அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கலைஞர் உரிமையில் கை வைத்தல் ஆகாது!

காமராஜ் போக்குக்கு கண்டனம்
‘இரத்தக் கண்ணீரில்’
டி.கே.சண்முகம்

நடிகவேள் எம்.ஆர்.ராதா கடந்த இருவாரங்களகாகச் சென்னையில் “இரத்தக் கண்ணீர்” என்ற சீர்திருந்த நாடகத்தை நடத்திவருகிறார்.

அந்நாடகம் முதல் நாள் பேராசிரியர் மு.வரதராசன் தலைமையிலும், இரண்டாம் நாள் உயர்நீதி மன்ற நீதிபதி சோமசுந்தரம் தலைமையிலும் நடைபெற்றது.

பிறகு 3.11.50 அன்று மேற்படி நாடகத்துக்கு கலைஞர் டி.கே.சண்முகம் தலைமை வகித்திருக்கிறார். அன்று, நண்பர் ராதாவின் நடிப்புத் திறமையை மிகச் சிறப்பாகப் பாராட்டிப் பேசுகையில் தோழர் சண்முகம், வேதனையோடு வெளியிட்ட பகுதிகளைக் கீழே தந்துள்ளோம்.
தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவரான காமராஜ், தேவகோட்டையில் ஒரு பொதுக்கூட்டத்தில் நமதியக்க நாடகங்கள் சம்பந்தமாகக் குறிப்பிட்டது குறித்தே நண்பர் சண்முகம், அவ்வளவு உணர்ச்சியோடு பேசியுள்ளார்.

கலையின் பெருமையுணராத நிலையில், செருக்கோடு பேசித்திரியும் காமராஜரின் கண்ணிய மற்ற போக்கைத் துணிவோடு கண்டித்த தோழர் டி.கே.சண்முகத்தின் நேர்மையுணர்ச்சி பாராட்டக்கூடியதாகும்.

நடிகர் டி.கே.சண்முகம் பேசிய பேச்சின் பகுதிகள்.
“நண்பர் எம்.ஆர்.ராதா கலையை ஒரு பிரசாரமாகச் செய்வதைக் கண்டு சிலருக்குப் பிடிக்காமலிருக்கலாம். ‘என்ன இப்படியா செய்வது?’ என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்லுகிறவர்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது. கலைஞர்கள், தங்கள் கருத்துக்களை வெளியிட உரிமை கொண்டவர்கள். கலைஞர்களின் கருத்துக்களை வெளியிட எந்த நாட்டிலும் சுதந்திரம் உண்டு. பத்திரிகை ஆசிரியர்களைப் போலவும் நூலாசிரியர்களைப் போலவும், மேடைகளில் அரசியல் தலைவர் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதைப்போலவும் நடிகர்களும“ தங்கள் எண்ணங்களைத் தங்கள் நாடகமூலம் எடுத்துக்காட்ட வேண்டும். இது, அவர்களது உரிமை. இதைக்கட்டுப் படுத்துவது கூடாது. ஆனால் சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராஜ் தேவகோட்டையில் பேசியிருப்பதாக அறிந்தேன். அவர் சொன்னாராம். “கருப்புச்சட்டைக்காரர்களின் நாடகங்களுக்கு அதிகாரிகள் போவதும், அவர்கள் நாடகங்களைப் பார்ப்பதும் கூடாது” என்பதாக!

நான், தமிழ்நாடு நாடகக்கலைக் கழகத்தின் தலைவன். காமராஜ் நாடகக்கலைக் கழகத்திற்கு ஆதரவாளர் அவர் பேசியிருக்கிறார். அவ்விதம்! அவரது கூற்றைக்கண்ட எவருக்கும் வருத்தம் ஏற்படாமலிருக்காது.”

மோசமான, நிர்வாணமான பேசும் படங்களுக்கு மந்திரிகள் போவதும், ‘தெருவில்வாரானோ என்னைத் திரும்பிப் பாரானோ’ என்று பாடி அபிநயம் பிடிப்பதைக் கண்டு ரசிப்பதுமாக இருக்கும் போது நல்ல கருத்துக்களைக் கூறும் தோழர் ராதா போன்றோரின் நாடகத்துக்கு ஏன் போகக்கூடாது?

அதிகாரிகள் என்றால்அவர்களும் மனிதர்கள்தானே! நல்ல காட்சிகளைக் காணவேண்டும் என்ற ஆசை இருக்காதா? அத்தகைய உள்ளம் அவர்களிடம் இல்லையா? ரசிக்கக் கூடாதா? அதிகாரிகள் என்றால் உலக நடவடிக்கைகளிலிருந்தே ஒதுங்கிப்போய் விடவேண்டுமா? ஆபீஸ் தொல்லை தீர்ந்து சிறிது நேரங்கூடப் பொழுதுபோக்கவும் அவர்களுக்கு உரிமை இருக்கக் கூடாது என்று காமராஜ் கருதுகிறார் போலும்! காலம் மாறிக் கொண்டேயிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சீர்திருத்த நாடகம் என்றால் வசூலும் இல்லை. ஆனால், இப்போதோ சீர்த்திருத்த நாடகம் என்றால்தான் கூட்டத்தைப் பார்க்கமுடிகிறது. இதை, காமராஜ் போன்றவர்கள் உணரவேண்டும்.

கண்டிப்பதும், மிரட்டுவதும் கூடாது. தவறானது. இதை உணர வேண்டும்.

(திராவிடநாடு 12.11.50)