அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கனவில் கவிதா மண்டலம்!

அறிமுகம்
என்னை, நானாகவே உங்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். உங்களுக்குக் கொஞ்சம் ஆவலாக இருக்குமல்லவா, யாரப்பா இவன் கனவிலே கவிதா மண்டலத்தைக் கண்டவன் என்று தெரிந்து கொள்ள! சொன்ன உடனே, “ஓ! நீயா!” என்று நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடிய, மேல்நிலைகட்காரனல்ல! இவர்தான் எட்டுக்குட்டி மிட்டாதாரர் என்று, யாரையாவது அறிமுகப்படுத்தினால், உடனே முகத்திலே, ஒளிவிடும், கைகூப்பும், கனிவு வழியும், முன்னாலே அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிராவிட்டால் கூட, “ஆஹா! ஆனேக காலமாக, மிட்டாதாரரைப்பற்றிக் கேள்விபட்டிருக்கிறேன் என்று கூறத்தோன்றும் சகஜம், நானோ அப்படி ஒரு மேட்டுக் குடியினனல்ல, நான் ஒரு சாமான்யன் என்னை நீங்கள் காணவேண்டுமானால், சிரமப்பட வேண்டியதில்லை. நிலக்கண்ணாடி எதிரேபோய் சற்றே நில்லுங்கள் - கண்ணாடியிலே தெரிகிறதல்லவா உருவம்! - அது நான்தான்!!

தூங்குமுன்
கனவு கண்டேன் என்றால் தூக்கத்தில்தான்! தூங்குமுன் என்ன செய்தேன்? என்ன செய்கிறோம்? ஏதேனும் வேலை, வாழ்வை நடத்த ஒரு தொழிலில் உடுபடுகிறோம். அதுபோலிருந்த நான், அன்றோர்நாள், ஒய்வு பெற்றேன், நண்பர் சிலர் கொடுத்து புத்தகங்களைப் படித்தேன், மாலையிலே கொஞ்சம் உலவவும் சென்றேன், உள்ளம் களிப்படைய அதுவே வழி என்று எண்ணினேன், வீடு திரும்புபோதோ, விசாரம் என்ற பெரிய பாரத்தைச் சுமந்து கொண்டுவந்தேன், சாய்ந்தேன், புரண்டேன், தூங்கினேன் நெடுநேரத்துக்குப் பிறகு, நித்திரையில் கண்டேன், கவிதா மண்டலத்தை.

விசார மூட்டை
உலகமென்றால் நமது அரண்மனை உத்யானவனம் போலத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த சித்தார்த்தருக்கு உள்ளத்தை உருக்கும் துக்கக்காட்சிகள் தெரியவே, அவர் துறவு பூண்டார் என்று கூறுகிறார்களே, அதுபோல அல்ல, ஏன் நிலை அப்படி இருந்தால்தான் புத்தராகி இருக்கலாமே! உலகிலே உள்ள கஷ்டங்கள் தெரியும், என்பாடும் அதுதான், ஆனாலும் அன்று என்னவோ அந்தக் கஷ்டங்கள் அவ்வளவும் உருண்டு திரண்டு ஒருருவாகி ஏன் எதிரே நின்று மிரட்டுவது போலாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் உழைப்பு! யாரைப் பார்த்தாலும் உழைப்பு! வேலை! வேலை! ஐதோதோ செய்து கொண்டே இருக்கிறார்கள், ஒய்வின்றி, இவ்வளவு ஆலைச்சலும், எதற்கு? வாழ்வதற்காம்! என்ன வாழ்க்கை, அவர்களுக்கு!

ஒரு மாது, அறைக்கிறாள், ஒரு மாது சுமந்து செல்கிறாள், ஏதோ அவன் மண்பாண்டங்கள் செய்கிறான், மற்றொரு மாது ஏதோ இடித்துக் கொண்டிர்ககிறாள், அங்கொருவன் கூடைமுறம் முடைகிறான், மற்றொருவன் அங்கத்தை வளர்க்கப் பிச்சை எடுத்துப் பங்கப்படுகிறான், இடுப்பில் குழந்தையுடன் எதையோ பாடிக் கொண்டு, பிச்சை எடுக்கும் பிழைப்பை நடத்துகிறாள், மற்றோர் மாது, எங்கும் வேலை மயம், எல்லாம் வாழ்வதற்காம்! என்ன வாழ்க்கை இது!

