அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கல்லறை கண்டு கலங்காதீர்

டாங்கிகள் ஓட்டிச்செல்லும் வீரர்கள் கலக்கமடைந்தனர். பீரங்கிப் படையினர் பிரலாபிக்கின்றனர். பாசறையிலே உள்ள வீரர்கள், துடிக்கின்றனர்; எதிரியைக்கண்டன்று!

ஈராக், ஈரான், ஈஜிப்ட், துருக்கி ஆகிய பிறைப் பிரதேசங்களிலே உள்ளவர் மனம் குமுறுகிறது. குண்டு வீச்சினாலன்று.

லண்டன் பாராளுமன்றமும், பிரிட்டிஷ் போர் அமைச்சர் குழாமும் நீர் ததும்பும் கண்ணினராயினர். விஷப்புகை கண்டன்று.

கவர்னர் கலங்க, வைசிராய் விசனிக்க, மக்கள் மனங்குழம்ப, மகத்தான நஷ்டமென்று மந்திரிகள் அழலாயினர் - கல்கத்தா குண்டு வீச்சினாலன்று.

பத்துக்கோடி - ஏன் - பதினாலு கோடிக்கு மேற்பட்ட மக்களின் மனம் பற்றி எரிகிறது. அணைக்க முடியார் நெருப்பு அடிவயிற்றிலே புகுந்தது.

பம்பாயிலே, மலபார் குன்றிலே, மக்கள் மனதிலே ஒரு புதுக்கருத்தை மலரச் செய்த முடிசூடா மன்னன், ஜனாப் ஜின்னாவின் கண்களிலே நீர்த்துளிகள் சொரிகின்றன.

எதிரியின் பீரங்கி வேட்டுக்கும், இத்தாலிய சிறைக் கூடத்துக்கும், பாலைவனப் போருக்கும், சித்தங்கலங்காத சிங்கம், இஸ்லாமியத்தங்கம், ஷுகாத் அலிகான், இருதயத்தை எண்ணற்ற ஈட்டிகள் குத்துவது போன்ற கொடிய வேதனையிலே வீழ்ந்தார்.

பத்து மக்கள் - ஐவர் ஆடவர், ஐந்து மகளிர் ஐயோ! என்று அலறுகின்றனர். ஆற்றொணாத்துயரம். காலையிலே களிப்புக் கடலில் நீந்தினர், காதல் வெள்ளத்தில் புரண்டனர், உற்றார் உறவினருடன் உல்லாசமாக உரையாடினர். நள்ளிரவில், அவர்களைத் தீண்டிற்று நச்சரவு போன்ற செய்தி!

தந்தைக் கேற்ற தனயர்கள் என்று மொழிந்தோரும், தந்தை புலி! மக்களோ பூனையல்ல! என்று கூறினோரும், அவரா மறைந்தார்! என்று அழலாயினர்.

மூன்று நாட்களும் முடியவில்லை அந்த மாளிகையிலே மணவிழா நடந்து. எங்கும் மலர்ந்த முகங்கள்! களிப்பை வீசும் கண்கள்! ஆனந்தம்! அவ்வளவும் அரை நொடியிலே போயிற்று. மணமக்கள் உலவிய மாளிகையிலே, பிணம் வீழ்ந்தது! அணைந்தது விளக்கு! அறுபட்டது! வீணையின் நாதம், அஞ்சா நெஞ்சன், அரசியல் நிபுணன் அமைச்சருலகின் அணியழகன், ஆற்றல் மிக்கோன், ஆங்கிலருங் கண்டு பொறாமை கொள்ளுமளவு அதிகார பீடங்களில் அமர்ந்து அரசோச்சியவன், ஐம்பதாண்டு வீரன், அடிக்கடி, தன் மக்களைக்காண, ஈராக், ஈரான், போர்க்களம் சென்று
வந்த தீரன், பாகிஸ்தான் பிறந்த லாகூர் நகரிலே, அமைச்சராக, முதலமைச்சராக, இருமுறை கவர்னராக, லீக் தலைவராக, ஜனாப் ஜின்னாவின் தோழராக, வீற்றிருந்த இஸ்லாமியக் கோஹினூரை மரணமெனும் மாபாவி, நள்ளிரவிலே, கொள்ளை கொண்டான்; எங்கும் துக்கம் கப்பிக் கொண்டது, எவர் மனமும் துடிக்கிறது. இஸ்லாமிய உலகுக்கு மகத்தான நஷ்டம். திராவிடர் ஒரு துணைத் தலைவரை இழந்தார். இந்த உபகண்டம், ஓர் உன்னத குணமுடைய தலைவரை இழந்தது. உலகின் மணிகளிலே ஒன்று மறைந்தது. என் செய்வது.

