அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கலாரசிகர்கள்

இலக்கியம், இசை, சிற்பம் எனும் கலைகளைக்கண்டு களித்து, அவைகளின் நுண்பொருள் உணர்ந்து இன்புற்று, கலாரசிகர் எனும் பெயர் பெற்றுக் கலையை உணர நேரமும் நினப்பும் நிலையுமில்லாப் பெரும்பாலான மக்களிடம், கலையின் மாண்புகளைப் பற்றிக்கூறும், கனவான்களுக்குத் தன்மான இயக்கம், தமிழனின் அறிவுக்கு ஊறுதேடுவதும், மானத்தை மாய்ப்பதுமான கொள்கைகளையே காட்சி தரப்பட்ட, இலக்கியங்கள், இனி இருத்தல்கூடாது, என்று கூறுவது, கோபமூட்டி விட்டவுடன், கலை குலையுமோ என்று கோபமும் பிறந்திடச் செய்து விட்டது. இக்கலா ரசிகர்கள், கவியின் பொருளை பிரித்துக் கூறி, வியந்து பேசி, எவ்வளவு ரசம்! எத்துணை அழகு, என்னென்ன அலங்காரங்கள், இத்தகைய கலையை இழப்பதா என்று கூறிக் கசிந்துருகுவதும், விம்முவதுமாக இருப்பது கேட்டு, தன்மான இயக்கம் தீ மூட்டி, அதன் மூலம் என்ன சாதிக்க வேண்டும் என்று எண்ணிற்றோ, அதிலே பகுதி வேலை, தீ எழுமுன்னரே, நடந்தேறி வருவது கண்டு மகிழ்கிறோம்.

கதையைத்தள்ளு, கட்டுக்கதைகளை விடு, காவியத்தைக் கவனி, - என்று கூறும், கலாரசிகர்கள், தன்மான இயக்கத்தாரிடம் வம்புக்கு நின்றாலும், கவலையில்லை; இன்றாவது சற்று உரத்த குரலில் ஊரார்முன் அச்சத்தை மறந்து பேசுகிறார்களே, கதையைக் கவனியாதே, கலையைமட்டும் கவனி என்று - அதுவரையில் நாட்டுக்குப் பெரியதோர் இலாபமே என்று கூறுவோம்.

அதே கலைகளுக்கு இருப்பிடமாக உள்ளன வென்பதற்காகக், காவியங்களைக் கண்ணிலொத்திக் கொண்டும், கும்பிட்டுக் கூத்தாடியும் வந்தகாலம் மலை ஏறி, கதை ஆபாசமாக இருந்தால், கற்பனை அழகைக்கண்டு களிப்போம் என்று கூறி, காடும் நாடும் வர்ணிக்கப்பட்டுள்ள காட்சியைப்பார், இடையும் நடையும் எவ்வளவு அழகாக வர்ணிக்கப்பட்டிருக்கிற தென்பதைப் படித்துப் பார், கமலமுகமும் கலசக் கொங்கையும் எவ்வளவு அபூர்வமான முறையிலே சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனி, என்று கலா ரசிகர்கள் கூறும் காலம் தோன்றியிருப்பது, இலாபந்தானே.

கதை உண்மையா - இப்படியும் ஒரு சம்பவம் இருக்குமா - என்று கேட்டுவிட்டால் போதுமே, ஆஹா! இதே கலா ரசிர்களின் முகம் எப்படிச் சிவக்கும்! இன்று, எவ்வளவோ மாற்றம்!
கலையை அழிக்கக்கூடிய காரியமோ கலை அழிந்துவிடக் கூடிய காரியயத்தனம், என்று கலாரசிகர்கள் கூறுகின்றனர். இனிக் கலையைக் காப்பாற்றப், புது இதழ்கள் மலருமாம், வசந்தம் வீசுமாம், முருகு தோன்றுமாம், இனத்தின் நிலையைக் குலைக்காது, எழுச்சிக்கும் விழிப்புக்கும் துணை செய்யும் கலையொன்று மேலும் ஓங்க வேண்டுமென்பது நமது விருப்பம். தன்மான இயக்கத்தாருக் குக் கலாரசிகத்தன்மை கிடையாது, இனியேனும் கலாரசிகர்கள், தமது கருத்துக்கள், வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் தோற்கா என்பதை நிரூபிக்கப் பாடுபடவேண்டுகிறோம். கலாரசிகர்கள், காவியம் பல படித்தது, சொகுசான சுமையாக இராமல், நாட்டுக்கு நல்வழி வகுத்திடும் திறனை அவர்கட்கு அளிக்கவேயாகும் என்பதை அறிந்து நடக்க விரும்புகிறோம்.