கொட்டும் மழை, நடுக்கும் குளிர், கருக்கும் வெயில், எதுதான் பாடுபடுபவனைத் தடுக்க முடியும்! பருவத்தின் கர்வச்சேட்டையை அவன் பயத்தோடு பார்ப்பதில்லை. வாடை வீசினால் என்ன! அவன் இயற்கையின் கோபத்தைக் கண்டு அடங்கு வதில்லை! ஓயமாட்டான், உழைப்பான்! ஒய்ந்தால் சாய்ந்தான்! வேலை செய்தாக வேண்டும், மூச்சு இருக்குமட்டும், மூச்சு இருக்க!

இரவின் இனிமைக்கண்டு சொக்குவானா? இல்லை! நிலவின் ஓயில், அவனை நிறுத்துமா? இயற்கை எனும் உல்லாசிக்கு, கவியும் வீரனும், ஓவியனும் அடிமையாவர்! அவன், உழைப்பாளி! அடிமையானவன்! இவ்வளவு வேலைக்குப் பிறகும் அவன் காண்பதென்ன?

வேலை! வேலை! வேலை!!
என் வேலைக்கு ஒய்வுமில்லை, ஒழிவுமில்லை.
ஆனால் என் வேலைக்குக் கூலி என்ன?
வைக்கோற்பாய் - ரொட்டித்துண்டுகள்
கந்தல் உடை - ஓடிந்தபீடம்
ஒழுக்குக்கூரை - ஒன்றும் விரியாத்தரை
வெறுஞ்சுவர் - சித்திரமும் இல்லை
சிற்சில சமயம் சுவரில் ஏன்நிழல் விழும்
அதுதான் சித்திரம்! அதுதான் ஆறுதல்!

என்று, நான் முன்பு படித்த ஒருகவிதை நினைவிற்கு வந்தது. விசாரம் பெரும்பாரமாயிற்று வீடு திரும்பினேன், படுத்தேன், புரண்டேன், கனவிலே கவிதா மண்டலம் சென்றேன்.
ஏழுப்பினார்

பாடுபட்டு அலுத்தவர்கள் தூங்கிக் கொண்டிருக்கக் கண்டேன் ஏன் முதுகைக் தட்டிக் கொடுத்தார் ஒரு முதியவர் ஆச்சரியத்தை என்னென்பது கவி அரசர் இக்பால் என்னைத் தட்டியவர்.

“தூங்குகிறார்கள்” என்றார் அவர். ஆமாம் என்றேன் நான், என்னைச் சுட்டுவிடுவதுபோல் பார்த்துவிட்டு, மறுகணம், முகத்திலே கேலிப்புன்னகை தோன்ற நின்றார்.

“முதலாளியிடம் இரத்தினம் இருக்கிறது” என்றார். இக்பால், ஆமாம்! இருக்கிறது!! என்று கூறிக்கொண்டே பாட்டாளி படுத்திருந்த இடத்தில் கிடந்த கற்களைக் கண்டேன், வெட்கமும் துக்கமும் பிடித்தாட்டின.

“அந்த இரத்தினம், எப்படிச் செய்யப்படுகிறது தெரியுமா?” என்று கேட்டார் கவி எப்படி? என்ற ஏன் விழி கேட்டது அவரை.

