அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கடவுள், சிவன் - ஒருவிளக்கம்

இன்றைய மதப்புலவர்களால் தங்கள் மதத்தின் தலைவனாக வைத்துப் பேசப்படும் ‘கடவுள்’ என்ற சொல்லுக்கு அவர்கள் விரிக்கும் பொருள் வேடிக்கையாகவே உள்ளது. கடவுள் என்ற சொல்லுக்கும், அவர்கள் அதற்குக் கூறும் பொருளுக்கும் உள்ள வேறுபாடு, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டை விடமிகப் பெரியதாகும். அதனை இப்போது விளக்கிக் காட்டுவது இன்றியமையாததாக இருக்கிறது. காலமாறுதல், இத்தகைய உண்மைகளை அறிய வேண்டுமென்ற ஆவர்த்தை உண்டாக்கிவிட்டது.

கடவுள் என்ற சொல்லுக்கு, எல்லாவற்றையும் கடந்து நிற்கும் ஒரு மெய்ப்பொருள் அல்லது மெய்யுணர்வென்பதே பொருளாகும். இத்தகைய சிறந்த கருத்தமைந்த கடவுள் என்ற சொல், தமிழைத் தவிர வேறெம்மொழியிலும் அமையவில்லை. வேறுமொழியாளர் எல்லாரும் இம் மெய்யுணர்வைக் குறிக்கும் சொல்லுக்கு வழங்கிவரும் பெயர்கள், அப்பொருளைக் குறியாது வேறுவகையில் பொருள் தந்து நிற்கின்றன. அவை யெல்லாம் தனிப்பட்ட ஒருவனையோ - ஒருத்தியையோ - ஒன்றையோ குறிப்பிட்டு நிற்கின்றனவே யன்றித், தமிழிற் காணப்படுவது போல மக்கள் அனைவர்க்கும் பொதுவான மெய்யுணர்வைக் குறித்து நிற்பனவாயில்லை. எடுத்துக் காட்டாகச், சைவ மதத்தையும் அதன் தலைவனான சிவனையும் கவனிப்போம். இந்த மதம் ‘இருக்கு’ முதலான வேதங்களில் காணப்படுவது - சைவமத ஆசிரியர்களான சம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரால் புதுப்பிக்கப்பட்டது. ‘திருக்கயிலாய’ பரம்பரைத் திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தர்மபுரி முதலான மடங்களின் தம்பிரான்மாரால் பாதுகாக்கப் படுவது. இச்சைவ சமயத்துக்குத் தலைவனாகப் பேசப்படும் ‘சிவன்’ என்ற சொல், சிவப்பு நிறமுடைய ஒருவனை அல்லது செந்நிறமான நெருப்பைக் குறித்துச், செந்நிறமுள்ள ஒருவன் அல்லது ஒன்றன் பெயராகப் பொருள் தந்து நிற்கின்றதேயன்றிக், கடவுள் என்ற சொல்லுக்கு அமைந்திருக்கும் மெய்ப்பொருள் அல்லது மெய்யுணர்வு என்ற பொருளில் அது அமையவில்லை.
இனிச், ‘சிவன்’ என்ற சொல்லுக்குச் செம்பொருள் அதாவது செம்மையான பொருளெனக் கொண்டு மயங்கவாரும் உண்டு. அவருரையும் போலியென்பதையும், வலிந்து கொள்ளும் பொருள் என்பதையும் விளக்குவாம். திருவள்ளுவர் மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் கூறியுள்ள,

