அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கேள்வியும் பதிலும்
1. பிறதேசத்தார் ஒரு கடவுளை வழிபடுகின்றனரே, நாம் ஏன் வழிபடக்கூடாது? மேனாட்டினர் நாகரிகமடைந்தும், விஞ்ஞான அறிவு நிரம்பியும் கடவுளை வழிபடும்போது, நாம் ஏன் கடவுளை வழிபடக்கூடாது?

‘ஒருகடவுள்’ - வழிபாடு, கூடாது என்று, திராவிடர் கழகம், எப்போதும் சொன்னதில்லை. பல தெய்வங்கள் கொண்ட, கடவுட்கொள்கையையும், அதனை நிலைநாட்ட ஏற்பட்ட புராண இதிகாசங்களையும், அவற்றை ஒட்டி ஏற்பட்ட மூட நம்பிக்கைகள் மிகுந்த பழக்கவழக்கங்களையும், இவற்றை ஆதாரமாகக் கொண்டு, ஒரு பூசாரிக்கூட்டம் மக்களை ஆட்டிப் படைப்பதையும், இதற்கு அஞ்சித் தங்கள் செல்வத்தையும், சிந்தனையையும், பாழாக்கிக்கொள்ளும், மக்கள் போக்கையுமே, திராவிடக்கழகம் கண்டிக்கிறது. திராவிடர்கழகத் திட்டத்திலோ சுயமரியாதை இயக்கத் திட்டத்திலோ ஒரு கடவுள் உணர்ச்சி யமும், வழிபாடும் கூடாதென்று குறிப்புக் கிடையாது. அங்கத்தினர் சேர்க்கும் சீட்டுகளிலும் கிடையாது. நான் மேலே குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றிச் சுயமரியாதைக் கட்சி கண்டித்துப் பேசிக்கொண்டு வந்தபோது ஆதிக்கக்காரர்கள், பொதுமக்கள் மனத்திலே தப்பிப் பிராயத்தைப் புகுத்தி, சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்பு ஏற்படச் செய்வதற்காகச் சுயமரியாதைக்காரர்கள் கடவுள் வழிபாடு கூடாது என்பவர்கள் - நாஸ்திகர்கள் என்றெல்லாம், கட்டிவிட்டனர். அந்தப் பழிச் சொல் ஆழமாகவும் வேகமாகவும் பரவியதால், பொதுவாகப் பலர், நம்பினர். இப்போது, இந்தத் தப்பபிப்பிராயம், வேகமாகக் குறைந்து வருகிறது.

2. தேர்த்திருவிழா, பண்டிகை, இவை ஏன் கொண்டாக்கூடாது?
ஏன் கொண்டாடவேண்டும்? பக்திக்காகவா? ஆம் என்றால் அதற்கு, வழிபாடும், தியானமும் போதுமே! ஒழுக்கத்துக்காகவா? ஒழுக்கம், இவற்றால் கெடுகிறதேயொழிய வளருவதில்லையே. தேர்த்திருவிழா பண்டிகையாகியவை காட்டுமிராண்டிக் காலத்திலே மக்களின் மனத்திலே புத்தறிவு தோன்றாத முன்பு இருந்துவந்த நம்பிக்கைகளின் பேரால் உள்ளவை. இந்த நம்பிக்கைகள், இன்று இல்லை; கூடாது. அறிஞர்கள் ஒதுக்கியும் விட்டனர். இந்நிலையில், மீண்டும் மீண்டும், அந்தத் தேர்த் திருவிழாக்கள் பண்டிகைகள் ஆகியவற்றைக் கொண்டாடுவதால், அந்தப் பழைய நம்பிக்கைகளைத் தலைதூக்க விடுகிறோம், இது கூடாது என்பதற்காகவே அவை கூடாது என்கிறோம். மேலும், ஏழ்மை மிகுந்து, அவசியமாகச் செய்யப்படவேண்டிய பல காரியங்களுக்குப் பணம் இல்லை என்று திண்டாடும் நமது நாட்டில், பணத்தை வாரி இறைத்துப் பாழாக்குவது சரியல்ல. ஆகவேதான் இவை கூடாது என்கிறோம்.

3. ஹைதராபாத் சமஸ்தானத்தைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?

நிஜாம், நிச்சயமாக, மக்களாட்சி தரத்தான் வேண்டும். அந்தச் சமஸ்தானத்தில் பெரும்பான்மையோர் முஸ்லீம் அல்லாதாராக இருக்கிறார்கள் - ஜனநாயக முறைப்படி ஆட்சி அமைவது என்றால், அங்கு முஸ்லீம்களுக்கு ஆட்சியில், இப்போதிருப்பது போல ஆதிக்கம் இருக்காது - இருப்பதும் கூடாது. ஹைதராபாத்தில் பொறுப்பாட்சி வேண்டுமென்ற கிளர்ச்சி நியாயமானதுதான். அதை ஆதரிக்கிறோம். அதுபோலவே, சமஸ்தானம், எந்த டொமினியனில் சேருவது என்பதும், மன்னரின் விருப்பத்தின்படி விடப்படாமல், மக்கள் விருப்பத்தின்படிதான் விடப்படவேண்டும் என்கிறோம்.