கலாரசிகர் என்றால், சாமி சத்தியபாமா மெட்டிலே ஒரு புதுப்பாட்டுக் கட்டுவது, கந்துகமதக்கரியை வசமாய் நடத்தலாம் என்ற கானத்தை இசைத்தலும், திருப்போரூரான் மீது ஒரு திருத் தாண்டகம் அமைத்து விட்டேன் என்று கூறித்திருப்தி கொள்வதுந்தான் என்று கருதியும், வாடியிருந்த கொக்குக்கும் வாய்க்கொரு மீன் கிடைத்ததும், ஆற்றை வென்று அடைந்தேன் இப்பரிசை என்று எண்ணி இறுமாப்பதுபோலப் பதவிப் பசியும், போகதாகமும் தீர, ஒரு வாய்ப்பாக வேலை கிடைத்ததும், இது வேல் முருகன் அருள் என்று சுருதிபாடி, அதிலே பிறர் இலயிக்காவிட்டாலும், தானாகிலும் இலயித்து, முத்தே, இலட்சுமியே, மோகனச் சரச்சாங்கியே, என்று கோவைபாடிக் கூத்தாடி, முன்னாள் தொடர்புகள், மூலகாரணங்கள் என்பவைகளை அடியோடு மறந்து, பாடலைப் படித்துப் பதம் பிரித்துப் பொருளுரைத்து, இவ்வளவு அருமையான காவியத்தை மடையர்கள் எரிக்கப்போகிறார்கள் என்று சுடுசொல் கூறிடுவதும் - இவையே கலாரசிகர் என்ற நிலைக்கேற்ற நிகழ்ச்சி என்று கொண்டும், நெறி தவறும் நேயர்களுக்கு இனிச் சில கூறுவோம்.

இளந்தூய மணிகளே, இயம்புவீர், இன்று நாடு உள்ளதற் குறித்தனத்திலே, கலா ரசிகர்கள் என்று உலாவரும் உத்தமர்கள், ஏட்டில் உள்ளதை நாட்டார் உண்மை எனக்கொண்டு உழன்று, உறுதி
கெட்டு நெறிமறந்து திரிவதைத் தடுக்க நீவிர்செய்யப் போவதென்னை?

உமது உள்ளத்துக்கு உல்லாசமும், உரைக்கு வாசமும், (உடலுக்குச் சிலபேருக்குக் காசமும்) தரும், அழகிய சுவைமிகு, அதிரசயலங்காரக் கற்பனைகள். பாமரரின் அறிவுக்கேணியின் மீது பாறையாகி விடுவதைப்போக்கிட, நீவிர் செய்தது ஏதேனும் உண்டோ, கூறவல்லீரோ.

போர் முரசு கொட்டுவீர், பொற்காசு திரட்டுவீர், ஆசை மொழி பேசும் சில நேசமே பிடித்தலைந்து பானகம் பருகி மகிழ்வீர், ஐயிரண்டு திங்கள் சுமந்தாளெனினும் அம்மை, அருகிலிருக்காதே என்பீர், அஞ்சுகமெனக் கொஞ்சி, கஞ்சக முகங்காட்டி மஞ்சம்புகும் மாது தனது நெஞ்சநிலை தெரியாது தஞ்சமெனப்புகன்று, பஞ்சவடி வருடி வாழ்வீர், என்பன போன்ற சித்திரநடை பயில, நீவிர், காவியத்தைக் கற்கப் புகுவது உண்மையாக இருக்கலாம், ஆனால், பாமரர் நிலை அதுவோ? அவர்கள் அக்காவியங்களிலே இழைந்து கிடக்கும் வாழ்க்கை முறை, நீதி நெறி, அரசு அமைப்பு, கடவுட் கோட்பாடு, ஆகியவைகளைத் தேவைக்கெனக்கொண்டு தமது நினைப்பையும் நிலையையும், கெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்ட உமது கண்களில், காவியத்திலே சித்தரிக்கப்பட்டுள்ள கதாநாயகி கானகம் ஏகினாள் என்று படிக்கும்போது நீர் சுரப்பதுபோல நீர் சுரப்பதுண்டா?