இந்தத் தொழிலாளியின் இரத்தத்தைக் கொண்டு என்றார் இக்பால் ஏன் இருதயத் துடிப்பே நின்றுவிடும் போலாகி விட்டது அந்த ஆழ்ந்த பொருள்ள வார்த்தையைக் கேட்டு உண்டான அதிர்ச்சியால் தொழிலாளியைப் பார்த்தார் இக்பால், என்னை நோக்கினார், பண்ணை முதலாளி பயிரிடும் பாட்டாளியின் வாழ்நாளைப் பாழாக்குகிறான்! மணிமுடி தரித்த மன்னன் இந்த ஏழைகளைக் கட்டிப்போகிறான், நுகத்தடியில்! என்றார். ஆமாம் என்றேன் நான் பெருமூச்சுடன் அட்டூழியத்திலே தள்ளப்படுகிறார்கள் இந்த மக்கள் என்றார். உண்மைதான் என்றேன் நான், கண்ணீர் புறப்பட்டு விட்டது. ஒரு கேலிச்சிரிப்புடன் இக்பால் இவர்கள் தூங்குகிறார்கள் என்றார் கன்னத்திலே சுரீல் என்ற, கண்ணீர் சூடாகி வழிந்ததால் அருகே சென்றார், தட்டி ஏழுப்பினார் தரித்திர கொட்டிலிலே தத்தளிக்கும் அந்த மக்களை எழுந்திடு என்றார், எழுந்தனர், கண்களைத் துடைத்தவண்ணம் நின்றனர்.

பாமரமனிதன்
பாராளும் காலமிது
பழங்காலச் சின்னங்களைப்
பாரிலே யகற்றுங்கள்!
வயலிலே விளையும் உணவு
விவசாயிக்கு உரிமையில்லை என்றால்
அவ்வயலிலே நிற்கும்
அவ்வளவு கதிர்மணியையும்
அழித்துப் பொசுக்குங்கள்.

என்றான் இக்பால், வீரமுழக்கம் செய்தார். ஒரு நிமிடம் திகைத்துப்போய் நின்றனர் ஆம்மக்கள். பிறகு, மெள்ள, ஆனால் சோகத்துடன் அவரைப் பார்த்துக் கூறினர், ஐயனே! நாங்கள் பலமற்றவர்கள் என்று இக்பால் முகம் கோபத்தால் சிவந்தது, பலமற்றவர்கள்! நீங்களா? சரி சில சமயங்களிலே பலமற்றவர்களின் உடலிலேயே சிம்மத்தின் இரத்தம் ஓடுவதுண்டு. நீர்த்துளியிலே நெருப்பின் தன்மை பிறப்பது உண்டு. எழுந்திடுக! என்றார். எழுந்தனர், அவரைப் பின் தொடர்ந்தனர் நானும் உடன் சென்றேன்.
***

இடித்துரைத்தார்
கவியரசர் இக்பால் முன்னால் செல்கிறார், பின்னே நடக்கிறது பாட்டாளிக் கூட்டம், உடன் செல்கிறேன் நான், உலவிக்கொண்டிருக்கிறார் ஷெல்லி, பாட்டாளிக் கூட்டத்தைக் கண்டார், முகத்திலே இருந்த பொலிவு கோபக்குறியாக மாறிவிட்டது. கவி இக்பால், அவர்களை, ஷெல்லியின் எதிரே நிற்கவைத்தார், சுட்டிக் காட்டினார் அவர்களை புருவத்த நெறித்தார் ஷெல்லி. இம் என்பவர் போல் தலையை ஆசைத்தார் இக்பால், விசாரணை ஆரம்பமாகிவிட்டது.

“செல்வான்களால்தானே நீங்கள் சீரழிக்கப்படுகிறீர்கள்?” என்று கேட்டார் ஷெல்லி, மிருதுவான குரலில் இம் என்றனர் பாட்டாளிகள்.

அப்படிப்பட்டவர்களுக்காக ஏன் நீங்கள் உழவு வேலை செய்கிறீர்கள்? உங்களைத் துன்புறுத்துபவருக்கு இடை நெய்து தருவது ஏன்? என்று சற்று உரத்தக்குரலில் கேட்டார் ஷெல்லி, அவர்கள் வாய்மூடிக் கிடந்தனர்.

இவ்வளவு, அவர்களுக்காக உழைக்கிறீர் களே, உங்களிடம் நன்றி காட்டினார்களா? என்று ஷெல்லி குரலை மேலும் உயர்த்திக் கேட்டார். இல்லையே! என்னர் ஐக்கத்துடன் அப்படிப்பட்ட நன்றிகெட்டவர்களுக்கு நீங்கள் இயுட்காலம் வரை பாடுபடுகிறீர்கள்! ஏன்? என்று முழக்கமிட்டார் ஷெல்லி.

