நம்மீது சீறும் காங்கிரஸ் நண்பர்கள்?

ஊழல் மலிந்திருப்பதாக, சுயநலம் தாண்டவமாடுவதாகக் கரந்த் கூறுகிறார் என்றால், இன்றைய காங்கிரஸ் ஆட்சியினால் எதிர்பார்த்த நலன் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல,கேடு நேரிட்டிருக்கிறது என்றுதானே பொருள்.

கரந்த் கூறுவது தவறு. வீண்பழி சுமத்து கிறார், பதவி பறி போனதால் அதுபோலப் பேசுகிறார் என்றால், உடனே ஏன், காங்கிரஸ் கமிட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது? ஏன் அச்சம்?
கந்த் மீது மட்டுமா, இதுபோலப் பச்சை யாகக் காங்கிரசின் ஆட்சி முறையைக் கண்டித்த யார் மீதுதான். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிந்தது? பல தலைவர்கள், காங்கிரஸ் ஆட்சி மீது சாட்டியிருக்கும் குற்றச்சாட்டுகளைப் பார்த்தால், மானநஷ்ட வழக்குத் தொடரக் கூடியதாகத் கூடத் தோன்றுகிறது.

சுயநலத்துக்காகச் சர்க்காரிடம் சலுகைகள் பெறுவதையே வேலையாக்கிக் கொண்டார்கள் காங்கிரசார் என்று கரந்த் போன்றவர்கள் கூறும் போது, காங்கிரஸ் ஆட்சியை நடத்தும் மந்திரி மார்களுக்கு, வெட்கம் பிறக்க வேண்டாமா? கரந்த் மீது மானநஷ்ட வழக்குத் தொடுக்க வேண்டும் என்று துடிக்காத காரணம் என்ன? வேறு கட்சிக்காரர் யாராவது இதுபோலக் கூறிவிட்டால் எவ்வளவு பதறுவார், சீறுவர், பாய்வர்! ஏன் இப்போது மௌனம்? கரந்திடம் கோபம் காட்டினால், அவர் ஊழல்களை விவரமாக அம்பலப்படுத்தி விடுவார் என்ற அச்சமா?

கிருபளானி, தாண்டன், கொண்டா வெங்கடப்பய்யா, கரந்த் இப்படி அடிக்கடி காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக, காங்கிரஸ் ஆட்சியில் ஊழலைக் கண்டித்துப் பேசியபடிதான் உள்ளனர். ஒருவர் மீதாவது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தைரியம் இல்லை ஆட்சியாளர்களுக்கு.

``இவ்விதமாகப் பழி சுமத்திப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். என்ன ஊழல், என்ன சுயநலம் என்பதை விளக்கமாக விவரமாகக் கூறக் கேட்போம்'' என்று கூடக் காங்கிரஸ் ஆட்சியினர் கேட்கவில்லை. ஏன், என்று நமது காங்கிரஸ் நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியின் ஊழலைக் காங்கிரசைச் சேர்ந்த முக்கியஸ்தர்களே கண் டித்துப் பச்சையாகப் பேசும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டிருக்கிறது.

நாம், கேட்க விரும்புகிறோம், இப்படி அடிக்கடி, காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களைக் கண்டித்துப் பேசும் கரந்துகளை, என்ன பலன். இதனால் என்று இவர்கள் கண்டனங்களைக் கேட்டு, ஏதாவது ஆட்சி புரிவோர் தங்களைத் திருத்திக் கொள்கிறார்களா! ஒரு விஷயத்தைக் கண்டிப்பது நிலைமையை கண்டிப்பது, என்றால் அந்தக் கண்டனத்தின் மூலம், நிலைமை சரிப்படுத்தப்பட வேண்டும், அப்போதுதான், கண்டனத்துக்குப் பலன் உண்டு! வெறும் வாய் வீச்சினால் கரந்துகள் காணப்போகும் பலன் என்ன?

காங்கிரஸ் ஆட்சியினால் விளையும் கேடுகளைக் கண்டு உண்மையிலேயே அவர் களின் மனம் பதறுமானால், அந்த ஊழல்களைப் போக்க வேண்டும் என்று அவர்கள் உள்ளம் துடிக்குமானால், ஆட்சியிலிருப்பவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விட்டுவிட்டு, பொது மக்களிடம் சென்று உண்மையை உரைத்து, இன்று ஊராள வந்திருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், மக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். எனவே, அவர்கள் நீக்கப்பட வேண்டும் என்று கூற வேண்டாமா? பொதுமக்களின் கருத்தைத் திரட்ட வேண்டாமா? அதுதானே, பொறுப்புள்ள வர்களின் போக்காக இருக்க முடியும்.

