அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கம்பராமாயணம் என்றால்...
“கம்பன் எடுத்துக் கொண்ட கதையைப் பற்றிக் கவலையில்லை. அதை எப்படி அவன் உருவாக்கியிருக்கிறான்? எந்த ஒளியை வீசும்படி செய்திருக்கிறான்? என்பனவற்றை எண்ணிப் பார்த்தால், அவன் கடவுள் தன்மையை அடைந்துவிடுகிறான்”
என்ற விளக்கத்தை உள்ளடக்கிய தன்மைச் சொற்பொழிவுடனும், தமிழறியாத ஒரு அமைச்சரின் ஆரம்ப விழா வைபத்துடனும், மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில கம்பராமாயணத்தைப் பதிப்பிக்க வேண்டுமென்ற தீர்மானத்துடனும் இவ்வாண்டுக் கம்பர் மாநாடு நடைபெற்றிருக்கிறது.

கம்பன் ஒரு கவி எனவே, தன்னுடைய கவித்திறமையைக் காட்டுவதற்கு வழி எது என்று எண்ணியதின் விளைவே, வால்மீகி இராமாயணம் கம்பராமாயணமாக மாறியதாகும். கவி புனைவதில் திறமை பெற்றிருந்த கம்பன், தன்னுடைய கவிதா திறமையைக் காட்ட வேறுவழி எதுவும் கிடைக்காமல், வேறொருவர், மற்றோரு மொழியில் பாடி வைத்திரந்த ஒரு கவிதையை எடுத்து வைத்துக் கொண்டு, அதன் வாயிலாகத் தன்னுடைய கவிதா திறத்தைக் காட்ட முனைந்ததே முதல் பெருந்தவறாகும்.

சங்க காலக் கவிஞர்களிலிருந்து இன்றைய கவிஞர்கள் வரை - கவிஞர்கள் என்று மதிக்கப்படக்கூடிய எவரும் இரவல் கவிதையை இதாரமாக வைத்துத் தம்முடைய கவிதா திறத்தைக் காட்டியதே இல்லை. அதிலும் கம்பர் போன்ற சிறந்த கவிஞர்கள் இன்னொரு மொழியிலுள்ள கவிதையை இரவல் வாங்கி அதன் மூலம் தனது கவிதா திறத்தைக் காட்டுவது தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் மாற்றமுடியாத மாசை உண்டாக்குவதாகும். தமிழ் நாட்டிலேயே சிறந்த கவிஞர்கள், எல்லோரும் தங்களுடைய கவிதா திறத்தையும் கற்பனா ஆற்றலையும் தங்கள் நாட்டு வரலாறுகள் மீது வைத்தே காட்டியிருக்கிறார்கள். திருவள்ளுவர் போன்ற உலகம் போற்றும் கவிஞர்கள் எதனையும் இரவல் வாங்காமல், தங்கள் சொந்த அறிவையும் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டே உலகம் முழுவதற்கும் பயன்படக்கூடிய சிறந்த அறிவு நூல்களைக் கவிதை வடிவில் இக்கித் தந்துள்ளார்கள்.

ஆனால், கம்பருடைய கவிதை நூல், அவர் வாழ்ந்த நாட்டின் வரலாறுமன்று, அவருடைய சொந்தக் கற்பனைமயுமன்று, மொழிபெயர்ப்பு மன்று.

கம்பரால் இக்கப்பெற்ற இராமாயணம், வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்பாய் இருக்க, அதனை, மொழிபெயர்ப்பு நூல் அல்ல என்று எப்படிச் சொல்லலாம் என்பதாகச் சிலர் கேட்கக்கூடும். கம்பராமாயணம் உண்மையான மொழி பெயர்ப்பு நூல் அல்ல என்பதைக் கம்ப நண்பர்களே ஒப்புக்கொள்ளும்போது, நாம் அதனை எப்படி ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்று ஒப்புக் கொள்ள முடியும்?