“பிறப்பீனும் பேதைமை நீங்கிச்
சிறப்பீனும், செம்பொருள் காண்பதறிவு”
என்ற இக்குறள் வெண்பாவில்வரும் ‘செம்பொருள்’ என்ற சொல்லைச் சிவனுக்கு ஏற்றி, அவனைச் செம்மையான பொருளில் வைத்து வழங்குவர், ஆனால் திருவள்ளுவர் கூறிய செம்பொருள் என்பது சிவனைக்குறித்துச் சொல்லப்பட்ட தன்று. பிறப்பினால் உண்டாகும் அறியாமையினின்றும் நீங்கிச், சிறப்பைத் தருகின்ற செவ்விய பொருளை அதாவது பகுத்தறிவைப் பெற்று, அதன்படி நடப்பதே அறிவு எனப்படும் என்பதே இக்குறளிற் கூறப்படும் உண்மையாகும். ஒருவன் பிறக்கும்போது அறியாமையோடு பிறக்கின்றான்; பின்னர் அவனுக்குப் படிப்படியாக அறிவு உண்டாகின்றது. அதன் பின்னர், தான் அறிந்தவற்றை உணரும் பகுத்தறிவு உண்டாகின்றது. இப்பகுத்தறிவானது அறிவுக்கறிவாய் நின்ற அவனை நல்வழியிற் செலுத்துகின்றது. ஆகையால் ஒருவனுடைய பொது அறிவுக்குச் சிறப்புத்தந்து, அவனை நல்வழியிற் செல்லும்படி செய்வதாகிய பகுத்தறிவின்படி நடப்பதே அறிவெனப்படும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த உண்மைப் பொருளை அறியாதவர்கள், தங்கள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்பப் பொருள் கொண்டு மயங்குவர் - தாம் கூறுவதே சரியெனவும் வாதிடுவர் - உண்மையை உணர்த்தினாலும் ஒப்புக்கொள்ள ஒருப்படார்.

அன்றியும், ‘சிவன்’ என்ற சைவசமயக் கடவுளøக் குறிக்கும் சொல்லானது, ‘கந்தன்’, ‘இராமன்’ என்ற சொற்களைப்போல ஒரு ஆண்பாலைக் குறித்து நிற்கின்றதேயன்றிக், ‘கடவுள்’ என்ற சொல்லைப் போல ஆண் பெண் என்ற இருபாலையும் குறித்து நின்று, அவர்களுக்குப் பொதுவாக அமைந்துள்ள மெய்யுணர்வை விளக்கும் ஒரு பொதுச் சொல்லாகவும் அது அமையவில்லை. இவ்வாறே மெய்யுணர்வைக் குறிக்கும் வேறு மொழியாளர் சொற்களும் அதனதன் கருத்தில் பாறுபட்டு நிற்பதைக் காணலாம்.

இனிச், சிவன் என்ற சொல் ஒரு கடவுளைக் குறித்த பெயரல்ல என்பதற்கு இன்னுமொரு மறுக்கமுடியாத சான்று காட்டுகின்றோம். அதாவது, பண்டைக்காலத் தமிழ் மக்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்து, உலகுக்குப் பயன்படும் நல்ல சாரியங்களைச் செய்யவேண்டுமென்ற உயர்ந்த பண்பினைப் பெற்றிருந்தனரென்றும், அங்ஙனம் உயிர்வாழ்வதற்கு அவர்கள் பல உடற்பயிற்சிமுறைகளைக் கையாண்டு வந்தனரென்றும் பண்டைய தமிழ்ச் சான்றோரின் வரலாறுகளால் அறியக் கிடக்கின்றது. அங்ஙனம் அவர்கள் கையாண்ட உடற்பயிற்சி முறைகளில் வளிநிலை (பிராணாயாமம்) என்பது ஒன்றாகும். அதாவது உள்மூச்சு, வெளிமூச்சு ஒரு மடங்கும், வெளிமூச்சு ஒன்றரை மடங்குமாகும், எனவே உள்மூச்சிலும் பார்க்க வெளிமூச்சு அதிகம் செல்வரவதால் ஒருவனுடைய வாழ்நாட்களின் அளவும் குறைந்து போகின்றது. ஆகையால், இவ்விரு மூச்சுக்களையும் கூடுதல் குறைதல் இன்றிச் சமமாக்கி விட்டால் வாழ்நாள் நீடிக்கும் என்பதைப் பண்டைத் தமிழ் மக்கள் அறிந்திருந்தனர். அவர்கள், தங்களுடைய அறிவை, இன்றுள்ள சிலரைப்போல் தவறான வழியில் செலுத்தித் தடுமாறாமல், ஒழுங்கான முறையில் பயன்படுத்திப் பயன் காணும் பண்பினைப் பெற்றிருந்தனர் என்பதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

