அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்

கலைப்புரட்சி

கலையிலுமா, கை வைக்கிறார்கள்? கார்த்திகேயா, கடம்பா! உனக்குக் கண்ணில்லையா, என்று குளறினர், கலையை இனகொலைக் கருவியாக்கிய கருததிழந்தவர்.

கலைப்புரட்சி, கால வேகத்தால் நடந்தே தீரும், நடந்தாக வேண்டும். கலை, ஆரிய வலையாக இருத்தல் கூடாது; இன இழிவுக்குத் துணைசெய்வதாக அமையலாகாது என்று நாம், தன் மதிப்பாளர்கள் கூறிவந்தோம்.

விளைவு என்ன? கலைப்புரட்சி! பல்வேறு இடங்களிலே இன்று நடத்திடக் காண்கிறோம்.

போர்வாள்
கலை, காசு, விளம்பரம், சம்பிரதாயம், முதலிய எதனாலும் கட்டுப்படுத்த முடியாத இளைஞர், தீவிரமான போக்கும் தளராத தைரியமும் கொண்ட, நடிகர், காலரிக் கனவான்களை ஆசிரியர்களாகக் கொள்ள மறுக்கும் கலைஞன், உரிமைக்காகப் போராடும் உள்ள உரம் படைத்த வீரன், தோழர் எம்.ஆர்.ராதா, அவர்களின் திராவிட மறுமலர்ச்சி நாடகசபை, எந்த ஊருக்குப் போகிறதோ அங்கு, புரட்சிப்புயல் வீசுகிறது என்று பொருள்!

அவருடைய கொட்டகை, தீவிரவாதிகளின் முகாம்! அவருடைய நாடகங்கள், பிரசார வெடிகுண்டுகள்! அவருடைய பேச்சு, தமிழ் மரபின் மாண்பை விளக்கும், நடிப்பு, நம்மைப் பரவசப் படுத்தும், எதற்கும் கவலைப்படாத தன்மையோ நம்மை மூக்கின் மீது விரல் வைக்கச் செய்யும்! தஞ்சை மாவட்டத்திலே இளைஞர்களின் ஏறாக விளங்கி வருகிறார் எம்.ஆர்.ராதா. புராண ஆபாச விளக்கம், ஜாதிக் கொடுமைக் கண்டனம், முதலாளி ஆதிக்கத்துக்குக் கசையடி, இவையே, பல்லவி, அநுபல்லவி, சரணம், நமது எம்.ஆர்.ராதாவின் நாடகக் கீதத்திலே, வசூல் எப்படி? என்று கேட்டால், ஒரு புன்சிரிப்புதான், அவரிடமிருந்து பதில்! இவ்வளவு தீவிரமாகப் போகிறீர்களே, ஜனங்கள் ரசிக்கிறார்களா? என்று கேட்டால், அந்தச் சுருண்டு வளைந்து சொகுசாக நடந்து கொண்டால் எதிர்ப்பு என்னசார்! செய்யும் என்று கேட்கிறார். உறுதுணையாக தோழியர் ஞானம் இருக்கிறார்கள். மற்றும் தோழிர் நிர்மலா மற்றம் பலர், சின்னஞ் சிறுவர்கள், இதிலே சேர்ந்து பணியாற்றுகின்றனர். திராவிடம், இப்பணியாளருக்குத் தக்க கைம்மாறு செய்கிறதோ இல்லையோ என்பது பற்றிய கவலையையும் விட்டு, கலைப்புரட்சி செய்யும் இந்தக் கழகத்தாருக்குத், தமிழர் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

12.07.1944-ல் திராவிட மறுமல்ர்ச்சி நாடக சபையார், திருவாரூரில், தமது நாடகங்களை வெற்றிகரமாக நடத்திப் புகழ்பெற்றதுடன், போர்வாள், எனும் புதிய நாடகத்தை, அரங்கேற்றினார்கள், இந்தச் சமூக சித்திரம், தோழர் (இவர் பிற்காலத்தில் சி.பி.சிற்றரசு என்று பெயர் மாற்றம் செய்துகொண்டவர். இவரைத் தமிழகம் சிந்தனைச் சிற்பு என்ற அழைத்து மகிழ்ந்தது.) சி.பி. சின்னராஜுவால் தீட்டப்பட்டது. அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். கதை ஒரு தன்னுணர்வாளன் கஷ்ட நஷ்டத்தைக் கவனியாமல், தன்னைக் காதலித்த காரிகையையும் தொண்டு செய்யவைத்து, முடி அரசை முறியடித்துக குடிஅரசு அமைப்பது என்னும் கருத்துடையது.
பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் தலைமையிலே போர்வாள் நடைபெற்றது. நாடக முடிவிலே, திருவாரூர் நகராட்சித் தலைவர் தோழர் இராமானுஜ முதலியார், பிரமுகர் ஆறுமுக நாடார், ஆகியோரும் மற்றம் பலரும், தோழர் எம்.ஆர்.ராதா அவர்களுக்குக் கேடயம், கோப்பை முதலியன வழங்கினர். தன் மதிப்புக்கழகம், தமிழ் மாணவர் மன்றம் ஆகியவைகள், வாழ்த்து இதழ்கள் அளித்தன. தோழர் சின்னராஜி, தோழியர் ஞானம் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நாடக மேடையை நமது ராதா அவர்கள், தமிழர் உரிமையைப் பாதுகாக்கும் ஒரு போர்வாள் ஆக உபயோகப்படுத்துவதை மிகமிகப் பாராட்டுகிறோம்.

மறுமலர்ச்சி!
கலை வளர வேண்டுமானால், கவலை தீரவேண்டும். நள்ளிரவில் நாடாள்வோனாக நடித்துவிட்டுக் காலையிலே கலயத்திலே கவலையைக் காண்போன், எப்படி தலைத்தொண்டு புரிவான்! நாடக மேடைகளிலே, கிடைக்கும் இராபம், நடிகரின் உழைப்பின் பலன். இதிலே அவர்களுக்கு துளியும் பங்கு கிடைப்பதில்லை. நாடக மேடையின் வாழ்வு எக்காரணம் கொண்டோ, சிதைந்தால், நடிகன் உலகிலே, ஒரு தொழிலுக்கும் இலாயக் கற்று உழல வேண்டி நேரிடுகிறது. இப்படித் தேய்ந்து போன நடிகர்களின் துயரம் உணர்ந்தவர்கள், சில திங்களுக்கு முன்பு ஈரோட்டில் நடைபெற்ற நாடகக்கலை மாநாட்டிலே, நடிகர்களின் பாதுகாப்பு நிதியும், இலாபத்திலே பங்கீடும் தரப்படவேண்டும் என்பதை வற்புறுத்திப்பேசினர். தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இது விஷயமாக உருக்கமானதோர் சொற்பொழிவு ஆற்றினார். ஆற்றுங்காலை ஆங்கிருநத நாடக முதலாளிகள் பேசுவது எளிது, செயல்? என்று செப்பினர், குறுநகையுடன்

(திராவிடநாடு - 23.07.1944)