அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கடமையைச் செய்யக் கலங்காதீர்

நமது கருத்து

நமது மாகாண சர்க்காரில் 20 வருடகால அமுலில் இருந்து வந்த கம்யூனல் ஜீ.ஓ. ஜொலிக்கும் மணிகளை நமக்கு அளித்தது. திராவிட மக்கள், சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கிடைத்தால் எவரையும் மிஞ்சிவிடுவோம் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார்கள். இதைப் பார்த்தே, “சதிகார வர்க்கத்தினர்” வெகுகாலமாக திட்டமிட்டு, ஹைகோர் வரை சென்று வழக்காடி வெற்றியும் பெற்றுவிட்டனர். உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்; சேலத்தில் பிராமண மாநாடு கூடிய காலத்திலேயே, கம்யூனல் ஜி.ஓ.வை ஒழிக்க அவர்கள் திட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அதன்படியே இன்று இரு பார்ப்பன மாணவர்களைத் தூண்டிவிட்டு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரும் சீனிவாசய்யங்காரும் வழக்கில் வாதாடியிருக்கிறார்கள்.

கம்யூனல் ஜி.ஓ.பிரச்சினை மீது மாணவர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளுவதாக மந்திரி கோபால்ரெட்டி சொல்லுகிறார். கல்விமந்திரி மாதவமேனமோ மாணவர்களின் கடமை படிப்பு என்கிறார்.

திராவிட இயக்கத்தினர் வசமாகிவிடாதீர் என்று வெளிப்படையாகக் கூற மந்திரி விரும்பவில்லையோ அல்லது தயக்கமோ, “செந்நிறம் பூசப்பட்ட கரும்பறவைகளும், சம்மட்டி கத்தி அடையாளம் பொறிக்கப்பட்ட பறவைகளும் உங்களைக் கொத்திக்கொண்டு போய்விடும்” என்று எச்சரித்து, அந்தப் பறவைகளிடம் மாணவர்கள் அகப்படக்கூடாதென்று வள்ளி புள்ளினங்களை விரட்டப் பாடினாளாமே ‘ஆலோலம், ஆலோலம்’ என்று அதுபோலக் கூவியிருக்கிறார். கூவுதல் பலனளிக்காது பறவைகளும் ஓடிவிடாது! வேண்டுமானால் முருகன் வந்து முளைத்ததுபோலப் புதுப் பிரச்சினை வேண்டுமானால் வந்து சேரும்!!

மந்திரி மாதவ மேனனுக்கு இன்னொன்றும் கூற விரும்புகிறேன். இந்தப் பறவைகளை கூண்டில் அடைக்கும்வரை கொட்டமடிக்கும்! சிறையில் அடைத்து வைத்து பின் வெளி வந்தாலும் அவை இரு மடங்கு தெம்புடன் ஆர்ப்பரித்து கொட்டமடிக்கும் அடக்கப் போதுமான துணிச்சலோ அல்லது சிறைச்சாலை வசதிகளோ உங்களுக்கில்லை. சுட்டுக்கொன்றே ஒழித்து விடுவோம் என்பதற்கு துப்பாக்கிகளும் இல்லை! ஆகவே, வீணாசையோ வெட்டிப் பேச்சோ வேண்டாம்; விவேகம் பிறக்கட்டும்.

பிராமண சமூகத்துக்கு ஹைகோர்ட் தீர்ப்புமூலமாக அல்லாடியும் சீனிவாசய்யங்காரும் தற்போதைக்கு உதவியிருக்கிறார்கள். எனினும், எதிர் காலத்தில் அவர்களது இந்த சேவை பார்ப்பனீயத்தின் மீது விரோதம் மூட்டிவிட இப்போதே நிலத்தை உழுதுவிதை தூவப்பட்டதாக இருக்கிறது.

ரோம், கிரேக்க நாட்டு சரித்திரங்களைப் படிக்கிறோம் சமுதாய மக்கள் கொந்தளித்துப் புரட்சி செய்து சர்க்கரையே மாற்றியிருக்கிறார்கள். நம் நாட்டில் அன்பு ஆட்சி செய்யவும் காலம் பயங்கரமாகாதிருக்கவுமே விரும்புகிறோம்.

உண்மையாக நாணயமும் அவர்கள் நலனில் அக்கறையுமிருந்தால் சர்க்கார் நடவடிக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லவேண்டும். சுப்ரீம் கோர்ட்டிலும் ஒருகால வழக்குச் சாதகம் கிடைக்கவில்லையானால், இந்த நிலைமை காரணமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே திருத்துவோம்.

