அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கல்கத்தாவில் சமூக சீர்திருத்த இயக்கம்!

தீண்டாமை, மதுபானம் முதலியவற்றை ஒழிக்கவும், எதிர் ஜாமீன் முறையை ஒழித்து விதவா விவாகத்தை ஆதரிக்கவும் கூட்டுறவு முறைகள், கூட்டு விவசாயம், கூட்டுக் குடிசைத் தொழில் முதலியவற்றை வளர்க்கவும் சுயதேவை பூர்த்தி முறையை அமல் நடத்தவும் டாக்டர் பி.சி.ராய் தலைமையில் கல்கத்தாவில் சமூக வகுப்புச் சீர்திருத்த இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

வங்கத்தில் பிரம்ம சமாஜம் தோன்றிய நாளிலிருந்து சீர்திருத்த ஆர்வம் இருந்தே வந்தது. நாட்டு விடுதலைப் போராட்டம் காரணமாக, இந்தச் சீர்திருத்த இயக்க வேகம் குறைந்து போயிற்று. சமூகப் பிரச்சனைகள் கவனிக்கப்படாது போய்விடவே, ஊழல்கள் தாண்டவமாடவும் உலுத்தரின் கோட்பாடுகள் தலைதூக்கவுமாயின. இந்தக் குறைபாட்டை உணர்ந்து, சமூக சீர்திருத்தத்தைக் கவனிக்க ஒரு இயக்கம் தோன்றியிருப்பது. மகிழ்ச்சிக்குரிய செய்தி, இதனை நாம் வரவேற்பதுடன் கடந்த 25 ஆண்டுகளாக, சமூக சீர்திருத்தத் துறையிலே அஞ்சாது பணிபுரிந்துவரும், சுயமரியாதை இயக்கத்துக்கும், வங்க, சமூக சீர்திருத்த இயக்கத்துக்கும் தொடர்பு ஏற்படும் என்று நம்புகிறோம்.

(திராவிட நாடு - 28-4-46)