அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கேள்வியும் பதிலும் 2
1. ‘ரங்கோன் ராதா’வின் நிலை என்ன?
நண்பரின் நியாயமான கேள்விக்கு, விடை ஒன்றும் கூறுவதற்கில்லை - ராதாவின் விஷயத்தைத் தொடர்ந்து எழுதுவது தவிர. அந்தத் தொடர்கதை இடையில் வெளிவர முடியாமற் போனதற்காக வருந்துகிறேன். இனித் தொடர்ந்து வெளியிட்டுவர, ஏற்பாடாகி இருக்கிறது. பழைய பகுதி அறியாதவர்களுக்குச் சற்றுச் சிரமமாக இருக்கும். இனித் தொடர்ந்து வெளிவரப் போகும் பகுதியின் அளவு சிறியதுதான். அது முடிந்ததும், புதிய வாசகர்களுக்கும் திருப்தி ஏற்படும் முறையில், புதிய தொடர்கதை வெளியிட இருக்கிறோம். உண்மையாகவே அது தொடர்கதையாக இருக்கும் - இடையிடையே நின்றுவிடாது. இப்போது ஏற்பட்ட சங்கடமான நிலைமைக்காக வருந்துகிறேன் - பொறுத்தருள வேண்டுகிறேன்.

2. ‘தளர்பதி’ ஆகிவிட்டதாகக் கூறுகிறீரே, வயது ஏறுவதன் காரணமாக உடல் தளர்வது நியாயம். எஃகு உள்ளம் படைத்த திராவிட இனத்தைச் சார்ந்த உமக்கு உள்ளம் தளர்வது எங்ஙனம்?

நண்பரின் உடல் உள்ளம் இரண்டும், என்றும், இன்றுள்ளது போலவே எஃகு நிலைமையில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். வயது ஏறி உடல் தளர்வது போலவே, விசாரம் ஏறி உள்ளம் தளர்வதும் உண்டு. அது எந்த இனத்துக்கும் இயற்கை. அந்த விசாரத்øப் போக்கக்கூடிய மருந்து, நமக்கு உள்ளம் தளர்ந்தாலும், கேள்வி கேட்ட நண்பர் போன்றோருக்கு உள்ளம் எஃகாக இருக்கிறது. எனவே, பொதுவாகத் திராவிடச் சமுதாயத்துக்கு நஷ்டம் இல்லை என்ற நம்பிக்கைதான் என்று கருதிக்கொள்ளட்டும் நண்பர். கூர்மழுங்கிய வாள் நான்; கேள்விகேட்ட நண்பர் போன்றாரின் ஆர்வமிக்க ‘தொண்டு’ திராவிடச் சமுதாயத்துக்கு இருக்குமட்டும், தளபதி நான் தளர்பதியானதால், நஷ்டமில்லை.
3. இன்னமும் சிலர் உன்னை அண்ணா - அண்ணா - என்று ஏன் கொண்டாடுகிறார்கள்?
கொஞ்சம் நன்றியறிதல் இயல்பு இருப்பதால் என்று எண்ணுகிறேன். நண்பர் போல, அவர்கள் ‘சட்டி சுட்டது கை விட்டது’ என்ற ‘சீரிய’ (?) கொள்கையைக் கொள்ளவில்லை போலும். தஞ்சாவூர் அரண்மனை, செஞ்சிக் கோட்டை, போன்ற நிலையிலாவது என்னைக் கொள்ளவேண்டுமென்று எண்ணுவதும், கேள்வி கேட்கும் நண்பருக்குப் பிடித்தமில்லைபோலும்.4. உங்கள் ‘பெரியார்’, காங்கிரசிலே ஏதோ குருகுலச் சண்டை போட்டுக்கொண்டு வெளியே கிளம்பியதும், ஒரே அடியாகக் காங்கிரஸ் மீது துவேஷம் கொண்டது சரியா?