பண்டித நேரு, ராஜேந்தி பிரசாத் முதலிய தலைவர்களையும் நம் மந்திரிகள் நாடிக் கேட்கவேண்டும் அவர்களிடமும்
“இல்லை, முடியாது” என்று பதில் கிடைத்துவிடுமாயின், மந்திரிகள் “பதவி சிறிது மானம் பெரிது” என்று உடனே ராஜினாமா செய்துவிட்டு இதே வேண்டுதலுக்கு தேர்தலில் நிற்கவேண்டும். இப்போதே வேண்டுமானாலும் அவர்களுக்குறுதி கூறுகிறேன். கம்யூனல் ஜி.ஓ. பிரச்சினை மீது அவர்கள் ராஜினாமா செய்து தேர்தலுக்கு நிற்பார்களானால், திராவிட இயக்கத்தின் போரால் சொல்லுகிறேன் நாங்கள் ஒருவரையும் போட்டியாக நிறுத்திவைப்பதில்லை!

கல்வித் துறையில் தகுதி என்பது கபோதித்தனமாகும். மார்க்கு பெற மாணவர்களும் பெற்றோர்களும் பரீட்சை முடிவுற்றதும் அலைந்து திரிந்து செய்யும் வேலை தெரியாதா? சி.ஐ.டி.கள் உலாவுவதும் அவர்களது உறவினர்கள் பரிட்சைத் தாள்களைத் திருத்துவோரின் இடம் தெரிவிப்பதும் அறிந்ததுதானே! அப்படிப்பட்ட பித்தலாட்ட மார்க்குகள் தகுதி திறமையை நிர்ணயிப்பது எப்படி? வினாத்தாள் லட்சணம் சொல்ல வேண்டியதில்லை. தாஜ்மகாலின் அகல நீளம், கங்கை நதியின் ழம் முதலிவைகள் கேட்கப் படுகின்றன. தகுதியும் திறமையும் மார்க்குகளினால் நிர்ணயிக்கப்படுகிறதெனில் ஜி.ஓ.பிரகாரம் பல பார்ப்பனர்களல்லாதார் எஞ்சினீயர்களாக இருக்கிறார்களே, அவர்கள் நிர்மாணித்த பாலங்கள் இடிந்து போயினவா? பார்ப்பனரல்லாத டாக்டர்கள் பலர் கொடுக்கும் இஞ்செக்ஷன் நோயாளியின் உடலுக்குள் பலனைச் செலுத்தவில்லையா? அதிக மார்க்குகள் வாங்கிய குமாஸ்தாவுக்கு மார்க்குகளால் ஏற்பட்ட பயன் என்ன? மார்க்குகளா தகுதித் திறமையை நிர்ணயிக்கும்? சந்தர்ப்பம் கிடைத்தால் திராவிடர்கள் எந்த அளவுக்கு தகுதி திறமையைப் பெறுவார்கள் என்பது நிச்சயம். நடுநாயகமாக வரத்தகுதி திறமை உடையவர்கள் நம்மில் இல்லையா? ஆர்.கே. சண்முகம் இருக்கிறார். நிதி பொருளாதாரத் துறையில் மகா நிபுணர், அவருடன் போட்டியிட யாரால் முடியும்? ஆனால் நம் மந்திரிகளோ எதற்கு தகுதி திறமை கொண்டிருக்கிறார்களோ அந்த வேலையில் அவர்களில்லை. நிறைய கல்வித் தகுதியம்சம் இல்லாதவர் கல்வி மந்திரி, பணத்தைச் செலவிடவே தெரியும் சீமான் வீட்டுப்பிள்ளை நிதிமந்திரி எங்கே தகுதி திறமை?

உதாரணமாக ரெயில்வே இலாகாவில் உதவி மந்திரியாக இருக்கும் சந்தானமய்யங்கார் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர், ரெயில்வே இலாகாவில் தன் திறமையைக் காட்டாமல் ஆஸ்பத்திரிக்கு நிறைய வேலை கொடுத்து அங்கே தன் திறமையைக் காட்டுகிறார்! அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் தான் யார்? தேசபக்தர்களுக்கு, குலசேகர பட்டினம் வழக்கில் தூக்குத்தண்டனை வரக் காரணமாயிருந்தவர்! கோபாலசாமி அய்யங்கார் யார்? காஷ்மீர் பிரச்சினை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபைவரை இந்தியா சார்பாக அனுப்பப்பட்டாரே, காஷ்மீர் சிங்கமெனப் போற்றப்படும் ஷேக் அப்துல்லாவை சிறையிலிட்டவர். ஆக இவர்களுடைய தகுதி திறமை எல்லாம் தேசியப் போர்வையின் பேரால் இருக்கிறதே அல்லாமல், வேறில்லை.