அழுகல் பழங்களை விற்பனை செய்யக் கூடாது- என்று அழுகல் பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள, கடையை மூட முயற்சிக்கா மலேயே ஊரெல்லாம் தண்டோரா போடுவதா?
ஜனநாயகக் கோட்பாட்டின்படி, ஆளும் வாய்ப்பைப் பெற்ற ஒரு கட்சி, பீடம் ஏறிய பிறகு, ஒழுங்காக ஆளத் தவறினால் ஊழல் மிகுந்த ஆட்சியை நிறுவினால், அந்தக் கட்சியிலே, ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல், ஆலோசனை கூறும் நிலையில் உள்ள கரந்துகள், கட்சிக் கூட்டங்களிலே, முதலில் தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்- அங்கு ஆதரவு திரட்டி ஆளவந்தார்களைத் திருத்தவோ, நீக்கவோ முற்பட வேண்டும். அம்முறையால் பலன் ஏற்பட வில்லையானால், அந்தக் கட்சியை விட்டே விலகி, நாட்டு மக்களிடம் உண்மையை எடுத்துக் கூறி, மக்களை அந்தக் கட்சியின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். அதுதான் பொறுப்புள்ள வர்களின் போக்கு.

இதையும் செய்வதில்லை, கரந்துகள்- கரந்துகள் இவ்வாறு கண்டிக்கும்போது ஆளவந்துள்ளவர்களும், இது அக்ரமம் என்று பதிலளித்து விட்டு, ரோஷத்தோடு கரந்துகளின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று எடுத்துக்காட்டுவதில்லை!

ஆளவந்துள்ளவர்களுக்கு ரோஷம் காணோம், அவர்களைக் கண்டித்துப் பேசும் கரந்துகளுக்குப் பொறுப்புணர்ச்சியைக் காணோம்.

இருசாராரும் ஒரே கட்சியிலேயே இன்றும் இருக்கிறார்கள்! எப்படி இருக்கிறது, குடும்ப வாழ்க்கையின் இலட்சணம்!

ஒரு கட்சியின் ஆட்சிப் போக்கு, சரியாக இல்லை. மக்களுக்கு நன்மை தருவதாக இல்லை. கேடு உண்டாக்குகிறது என்று அந்தக் கட்சியிலே உள்ள பிரமுகருக்குத் தோன்றினால் அவர் அந்தக் கட்சியிலே இருக்கலாமா? மற்ற இடங்களிலே அவ்விதம் இருக்கமாட்டார்கள். ஒரு கட்சியின் ஆட்சிமுறை கேடானதாக இருக்கிறதென்று தெரிந்ததும், அதிலேயே இருப்பதை, அரசியல் அறிவீனம் என்றுகூட அல்ல, அரசியல் அநீதி என்றும் எண்ணுவார்கள் அரசியல் ஒழுக்கமல்ல என்று கருதுவார்கள்.

இங்குதான், ஆட்சியாளர்களும் காங்கிரஸ் கட்சி, அவர்கள் பொது மக்களிடம் பேசும்போது, தமது ஆட்சிமுறையின் அற்புதமான பலன்களை பற்றி அளப்பர். அதே ஆட்சி முறையை அவலட்சணமானது என்று, கூறுவர் கரந்துகள். அவர்களும் காங்கிரஸ் கட்சியினர் என்றே தம்மைக் கூறிக் கொள்வர்!

பொதுமக்கள் ஒருநாள் காங்கிரஸ் கூட்டத் திலே, காங்கிரஸ் ஆட்சியினால் உண்டான நன்மைகளைப் பற்றிய பிரசங்கம் கேட்பர். (மந்திரிமார்கள் வருகிறபோது) மற்றோர்நாள், காங்கிரஸ் ஆட்சியிலே ஊழலும் சுயநலமும் தாண்டவமாடுவது பற்றிய பிரசங்கத்தைக் கேட்பர். (கரந்துகள் பேசும்போது இரண்டும் காங்கிரஸ் கூட்டந்தான்! இரு கூட்டங்களுக்கு, `வந்தே மாதரம்' இருக்கும், `ஜனகணமண' இருக்கும்! பரிதாபத்துக்குரிய பொது மக்கள் என்ன முடிவு காண்பது, இந்த நிலைமையைக் கண்டு!