இனி, அவர்கள், ‘வாழ்வாவது மாயம் - இது மண்ணாவது திண்ணம்’ என்ற மத மயக்கத்துக்கு ஆளாகாமல் வாழ்வாவது மானம் - இது மண்ணாவது பொய் என்ற சிறந்த நோக்கத்தோடு இருந்து தங்கள் வாழ்க்கையை நடத்தினர். எனவேதான் அவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதற்காகக் கையாளப்பட்ட வளிநிலைப் பயிற்சிக்கு இரு மூச்சுக்களையும் சமப்படுத்தும் முறையில் ‘சி,வ’ என்னும் இரண்டு எழுத்துக்களையும் கருவியாக வைத்து ஒலித்துக்கொள்ளும் படியான முறையினைக் கண்டுபிடித்தார்கள்.

இயல்பாகவே குறுகியும் நீண்டுமுள்ள உள்மூச்சு வெளி மூச்சுக்கள், குறிலும், நெடிலுமாகவுள்ள ‘சி-வா’ என்னும் இரண்டு எழுத்துச் சொல் போன்றனவென்று, இந்தச் ‘சி-வா’ என்னும் சொல்லிலுள்ள கடையெழுத்தான் ‘வா’ என்னும் நெடிலை ‘வ’ என்று குறிலாக மாற்றிச் “சிவ” என ஒலித்தால், இருவகை மூச்சுக்களும் சமப்பட்டுவிடுமென்றும், அவ்வாறு இருவகை மூச்சுக்களையும் சமப்படுத்தி ஒலிப்பதால் உடல் உரமும் ஆயுள் நீடிப்பும் பேணப்படும் என்றும் அறிந்த முன்னோர், அங்ஙனம் செய்து அதனால் தமக்கும் பிறர்க்கும் பயனுடையராய் வாழ்ந்தனர்.
இச்சிறந்த முறையை முதன்முதல் கண்டுபிடித்தவர், தலைச்சங்கத்திற்குத் தலைவனாய் இருந்த ஒரு தமிழ்ப் புலவர் என்பதும், அவர் வளிநிலைப் பயற்சி (பிராணாயமம்) செய்யும் போதெல்லாம் ‘சி-வ’ என்னும் இரண்டு எழுத்துக்களையும் உச்சரித்துக் கொண்டிருந்த காரணத்தாலேயே அவர் ‘சிவன்’ என அழைக்கப்பட்டார் என்பது நன்கு அறியக்கிடக்கின்றது. சடை வைத்திருப்பவரைச் சடைச்சாமி என்றும்,‘ஓம்’ என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பவரை ஓம்சாமி என்றும், ‘ஓம்’ என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பவரை ஓர்சாமி என்றும், கண்ணாடி போட்டிருப்பவரைக் கண்ணாடிக்காரர் என்றும் மக்கள் அழைப்பதுபோலவே, ‘சிவ, சிவ’ என்று உச்சரித்துக் கொண்டிருந்த தலைச் சங்கத் தலைவனையும் ‘சிவன்’ என்ற பெயரால் அக்காலத் தமிழ் மக்கள் அழைத்தனர் என்றுணர்க. உதாரணமாக, அவினாசிலிங்கம் என்ற பெயரை எடுத்துக் கொள்வோம். அவர் பிறந்த ஊர் கோயமுத்தூர். கோயமுத்தூருக்கு அண்மையில் அவினாசி என்ற ஊர் இருக்கிறது. அவினாசி என்ற ஊரில் ஒரு சிவன் கோயிலும், அது சமயாசிரியர்களால் பாடப்பெற்றும் இருந்ததால், அந்த ஊர் மற்றை ஊர்களைப் பார்க்கிலும் பலரால் அறியும் நிலைமை உண்டாக்கப்பட்டது. எனவே கோயமுத்தூரில் பிறந்த ஒருவருக்க அவருடைய பெற்றோர்கள், தங்கள் ஊருக்குப் பக்கத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த அவினாசி என்ற ஊரில் உள்ள சிவனைக் குறிக்கும் இலிங்கம் என்னும் பெயரை அவினாசி என்ற ஊருடன் இணைத்து அவருக்கு அவினாசிலிங்கம் என்று பெயரிட்டனர். கோயமுத்தூருக்குப் பக்கத்தில் அவினாசி என்ற ஊரும், அந்த ஊரில் ஒரு சிவன் கோயிலும் இருந்திராவிட்டால் அவருடைய பெயர் அவினாசி லிங்கம் என்று இராதல்லவா. இது போலவேதான், ‘சிவ, சிவ’ என்று ஒலித்துக் கொண்டிருந்த முதற் சங்கசத்துப் புலவனையும் சிவன’ என்ற பெயரால் அக்காலத் தமிழ் மக்கள் அழைத்தனர் என்று கொள்க. இனி, இருவகை மூச்சுக்களையும் சமப்படுத்திக் கொள்
வதால், ஆயுள் நீடிக்கும் என்ற உண்மையினைத் திருமூலர்,