“மக்களின் மனோநிலையை நன்கு தெரிந்துகொண்டு, அந்தக் காலத்திற்கேற்பக் கம்பர் கவி புனைந்துள்ளார்”

என்று, கம்பர் நாட்டுத் தலைவர் தோழர் மீனாட்சி சுந்தரனார் அவரக்ளே குறிப்பிட்டுப் பேசியுள்ளார், எனவே, கம்பர், தான் வாழ்ந்த காலத்திலிருந்த மக்கள் எந்தவிதமான மனோ நிலையுடன் இருந்தார்களோ, அந்த மனோநிலைக்கு ஏற்பக் கவி புனைந்தாரேயன்றி, வால்மீகி இராமாயணத்தை அதில் உள்ளபடி மொழி பெயர்க்கவில்லை என்பது நன்கு தெளிவாகும்படி எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கம்பராமாயணம் ஒரு மொழிபெயர்ப்பு நூல் அல்ல என்பதை மேலும் வலியுறுத்தும் முறையில் தோழர் மீனாட்சி கந்தனார் அவர்கள்.

“சீதையைக் கற்புக் கணிகலமாகவே எடுத்துக் காட்டுகிறார் கம்பர்.”

என்று கூறுவதன் வாயிலாகக் கம்ப ராமாயணம் ஒரு மொழிபெயர்ப்பு நூலல்ல என்பதை நிலைநாட்டியுள்ளார். அதாவது, வால்மீகியால் கற்புக்கணிகலமாக்கப்படாத சீதையைக் கம்பர் கற்புக்கணிகலமாக்கியுள்ளார் என்று பேசியுள்ளார். வால்மீகி சீதையைக் கறப்புக்கணிகலமாக்கவில்லை என்பதும், கம்பராலேயே சீதை கற்புக்கலமாக்கப்பட்டாள் என்பதும் இதானல் நன்கு தெளிவாகின்றது. தமிழ்நாட்டு மக்களின் மனோநிலை, கம்பர் காலத்தில், கற்பை அணிகலமாகக் கொண்டிருந்ததாலேயே, அந்நிலைக்கேற்ப வடநாட்டுச் சீதையைப் பற்றித் தமிழ் மக்கள் கம்பராமாயணத்தில் படிக்கும் போது சீதையைக் கற்புக்கணிகலமாகப் பாடாவிட்டால், தமிழ்மக்கள் ஆவளைப்பற்றி இழிவாக எண்ணுவது மட்டுமன்றி, இப்படிப்பட்ட ஒரு கதையை ஏன் கம்பர் தமிழில் பாடினார் என்று தன்னையும் இழிவாகப் பேசுவார்களே என்று அஞ்சியதாலேயே, கம்பர் சீதையைக் கற்புக்கணிகலமாக வைத்துப் பாடியுள்ளார் என்ற உண்மையைத் தோழர் மீனாட்சிசுந்தரனார் அவர்கள் நன்கு விளக்கிப் பேசியுள்ளார்.

வால்மீகி சீதையைக் கற்புக்ணிகலமாகப் பாடியிருந்தால், கம்பர், சீதையைக் கற்புக்கணிகலமாகவே எடுத்துக் காட்டுகிறார் என்று கூறவேண்டியதே இல்லை. வால்மீகி செய்யாத ஒன்றை, அதாவது, வால்மீகியால் கற்புக்கணிகலமாக்கப்படாத சீதையைக் கம்பர், தன்நாடடுப் பண்புக்கேற்பக் கற்புக்கணிகலமாக்கி இருக்கிறார் என்பதுதான் அந்த வாசகத்தில் உள்ள பொருளாகும். வறிதே கற்புக்கணிகலமாக என்று கூறாமல், ஒன்றன் பொருளை நன்கு வலியுறுத்தும் முறையில் பயன்படுத்தப்படும் ஐ காரத்தை முன்னிலைப்படுத்திக் கற்புக்கணிகலமாகவே என்று அழுத்தந்திருத்தமாக விளக்கியுள்ளார்.