நண்பரே! எங்கள் பெரியாரைப் பற்றி உங்கள் தோழர்களில் யாரோ, தவறான தகவல் கொடுத்திருக்கிறார்கள் உமக்கு. குருகுலச்சண்டை என்பது, பெரியார் இட்டுக்கட்டியது அல்ல. பொதுமக்களின் ஆதரவு பெற்ற பள்ளிக்கூடத்தில், பார்ப்பன மாணவருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் சாப்பிடும் இடம், படிப்பு முறை ஆகியவற்றிலே பேதம் காட்டப்பட்டது. பெரியார் மட்டுமல்ல டாக்டர் வரதராஜுலு, திரு. வி. க. ஆகியோரும் கொதித்தெழுந்தனர். அதன், பின் விளைவாகவே, பெரியார் தமது பிரசாரத்தைத் தொடக்கினார். கேள்வி கேட்ட நண்பருக்குக் கூறப்பட்டது போலத் தொடக்கத்திலேயே காங்சிரஸ் ஸ்தாபனத்தையோ, காந்தியாரையோ அவர் எதிர்க்கவில்லை. பார்ப்பனத் தலைவர்களின் போக்கை மட்டுமே கண்டித்தார். ‘குடி அரசு’ இதழில் தொடக்க நிலையிலே, காந்தியைப்போற்றிக் கதரை உடுத்துமின் - என்ற சொற்றொடர் கூட வெளியிட்டார். காங்சிரசுக்குள் பார்ப்பனர்கள் ஆதிக்கம் கூடாது என்பதுதான், பிரசாரத்தின் அடிப்படை. அதன் தொடர்ச்சியும் வளர்ச்சியும், பார்ப்பனியகண்டனம், புராண மறுப்பு, சமதர்மம், பார்ப்பனியத்துக்குப் பாதுகாப்பளிக்கும் காங்கிரசுக்குக் கண்டனம், என்பதாகும். இவ்வளவு, படிப்படியாகத்தான் சென்றிருக்கிறதே தவிர, பெரியார், காஞ்சிபுரம் மாநாட்டை விட்டுக் கிளம்பியதும், ஒரேயடியாகக் காங்கிரசைத் தாக்கவுமில்லை. துவேஷப்பிரசாரம் செய்யவுமில்லை - இப்போது நடப்பதும் துவேஷப் பிரசாரம் அல்ல. நண்பர் கூறுவதுபோலக் குருகுலக் கிளர்ச்சி, ‘ஏதோ’ குருகுலக் கிளர்ச்சி அல்ல! தமிழ்நாட்டைக் கலக்கிய - தமிழர் உள்ளங்களைக் குலுக்கிய சம்பவம் அது!

5. நேரு சர்க்கார் பலப்பட வேண்டுமென்று கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள். ஆனால், கம்யூனிஸ்டு கட்சி பலமாகக் கூடாது என்று நேரு சர்க்கார் கூறுகிறார்களே, அது ஏன்?

இதிலென்ன ஆச்சரியம்! சத்தியவான் உயிரை மீட்கச் சாவித்திரி போராடிய கதைபோல, தொழுநோய் பிடித்த புருஷனைக் கூடையில் வைத்துத் தலை மீது சுமந்து, காமக்கிழத்தி வீட்டுக்கு நளாயினி கொண்டு சென்ற கதைபோலக் கம்யூனிஸ்டு நண்பர்கள் ‘பதிபக்தி’ காட்டுகிறார்கள்!!

6. பிரிட்டிஷ் பாசிஸ்டு மாஸ்லியைப் பற்றி மீண்டும் ஏதாவது சேதி உண்டா?

உண்டு! மீண்டும் மாஸ்லியின் குரல் கிளம்பிற்று. கன்சர்வெடிவ், லிபரல், லேபர், எந்தக் கட்சியும் பயனில்லை, எங்கள் கூட்டுறவின்றி, எதுவும் உருப்படாது, எங்களை நீக்கி விட்டுப் பணிபுரிய எவராலும் ஆகா, என்ற மாஸ்லி பேசிவிட்டு, பிரிட்டிஷ் சர்க்காருக்குப் புதுத்திட்டமும் கொடுத்திருக்கிறார். மக்கள் மட்டுந்தான், மாஸ்லியின் பேச்சுக்கு மதிப்பளிக்க, பிடிவாதமாக மறுத்து வருகின்றனர்!!