ஏன், பொறுப்புணர்ச்சி கரந்துகளுக்கு இல்லை, ரோஷ உணர்ச்சி பதவி பெற்றுள்ளவர் களுக்கு இல்லை, இருவிதமான பேச்சு ஒரே கட்சியினரால் ஒரே கட்சியைப் பற்றிப் பேசப் படும்போது, ஏன், பொதுமக்களுக்கு மன எரிச்சல் உண்டாகவில்லை!

மற்ற நாடுகளிலே, கரந்துகள் பேசும்போது, பொதுமக்கள் ``ஆட்சியிலே ஊழல் இருக்கிறது என்கிறீரே, ஏன் அதைப் போக்கவில்லை. முயற்சிக்கவில்லையா? முடியவில்லையா? ஊழலைப் போக்க முடியாவிட்டால், ஏன் இன்னும் தாங்கள் அந்தக் கட்சியிலே இருக்கிறீர்? விலகாத காரணம் என்ன?'' என்று கேட்பர். அதுபோலவே ஆட்சியை நடத்த்துபவர்கள் பேசும்போது, ``ஆட்சி முறையிலே அநேக ஊழல்கள் இருப்பதாக ஆளும் கட்சியைச் சார்ந்த கரந்துகள் கண்டித்துப் பேசுகிறார்களே- கேவலமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார் களே, ஏன் அவைகளை மறுக்கவில்லை- முடியவில்லை- ஏன் கரந்துகளைக் கண்டிக்க வில்லை, - கண்டித்தால் அவர்கள் மேலும் பல உண்மைகளை அம்பலப்படுத்தி விடுவார்கள் என்ற பயமா? ஏன் அவர்களைக் கட்சியை விட்டு வெளியே துரத்தக்கூடாது, துரத்தினால் அவர்கள், புதிய கட்சி துவக்கிப் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுவிடுவார்கள் என்ற பயமா?'' என்றும் பொதுமக்கள் கேட்பர்.

இங்கோ, பொதுமக்களுக்கு அந்த அளவுக்கு அரசியல் பொறுப்புணர்ச்சி இன்னும் வளரவில்லை. காங்கிரஸ் ஆட்சி வந்து விட்டால் கவலையற்று வாழலாம், ஏனெனில் காங்கிர சாருக்கு, மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகள் என்ன, நாட்டு நலிவைப் போக்கும் திட்டம் என்ன என்பது தெரியும், எனவே அவர்கள் ஆட்சியிலே, அவைகளுக்கான வழிவகைகள் கண்டுபிடிக்கப்பட்டுக் காரியம் நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கை இப்போது நசித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியிலே மக்களுக்குச் சலிப்பு வளருகிறது. இவர்கள் வந்தும் நமக்கு நன்மை இன்னும் ஏற்படவில்லையே! என்ற கவலை, பொது மக்களிடம் வளர்ந்தபடி இருக்கிறது.

இங்கு சட்டசபைக்குச் செல்லக் கூடிய நோக்கமும், ஆட்சிப்பீடம் ஏறி, மக்களின் நல்வாழ்வுக்காக இன்னின்ன வகையான திட்டங் களை நிறைவேற்ற வேண்டும் என்ற வேலைத் திட்டமும் கொண்ட ஒரு அரசியல் கட்சி இருந்தால், காங்கிரஸ் ஆட்சியும் இவ்வளவு பொறுப்பற்ற முறையிலே போகாது. பொது மக்களும், நாம் என்ன செய்வது- நாம் நம்பி வந்த காங்கிரஸ் நம்மை நட்டாற்றில் விடுகிறது. என்று குமுறிக் கொண்டிருக்க வேண்டிய நிலை வராது.

``உன்னால் முடியாவிட்டால், சற்றே விலகி இரு, அதோ அந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தட்டும்'' என்று கூறுவர்.

அந்தநிலை இல்லாததால், நமது காங்கிரஸ் தலைவர், ``எது செய்தால் என்ன! யார் கேட்க முடியும்? சில, கரந்துகள் கண்டிக்கலாம்- கண்டித் தால் என்ன- அலட்சியப்படுத்தி விடுவோம்'' என்று கருதிவிட முடிகிறது.