அவனிடம் ஆயுதமிருக்கிறது, எங்களை அடக்க முடிகிறது. அவனிடம் விலங்கு இருக்கிறது எங்கள் மேல் அதனைப் பூட்டுகிறான் என்றனர் பாட்டாளிகள்.

உடலைவாட்டி உழைத்து உற்பத்தி செய்கிறீர்கள் பொருளை. அவன் அப்பொருளைப் பறித்துக் கொண்டு போகிறான். அதற்காகவே, ஆயுதங்களையும் விலங்குகளையும் வைத்துக் கொண்டிருக்கிறான் என்று ஷெல்லி விளக்கமுரைத்தார். தலையை ஆசைத்தனர் பாட்டாளி மக்கள். உங்கள் பொருளைப் பறிக்க, ஆயுதங்களையும் விலங்கையும் உபயோகிக்கிறார்களே அந்த முதலாளிகள், அந்த ஆயுதங்களையும் விலங்குகளையும் செய்து தந்தவர்கள் யார்? என்று கேட்டார். ஏன் நாடி நரம்பு அவ்வளவிலும் தேள் கொட்டினது போலாகிவிட்டது. பாட்டாளிகள் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டனர்.

இதோ பார் அப்பா! இப்படி உழைக்கிறீர்களல்லவா? உணவு உண்டா? ஒய்வு? குடி இருக்க இடம் உண்டா? சுகம்? சமாதானம்? காதலைக் கண்டது உண்டா? பயந்து பயந்து பாடுபடுகிறர்களே இப்படிப் பாடுபட்டுப் பெறுகிற பொருள் என்ன? எதைப் பெற்றீர்கள்? என்றார் ஷெல்லி எனக்கு மட்டுமல்ல எதிரே நின்ற ஏழைகள் கூட்ட்மே விம்மலாயிற்று வேகமாக முன்னேறினார் கவி.

“நீங்கள் விதைக்கிறீர்கள் - ஆயலான் ஆறுக்கிறான்! நீங்கள் நெய்கிறீர்கள் - அவன் அணிந்து கொள்கிறான்! நீங்கள் உற்பத்தி செய்ய, அவன் அனுபவிக்கிறான் என்று மளமளவென நிலைமையை விளக்கினார். நீர்வழியும் விழியுடன் நின்றனர் பாட்டாளிகள். ஒரு பெரிய கேலிச் சிரிப்புடன் கூறினார், இவ்வளவுதானா? உணவு உடை இவைகளை மட்டுந்தானா நீங்கள் உண்டாக்கி அவனிடம் தருகிறீர்கள்? உங்கள் மீது அவன் உபயோகிக்கும் ஆயுதங்களைக்கூடத்தான் நீங்கள் செய்து அவர்களிடம் தருகிறீர்கள்! என்றார்.