7. 1949ஆம் வருட சட்டசபைத் தேர்தலில் திராவிடக் கட்சி போட்டியிடுமா? போட்டியிட்டால் எத்தனை ஸ்தானங்களைக் கைப்பற்ற முடியும்?

சின்னாட்களுக்கு முன்பு ‘விடுதலை’யில் வெளிவந்த செய்திப்படி, பொதுஜன வாக்கெடுப்புக்குப் பிறகு, திராவிடர்கழகம், தேர்தலில் கலந்து கொள்ளும் என்று அறிகிறேன். இந்தப் பிரச்னை சம்பந்தமாக, அதிகார பூர்வமான முடிவும், திட்டமும் ஏற்படவில்லை.

8. முஸ்லீம் லீக்கை, கலைப்பதா இல்லையா? திராவிடக்கட்சியின் கருத்து என்ன?

லீக் இருப்பதா வேண்டாமா, என்பது முஸ்லீம்கள் முடிவு செய்ய வேண்டிய பிரச்னை. தனித்தொகுதி முறையும் நீக்கப்பட்டு, பாகிஸ்தானும் தனியாக அமைக்கப்பட்டுவிட்டபிறகு, லீக் அரசியல் கட்சியாக இருப்பதற்கு அவசியமில்லை என்று, நான் கருதுகிறேன். கழக நோக்கம் அறியேன். முஸ்லீம்கள், தாங்கள் வாழும் பிரதேசத்தின், அரசியல் நிலைமை, பிரச்னை, தங்கள் குறைபாடுகள், ஆகியவற்றைக் கவனித்து, அதற்கு ஏற்ற வகையில், ஏதேனும் அரசியல் கட்சியிலே சேர்ந்து கொள்வது தான் நன்மை பயக்கும் என்று எண்ணுகிறேன். ஈராக், ஈரான், போலப் பாகிஸ்தானும் இனித்தனிநாடு - அந்த அளவிலேயே, இங்குள்ள முஸ்லீம்களின் எண்ணம் இருக்கவேண்டும். இதற்கு ஏற்றமுறையிலே, தங்கள் அரசியல் தொடர்பை முஸ்லீம்கள் அமைத்துக்கொள்வதுதான் சிறந்தது.
8. முத்தைய முதலியார், திரு. வி. க. ஆகியோரின் இப்போதைய பேச்சு எப்படி இருக்கிறது?

குளிர்ச்சியாக! நம்பிக்கை யூட்டுவதாக! கேட்டுப்பழகிய கீதமாக!!

9. எந்த மாதிரியான கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறீர்?

விஷயவிளக்கம் - சந்தேகத்தெளிவு - புதிய பிரச்னை பற்றிய கருத்தறிவிப்பு போன்றவற்றுக்கு உதவக்கூடிய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன். பிளவை விரிவாக்குவது, புதிய சிக்கல் ஏற்படுத்துவது, தூபம் போடுவது, கிண்டிவிடுவது, இவற்றுக்கு உபயோகப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில்லை.

10. தங்களைக் கண்டித்து எழுதினால் கோபம் வருகிறதா?

வருகிறது, தோழரே! நான் மனிதன் தானே! ஆனால், வருகிற கோபம், உடனே மறைகிறது - நேசம் மறக்கவில்லை நெஞ்சம்! என்றபாடல் அறிவீரல்லவா? மேலும், இந்தக் கோபம், பாசத்தின் தொடர்ச்சியாக வருவதுதானே! அதிலே, ‘விஷம்’ கிடையாதல்லவா? ஆகவே, தாராளமாக மனத்திற்பட்டதைக் கூறுங்கள், எழுதுங்கள். நடையைப் பற்றிக்கூடக் கவனிக்க வேண்டாம், நோக்கம் மட்டும் சற்று நல்லதாக இருக்க முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

11. தமிழர் திருநாள் கொண்டாடச் சென்னையில் என்ன செய்ய வேண்டுமென்று கூறுகிறீர்?