வாழ்க்கையில் வசதி, கலாரசிகத்தன்மையை உமக்கு அளித்திருக்கக் கூடும். ஆனால், கலை என்ற சாக்குக்காக நீவிர் சந்தைக்குக் கொண்டுவரும் அந்தச் சரக்கு, தமிழரின் வாழ்க்கை யிலே ஆரிய நச்சுப்புக வேலை செய்வதை நீர் மறுக்க முடியுமா? அதைப் போக்க உமது திட்டம் என்ன? என்ற இன்னோரன்ன கடாவுதல்களுக்குக் கலா ரசிகர்கள், பதில் கூறுவாரா என்று கேட்கிறோம்.

சிலந்திக்கூடு எவ்வளவோ அழகியதாய், வசதியதாய், தோன்றுவதாலேயே, பூச்சிகள் அதிலே புகுந்து பார்க்கின்றன; உலவச்சென்று உயிரிழக்கின்றன, அதுபோலவே ஆரிய இனம் வீசிய வலை, கலையாகத் தோன்றுகிறது, அதிலே சிக்கினோர் சீரழிகின்றனர்.

பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டும். ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கமிடும் ஒரு தமிழ்த்தலைவர் தமது இல்லத்திலேயே பார்ப்பனியங் கலந்த நிகழ்ச்சி - ஓர் திருமணம் என்று வைத்துக்கொள்வோம். நடைபெற்றால், சற்றே மனம் அயர்வாரல்லவா! என்ன நிலை நேரிட்டது, எந்தப் பார்ப்பனிய ஒழிப்புக்காக நாம் பாடுபட்டுத் தலைவராகி, நமது மொழியால், மக்களுக்குப் புதுவழி வகுத்துத்தந்தோமோ, அதே பார்ப்பனியத்துக்கு, நாம் நமது இல்லத்து நிகழ்ச்சிக்கு இடமளிக்க வேண்டி நேரிட்டதே என்று தன்னைத்தானே நொந்து கொள்ளாமலிரார். பிறகு, அவருக்கு, மன ஆறுதல், எப்படிக் கிடைக்கும், கலை தருகிறது. கம்ப இராமாயணத்தைப் படித்தால், அதிலே சாட்சாத் ஸ்ரீஇராமச்சந்திரரே பிராமணபூஜை செய்கிறார், என்று காணப்படுகிறது. ஆண்டவனே அக்குற்றம் செய்தார், நாம் செய்ததில் தவறு என்ன இருக்க முடியும் என்று ஒருவாறு திருப்தி பெறலாமல்லவா. மன அமைதிக்குச் சிலர், தலையைத் தழுவிக் கொள்கின்றனர், வலி தெரியாதிருக்க அபின் தின்பதுபோல!