“வளியியை வாங்கி வயத்தில் அடக்கிற்,
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்”
என்ற பாடலால் விளக்கிக் காட்டியுள்ளார்.

இனி, மெய்யுணர்வு என்பது எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற தென்றால், அதற்கும் நமக்குமுள்ள தொடர்பு யாதோ என்று அச்சமோ ஐயுறவோ கொள்ளவேண்டியதில்லை. இங்கு கடவுள் என்ற பெயரில் வரும் மெய்யுணர்வு, எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நின்று, பக்குவம் வரும்போது வெளிப்படு கின்றதென்பதே பொருளாகும். அதாவது, ஒருவனுக்கு இயல்பா
கவுள்ள மெய்யுணர்வானது, அவனுடைய முயற்சியால் எல்லாவற்றையும் செய்துமுடிக்கும் ஆற்றலையுடையது என்பதாகும். இதுபற்றியே திருவள்ளுவரும்,

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிகள்
மெய்வருந்தக் கூலி தரும்”
என்றும் கூறியுள்ளார். திருவள்ளுவர் காலத்திலேயே கடவுள் என்ற தனிப்பொருள், அறிவை விடப்புறம்பாக எங்கோ இருக்கின்ற தென்னும் கொள்கை தோன்றி, அவராலேயே எல்லாச் செயல்களும் நிகழ்கின்றன என்ற மதப்பிரசாரம் உண்டாக்கப்பட்டு விட்டதாயினும், திருவள்ளுவர் அதனைப் பொருட்படுத்தாது, முயற்சியையே முதன்மையாக வைத்துப் பேசியுள்ளார்.

இங்ஙனம் ஒருவன் தன்னுடைய முயற்சியால், எல்லாவற்றையும் தன் மெய்யுணர்வில் அடக்கிச் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவன் என்பதைக்குறிக்கும் ஆற்றல் உள்ளன் என்பதைக் குறிக்கும் கடவுள் என்ற சொல்லை, வேத-புராண-இதிகாசங்களிற் பேசப்படும் போலிக் கடவுளோடு ஒடுப்பிட்டுத் தங்கள் பகுத்தறிவை இழந்து நிற்கும் ஒரு கூட்டத்தார், தாங்கள் மெய்யுணர்வுள்ளவர்கள் என்று சொல்லித் திரிவதுமன்றி, அப்போலிக் கடவுட கொள்கைளை நாட்டில் பரப்பும் மதப்பிரசாரத்துக்கும் துணை செய்கின்றனரே! என்னே இவர்தம் போக்கு!!