முக்கியமாகவும், முதலாவதாகவும் செய்யவேண்டியது, தமிழ்காக்க உயிர் நீத்த, தாளமுத்து நடராசன், கல்லறை சென்று, காண்பது - இன்றைய தமிழர் இயக்கத்தவருக்குக் காண்பிப்பது!

13. காஞ்சிபுரத்தில், சின்னாட்களுக்கு முன்பு, திராவிட மறுமலர்ச்சிக்கழகம் அமைத்தீர்களே? அது என்ன, திராவிடர் கழகத்திற்கு (ஃஞுஞூt ஙிடிணஞ்) இடது சாரி அமைப்பா?

கேள்வியில், இருபகுதியும் தவறு. அமைத்ததுநானல்லேன். “திராவிடன்” ஆசிரியர் தோழர் என்.வி. நடராசன், காஞ்சி திராவிடர் கழகச் செயலாளர் சி.வி.எம். அண்ணாமலை ஆகிய அன்பர்கள் ஆற்றிய பணி அது. நான் ஊரிலே இல்லை. அந்தக் கழகமும் இடதுசாரியன்று.

13. கட்சியிலே ஒதுங்கி இருக்கிறேன் என்று கூறுவதன் பொருள் என்ன? விளக்கமாகக் கூற வேண்டும்.