சீதை இராவணனால் தூக்கிச் செல்லப்பட்டவள் என்ற காரணத்தை வைத்தக் கொண்டு சிலர் அவள்மீது தவறான குற்றத்தைச் சுமத்திவிட்டால், சீதையைக் கடவுளாக்க எண்ணிய கம்பரின் நோக்கம் சிதைந்துவிடுமோ என்ற அச்சமும் அவருக்குண்டாகி, எப்படியாவது சீதையைக் கற்புக்கணிகலமாகக் காட்டித் தீரவேண்டிய அவசியத்தில் அவர் சீதைக்குக் கற்புத் தன்மை கற்பித்திருக்கலாம். எப்படியோ எதற்காகவோ கம்பர் சீதையைக் கற்புக் கணிகலமாக்கி விட்டார். அந்த வகையில் நாமும் கம்பரைப் பாராட்டுகிறோம். கற்பின் உயர்வைப் பேணி நடக்கும் தமிழ் மக்கள் உள்ளங்களில் கற்பிழந்த மங்கையரின் வரலாறுகள் இடம் பெறாமல் இருக்கக்கூடிய முறையில் சீதையைக் கற்புடையவளாக்கிக் காடடிய கம்பரின் கவிதா திறத்தை நாம் பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்? ஒருவேளை வால்மீகிக்கு இந்நிகழ்ச்சி சீற்றத்தை உண்டாக்கலாம். நம்மால் கற்புக்கணிகலமாக்கப் படாத ஒரு பெண்ணை, நம்முடைய உடன்பாட்டைப் பெறாமல் கம்பர் எப்படி ஆவளைக் கற்புக்கணிகலமாக்கியிருக்கலாம் என்ற சினக்கக் கூடும். நம்முடைய நூலை மொழி பெயர்த்த கம்பர், நம்மால் எழுதப்படாததைப் புகுத்தியும் எழுதப்பட்டதை மாற்றியும் என்பாடவேண்டும் என்று கடியலாம்.

ஆனால், நம்முடைய பண்பாடு அப்படிப்பட்டதல்ல. எதை யார் எழுதினாலும், அது மக்களுக்குப் பயன்பட்டு நல்ல ஒழுக்கத்தையும் அறிவையும் உண்டாக்கக் கூடியதாக இருக்கவேண்டுமென்பதேயாகும்.

இனி, கம்பர் இவ்வாறு பாடியதற்காக வால்மீகி ஒருவேளை சினங்கொள்ளக் கூடும் என்று நாம் கூறியபோதிலும், உண்மையிலேயே அவருக்கும் அந்த உரிமை ஏற்படக் காரணம் இல்லையென்றே தெரிகிறது. எப்படியென்றால், வால்மீகியால் பாடப்பட்ட இராமாயணம் கூடி உண்மையான வரலாற்றின்பாற்பட்டதல்ல என்பது புலனாகின்றது. கம்பர் மாநாட்டுத் தலைவர்.

“வால்மீகி தனது இராமயணத்தில், கம்பர் காலத்துக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சமூக இசார பழக்க வழக்கங்களைப் பற்றி வருணித்திருக்கிறார்.”
என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அதாவது, வால்மீகி தம்முஒடய காலத்துப் பழக்க வழக்கங்களையும் சமூக இசாரங்களையும் அடிப்படையாக வைத்துத்தான் இராமாயணத்தைப் பாடியிருக்கிறார் என்பதுதான் இதன் விளக்கமாகும். அதவுமன்றி, வால்மீகியால் எழுதப்பட்ட இராமாயணத்தில் காணப்படும் நிகழ்ச்சிகள் எல்லாம் வால்மீகி காலத்திலோ அல்லது அவருக்கு முற்பட்ட காலத்திலோ நடைபெற்ற நிகழ்ச்சிகள் அல்ல என்பதும், இராமாயணத்திலுள்ள நிகழ்ச்சிகள் எல்லாம், வால்மீகியால் இராமாயணம் எழுதப்பட்ட பின்னரே நடைபெற்றன என்பதும் இராமாயணம் பற்றிக் கூறப்படும் சில விளக்கங்களாகும்.