“அறிவே கடவுள்”

“அன்பே கடவுள்”

என்று தாயுமானவர், திருமூலர் போன்ற தமிழ்ப் பெரியார்கள் கூறியிருப்பதையும் இவர்கள் ஊன்றி உணர்வதில்லை. மக்களாய்ப்பிறந்தார் அனைவரும் ஒரு இனத்தவரே, அவர்
களிடம் அமைந்துள்ள அறிவும் ஒரு தன்மையதே என்பதை உணர்த்தவே ‘ஒன்றே குலமும் ஒருவனே கடவுளும்’ என்ற முதுமொழியும் எழுந்ததாகும். ஆனால், மக்களின் அறிவை மயக்க எழுந்த வேத-புராண-இதிகாசங்கள் இந்த உண்மையை மறைத்து, நாட்டில் பலசாதி இனங்களையும், பற்பல கடவுளரையும் உண்டாக்கி, அதற்கு வேறு பொருள் கொள்ளும் நிலைமையை உண்டாக்கிவிட்டன. சுருங்கச் சொல்ல வேண்டுமானால், வேதபுராண - இதிகாசங்களே மக்களின் மெய்யுணர்வை அழித்து, அவர்களுக்கு மூட நம்பிக்கையும், அடிமை உணர்ச்சியையும் உண்டாக்கி விட்டனவாகும். இதனால் அறிவை விளக்கும் சங்க நூற்கள் இருக்கும் இடந்தெரியாமற்போயின. இந்தநிலையில் வேதாசமங்களின் சாரமாய் எழுந்த தேவாரம் - திருவாசகம் - திருவாய் மொழி முதலான அறிவை மயக்கும் நச்சுப் பூண்டுகள் தோன்றித், தொல்காப்பியம் - திருக்குறள் பரிபாடல் - அகநானூறு - புறநாநூறு - கலித்தொகை - பத்துப்பாட்டு - நற்றிணை - குறுந்தொகை - ஐங்குறு நூறு - பதிற்றுப்பத்து முதலான அறிவுச் செழும் பயிர்களை வளர்ந்தோங்க விடாது மூடிப் படர்ந்து விட்டன.

“கொலையிற் கொடியரை வேந்தொறுத்தல் பைங் கூழ,
களை கட்டதனொடு நேர்”

என்று வள்ளுவர் கூறியபடி, அறிவுச் சுடர் கொளுத்துதம் பைந்தமிழ்ப் பயிர்களை மூடிப் படர்ந்திருக்கும் நச்சுப் பூண்டுகளைக் களைந்தெறிந்தாலன்றி, அவை வளர்ந்தோங்கி உரிய பயனைத் தரா.

இனிச், சைவமதத்தின் ‘சிறப்பு’ நூல்களான தேவார - திருவாசகங்களயும்ந õம் குறைகூற முற்பட்டு விட்டோமே என்று சிலர் கருதக்கூடும். ஆனால், அவை தமிழ் மக்களுகும் புறம்பானவை என்பது நாம் இங்க எடுத்துக் காட்டும் மறுக்கமுடியாத காரணங்களால் நான்கு புலனாகும். அதாவது, தேவார திருவாசகங்களே சைவ மதத்திற்குரிய கடவுள் நெறிகளை விளக்கும் நூல்கள் என்றும், அவற்றைத் தமிழ்மக்கள் ஓதாதொழிதல் கூடதென்றும் கூறுவோர், தேவார காலத்துக்கு முந்திய கடவுள் நெறி நூல்கள் எவை என்பதை விளக்க வேண்டு மன்றோ! தேவார காலத்துக்கு முந்திய கடவுள் கோள் ஏற்பட்ட காலத்தில் வெள்ளத்தால் அழிந்து விட்டன என்றும், அவற்றின் சாரமே தேவார - திருவாசகங்களாகச், சம்பந்தர் சுந்தரர் முதலான சமயாசிரியர்களின் திருவாக்கினின்றும் உருவெடுத்தன என்றும் சிலர் கூறுகின்றனர். அவருரையும் பொய் என்பதற்குக், தேவார திருவாசங்கள் ஆரிய வேதங்களான இருக்கு - எசுர் - சாமம் - அதர்வம் என்பவற்றின் சாரமே என்று சைவசித்தாந்தத்திற்குத் தாய்நூலான சிவஞானபோதச் சிறப்புரையில் கூறப்பட்டிருப்பதே போதிய சான்றாகும்.

