அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கலங்கும் இலங்கை!

நீரலைகள் தலாலட்டும் இலங்கைத் தீவு, கண்ணீர் வெள்ளத்தால் கலங்கித் தவிக்கிறது, கடந்த 23ந் தேதி முதல்.

எழுபது லட்சம் மக்களின் இதயங்களைக் கடலாக்கி விட்டு, வீரர் சேனநாயாக போய்விட்டார். அலைகள் ஒலிக்கும் சமுத்திரத் தொட்டில் பெருமூச்சுப் புயலால், ஆடிக்கிடக்கிறது.

‘வானொலி‘ மூலம், சிந்தை சிலிர்க்கும் செய்தியைக் கேள்வியுற்றதும், கலங்கினோம் – நம் கண்முன் மறைந்த வீரரின் கம்பீரப் பார்வையும், சிங்கத் தோற்றமும், புன்சிரிப்பும் ஓடும் வதனமும் காட்சி தந்தது இனி, காணமுடியாது அவரை, தெளிவாக ஒலிக்கும் அவரது குரலைக் கேட்க முடியாது. சேனநாயகா சென்று விட்டார் – காலச் சிறகடிப்புக்கு, விடுதலை மலர் ஒன்று வீழ்ந்துவிட்டது.

பொதுச் சேவையின் ஆர்வத்தால் வளர்ந்து, அதிகாரம் தாங்கி, மக்களின் இதயங்களிலெல்லாம் சுடர்விட்டுக் கொண்டிருந்த ஒளி அவர், அவரை, உலகு இழந்துவிட்டது.

இலங்கைத் தீவின் மடியிலே தவழ்ந்து விளையாடிய தலைவர்களான ராமநாதன் எப்.ஆர். சேனநாயகா, பெரேரா, அருணாசலம், ஜெயதிலகா, ஜெயவர்த்தனா ஆகியோருடன் கைகோத்துலவிய, சிறப்புறுத் தலைவர் – இன்று, போய் விட்டார்.

நாவலர்களும் இலக்கிய மேதைகளும் தலைமை தாங்கி நடத்திய இலங்கையின் அரசியல் வாழ்வில், பொதுமக்களின் உள்ளத்தை மட்டும் நன்கு தெரிந்து, அதற்காகத் தன்னை அர்ப்பணித்து, தலைவரான பெருமை பெற்றவர், சேனநாயகா.

வளைக்கும் பேச்சுவன்மையில்லாதவர், ஆனால், தன் வாழ்வுமூலம், மக்களின் தந்தையானவர் 1884 அக்டோபர் 20-ந் தேதி போத்தளை நிலச்சுவான்தாரரான, முதலியார் டொன் ஸ்பேட்டர் சேனநாயகாவின் மூன்றாவது மகனாகப் பிறந்த, சேனநாயகா தனது 58 வயதில் – பூமிக்குள் போய்விட்டார். இளமையில் அவருள்ளத்தைக் கவர்ந்த முக்கிய தொழில், பூமியைப் பயன்படுத்துவதும் பயிரிடுவதுமாம். மண்ணைப் போற்றியவர், மண்ணுக்குப் பரிசாகிவிட்டார்!

புரவிமீதேறி உலவச் சென்ற புத்தமதக் காவலர் எதிர்பாராதவிதமாக விழுந்து, எல்லோரையும் பதைக்கவிட்டுவிட்டு, போய்விட்டார்.

சேனநாயகா மறைவு, இலங்கைக்கு ஏற்பட்ட மகத்தான நஷ்டமாகும். பல்வேறு வகுப்பினரும், பல்வேறு மதத்தினரும், சூழ்ந்துகிடக்கும் அங்கு, ‘நீதியின் ஒளி‘ எனப் போற்றப்பட்டார், சேனநாயகா.

மதுவிலக்கு இயக்கத்தால் பொதுவாழ்வில் புகுந்த இவர், தனது அண்ணன் எப்.ஆர். சேனநாயகாவைப் பின்பற்றி தலைவரானார். மக்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்று இலங்கையின் மணிவிளக்காகத் திகழ்ந்தார்.

1915ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலகத்தின் போது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால், சிறைக்குள் தள்ளப்பட்டார். சிங்களக்கிராம மக்களைத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பிரிட்டிஷ் துரைத்தனம் இரையாக்கியதைக் கண்டு மனம் துடித்த, இவர், தன்னைப் பொது வாழ்வுக்காக அர்ப்பணித்துக் கொண்டார்.

அதுமுதல், தமது மக்களின் நன்மைகளுக்காகப் போராடி, அவர்களின் உள்ளங்களைக் கவர்ந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு ‘டொமினியன்‘ அந்தஸ்து தந்து, பிரிட்டிஷார் பிரகடனம் செய்தனர் அன்ற முதல் இவரே “இலங்கை“ ஆனார்.

அகில உலக விவகாரங்களில், அவசர முடிவுகளைக் கூறாது, தமது நாட்டின் புகழை உயர்த்திய அறிஞர் இவர்.

இத்தகைய வீரர் ஒருவரை இலங்கை இழந்துவிட்டது “மண்ணுக்குள் சென்றுவிட்டார். இவரது பிரிவு, ஆசியாவுக்கே ஒரு நஷ்டமாகும். சேனநாயாக மறைவுகேட்டு, இலங்கை மட்டுமல்ல, ஆசியாவே அதிர்ந்தது.

சாதாரணத் தொண்டு மூலம் தன்னேரில்லாதவராக வாழ்ந்து மக்களின் “தந்தை“ ஆனார். இவரது பொதுவாழ்வு, இந்த படிப்பினையைத்தான் தருகிறது.

கலங்கும் இலங்கைக்கு நமது கண்ணீரையும் சேர்ப்பிக்கிறோம். கால ஓட்டம்,இலங்கைக்கேற்பட்ட, “இடி“யைப் போக்கட்டும்.

புயலில் சிக்கிய கலம் போலப் பெருமூச்சுவிடும் இலங்கைக்கு, நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் – அங்கு வாழ் திராவிட மக்கள் சார்பில்

வாழ்க வீரர் புகழ்!

திராவிட நாடு – 30-3-52