எனவேதான், மொத்தத்தில் இராமாயணம் மக்களுக்குத் தேவையும் பயனுமற்ற ஒரு நூல் என்று நாம் கூறுகிறோம். வால்மீகியால் எழுதப்பட்ட இராமாயணம், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் நடப்பதற்கு முன்னரே, இப்படியிப்படி நடக்கும் என்ற யூகத்தின் பேரில் கற்பனையாக எழுதப்பட்டதால், அதனை உண்மையென்று ஒப்புக்கொள்ள முடியாததென்றும், கம்பரால் எழுதப்பட்ட இராமாயணம், வால்மீகியால் எழுதப்பட்ட இராமாயணத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கற்பனையாக இருப்பதால் அதனையும் ஒப்புக் கொள்ள முடியாதென்றும் கூற வேண்டியவர்களாக இருக்கிறோம். வால்மீகி இராமாயணமாவது, அதனைப் படிப்பவர்களுக்கு, ஒரு அரசன் இன்னொரு அரசனோடு போர் தொடுத்து வெற்றி கொண்டான் என்ற ஆளவோடு முடிகிறது. வால்மீகி இராமாயணத்தில் இராமன் கடவுளாக்கப்படவில்லை - சீதை கற்புக்கணிகலமாக்கப்படவில்லை. ஆனால் கம்பராமாயணத்தில், இராமன் கடவுளாக்கப்பட்டும் - சீதை கற்புக்கணிகலமாக்கப்பட்டும் - திராவிட மன்னனான இராவணன் இரக்கமில்லா ஆரக்கனாக்கப்பட்டும், அதே சமயத்தில் அவனுடைய தம்பி விபீடணன் ஆழ்வாராக்கப் பட்டும், அனுமான் ஆண்டவனாக்கப்பட்டும் - வாலி கொடியவனாகக் கருதிக் கொல்லப்பட்டும் - இந்நிகழ்ச்சிகளை எழுதிய கம்பரும் ஆழ்வாராக்கப்பட்டதாகவுமன்றோ கம்பராமாயணம் காட்சியளிக்கிறது. எனவேதான், வால்மீகி இராமாயணத்தைக் கண்டால் ஏற்படாத சீற்றம், கம்பராமாயணத்தைக் கண்டால் கருத்துத் தெளிவுள்ள எவருக்கும் ஏற்படுகிறது - அப்படிப்பட்ட பொய்மையும் - புளுகும் - கொடுமையும் நிறைந்துள்ள ஒருநூலை அழிக்க வேண்டுமென்றும் தோன்றுகிறது.

எனவேதான், கம்பர் மாநாட்டுத் தலைவர் கூறியதுபோல், கம்பன் எடுத்துக் கொண்ட கதையைப் பற்றி நாமும் கவலைப்படாமல், கம்பர் அதனை உருவாக்கிய முறையையும், அதில் வீசப்படும் ஒளியின் தன்மையையும் நாம் நன்கெண்ணிப் பார்த்து அவை நம்மக்களின் அறிவையும் பண்பையும் பாழ்படுத்தும் முறையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதை கருதிக் கண்டிக்கிறோம்.

சாதாரண ஒரு அரசன் கதையைக் கம்பர் தன்னுடைய கவிதாத் திறத்தால் வழிபாட்டிற்குரிய “பக்தி நூல்” இக்கியதைக் கண்டிக்கிறோம். நம்முடைய நாட்டை நல்லமுறையில் ஆண்டு நமக்கு நன்மைகள் பல செய்த நம்முடைய அரசர்களான சேர-சோழ-பாண்டியர்களை நாம் கடவுளராக்கி வழிபடாமல் இருக்கும் மக்கட் பண்பாட்டிற்கு ஊறுதேடும் முறையில் ஆயோத்தியை ஆண்ட ஒரு அரசனை ஆண்டவனாக்கி, அவனுடைய வரலாற்றைக் கூறும் நூலைப் பக்தி நூலாக நம்மை எல்லாம் இராம வழிபாட்டுக்குரியவர்களாக்கும் கம்ப ராமாயணத்தைக் கருத்தில் சிறிதளவாவது தெளிவும், மனிதாபிமான உணர்ச்சியுமுள்ள யார்தான் ஒப்புக் கொள்ள முடியும்?