அதுவுமன்றிக், கடற்கோள் என்று சொல்லப்படும்ö வள்ளப் பெருக்கு ஏற்பட்டு 9000 ஆண்டுகள் ஆய்விட்டன என்று சிலரும், 5000 ஆண்டுகள்தான் ஆயின என்று சிலரும் ஆராய்ந்து கூறியிருக்கின்றனர். எனவே கடற்கோள் ஏற்பட்டுத் தமிழ் நாட்டின் ஒருபகுதியும், அங்கே இருந்ததாகச் சொல்லப்படும் கடவுள்நெறி நூல்களும் வெள்ளப் பெருக்கால் அழிந்து போயின வென்று கூறப்படும் காலவரையறைகளில், பினைதாகவுள்ள 5000 ஆண்டுகள் தான் ஆயினவென்பதையே உண்மையெனக் கொண்டு பார்த்தாலும், தேவாரகாலத்துக்கும் கடற்கோள் ஏற்பட்டதாகச் சொல்லப்படும் காலத்துக்கும் இடையே 3670 ஆண்டுகள் தொக்கி நிற்கின்றன. எப்படியென்றால், தேவார - திருவாசகங்களைப் பாடியவர்களின் காலம் இன்றைக்கு 1330 ஆண்டுகள் தான் ஆகின்றனவென்று அடங்கன் முறை வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

எனவே, கடற்கோள் கர்லத்துக்கும் தேவாராகாலத்துக்கும் இடைப்பட்ட 3670 ஆண்டுகளிலும் உயிர்வாழ்ந்து போந்த தமிழ்மக்கள், எந்தப்பாடல்களைக்கொண்டு இவர்கள் கூறுஞ் சிவனைப் பாடிவணங்கினார்கள் என்பதனைத் தேவார - திருவாசங்களைக் குறைகூறப் கூடாதென்று கூறும் இஞ்ஞான்றைச் சைவமதத் தலைவர்கள் விளக்கிக் காட்டுதல் வேண்டுமன்றோ! மதப்பிரசாரம் செய்கின்றவர்களும், தங்களுடைய மதியையும் சிறிதளவாவது கூரையாக்கிக் கொண்டாலனறி, விழிப்படைந்த இன்றைய மக்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடைகூற முடியாது போகுமே! சொல்வதையெல்லாம் அப்படியே கைகட்டி - வாய்பொத்தி நின்று கேட்கும் காலமல்லவே இது!/


சைவசமய அன்பர்களான நந்தனார் - தாயுமானவர் - பட்டினத்தார் - அருணகிரி - இராமலிங்க அடிகள் - திருநாவுக்கரசர் முதலான தமிழ்ப்பெரியார்களின் முடிவு எப்படி ஏற்பட்டது என்று கேட்பார்களே! விளக்கம் கூறவேண்டுமே! நெருப்பில் தள்ளப்பட்டபறையன் - பார்ப்பானாக மாறினான் என்ற தென்னாலிராமன் கதைகளை இன்றைய விழிப்படைந்த உலகம் ஒப்புக்கொள்ளாதே! வரலாறுகள் கூறும் உண்மையென்ன? ஆராய்ச்சியாளர்களின் முடிவுஎன்ன? என் கேட்பார்களே! மதப்பிரசாரகர்களின் மக்கிப்போன புராணக் ககைதகளால் மக்களை மயங்கவைக்க முடியாதே! புராணக்கதைகள் எல்லாம் கற்பனை என்பதை இன்றைய மதப்புலவர்களே ஒப்புக்கொள்கின்றனரே!/