4. திராவிடநாடு தனிநாடானால் சிறிய நாடு என்ற காரணத்தால், ஐக்கியதேச சங்கத்தில் மதிப்புப் பெறமுடியாதல்லவா?

அந்தப்பயமே வேண்டாம். ஐக்கியநாடுகள் சபையிலே பெரிய அமெரிக்காவுக்கு உள்ள மதிப்பும் செல்வாக்கும், சிறிய இங்கிலாந்துக்கு இருக்கிறது, பெரிய சைனாவுக்கு, சிறிய பிரான்சுக்கு உள்ள அளவு மதிப்பு இல்லை, பெரிய இந்தியாவையும், அதைவிடச் சிறிய பாகிஸ்தானையும் சமமாகவே நடத்துகின்றனர். அங்கும், எங்கும் ஒருநாடு பெரிதாக இருக்கிறது என்பதற்காக, மதிப்பும் செல்வாக்கும் வந்துவிடாது; திராவிடநாடும், அவ்வளவு, சிறிய நாடு அல்ல. ஐரோப்பியத் துணைக்கண்டத்திலே உள்ள எத்தனையோ நாடுகளை விடப் பலடங்கு பெரிதாக இருக்கும். எந்த நாட்டுக்கும், அதனுடைய தொழில் வளம், அறிவு வளம், இதைப் பொறுத்துத்தான் மதிப்பும் செல்வாக்கும் ஏற்படுமே யொழிய, அளவைப் பொறுத்து அல்ல. இத்துடன் ஐக்கியநாடுகள் சபையிலே மதிப்பும் செல்வாக்கும், பெறுவது என்பது, இப்போது உள்ளது போலவே, எப்போதும் ‘வேண்டப்படும்’ கொள்கையாக இருக்குமா என்பதும் சந்தேகம். சர்வதேசச் சங்கம் என்று, முன்பு இருந்து, மறைந்து போன சங்கத்தை நண்பருக்கு நினைவூட்டுகிறோம்.

5. ஒரு கடவுள் உணர்ச்சிதான் இருக்க வேண்டும். சாதிகள் கூடாது, என்பன போன்ற திட்டங்களைப் பேசிக்கொண்டிருப்பதைவிடச் சட்டசபைகளைக் கைப்பற்றிச் சட்டங்களாக்கலாமே? ஏன் பிரசாரம் செய்தபடியே இருக்கவேண்டும்?

சட்டசபைக்குச் சென்று செய்யக்கூடிய காரியங்கள் இன்னின்னவை என்று மக்கள் அறியும்படியும், மக்கள் இவை செய்யப்பட வேண்டியவைதான் என்று உணர்ந்து, ஆதரவும் அனுமதியும் தரவும், நிலைமை ஏற்பட வேண்டுமே, அதற்குத் தான் பிரசாரம்; நாம் என்ன செய்ய எண்ணுகிறோம், நமது திட்டமென்ன என்பதை எடுத்துக்கூறி, ‘ஓட்’ தரும்படி கேட்பதுதான் ஜனநாயக முறை. எதையோ சொல்லி, ‘ஓட்’ வாங்கிக் கொண்டு, சென்று, சட்டசபையிலே உட்கார்ந்தான். பிறகு, எங்கள் திட்டம் இது என்று திடீர் வேட்டுவிடுவது சரியுமல்ல, வெற்றியும் தராது. சட்டம் செய்வதற்கு முன்பு, மக்கள் மனத்திலே, மாறுதலை ஏற்படுத்த வேண்டும் . அத்தகைய சட்டங்கள் தேவை என்பதை அவர்கள் உணரவேண்டும் அந்தக்காலம் வரை, சட்டசபை செல்வது பயன் தராது. அந்தச் சூழ்நிலையை உண்டாக்கிக் கொண்டு, மக்களின் அனுமதியைப் பெற்றுச் சட்டசபை சென்று, மேற்படி திட்டங்களை நிறைவேற்றவேண்டும் என்பதுதான் கழகத்தின் வேலைத் திட்டம்.

6. நீர், கலையின் பேரால் காசு திரட்டுவது சரியா?

நண்பருக்குக் கலையினிடம் உள்ள ஆர்வமும், அன்பும், கலைத்துறையில் ஈடுபட்ட அனைவருக்கும் தோன்றி, மக்கள் இல்லாத சினிமா, கட்டணமில்லாத நாடகம், நடத்தப்படும்போதும், நான் நிச்சயமாகப் பணம் வாங்காமல் கதை எழுதித் தருவேன்; சம்மதம். நண்பர், அத்தகைய சினிமா, நாடகங்கள் ஏற்படப் பாடுபடட்டும்.

16.11.1947