கரந்துகள் தங்கள் கடமையை உணர வேண்டும்- ஆட்சி புரியும் கட்சி, நல்ல முறையிலே ஆட்சி செய்யவில்லை என்றால், திருத்த முனைய வேண்டும்- முடியாது என்று தெரிந்தால், வேறு கட்சி அமைத்துப் பொது மக்களுக்குப் பணியாற்ற வேண்டும், பொறுப்புணர்ச்சியுடன் இதைச் செய்யாமல், அவ்வப்போது இந்தக் கரந்துகள் ஆட்சியாளர் களைக் கண்டித்துப் பேசுவதால், உருவான பலன் ஏதும் விளையப் போவதில்லை.

எல்லா மக்களுமாகச் சேர்ந்து ஒரு நாட்டின் ஆட்சியை நடத்துவது முடியாத காரியம், அதற்காக, எவனோ ஒருவன் ஏதோ ஒரு காரணத்தைக் கூறிக்கொண்டு, மன்னன் என்ற பதவியும் பெற்றுத் தன் இஷ்டப்படி ஆளுவதும், மக்களுக்கு உகந்ததல்ல, எனவேதான், ஜனநாயக முறை வகுக்கப்பட்டது. மக்கள், தங்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து ஆட்சிக் காரியத்தை நடத்தும்படி அதிகாரம் கொடுத்து அனுப்பும் திட்டம் வகுக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கொடுக்கப்பட்ட அதிகாரத்தைத் தக்க விதத்திலும், நல்ல பலன் ஏற்படும்படியும் பயன்படுத்த வேண்டும்; இல்லையானால் அவர்கள், தங்களைத் தேர்ந்தெடுத்தனுப்பியவர் களுக்குத் துரோகம் செய்தவராவர். முடியாட்சி யின்போது, மன்னர்ர் எதேச்சாதிகாரமாக நடந்து கொள்வதால் ஏற்படும் கேட்டினைவிட குடியாட்சி முறையிலே, துரோகிகள் கிளம்புவதால் வரும் கேடு, கொடுமை மிகுந்ததாகும்.

கொடுங்கோல் கொண்ட மன்னனைப் பற்றி எண்ணும்போதாவது அவன் அரசன்- ஆண்ட வன் அவனை ஆளப் பிறப்பித்து விட்டான்- நாம் என்ன செய்வது, என்று ஒரு வகையிலே மனதைத் தேற்றிக் கொள்ள வழி உண்டு; குடியாட்சியின்போது, குடிலர்கள் கிளம்பினால், மக்களின் மனக்குமுறலுக்குச் சுலபத்திலே சாந்தி கிடைக்க வழி கிடையாது. நம்மைப் போன்றவன்- நம்மால் பதவியில் அமர்த்தப்பட்டவன்- நமக்கு ஊழியம் செய்வதாக வாக்குறுதி கூற அந்தப் பதவிக்குச் சென்றவன் அப்படிப்பட்டவன், நமக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து, நம்மை துச்சமென்று எண்ணி, தான் ஏதோ நம்மை விட உயர்ந்தவன் போல நடந்துகொள்கிறானே, படிக்கட்டு ஏறிவந்து பல்லைக்காட்டி, கைகூப்பி நின்று, ஓட்டு வாங்கினதை மறந்து விட்டானே, என்று எண்ணும்போது மக்களின் மனவேதனை அதிகமாகத்தான் இருக்கும்.

அதிலும், கரந்துகள், கண்டிக்கக் கேட்கும் போது, இந்த வேதனை மும்மடங்கு அதிகமாகத் தானே இருந்து தீரும்.

கரந்துகள், கண்டிப்பதோடு தமது கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார்கள்- மற்றப் பலர், அதைத்தான் சொல்வானேன், நாமாக அகப் பட்டுக் கொண்டு விழிப்பானேன் என்றும் இருந்து விடுகிறார்கள். பெரும்பாலான சட்டசபை அங்கத் தினர்கள், தேர்தலின் போதுதான் மக்களின் கண்முன் தெரிந்தார்கள். இப்போது, அவர்களின் தரிசனம் மிகமிகச் சிரமமானதாகி விட்டது.