கம்பன், நம்மவன், கவிஞன் என்பதற்காக அவன் எது செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? பாராட்ட வேண்டுமா என்பது கம்ப நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

நம்ம கம்பன் நமக்குச் செய்த நன்மைதான் - கம்பராமாயணத்தில் நன்கு தெரிகிறதே! ஆயோத்தி மன்னன் ஆண்டவனாக்கப்பட்டான்! இலங்கை மன்னன் இரக்கமமில்லா ஆரக்கனாக்கப்பட்டான்! சங்ககாலப் புலவர்கள், நெற்றிக் கண்ணைக் காட்டிலும் குற்றம் குற்றமே என்ற கடவுளையே கண்டித்தார்கள்! கம்பனோ ஆரிய மன்னன் திராவிட மன்னனை இழிவுபடுத்தித் தோற்கடித்தா, எனவே ஆரிய மன்னனாம் இராமனை அன்புடன் அடிபணிந்து வணங்குங்கள் என்று இணையிட்டான்! எனவே கம்பனை வாழ்த்தி, கம்பராமாயணத்தைப் போற்றி வாழுங்கள் என்று இன்றும் நமக்கு அறிவுரை புகட்டச் சிலர் தமிழ்நாட்டில் இருக்கின்றனர் என்றால் இதைவிட ஆச்சரியம் வேறென்ன இருக்கமுடியும்!

கம்பன் கடவுள் தன்மையை அடைந்துவிட்டான் என்பதாகக் கம்ப நண்பர்கள் கூறிக் களிப்புக் கடலில் மூழ்குகின்றனர். தமிழ் மொழியை வளர்த்து, தமிழர் நாகரிகத்தைப் பேணி நாட்டின் உயர்வுக்கு நலம்பல செய்த சங்க காலப் புலவர்களுக்குக் கடவுள் தன்மை அளிக்காத நாம் - ஆயோத்தி இராமன் கதையைப் பாடிய கம்பனுக்குக் கடவுள் தன்மை கற்பிக்க வேண்டுமாம்! எப்படி இருக்கிறது கம்ப நண்பர்களின் போக்கு?

“கம்பன் இராம கதையை எப்படி உருப்படுத்தியிருக்கிறான்?” என்று கேட்கிறார் கம்பர் மாநாட்டுத் தலைவர். கம்பன், ஆயோத்தி அரசன் இலங்கை அரசனைப் போரால் வென்றதாகக் கூறப்படும் சாதாரண ஒரு கதையைப் பக்தி நூலாக்கும் பாழான காரியத்தைச் செய்வதன் வாயிலாகத் தமிழ் மக்களின் தன் மதிப்போடு கூடிய சிறந்த பண்பாட்டிற்கே நீங்காத மாசை உண்டாக்கியிருக்கிறான் என்று கூறுகிறோம். மேலும் அவர் கேட்கிறார், “கம்பன் தான் எடுத்துக் கொண்ட கதையில் எந்த ஒளியை வீசும்படி செய்திருக்கிறான்” என்று. கம்பன், மனிதனை மகேசுவரனாக்கும் மதியீனத்தைச் செய்வதன் வாயிலாகத் தன்னுடைய அறியாமையைத் தவிர வேறு எந்தவிதமான ஒளியையும் நமக்குக் காட்டவில்லை என்று நாம் கூறுகிறோம். இனிக் கம்பராமாயணத்தில் ஏதாவது ஒளி வீசுகிறதென்றால், அது, திராவிட மன்னனாகிய இராவணன் சீதையிடம் நடந்து கொண்ட பெருந்தன்மையாகிய ஒளியைத் தவிர வேறு எதனையும் நாம் காணமுடியாது. சீதையைத் தூக்கிக் கொண்டு போன இராவணன், சீதையின் உடலைத் தீண்டாமல், ஆவளை, அவள் இருந்த பர்ண சாலையுடன் சேர்த்தே தூக்கிக் கொண்டு போனான் என்ற சொல்லப்படுவதை நோக்கும் போது அவனுடைய பெருந்தன்மையை என்னென்பது. இராமனும் இலக்குவனம் சூர்ப்பனகையை மானபங்கப்படுத்தி மிருகத் தன்மையும், இராவணன் சீதையிடம் காட்டிய மனிதத் தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் போதும்.