கோரமான கர்ஜனை, பசியோடு சிங்கம் பயங்கரக் கூச்சலிடுகிறது. காட்டிலேயன்று, நாட்டில், யாருமில்லா இடத்திலன்று, ஆயிரக்கணக்கான மக்கள் ஆனந்த ஆரவாரம் செய்யும் விளையாட்டு வெளியில், சிங்கம் சீற்றத்தோடு பாய்கிறது, எதிரே உடல் நடுங்கி நிற்கிறான் ஒருவன், அவன் அதனுடன் எதிர்த்து நிற்க வேண்டும், சிங்கம் அவன் கழுத்தைக் கடிக்கும். அவனுடைய கதறல், குருதி பீறிட்டு வெளிவருவது போல, மற்றவரின் கூச்சலைப் பிளந்துகொண்டு வெளிவரும் சிங்கத்தின் வெற்றிகண்டு மக்கள் ஆரவாரிப்பர், பரிதாபத்துக்குரிய அவன் ஆவி சோரும், சிங்கம் அவனை இரையாகக்கொண்டு, சீற்றம் தணிந்து நிற்கும். காட்சி முடிந்தது, என்று மக்கள் கைகொட்டுவர்; வேறு காட்சி தொடங்குமுன், மது அருந்துவர், விருந்துக்கு ஒருவரையொருவர் அழைப்பர், சுழல் விழிக்காரிகள் சுந்தரரூபர்களைக் கண்டு சொக்குவர், அந்தப்புர இரகசியங்கள் பேசப்படும். அந்த விளையாட்டு வெளியிலே, மணலிலே, இரத்தம் குழைந்து கிடக்கும், சின்னாபின்னமான அங்கங்கள் சிதறுண்டுகிடக்கும். மிருகேந்திரனிடம், மனிதன் தள்ளப்பட்டு, இந்தப் போட்டியிலே மனிதன் மாள்வதை வீர விளையாட்டு என்று விளம்பி, கண்டு களித்து “ஆஹா, சிங்கத்தின் கர்ஜனை எவ்வளவு பயங்கரமாக இருந்தது தெரியுமா, வந்த உடனே அவன் அலறினாலும் ஒரே நடுக்கமெடுத்து விட்டது. ஓர் அடி, ஆள் செத்தான், இரத்தம் பீறிட்டது - என்று காட்சியை விவரித்துப் பேசிக்கொண்டு ஆயிரக் கணக்கிலே ஆடவரும் பெண்டிரும், ஆனந்தமாக விழாக் கொண்டாடுவர், ரோம் சாம்ராஜ்யத்திலே, முன்னாளில். பள்ளமான இடத்திலே, இந்தப்படுகொலை நடைபெறும், அதைச் சுற்றி அமைக்கப்பட்ட, உயரமான பாதுகாப்பான இடத்திலே அமர்ந்துகொண்டு ஆடை அணி அழகொளிவீச ஆனந்தமாகச் சிங்கத்திடம் “சீமானின் அடிமை” அடிபட்டுச் சாகும் வீர விளையாட்டைக் கண்டுகளிப்பர், போகத்தில் புரண்டு கிடந்த ரோமாபுரி மக்கள். மிருகத்துக்கு மனிதனை இரையாக்கி அதைக்காண்பது ஒரு களிப்பா, இரக்கமே இல்லையே என்று கேட்பர் இன்று. ரோம் மக்கள், மனதுக்குச் சந்துஷ்டி தேடியபோது நாட்டில் காட்டுக்காட்சி அமைத்து அதைக்கண்டு மகிழ்வது, வீரம், கௌரவம், என்றும் கருதினர். அந்த வீணர்களின் விழி களிப்பால் கூத்தாடியது, காட்டு அரசனிடம் சிக்கி, மனிதன் மாண்டது கண்டு, உயிர் இழக்கச் சிலர், அதைக் கண்டு களிக்க ஆயிரவர். ரோம் இந்நிலையை வீர நிலை என்று கருதிப் பூரித்தது, பெருமை பேசிற்று, மனிதனின் உயிருக்கு, ரோமாபுரி உல்லாசகர்கள், மதிப்புத் தரவில்லை. போகபோதையிலே தலைகால் தெரியாது ஆடினர்.

இன்று தமிழகத்திலே, இத்தகைய உல்லாசர்கள் உள்ளனர். அவர்கள், பாமரர்களைப் படுகுழியில் இருக்கச் செய்து, கொடிய மிருகங்கள் கடித்துக் கொல்லவும், அவர்கள் கோரக் கூச்சலிடவுங் கண்டும், கேட்டும் பாதுகாப்பான, உயர்ந்த இடத்திலே அமர்ந்துகொண்டு, பாமரர், படுகுழியில் படும் அவதிகண்டு “அறியாமை யின் விளைவு - விதியின் விளையாட்டு” என்று பேசிக்கிடக்கின்றனர்.

அடிமைப் படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் பாமர மக்கள்மீது, ஆரியக் கொள்கைகள் எனும் விலங்கினங்கள் பாய்ந்து கடித்துக் கொல்ல, குன்றின்மீதமர்ந்து, குறுநகையுடன், கலா ரசிகர்கள் உள்ளனர் என்று கூறுவோம்.

ரோமாபுரி உல்லாசர்களுக்கும், நாட்டு நிலை, மக்கள் நிலை கெடக் கருவியாக இருக்கும் ஆரியக் கோட்பாடுகள், கலை எனும் மினுக்கிலே இருக்கும் காரணத்துக்காக அதனைத் தழுவிக் கொள்ளும், இந்நாட்டுக் கலாரசிகர்களுக்கும், என்ன வித்தியாசம் என்று கேட்கிறோம்.

25.4.1943