இதற்குக் பொதுவாகக் கட்சிகள் - நமது கழகம் மட்டுமல்ல - எந்தக் கட்சியும், அமைக்கப்படும் முறையைக் கொஞ்சம், கவனிக்கவேண்டும். கட்சி என்றால், அதைத் தொடர்ந்து சாதாரணமாக, இருசொற்றொடர்கள் உலவும், எங்கும், கட்சியை நடத்துபவர்கள் - கட்சியில் இருப்பவர்கள் - முன்னவர் பின்னதிலும் உண்டு - பின்னவர் முன்னதில் இருந்தாக வேண்டும் என்று பொருள் இல்லை. போர் நடத்துவோர், போருக்கு உதவுவோர், என்று கொள்ளலாம்,
எந்தக் கட்சியிலும், கொள்கைத் திட்டம், நடைமுறை வேலை, முதலிய அடிப்படைக் காரியங்களைக் கவனிக்கும் வாய்ப்பும் பொறுப்பும், வசதியும் திறமையும் கொண்ட ஒரு சிறு குழுவும், அமைக்கப்பட்ட கொள்கைத் திட்டங்களை மக்களிடை சென்று கூறியும், எழுதிப் பரப்பியும் வரும் திறமையும் வாய்ப்பும் கொண்ட மற்றொரு குழுவும், பரப்பப்பட்ட கொள்கை, திட்டங்களை, ஆராய்ந்து கொண்டு, நடவடிக்கைக்கு உபயோகித்துக்கொள்ளவும், அந்தக் கொள்கைத் திட்டங்களின் வெற்றிக்கான வகையில், சக்திக்கும் நிலைமைக்கும் ஏற்றவகையில் உழைக்கவும் முன்வரும் ஒரு குழுவும் என, மூன்று குழுக்கள் உண்டு. முதலாவது, மிகச் சிறியதாகவும், இரண்டாம் குழு அதைவிடச் சற்று விரிவானதாகவும், மூன்றாம் குழு, விரிந்தும் பரந்தும் இருக்கும். இந்த மூன்று குழுக்களிலே, எல்லாவற்றிலும் ஏக காலத்தில் உள்ளவர்களும் உண்டு; ஏதேனும் ஒன்றில் மட்டுமே இருப்போர் உண்டு; ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்வோரும் உண்டு. அந்தச் ‘செல்வது’ பொதுக் குழுவிலிருந்து, பிரசாரக்குழு - பிரசாரக் குழுவிலிருந்து பொறுப்பாளர் குழு, என்ற முறையில் செல்வதுமுண்டு. அதற்கு மாறாகப் பொறுப்பாளர் குழுவிலிருந்து பிரசாரக் குழுவிற்கு, பிரசாரக் குழுவிலிருந்து பொதுக் குழுவுக்குச் செல்வதாகவும் அமைவதுண்டு. அவரவர்களின் தொண்டு, திறமை, எண்ணம், நிலைமை, இதற்கேற்ப, இந்தப் பயணம் அமையும். நான், இந்தப் பயணத்தில், பொறுப்பாளர் குழுவிலிருந்து கிளம்பி, இப்போது பொதுக்குழுவில் இருக்கிறேன். ஒதுங்கி இருக்கிறேன் என்பதற்கு இதுதான் பொருள். கட்சியின் கொள்கை - திட்டம் - ஆகியவற்றை அமைத்தல் - நடைமுறை வேலைகளை மேற்கொள்ளுதல் ஆகிய அலுவல்கள் எனக்கு இல்லை. கேள்வி கேட்கும் நண்பர்களிலே, பெரும்பாலானவர்கள் உள்ள ‘பொதுக்குழுவில்’ நான் இருக்கிறேன். பயணம், இதோடு முடியுமா, மீண்டும், பயணம் ‘மேல் புறம்’ செல்லுமா, பொதுக் குழுவிலும் இராது போவீரா, என்று கேட்கத் தோன்றும் நண்பர்களுக்கு, நானறியேன் பராபரமே என்ற தொடர் தான் என் பதில். ஆனால், இதிலே எதனையும் உண்டாக்கக் கூடிய சக்தி நண்பர்களுக்கு - மூன்று குழுக்களில் உள்ளவர்களுக்கும் உண்டு. அதாவது அவர்கள் தங்களுடைய ஆர்வத்தின் கூர்மையால், என்னை, இப்போது நான் உள்ள பொதுக் குழுவிலிருந்தும் விரட்டி விட முடியும் - அதேபோல, நல்லெண்ணமும், எதையும் மிகமிகக் கூர்ந்து கவனித்து முடிவு செய்ய வேண்டும் என்ற போக்கும் கொள்வார்களானால், பொதுக் குழுவிலிருந்து மீண்டும், பொறுப்பாளர் குழுவில் நான் போகச் செய்யவும் முடியும். இந்த இரண்டையுமே செய்யாமல், ஏதோ ஒரு குழுவில் இருக்கட்டும், என்று இருந்து விடுவதுதான், நண்பர்கள், எனக்கு மட்டுமல்ல, கழகத்துக்குச் செய்யக்கூடிய மிகச் சிறந்த தொண்டு. எந்தக் கட்சியிலும், கட்சியினர், இந்த மூன்று வகையினதாகிய குழுக்களில், ஏதேனும் ஒன்றில் இருப்பது போதும், என்ற அளவுக்கு எண்ணமுடையோரே அதிகம். இந்த மூன்று குழுக்களில், எதில் இருப்பதால் இன்றைய நிலையில் கட்சிக்கு நல்லது, என்று, நான் யோசித்துப் பார்த்துச் செய்த முடிவுதான், பொதுக்குழுவில் இருப்பது என்பது. இந்நிலையில் இருந்து கொண்டு, ‘திராவிட நாடு’ இதழ் மூலம் நான் வெளியிடும் கருத்துகள், கழகப் பொதுக் குழுவினன் என்ற முறையில் அமைகிறது. இந்தக் கருத்துகள், பெறுப்பாளர் குழு, நடைமுறைக் குழு எனும் இரு குழுவினராலும், பொதுக் குழுவிலுள்ள ஒரு தோழனின் கருத்து என்று கவனிக்கப்படும் அளவிலும், பொதுக் குழுவினர், நம்மிலே ஒருவன் இதுபோல எண்ணுகிறான் என்ற அளவிலும், இருந்தால் போதும்.

28-12-1947