நாம் கூறும் இவ்வுண்மையைக் கம்பர் மாநாட்டுத் தலைவர் தோழர் மீனாட்சிந்தரம் அவர்களும் ஒப்புக் கொள்கிறார்.

“கம்பரின் இராவணன் ஒரு தீமையையும் செய்யவில்லை. சீதையைக் கொண்டு சென்ற போதிலும், அவன் சீதையை ஒன்றும செய்யவில்லை”
என்று கூறுகிறார். என்றாலும் அவர் ஒரு முக்கியமான உண்மையை மறைத்திருக்கிறார். அதாவது, இராவணன் தீமை எதுவும் செய்யவில்லை என்றும் கூறவேண்டும், அதே சமயத்தில், இராவணன் தீமையே செய்தான் என்ற போதிலும், கம்பர் அவனால் செய்யப்பட்ட தீமையை எடுத்துக் காட்டாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டார் என்பதையும் கூறவேண்டும் என்ற முறையில் பேசியிருக்கிறார் அதாவது,

“கம்பரின் இராவணன் சீதையை ஒன்றும் செய்யவில்லை” என்று கூறுகிறார். இதன் பொருள் என்ன? கம்பரின் இராவணன் தீமை செய்யவில்லை, வால்மீகியின் இராவணன்தான் தீமை செய்தான் என்பதன்றி இதற்கு வேறென்ன பொருள் இருக்க முடியும்? வால்மீகியால் தீயவனாகக் காட்டப்பட்ட இராவணன், கம்பரால் நல்லவனாகக் காட்டப்பட்டதற்குக் காரணம் என்ன? உண்மையாகவே கம்பருக்கு அந்த நல்லெண்ணம் இருந்துதான் அவ்விதம் செய்தாரா? கம்பரால் கையாப்பட்ட முறை எதனை அடிப்படையாகக் கொண்டதென்பதை அறிய முடியாத இன்றைய புலவர் பெருமக்களின் திகைப்பைக் கண்டு உண்மையிலேயே நாம் இரக்கப்படுகிறோம்.

சீதைக்கு உயர்வும் கடவுள் தன்மையும் காட்டுவதையே அடிப்படை நோக்கமாகக் கொண்ட கம்பர், சீதையை இராவணன் தொட்டான் என்று கூறினால், அது அவளுடைய கற்புத் தன்மைக்கு இழுக்கை உண்டாக்கி, ஆவளைக் கடவுள் தன்மையுடையவளாக்க முடியாது போகுமே என்று கருதியதாலேயே, இராவணன் சீதையை அவளிருந்த பர்ணசாலையுடன் தூக்கிக் கொண்டு போனான் என்று கம்பர் புனைந்துரை கூறிப் புளுகியுள்ளார் என்பதனை உணராதாலோ அல்லது உணர்ந்தும் உள்ளதை உள்ளபடி உரைக்க வேண்டுமென்ற மனஉறுதி இல்லாததாலோதான் இன்றைய புலவர்கள் இரண்டுங் கெட்டான்களாக உள்ளனர்.