எத்தனை எம்.எல்.ஏ.க்கள் தாம் வெற்றி பெற்ற தொகுதியிலே இந்த மூன்றாண்டுகளில், மக்களிடம் சென்று, ஓட் அளித்தவர்களைக் கண்டு, சட்டசபையிலே, தான் செய்த வேலைகள் இன்னின்னவை என்று கூறியிருக்கிறார்கள்? பலர், வாய் திறக்கவே இல்லை- வாய் திறந்த சிலரும் வழக்கமாகப் பாடிவந்த தேசியப் பஜனையைப் பாடி விட்டு அமருகிறார்களே தவிர சட்டசபையிலே தாங்கள் செய்த காரியம் இவையிவை, என்று எடுத்துக் கூறினதில்லை. பலர் சட்டசபைக்குச் செல்வதிலேயே அக்கறை காட்டுவதுமில்லை. போகிற பலரும் ஏதோ கடனுக்குச் செல்லும் கண்யவான்களாக இருக் கிறார்களே தவிர காரியமாற்றும் கருத்துள்ளவர் களாக இல்லை.

சட்டசபை நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்கள், என்று குறிப்பிட்ட சிலருடைய பெயர்களைத்தான் காண முடிகிறது- மற்றவர்கள், மௌனசாமிகளாக உள்ளனர்.

சட்டசபையிலே கூடப் பேசவேண்டாம். சட்டசபைக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறதே, அங்கு ஏதாவது, அவசியமான, அறிவுக்குப் பொருத்தமான ஆலோசனைகள், திட்டங்கள், ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறார்களா என்று பார்த்தால், மிக மிகப் பெரும்பாலோர், விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சிலர் தவிர, மற்றவர் கள், அங்கேயும், கண்மூடி மௌனியாகியே உள்ளனர். இதுவா, பொது மக்களின் பிரதிநிதி களின் பொறுப்புணர்ச்சி?

சட்டசபையிலே தூங்கலாமா, எந்த அளவிலும் முறையிலும் தூங்கலாம் என்பது பற்றிச் சட்டசபையிலே பேசும் அளவுக்கு சுறுசுறுப்பு அங்கு! இப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினோமே என்பதை எண்ணினால் வெட்கப்பட வேண்டாமா?

சட்டசபையின் நடவடிக்கையின் முறை யின்படி ஒரு அங்கத்தின. 60 கூட்டங்களுக்கு மேல், சட்டசபைக் கூட்டத்துக்கே போகாம லிருந்து விட்டால், அவரை நீக்கி விடலாம். சட்ட சபையில் அங்கம் வகிப்பது பொறுப்புடன் கூடியது என்பதை விளக்க ஏற்பட்டது இந்த விதி.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், என்பவர், இதுவரை சட்டசபையை எட்டிப் பார்க்கவே இல்லையாம்! சட்டசபை நடவடிக்கை கள் நடைபெற்ற இருநூறு கூட்டங்களுக்கு போகவில்லை. ஏன்? காரணம் கூறப்படவு மில்லை- கண்டுபிடிக்கப்படவுமில்லை! உடல் நலம் இல்லையோ அவருக்கு, என்று ஒரு மெம்பர் கேள்வி கேட்டதற்கு, சபைத் தலைவர் உடல் நலம் நன்றாகத்தான் இருக்கிறது- அவர் பல கிராமப் பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் கூடச் செய்து கொண்டு இருக்கிறாராம்- என்று பதிலளித்தார்.

பசும்பொன் தேவர், பொதுவாழ்க்கையிலே, ஒரு குறிப்பிட்ட செல்வாக்கான இடம் பெற்றவர்- காங்கிரஸ் கட்சியிலே தீவிரவாதி என்பார்கள்- நன்றாகப் பேசக்கூடியவர். அப்படிப்பட்டவர் இந்தச் சட்டசபை கூட்டத்தை, எட்டி என்று எண்ணினாரோ அல்லது அங்கு செல்வது வெட்டிவேலை, இருநூறு கூட்டங்கள்! அறுபது ஆனதும், அவரைக் கேட்டிருக்க வேண்டும் - விளக்கம் கூறச் செய்திருக்க வேண்டும்- நீக்கியிருக்க வேண்டும். அவ்விதம் ஏதும் செய்யவில்லை. இருநூறு கூட்டங்களுக்கு மேல் வராமலேயே அவர் இருந்திருக்கிறார். கேள்வி இல்லை, முறை இல்லை!

கடைசியாக, இப்போது அவரை நீக்கி விட்டனர்- அந்தத் தொகுதிக்குத் தேர்தலும் நடைபெற இருக்கிறது.

