அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கம்ப நண்பர்களுக்கு!
கம்பர் மாநாடு, இந்த ஆண்டும் நடைபெறப் போகிறதாம் நவம்பர் 10-ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு, முன்னாள் இந்திய மந்திரி முதல், இப்போதைய மாகாணப் பிரதமர் உள்பட, ரசிகமணிகள் யாவரும் கூடிநின்று நடத்துவிக்கப் போகிறார்களாம்.

கம்பரைக் காயும் வம்பிலிருந்து, கரையேற்ற வேண்டும் என்ற வீம்பு உணர்ச்சி காரணமாக, நடத்துவித்துக் காட்டப்படும் ஒரு நிகழ்ச்சி இது. குறள் போன்ற, திருவள்ளுவர் நாள் நடத்த, சிலப்பதிகாரச் செல்வர் தினம் கொண்டாட, புறநானூறு பற்றிப் பேச முன்வராத அழைத்தாலும் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் நபர்கள், சேர்ந்து - சேர்க்கப்பட்டு என்றாலும் பொருந்தும் - நடத்துவதுதான் இந்தக் கம்பர் விழா!

கம்பர் கவிஞன் என்று கூறிக் கொள்வதிலே நமக்குக் கஷ்டமில்லை. கம்பராமாயணத்தை ஒரு கதை என்று சொல்லட்டும், ஒப்புக் கொள்ள நமக்கும் அருவருப்பில்லை. கம்பரின் காவியத்திலே, கம்பரசத்திலே, ரசிகமணிகள் காணும் சுவையை அறியும் தன்மையோ உணரும் உள்ளமோ இல்லாதவந்தகளல்ல நாம். குற்றாலக் குறவஞ்சியில், கலிங்கத்துப்பரணியில், ஆகநானூற்றில், மணிமேகலையில் காவிய ரசனையையும், கற்பனைத் திறனையும் கண்டு மகிழும் நம் தமிழ் உள்ளம், கம்பரின் கவிதையிலே இருக்கும் சுவையை அறிய மட்டும் சுருங்கி விடாது, இன்னும் கூறவேண்டுமானால், “கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற வரிகளைக் காணும்பொழுது, ரசிகமணிகளைவிட, ஒருபடி அதிகமாகவே நம்மால் ரசிக்க முடிகிறது. நமக்கும், கம்பருக்கும் உள்ள கருத்து வேற்றுமைùல்லாம், அவர் காவியச் சுவை பற்றியதல்ல.

கம்பர் - கம்பநாட்டாழ்வார் இனது. கதையாகக் கருதப்பட வேண்டிய இராமாயணம் “தெய்வமாக்காதை” யாகச் சிருஷ்டிக்கப்பட்டது. கதாபாத்திரங்க்ள “தெய்வங்களாக” கருதும்படி செய்யப்பட்டது. நாட்டுப்புறத் திண்ணை முதல், நகரத்தில் மிளிரும் மாளிகைகள் வரை கம்பராமாயண காலட்சேபமும், பட்டாபிஷேகத் திருவிழாவும் நடத்தப்படுவது, இவை போன்றவைகளால் இன்னும் இந்நாட்டு மக்கள் சரித்திரம் வைத்துப் பின்னப்பட்ட ஒரு கதையைத் தங்கள் தெய்வத் திருவிளையாடல் புராணமென்று கருதிக் கொண்டு கிடப்பது - கருத்து வளராமல், ஒரு நாட்டிற்ள் குடிபுகுந்த வேறு இனத்தின் வரலறு பூசிமெழுகப்பட்டு மக்கள் மனதுக்குத் தெரியாமல் திரையிடப்படுவது, அதற்குக் காரணகர்த்தாக்களாக கம்பர் - கவிஞன் என்று கூறிக்கொண்டு நமது பண்டிதமணிகள், கம்பந்தாங்கிகளாக இருப்பது, ஆகியவைகளை நம்மைக் கம்பர் யார், என்று திரைகிழித்துக் காட்டவேண்டிய அவசியத்தை உண்டாக்கியதாகும். கம்பர் கவிதை நூல், ஒரு கதை. கடவுளின் கதையென்று புனைந்துரைக்கப்பட்ட, ஒரு நாடும் அதன் இனமும் வீழ்ச்சியடைந்த வரலாறு மறைக்கப்பட்ட, ஒருநூல் கம்பராமாயணம். அதற்குக் கட்டியக்காரனாக யிருந்தவர் கம்பர் என்று உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டியதன் விளைவாகவே கம்பராமாயணத்தை தீயிலிடுவோம்! என்ற கிளர்ச்சியும் ஏழுப்பப்பட்டது.