கடவுளைப் பற்றியும், மதத்தைப் பற்றியும், மதநூல்களைப் பற்றியும் மக்களிடையே எழுந்துள்ள ஐயப்பாடுகளை நீக்குவதற்கு, கடவுள் - மதம - மதநூல்கள் பற்றி எந்தவிதமான ஆராய்ச்சியோ, கருத்துவேறு பாடோ கொள்வது கடவுளுடைய ஆணையை நீறி நடக்கும் பெருங்குற்றத்திற்கு ஆளாகவேண்டி நேரிடுமென்ற மதப்புலவர்களின் அச்சுறுத்தல், மக்களை மயங்கவைக்கப் பயன்படுமென்று எண்ணி, அதற்காக மதப்புலவர்களால் கையாளப்பட்ட முறைகள் எல்லாம் காட்டு நிலாப் போல் பயன்படாது போகவேதான், கடவுளைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் பலதிறப்பட்ட தத்துவ நூல்களை எழுதிய, “கடவுள் இப்படிப் பட்டவர் - மதம் இப்படிப்பட்டது, கடவுளைப் பற்றி மத நூல்களில் கூறப்படும் கதைகளுக்கு நீங்கள் கொள்ளும் கருத்துத் தவறு, அக்கதைகள் ஆண்டவனுடைய உண்மையான தத்துவத்தை, ஆண்டவனை எளிதில் உணர முடியாத உங்களுக்கு விளக்குவதற்காக, ஆண்டவனை அறியும் ‘அறிவு’ பெற்ற எங்களால் எழுதப்பட்டனவேயன்றி, அக்கதைகளை அப்படியப்படியே நடந்தன என்று நிங்கள் நம்புதல் கூடாது; அதற்குப்பொருள் அது வன்று, இதுவேயாகும்” என்று மதப்புலவர்கள் தங்கள் ‘திறமையை’ப் பயன்படுத்தி மக்களை நம்பவைக்கலாம் என்று எண்ணும் எண்ணத்துக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் காலம் இது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு:- “முருகன் என்ற பெயரில் ஒரு ஆண்டவன் தனியாக யாண்டும் இல்லை. பகலவ (சூரிய)னே முருகனாக வைத்துப் பேசப்பட்டான். காலைப் பகலவன் ஒப்புயர்வற்ற அழகுடைய வனாகக் காணப்படுவதால், ஒரு அழகுள்ள வடிவம் பகலவனுக்குக் கற்பிக்கப் பட்டது. காலைப் பகலவன் கடலினின்றும் எழுந்து வருவதுபோல் காணப்படுவதால், கடலின் நிறமான மயிலை அவனுக்கு ஊர்தியா (வாகனமா)கக் காட்டப்பட்டது. பகலவனுடைய ஒளியை மயிலின் தோகைகளில் உள்ள பொன்னிறமான புள்ளிகளுக்க ஒப்பிடப்பட்டது. பகலவன் விடியற்காலம் நமக்குத் தோற்றப் படுவதால், பகலவன் வருகின்றான்; தூங்கிக் கிடப்பவர்களே எழுந்திருங்கள் என்று கூறுவதற்கு இலக்காகவே அவனுக்குச் சேவற்கொடி கொடுக்கப்பட்டது. எனவே பகலவனுடைய சிறப்பையும் அதனால் மக்களும் பிற உயிர்களும் அடையும் அளவற்ற பயனையும் விளக்கவும், அவனை மக்கள் மறவாது போற்றவும் வேண்டுமென்பதற்காகவுமே இந்தச் சிறப்புப் பகலவனுக்குக் கொடுக்கப்பட்டதாகும். இதன்றிப் புராண இதிகாசங்களில் கூறப்படுவதுபோல் ஒரு ஆண்டவன் முருகன் என்ற பெயரோடு இல்லவே இல்லை; அக்கதையை நம்பவேண்டாம்; யான இங்கு கூறிய விளக்கமே அக்கதையின் உண்மைப் பொருளாகும்” என்று ஒரு புலவர் அடித்துக் கூறியிருக்கிறார்.