சட்டசபை நடவடிக்கையிலே எவ்வளவு பொறுப்புணர்ச்சி இருக்கிறது என்பதற்குச் சரியான எடுத்துக் காட்டல்லவா இது! பசும் பொன்னார் சட்டசபை வேலையில் துளியும் அக்கறை காட்டாமலிருந்தாரேயொழிய சட்ட சபை மெம்பர்களுக்குத் தரப்படும் சம்பளத்தை மட்டும், தவறாமல் பெற்றுக்கொண்டு வந்திருக் கிறார் என்று கூறுகிறார்கள். இது நியாயமா! ஏன் அவர் வாங்கினார்? எப்படி இவர்கள் கொடுத்தனர்?

சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள். சட்டசபைக்கும் வருவது காணோம். இது சரியல்லவே- என்று சர்க்கார் கூறியிருக்க வேண்டாமா? யாருக்கும் பொறுப் புணர்ச்சி இருந்ததாகவே தெரியக் காணோம். இப்படி இருக்கிறது இலட்சணம்.

சட்டசபைக்குப் போகாமலேயே சம் பளத்தைப் பெற்றுக்கொண்டீரே பசும் பொன் னாரே! சரியா இது? என்று அவரைக் கேட்டால், ஒருசமயம் அவர், ``சட்டசபைக்குப் போகிறவர் கள் மட்டும் அங்கு என்னப்பா சாதித்து விடுகிறார்கள். சம்பளம் பெற! அங்கு போய்ப் பலர், குறட்டை கிளம்பாதபடி தூங்குவதற்குப் பழகிக் கொள்கிறார்கள், இதற்கு அவர்களுக்குச் சம்பளம் தரும்போது, எனக்குக் கொடுத்தால் என்ன?'' என்று கேட்டார் போலும்!

அப்படிக் கேட்டாலும், நாம் அதை அடியோடு, தவறு என்று தள்ளிவிட முடியாது.

சட்டசபையிலே, பலதடவை (கோரம் இல்லை) போதுமான எண்ணிக்கை இல்லை என்று புகார் கிளம்புகிறது- தீர்மானங்களைக் குறித்து ஓட் எடுக்கப்படும்போது மெம்பர்கள் இருப்பதில்லை என்ற புகார் கிளம்புகிறது. இவ்விதமான நிலையிலா, சட்டசபை இருப்பது?

சட்டசபையிலே நிலைமை இப்படி! ஓட் டர்களிடம் செல்லுவதோ கிடையாது! ஆட்சி யாளர்களின் போக்குப் பொதுமக்களுக்கு ஊறு செய்கிறது என்று கண்டிக்கும்ம் கரந்துகளோ, பேசுவதோடு சரி! இந்நிலையில் இருக்கிறது, நாடாளும் இலட்சணம்! சட்டசபையிலே இடம் பெறத்தக்க முறையிலே ஒரு எதிர்க்கட்சி இருந்தால், இப்படியா இருக்கும்! இன்னேரம் சந்தி சிரித்திருக்குமே!
பொதுமக்கள், இப்படித் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் சட்டசபையினரை, என்ன செய்ய முடியும்? அடுத்த தேர்தல் வரையிலே, இவர்கள்தானே இருப்பார்கள்- இவர்களைப் பொதுமக்களால் இப்போது நீக்கவும் முடியாதே இவர்களை மிரட்டி வேலை வாங்க ஒரு எதிர்க்கட்சி இல்லையே, என்ன செய்வது என்று கேட்பார்கள் பலர்.

இதுபற்றி, காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உழைத்த உண்மை ஊழியர்கள் சிந்தித்து, சற்றுக் கடமையிலே கவலை கொண்டால், அவர் களைத் திருத்த முடியும், பொதுமக்களைத் திரட்ட வேண்டும் அதற்கு.

சட்டசபையிலே சென்று அமர்ந்து விட்டதாலேயே, அடுத்த தேர்தல் வரையிலே, அவர்களை யாரும் அசைக்கவே முடியாது என்று எண்ணத் தேவையில்லை. தேர்தல் தவிர, வேறு ஆயிரம் வழிகள் உண்டு. அவர்களைத் திருத்த பொதுமக்களின் நம்பிக்கையை அந்த மெம்பர்கள் இழந்துவிட்டனர் என்பதை அவர்கள் உணரும்படி செய்ய முடியும்- கண்டனக் கூட்டங்கள் மூலம்- மகஜர்கள் மூலம்- பேட்டி கண்டு பேசுவதன் மூலம்.

