அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


களத்தில் கவலை!
அறப்போர் தொடுத்துள்ள நமது அன்பர்களுக்கு, சின்னாட்களாகச் சிறிதளவு கவலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. செயலாற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு, திடீரெனக் கிடைத்த ஒய்வு, கவலையைத் தருவதிலே ஆச்சரியமில்லை. ஆனால் சிறிதளவு, பிரச்சினையையும், நிலைமையையும், அலசிப் பார்த்தால் இந்தக் கவலை நீடிக்கக் காரணம் இல்லை.

அறப்போர் நடாத்தி வந்த நாம் அலுத்துப்போயோ, அடக்கு முறையினால் தகர்க்கப் பட்டோ, நமது அறப்போரை நிறுத்திவிடவில்லை.

இன்றும் சிலபலதோழர்கள் அறப்போர் காரணமாகச் சிறை சென்றவர்கள், சிறையிலே வாடிக்கொண்ட தான் உள்ளனர். போலீசிடம் அடிபட்ட தோழர்களின் காயத்திலிருந்த இரத்தம் உலர்ந்திருக்கும் ஆனால் வடு மறையவில்லை. வழக்கு மன்றங்களிலே, அறப்போரில் உடுபட்ட தோழர்களின் விசாரணை தொடர்ந்து நடந்தவண்ணம் இருக்கிறது, இந்தக்கிழமைதான் வெளிவந்தது தூத்துக்குடித் தோழர்கள் 35 பேர், தண்டனைப்பெற்ற செய்தி, களத்திலே ஏன் கவலை! எதை எண்ணிக் கவலைப்படவேண்டும்.

தலைவரின் அறிக்கையும் நிர்வாகக் கமிட்டியின் விளக்கமும், பிரச்சினையைத் தெளிவாக்கி இருக்கிறது.

நாம் ஏற்கனவே எடுத்துக்கூறியிருக்கிறபடி, ஹைதரபாத், பிரச்சினை, காரணமாக, அறப்போரை நிறுத்தி வைததிருக்கிறோம். - சில நாட்களுக்கு.

அறப்போரைக் கைவிட்டு விட்டொமென்று, இளவந்தார்களே கூறவில்லை - கூறமுடியாது - அமைச்சர்கள் நாள்தோறும் இந்தி எதிர்ப்பாளர்களைப் பற்றிப் பேசியவண்ணம் இருப்பதே சான்று, அறப்போர் கைவிடப்படவில்லை என்பதை விளக்க.

இந்தி ஆதரிப்பு வாரம் கொண்டாடுவதும் ஊர்வலம் நடத்துவதும், ஒவ்வொரு கூட்டத்திலும் இந்தி கட்டாயபாடமில்லை என்று விளக்கம் கூறப்படுவதும், எதைக் காட்டுகிறது? இந்தியை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட அறப்போர், மீண்டும் தொடங்கப்பட்டே தீரும் என்பதை, அமைச்சர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதைத்தானே! நிலைமை இவ்விதமிரு;கக, நண்பர்களுக்குக் கவலை ஏன் பிறக்கவேண்டும்?

ஹைதாரபாத் நடவடிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல் நாம், அறப்போரை நடத்தியிருக்கவேண்டும் என்று கருதினவர்கள் பலர் உண்டு அவரக்ள் மூன்று வகையினர்.

1. அறப்போரை அழித்துவிடவும், நாம் நாட்டுக்கு ஆபத்து நேரிட்ட நேரத்திலும் விட்டுக் கொடுக்காத விஷமிகள் என்று நம்மீது தீராத பழி சுமத்தவும் காத்துக் கொண்டிருந்த கூட்டம்.

2. அறப்போரை ஹைதராபாத்துக்காகக் கூட நிறுத்தாமல் நடத்துகிறார்கள் பாரீர் எமது வீரர்கள், என்று கித்தாப்புப் பேசி, நாங்கள் சொல்லி நிறுத்திவைக்கிறோம் போராட்டத்தை, எங்களைக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்று எதிரிகளிடம் போய்ப்பேரம் பேசவிரும்பிய மற்றோர் கூட்டம்.

3. உண்மையிலேயே, அறப்போர் நடக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட நமது நண்பர்கள்.

நமது விளக்கம் இந்த மூன்றாம் வகûயினருக்குத்தான் - முதல் இரு பிரிவினருக்குமல்ல - அவர்கள் விரித்த வலையிலே நாம் விழ மறுத்துவிட்டோம். விவேகம் இருந்ததால் மட்டுமல்ல, அறப்போரிடமும் அதற்கு அடிப்படையான காரணத்திடமும் நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதால்.

அறப்போர் மீண்டும் ஆரம்பமாகப் போகிறது - விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கப்படும் - விரைவில்!

ஈரோடு மாவட்டத்திலேயே, அறப்போர் மீண்டும் தொடங்குவதற்கான நாள் அறிவிக்கப்பட்டுவிடும்.

அண்ணாதுரை
(திராவிடநாடு 10.10.48)