எனவே, பகலவனே! முருகனானான் என்று விளக்கம் கூறிய புலவரும் இன்று இருக்கிளறார். அவரைப் பெரும் புலவர் என்று மதிக்கும் பல மதப்புலவர்களும் இருக்கின்றனர். முருகனைச் சிவனுடைய பிள்ளையாக்கிய கதையும் (கந்தபுராணமும்), அவனுக்கு ஆறுமுகங்களைக் கற்பித்து ஒவ்வொரு முகத்தாலும் ஒவ்வொரு வேலையைச் செய்துமுடித்தான் அல்லது முடிக்கின்றான் என்ற விளக்கமும், இவ்விளக்கங்களை நாட்டு மக்களுக்கு விரித்துக் கூறும் மதத் தலைவர்களும் ஒருங்கே வாழக் காண்கின்றோம். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், பகலவனை முருகனாக்கிக் காட்டிய புலவரோ, முருகனைச் சிவனுடைய பிள்ளையாக்கி அவனுக்கு ஆறுமுகங்களைக் கற்பித்து, அவனால் சூரன் முதலாயினோர் வதைக்கப் பட்டனர்; உலகத்தை உண்மையிலேயே சுற்றி வந்தும் உனக்குப் பழத்தைக் கொடுக்காமல் தன் அண்ணனாகிய பிள்ளையாருக்கே பழத்தைக் கொடுத்தார் தந்தையாகி சிவன் என்று கோவித்துக் கொண்டு பழநி மலையில் போய்க்குடியேனிறனார் முருகன்; வனத்தில் வேடனாகி - வேங்கை மரமாகிப் - பண்டாரமாகியும் கடைசியில் கணபதியை அழைத்து யானையாகச் சென்று வள்ளியை அச்சப்படும்படி செய்து மணம் செய்துகொண்டார்; முருகனே சம்பந்தராகப் பிறந்து சமணத்தை ஒழித்துச் சைவத்தை நிலைநாட்டினார்; என்ற பல கதைகளை மக்களுக்குக் கூறி மதத்தை நிலைகாட்டும் புலவர்களோ ஒருவருக்கொருவர், ஆண்டவனைப் பற்றிய கதைகளில் தங்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளைக் கலந்து பேசி, யார் கூறுவது உண்மையென்று முடிவுகட்டாத்தும், அம்முடிவை மக்களுக்கு எடுத்துக் கூறிவிளக்காததும் வேடிக்கையிலும் வேடிக்கையன்றோ!

இப்படியாக மகப்புலவர்கள், ஆண்டவனையும் பதத்தையும் மக்கள் நம்பவேண்டுமென்பதற்காகத், தங்களுக்குத், தங்களுக்குத் தோன்றியவாறெல்லாம் கதை எழுதிவைத்து ஒருவருடைய கருத்து இன்னொருவருஐடய கருத்தோடு இத்துவராமல் அவர்களுக்குள்ளேயே மய்ககத்தை உண்டு பண்ணுவது மட்டுமன்றி, அவற்றைக் கேட்பவர்களுக்கும் மயக்கத்தை உண்டுபண்ணி விடுகின்றது. எனவே கருத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற முறையில் - மக்களின் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய காரியங்களையே கால மாறுதலுக்கு ஏற்பச் செய்யுங்கள் என்று கூறுவதில் என்ன தவறு எனவே இதுவரை கூறிய விளக்கங்களால், கடவுள் - சிவன் என்ற சொற்களின் பொரள் இன்னதென்று விளங்குமென நம்புகின்றோம்.

திராவிட நாடு - 11-7-1948