உமது கடமையைச் செய்யத் தவறி விட்டீர்- உமக்குச் சட்டசபை வேலையிலே அக்கறையும் காணோம், திறமை இருப்பதாகவும் தெரியவில்லை- நமது தொகுதியின் தேவை களைப் பற்றி, இதுவரை சட்டசபையிலே, பேசக்கூட இல்லை- இப்படிப்பட்ட உம்மை, எமது பிரதிநிதியாகக் கொண்டு, நாங்கள் என்ன பலனை அடைய முடியும்? ஆகவே தயவு செய்து, ராஜிநாமாச் செய்து விடுங்கள்- என்று விளக்கிட மக்கள் முன் வரவேண்டும்.

அவ்வப்போது நாட்டிலே பல பிரச்சினை கள் தோன்றி மக்களை அல்லற்படுத்துகின்றன- சட்டசபை மெம்பர்கள் இவைகளை எடுத்துக் காட்டிப் பரிகாரம் தேடக்கடமைப் பட்டவர்கள். அதற்காகவே அவர்களை அனுப்பியிருக் கிறோம். ஆனால் அவர்கள் இதுவரை அவ்விதம் செய்யவில்லை.

ஜெமீன் ஒழிப்புச் சட்டத்திலே, இனாம் களையும் சேர்த்திருந்தபொழுது, வைத்தியநாத ஐயரும், வரதாச்சாரியாரும், எவ்வளவு வாதாடி னார்கள். வீரத்தோடு பேசினார்கள். மந்திரிகளை மிரட்டினார்கள். சர்க்காருக்கே சாபம் தருபவர்கள் போல் ஆவேசம் ஆடினார்கள். அவர்கள் இனாம்தார்களின் பிரதிநிதிகளா? இல்லை! அவர்களின் தொகுதி அப்படிப்பட்டதா? அதுவும் இல்லை! எனினும், இனாம்தார்களிலே மிக மிக பெரும்பாலோர், பார்ப்பனர், என்றதால், இனாம் தார்களுக்கு ஆபத்து என்ற உடனே, இவர்கள் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டனர்?

எத்தனையோ தொகுதிகளிலே இருந்து போயிருக்கிறார்களே `புண்யவான்கள்' அவர்கள். இந்த அக்கறையிலே ஆயிரத்திலோர் பாகம் தமது தொகுதி பற்றிக் காட்டினரா?

பாலமில்லா ஆறுகள்- தேக்கமில்லாத காட்டு வெள்ளங்கள் மழையே காணாத கரம்புகள், உள்ள தொகுதிகளின் பிபிரதிநிதிகள் போயிருக்கிறார்கள்- பேசுகிறார்களா அவை பற்றி? கிடையாது. பெரும்பாலான மக்கள் நெசவாளர்களாகவே உள்ள, தொகுதிகளிலிருந்து போயிருக்கும் பிரதிநிதிகள், நெசவாளரின் நிலை மிக மிகக் கேவலமானதாக வருகிறதே, இதுபற்றிப் பேசினரா? கிடையாது! இப்படிப் பட்டவர்களை, ஏன், இன்னமும் பொது மக்கள், சுமந்து கொண்டிருக்க வேண்டும்- எடுத்துச் சொல்வதுதானே, உம்மை நாங்கள் இனியும் எங்கள் பிரதிநிதியாகக் கொள்ளமாட்டோம் என்று முடியாதா? வேறு கட்சிக்காரர் முன்னின்று செய்ய வேண்டாம்- அந்தப் பிரதிநிதியின் கட்சியினரிலே, நேர்மையில் நாட்டமுடைய வர்கள் செய்யலாமல்லவா? அந்த மெம்பர், சட்டசபைக் கூட்டத்துக்குப் புறப்படும்போது பொதுமக்கள், ஒரு குறிப்பிட்ட அளவு, ஊர்வலமாக அவர் இல்லம் சென்று, தங்கள் குறைகளைக் கூறி இவை பற்றிச் சட்டசபையிலே எடுத்துச் சொல்லிப் பரிகாரம் பெற்று வாரும் என்று வலியுறுத்தி அனுப்பலாமே! சட்டத்துக்கு மாறானதுமல்ல- கட்சிக்கு விரோதமாகாது- ஜனநாயகமும் பிழைக்குமே- செய்தனரா?

எப்படித்தான் தெரிவது, சட்டசபை மெம்பர் களுக்கு, தங்கள் கடமையைச் சரிவரச் செய்யா விட்டால் ஓட் அளித்தவர்கள், கேள்வி கேட்பார்கள் என்பது.