நாம், சீதையைப் பற்றி வால்மீகி உறுவதையோ, கம்பர் கூறுவதையோ ஒப்புக் கொள்வதில்லை. ஏனென்றால் இரண்டுபேரும் உண்மையை உரைக்கமுடியாத நிலையில் நின்றே இராமாயணம் பாடியுள்ளனர். வால்மீகி, இராமாயண நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முன இராமாயணம் பாடியவர். கம்பர், வால்மீகி இராமாயணத்தை என்ற நூலே நமக்கு வேண்டாம் என்று கூறுகிறோம். கம்பர் ஒரு கவிஞன் என்பதற்காக வேண்டுமானால், அவரைப் போற்றுவோம், ஆனால், ஒரு கவிஞன் - தமிழன் தன்நாட்டு வரலாறுகள் - மக்கள் அறிந்த பயன்படக்கூடிய வகையில் எத்தனையோ இருக்க, ஆவற்றையெல்லாம் தன்னுடைய கவிதா திறத்தால் உருவாக்காமல், ஏன் ஒரு வடநாட்டு மன்னனின் கதையை இரவல் வாங்கித் தன்னுடைய கவிதா திறத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக அவரைக் கண்டிப்போம், அதிலும் ஒரு அரசனை ஆண்டவனாக்கிக் காட்டுமளவுக்கு அவருடைய கவிதா திறம் பயன்படுத்தப்பட்டதே என்பதற்காக அவரை வெறுப்போம தன் இனத்தைச் சேர்ந்த ஒரு மன்னன் (இராவணன்) ஒரு தீமையும் செய்யவில்லை என்பதை அறிந்திரந்தும், அவனை இரக்கமில்லா ஆரக்கனாக்கியதற்காக அவரைக் கடிவோம் என்ற இன்னபிற காரணங்களைக் காட்டியே நாம் கம்பராமாயணத்தைக் குறை கூறுகிறோம் என்பதைக் கம்பராமாயணமென்றால் உடனே கன்னத்தில் போட்டுக் கொள்ளும் கருத்தில் தெளிவற்றவர்கள் உணரவேண்டும்.

கம்பர் மாநாட்டுக்குத் தலைமை வசித்த தோழர் மீனாட்சி சுந்தரம் அவர்கள், இராவணன் தீமை எதும் செய்யவில்லை என்பதை வலியுறுத்திப் பேசியபொழுது, அவனால் செய்யப்பட்ட ஒரு குற்றத்தையும் எடுத்துக் காட்டியிருக்கிறார். என்ன அந்தக் குற்றம்?

“சாம்ராச்சிய வெறியினால் மற்ற மக்கள் எல்லோரையும் அடிமைப்படுத்தி ஆசுர அரசு நிறுவவேண்டும் என்ற ஒரே குற்றத்தைத்தான் அவன் செய்தான்.”

இது, இராவணனால் செய்யப்பட்டது ஒரே ஒரு குற்றம்தான் என்பதற்கு மாநாட்டுத் தலைவர் தரும் விளக்கமாகும். இந்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு எந்தவிதமான குற்றத்தையும் இராவணன் செய்யவில்லை. இந்தக் குற்றத்தைச் செய்ததற்காகவா இராவணனை ஆரக்கனாக்கி, இராமனைக் கடவுளாக்க வேண்டுமென்று நாம் கேட்கிறோம். சாம்ராச்சிய வெறிதான் இன்றும் இருக்கிறதே! பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், ஒரு அரசன் இன்னொரு அரசனைத் தோற்கடித்துத் தானே ஆட்சி புரிய வேண்டுமென்ற ஆசை இருந்ததில் வியப்பென்ன இருக்க முடியும்? அன்று, இலங்கை மன்னன் ஆயோத்தியை ஆட்சிபுரிய விரும்பியது குற்றமென்றால், சாம்ராச்சிய வெளி என்றால், இன்று, டில்லி சென்னையையும் பிறமாகாணங்களையும் அடக்கி இளவிரும்புகிறதே! இது எந்த வெளியின் பாற்பட்டதென்று நாம் கேட்பதில் தவறென்ன என்று கேட்கிறோம்.