அல்லாடியும் சீனிவாசய்யங்காரும் தகுதி திறமை என்கிறார்களே, உலக நாடுகளில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடக்குவதாகவும் நசுக்குவதாகவும் குறைகூறிக் கொள்ளுவர். ஆனால் இந்த நாட்டின் விசித்திரம், சிறு பான்மையினர் பெரும்பான்மையினரை அடக்கி நசுக்கியாளப் பார்க்கிறார்கள்.

வரி கொடுப்பதன் மூலமாக நாட்டின் நிதியைப்பெருக்கியும், போர் கலவரக் காலங்களில் படைகளில் சேர்ந்து உயிரைத் துரும்பென மதித்து சமாதானத்தைக் காக்கிற பார்ப்பனரல்லாத மக்கள் 97 சதவிகிதத்தினருக்கு நீதிக்கட்சித் தலைவர்கள் பெற்றுத் தந்தத் தீர்ப்பு வகுப்புவாரிப் பிரதிநித்துவம்.

சமத்துவம் நீதி இவை இந்திய அரசியமைப்பில் அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளிற் சில, ஆனால் சமத்துவம் என்பதற்கு அரசிலமைப்பு அகராதியில் என்ன விளக்கம் தரப்பட்டிருக்கிறது?

சமீபத்தில் நமது பிரதம மந்திரி பண்டித நேரு காசி சர்வகலாசாலையில் பேசியிருப்பதை நீங்கள் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். “சமத்துவம் என்றால் அனைவருக்கும் சமமாக ஒன்றை வழங்குவது என்று அர்த்தமல்ல; குறைவாக இருப்பவர்களை மேலே கொண்டு வருவதும் அதற்கான சந்தர்ப்பங்களை அளிப்பதும் தான் என்று அவர் கூறியிருக்கிறார்.

இது ஒரு துணைக்கண்டம் பலவகை இனத்தாருக்கும் ஒரே அரசியலமைப்பு செய்யப்பட்டிருப்பதே, இந்தியன் என்ற கற்பனை மீது சட்டம் வகுப்பட்டிருப்பதே, ஜனநாயகத்துக்கு குழி தோண்டியதாகும். தமிழர், ஆந்திரர், வங்காளியர், பஞ்சாபி, மராட்டியர், முஸ்லிம்கள் என்று இந்த உபகண்டத்தவர் கூறிக்கொள்ளுகிறார்களே அல்லாமல் இந்தியன் என்று யாரும் சொல்லிக் கொள்ளுவதில்லை வீண் வழக்காட வேண்டுமானால் நமக்காக இப்போது சிலர் தம்மை இந்தியர் என்று கூறலாம். ஆனால் உண்மை அது அல்ல என்பது தெளிவு. இந்த விசித்திரமான நிலைமை உலகிலே வேறெந்த நாட்டிலாவது உண்டா என்று காங்கிரஸ்காரர்களே பதில் கூறட்டும்.

திராவிட இயக்கத்தினருக்கு குறிப்பாக இன்றைய சென்னை மந்திரிகளுக்கு இது ஒரு சோதனை காலம். ஹைகோர்ட்டு அவர்கள் முகத்தில் பூசிவிட்ட கரியைத் துடைக்க ஒன்று அவர்கள் கருப்புத்துணியின் உதவியை நாடவேண்டும். அல்லது கரிபூசிய முகத்துடன் அல்லாடியும் சீனிவாசய்யங்காரும் அச்சாணியாக இருந்து விதையைத் தூவிவிட்டார்கள். சமுதாயக் கிளர்ச்சியும் வகுப்புத் துவேஷமும் வளராதிருக்க, கம்யூனல் ஜி.ஓ.நம் மாகாணத்துக்குப் பெரிதும் தேவை.

பணக்காரனைப் பார்த்து ஏழை உறுமுகிறான். முதலாளியைக் கண்டு பாட்டாளி வேதனைப்படுகிறான்; காரிலே செல்லுபவனைக் கண்டு பாதசாரி மனங்குன்றிப் போகிறான். மாடி வீட்டில் வாழுபவனைப் பார்த்து குடிசையில் இருப்போன் மனம் புழுங்குகிறான். சமுதாயத்தில் உயர்வு தாழ்வு, வளமை வறுமை இருக்கும்வரை இந்த எண்ணங்கள் ஏற்படுவது இயல்பு. ஒருசாதி எல்லாத் துறைகளிலும் இருப்பதைப் பார்த்தும், பேதம் நீங்கிவிட்டது என்று எப்படிக் கூறமுடியும். பாரதி பாடல்களை உரக்கப் பாடிவிட்ட அளவில் பேதங்கள் போக்கப்பட்டு விடுமா? பொறாமை அடங்கிவிடுமா, துவேஷம் மாய்ந்து விடுமா?”

(திராவிடநாடு-13.8.90)