30-ம் நெம்பர் நூல் வேண்டும்! 3000 புதுத் தறிக்கு அனுமதி வேண்டும்! கூலி நிர்ணயம் வேண்டும்! பாலாற்றுக்குப் பாலம் வேண்டும்! பஞ்ச நிவாரணக்கடை வேண்டும்! கைலி ஏற்றுமதி அனுமதி வேண்டும்! கையிருப்புச் சரக்கின் மேல் கடன் தர வேண்டும்! புழுத்தலில்லாத அரிசி வேண்டும்! என்று இப்படி அவ்வப்போது, ஏற்படும் குறைபாடுகளைத் தேட, மேலே! உள்ள கோரிக்கைகளை `அட்டைகளில்' பொறித்துக் கொண்டு, அமைதியான முறையிலே ஒரு ஊர்வலமாகச் சென்று, அந்தந்த வட்டாரத்து எம்.எல்.ஏ.க்களை, மக்கள் காண்பது என்று முறை இருந்தால் இந்த எம்.எல்.ஏ.க்கள் இவ்வளவு `ஏனோதானோ' என்று இருந்துவிட முடியுமா? இந்தக் காரியத்தை கம்யூனிஸ்டுகள் முன் நின்று நடத்தினால் அவர்களை ரஷியாவின் கூலிகள் என்று கூறிக் கண்டித்து விடுவது- திராவிடர் கழகம் நடத்தினால், பார்ப்பனத் துவேஷிகள் என்று பழி சுமத்தி விடுவது என்று `வித்தை' தெரிந்து வைத்துக் கொண்டார்கள். காங்கிரசிலே உள்ள சட்டசபை மெம்பர்கள் தவிர மற்றவர்கள் இதைச் செய்யலாமே- பழியும் இராது- பலனும் ஏற்படுமே! செய்தனரா? செய்வாரா?

பொது மக்களின், நம்பிக்கைக்குப் பாத்திரராக இருந்தாக வேண்டும் என்ற பயமும், பொறுப்புணர்ச்சியும், சட்டசபை மெம்பர்களுக்கு ஏற்பட்டாக வேண்டும்.

ராஜபாளையம் தொகுதிக்கு மெம்பரும், முன்னாள் மந்திரியாக இருந்தவருமாகிய குமாரசாமி இராஜா என்பவர், திடீரென்று ஓர் நாள், ``நான் சட்டசபை மெம்பர் பதவியை விட்டு விடுகிறேன்- ஏனெனில் நான் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டேன்'' என்று பத்திரி கைகளிலே வெளியிட்டார். உடனே அவருடைய நண்பர்கள் சிலர், ``ராஜா! ராஜா! இப்படியும் செய்யலாமா?'' என்று கேட்டுக் கொண்டனர்- உடனே அவர், தமது ராஜிநாமாவை வாபஸ் வாங்கிக் கொண்டார்- இப்போது அவர் சட்டசபை மெம்பராக இருக்கிறார்.

பொதுமக்களின் உரிமையை எவ்வளவு கேலிக் கூத்தாக்குகிறார்கள் என்பதைப் பாருங்கள்!

``நான் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டேன்'' என்று குமாரசாமி ராஜா, கூறினாரோ, அவர் மீண்டும் சட்டசபை மெம்பராக இருக்க வேண்டுமானால், பொது ஜன நம்பிக்கையைப் பெற வேண்டாமா? பெற்றாரா? பெற முயற்சித்தாரா? இல்லை! நண்பர்கள் கேட்டுக் கொண்டார்களாம். உடனே அவரும் சரி, என்று, ராஜிநாமாவை வாபஸ் வாங்கிக் கொண்டாராம்! இதுவா, பொறுப்புணர்ச்சி!

பொதுமக்களின் நம்பிக்கை, இந்தச் சில நண்பர்களின் வேண்டுகோளிலேயா புதைந்திருக் கிறது! குமாரசாமி ராஜா, குணவான்- அவரே இப்படி நடந்து கொள்கிறார் என்றால், கெஞ்சிக் கூத்தாடி, காங்கிரஸ் கமிட்டியின் தயவு பெற்று, சட்டசபை மெம்பரானவர்கள் பலர் இருக்கிறார் களே, அவர்களின் போக்கைக் கூறவா வேண்டும்!

(திராவிட நாடு - 7.11.1948)