இதற்கு முன்பெல்லாம், இராமனுக்குக் கடவுள் தன்மை கற்பிப்பதற்காக, கம்பராமாயணத்துக்கு உயர்வு தேட முனைந்தவர்கள் எல்லோரும் என்னென்னவோ குற்றங்களைச் சுமத்தி இராவணனை இழிவுப் படுத்திக் காட்டினார்கள். ஆனால், இப்போது இராவணனால் செய்யப்பட்ட குற்றம் சாம்ராச்சிய வெறி ஒன்றுதான் என்ற அளவுக்கு வந்துவிட்டார்கள்.இதுவரையில் கம்ப நண்பர்கள் மீது நமக்கிருந்த வெறுப்பு ஓரளவு குறைந்துவிட்டதென்று கூடச்சொல்லலாம். அந்த அளவுக்கு அவர்கள் இறங்கி வந்துள்ளார்கள்.

“குற்றங் குறைகள், இடைச்செருகல்கள் முதலியவையற்ற பிரமாணிகமான கம்பராமாயணப் பதிப்பு என்று வெளியிட வேண்டும்.

என்று கம்பர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். எனவே, இப்போதுள்ள கம்பராமாயணத்தைக் கம்ப நண்பர்களே ஒப்புக் கொள்ளவில்லை என்பது இத்தீர்மானத்தால் நன்கு தெளிவாக்கப்பட்டு விட்டது. ஆனால், கம்ப நண்பர்களுக்கும் நமக்குமுள்ள கருத்து வேறுபாடு, கம்பராமாயணம் என ஒன்று இப்போதிருப்பதுபோல் தமிழ் மக்களை இழிவுபடுத்தும் முறையில் இருக்கவேண்டுமா? தேவையா என்பதில்தான் இருக்கிறது. முன்பெல்லாம் கம்பராமாயணத்தைக் குறை கூறுவதா, ஆடுக்குமா இந்த ஆக்கிரமம் என்று நம்மை நையாண்டி செய்தவர்களே, இன்று கம்பராமாயணம் மக்களின் நம்பிக்கைக்குரியதாக இல்லை என்கிறார்கள் என்றால், இன்னும் சில காலத்துக்கு நம்முடைய பிரசாரத்தைத் தளரவிடாமல் செய்து வருவோமானால், இனிப் புதிதாகப் பதிப்பிக்கும் கம்பராமாயணத்திலும் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால், ஆவற்றிற்கும் சமாதானம் சொல்லிக் கொண்டிருப்பதைவிடக் கம்பராமாயணம் என்பதாக ஒன்று நாட்டில் இருக்க வேண்டிய அவசியமும் தேவையும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். கம்பராமாயணம் இல்லாமல் போவதால், கம்பருடைய கவிதா திறம் கெட்டுவிடாது என்று எண்ணவும் செய்வார்கள். கம்பராமாயணம், வேண்டுமானால், அதன் கவிநயத்தை நுகர்ந்து இன்புறும் முறையில், “கம்பராமாயணக் கவிநயம்” என்ற பெயரோடு அதிலுள்ள ஆபாசங்களும், அறிவுக் கொவ்வாத பகுதிகளும் நீக்கப்பட்டு இருந்தால் அதுவே போதும் என்ற அளவுக்கு வந்துவிடுவார்கள். அதுவரை நம்முடைய பணியைத் தொடர்ந்து நடத்தத்தான் வேண்டும். நம்முடைய பிரசாரங்கள் எல்லாம் முதலில் வெறுக்கப்பட்டும் நையாண்டி செய்யப்பட்டுமே வந்து கடைசியில்தான் வெற்றி பெற்றிருக்கின்றன என்பதை நாடு நன்கறியுமாதலால், கம்பராமாயணத்தைப் பொறுத்த வரையிலும் நாம் வெற்றியே காண்போம் என்ற உறுதியும் நம்பிக்கையும் நமக்கிருக்கிறது.

(திராவிடநாடு - 20.10.49)