கம்பரை, ஆழ்வாராக்கி, தெய்வப்பட்டியலில் இடந்தேடித் தர முனைந்து முயலும் தர்ம கர்த்தாக்களே, கம்பரின் கடவுள்பக்தி சொட்டுவதா கம்பராமாயணம் பாரீர், என்று காட்டுமுகத்தான், பிழிந்து தரப்பட்டதுதான் “கம்பரசம்!”

ஆனால், இன்று கம்பராமாயணத்தின் தன்மை பற்றி மக்களிடையே சுயமரியாதைக் காரர்கள் ஆற்றிய தொண்டின் விளைவாக நன்கு விளங்கிவிட்டது. பக்தியும் சிரத்தையும் குன்றி, சாதாரண கவிதை நூல் என்ற அளவில், மாணவர்களும், இளைஞர்களும் கருதிப் படித்துவரத் தலைப்பட்டுள்ளனர். நாம், எந்த எண்ணம் ஈடேற வேண்டுமென்று எண்ணிக் கம்பரைக் காய்ந்தோமோ, அந்த எண்ணத்துக்கு வெற்றிக் கிடைத்துக் கொண்டு, வருகிறது. ஆகையால் 5-ந் தேதிய விடுதலை இதழில் பெயர் அவர்களால் எழுதப்பட்டிருக்கும் தலையங்கத்தில் எடுத்துக் காட்டப்படுவதுபோல்.

“இன்று அவைகளை நம்பிப் பிழைக்கின்ற, மேன்மை ஆடைகின்ற, உயர்வாழ்வு வாழ்கின்ற மக்கள் யாவரும் இச்சமயம் ஒன்று சேர்ந்து எதிர்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்.”

எப்படியாவது கம்பராமாயணத்தின் கடவுள் தன்மையைக் காப்பாற்றவும், அதன்மூலம் ராமன் ராமபிரானாகவும்! சீதை சீதாதேவியாகவும் இவர்கள் தேவ அவதாரங்களாகவும் கருதப்படும் நம்பிக்கை மறக்கடிக்கப் படாமலிருக்க வேண்டும் என்ற ஆசையும், பழைமைக்கு மரியாதையும், வைதிகத்துக்கு மதிப்பும் தேடித்தர விரும்பும் கூட்டத்தார், முன்னணியில் நின்று கம்பருக்கு விழா எடுக்க முனைந்து வருகின்றனர், போலீஸ் பாதுகாப்பு, பொதுமக்களைப் பரிசோதித்து உள்ளேவர அனுமதிக்கும் முறை ஆகியவை களைக் கைக்கொண்டு.

கம்பர் மாநாடு, நடத்தும் கண்ணியர்களின் அந்தரங்க ஆசையும், ஆர்வமும் கம்பரின் கவிதைபால் ஏற்பட்டதல்ல. அவர் காதையின்பால் அதில்வரும் தெய்வ சிருஷ்டிகள்பால் ஏற்பட்டதுதான் என்பதை நாம் அறிவோம்.

முன்னேறிக் கொண்டிருக்கும் உலகத்தில், செல்வாக்கும் வசதியும் பிரச்சார பலமும் இருக்கிறது என்கிற காரணத்திற்காக எத்தனை நாட்களுக்குத்தான் சரித்திர நிகழ்ச்சியை மூடித் திரையிட்டு வைக்க முயற்சிப்பது நீடிக்க முடியும்! முடியாது, உலகம் விழித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கம்ப நண்பர்கள் அறிவார்களாக.

(திராவிடநாடு - 13.11.49)