காலையிலே, கலியாணச் செலவுக் கணக்கைப் பார்த்தார், மாலையிலே நண்பர்களுடன் அளவளாவினார், இரு குமாரர்களுக்கும், திருமணம் முடித்தார். தமது குமாரிகளுக்கும் மணம் நடத்தி வைத்தார் - மகிழ்ந்தார் - இருட்டும் நேரத்திலே இருதயத்திலே வலி என்றார், மருந்துண்டார், மஞ்சத்தில் படுத்தார், மாரடைப்பால், கண்கள் மூடிக்கொண்டன, நள்ளிரவிலே அவர், நம்மைப் பிரிந்து, சென்றார் - மறைந்தார்.

சர். சிக்கந்தரின் எந்தச் செயலும், திடுக்கிட வைக்கும் விதத்தேயாகும்.

பஞ்சாப் அரசியலிலே அவர், பத்துப் படிகளை ஒன்றாகத் தாண்டுவது போல், விரைவாகச் செல்வாக்குப் பெற்றார், பலதிறப்பட்டோரை ஒரே படையினராக்கி, யூனியன் கட்சியைக் கண்டார், கூட்டு மந்திரிசபை அமைத்து, அல்லாபக்ஷ் போல வார்தா வரத்துக்குத் தவங்கிடக்கவோ, வங்க முதலமைச்சர் போல் இந்துமகாசபையிடம் சிந்துபாடி நிற்கவோ இல்லை. சிக்கந்தரின் சித்திரக்கூடம் சின்னாட்களிலே சரியும் என்று ஆரூடம் கூறினர் அனேகர். அவரோ, அமைச்சராகவே, முதலமைச்சராகவே, மண்ணில் சாய்ந்தார்.

கடந்த ஜெர்மன் சண்டையின் போது அவர் ஒரு போர் வீரராகச் சேர்ந்தார். படையிலே ஒரு பிரிவுக்குத் தலைமை தாங்கினார்.

பாகிஸ்தானை அவர் எதிர்ப்பாரென்று கூறினர் அனேகர், அவரோ, ஜனாப் ஜின்னாவின் பாசறைக்குத் தளபதியாகவே கடைசிவரை நின்றார்.

லீக் தலைவரைக் கலக்காமல், வைசிராய், சர். சிக்கந்தரை, பாதுகாப்புக் கமிட்டியிலே அங்கத்தினராக்கிவிட்டார். லீக் தலைவர், வா! வெளியே! என்று கட்டளையிட்டார். ஒரு பக்கத்திலே இராசப்பிரதிநிதி, மறுபக்கமோ காயிதே அஃலம்! சர். சிக்கந்தர் தலைவரின் கட்டளையை ஏற்று, வைசிராயின் போக்கைக் கண்டித்து விட்டு, பதவியை ராஜிநாமாச் செய்து விட்டு, லீகிலே பிளவு கூடாதென்று கூறினார்.

அத்தகைய தலைவரை, இழந்தோம், என் செய்வோம்! லாகூர் நகரிலே உள்ள பிரபல பாக்ஷாயி மசூதியிலே, கவி இக்பாலின் கல்லறைக்கருகே, சர். சிக்கந்தரை அடக்கம் செய்யப் போகிறார்கள்.

கவி இக்பால், பக்கத்திலே சர். சிக்கந்தர், புரட்சிக் கவி ஒரு புறம் புன்னகை வீரன் பக்கத்திலே! அது லாகூர்! அந்த நகரம் பாகிஸ்தானில் இருக்க வேண்டாமா! மறைந்தவரின் மனதிலே கொந்தளித்துக் கொண்டிருந்த கருத்து அதுவல்லவா!

வீர முஸ்லீம் தோழர்காள், விம்ம வேண்டாம், அந்த இரு கல்லறைகளையும் கண்டு, காண இயலாதார் நெஞ்சினிலே கொண்டு, உறுதி கொண்டு, உழைத்துப், பாகிஸ்தான் பெறுமின்!

3.1.1943