“ஆமாம்! ஆனால் நாங்கள் என்ன செய்வது? அவன்தான் கொள்ளை கொள்கிறான் நாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை என்றனர் பாட்டாளிகள். அது தெரிகிறதல்லவா? சரி! இனி விதையுங்கள், ஆனால் அவனை ஆறுக்கவிடாதீர்! ஆயுதம் செய்கிறீர்களா, செய்து அவனிடம் தராதீர்கள்! என்றார் ஷெல்லி. அந்தப் புரட்சிகரமான பேச்சைக் கேட்டுத் திடுக்கிட்டு நின்றனர் தொழிலாளிகள். ஓஹோ! மீண்டும் தயக்கம் வந்துவிட்டது தொழிலாளர்களிடையே என்பதைப் புரிந்து கொண்டார் கவி. உடனே, மறுபடியும், அவர்களுக்கு அவர்தம் நிலைமையைக் கவனப்படுத்திவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார் போலிருக்கிறது. உடனே கூறலானார், நீங்கள் கட்டிய மாளிகையிலே, அவர்கள் வாழ, நீங்ள் குடிசைகளிலே குமுறுகிறீர்கள். நீங்கள் செய்த விலங்கை நீங்களே பூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்து தந்த வேல், உங்கள் மீதே பாய்கிறது என்றார். தொழிலாளர்கள் துயருடன், வெட்கமடைந்து நின்றனர். ஷெல்லியின் முகம் கோபாத்தால் ஜொலித்தது. என்ன செய்வதய்யனே! என்று கேட்டனர் ஷெல்லியை நோக்கி ஷெல்லி கேலிச் சிரிப்புடன், என்ன செய்வதா? மண் வெட்டி இருக்கிறதல்லவா உங்களிடம் என்று கேட்டார். இருக்கிறது என்றனர். நான்கூடக் கொஞ்சம் பயந்து போனேன். ஷெல்லி சவக்குழி தோண்டி அதிலே அக்ரமக்காரரைப் போட்டுப் புதைக்கச் சொல்லிப் பாட்டாளிகளை ஏவிவிடுகிறார் போலும் என்றெண்ணி தொழிலாளர்களும், என்னைப் போலவே கொஞ்சம் திகைத்துப் போயினர் என்று தெரிந்து கொண்டேன். ஷெல்லி. பேசலானார், என்னைத் தூக்கிவாரிப் போட்டது அந்தப் பேச்சு உங்களுக்குச் சவக்குழியை நீங்களே வெட்டிக் கொள்ளுங்கள்! உங்கள் பிணத்தின்மேல் மூடுவதற்குச் சல்லாத் துணியையும் நீங்களே நெய்து கொள்ளுங்கள் என்றார் கவி. உலகிலே எல்லாவிதமான ஒலி, ஒளியாவும் அசைவற்று நின்றவிட்டது போலாகிவிட்டது அந்தப் பேச்சினால் நீங்கள் பிறந்த நாடு இருக்கிறது இங்கு உங்களுக்குச் சுடுகாடு கிடைக்கும், கவலைப்படாதீர் என்றார். வாழ்வு இல்லை! வதைகிறீர்கள்! வதைக்கப்படுகிறீர்கள் யார் வதைக்கிறார்களோ அவர்களின் வாழ்வுக்காகவே உழைக்கிறீர்கள். இந்த வாழ்வுதான் உங்கட்கு என்றால் சாவுமேல் அல்லவா? சித்திரவதையைப் பொறுத்துக் கொண்டிருப்பதைவிட, தற்கொலை நல்லதல்லவா! பிறருக்குப் பயன்பட்டு, வாழ்வுகெட்டு இருக்கும் மக்களே! ஏன் உயிருடன் இருக்கிறீர்கள், மாண்டு தொலையுங்கள்! நாடு சுடுகாடு தரும், சுக வாழ்வு தராது! ஷெல்லியின் மொழி, இவ்வளவையும் இதற்கு மேலாகவும் தெரிவித்தது. பாட்டாளியின் முகம், பயம், சோகம், வெட்கம், திகைப்பு எனும் பல்வேறு உணர்ச்சிகள் கூடிப் போரிடும் களமானது கண்டார் ஷெல்லி தன் சொல் வேலை செய்யத் தொடங்கிவிட்டதைத் தெரிந்து கொண்டார் இடித்துரைத்தோம், இவருக்கு வீரமும் உறுதியும் வருமளவு என்ற கண்டு கொண்டார். விம்மல், குமுறல் முணுமுணுத்தல், இடையிடையே இவேசக்குரல் சூளுரைபோன்ற ஒலிகள் கிளம்பின, பாட்டாளிகளின் கூட்டத்திலேயிருந்து, முடியுமா? என்ற கேள்வி எல்லா ஒலிகளையும் மீறிக் சந்தேகப்படுகிறீர்கள் என்று ஆதிக்காரரின் பிடியிலிருந்து விலக முடியுமா? அவர்களை எதிர்க்க முடியுமா? அவர்கள்.. என்று இழுத்தார்போல் பேசினர் பாட்டாளிகள்.

கொடுங்கோலர்கள், என்னென்ன செய்து விடுவாரோ என்றுதானே யோசிக்கிறீர்கள்? குத்தட்டும், கொல்லட்டும், வெட்டட்டும், அறையட்டும், அரியட்டும், இஷ்டம்போலச் செய்ய இடமளியுங்ள் என்றார். என்ன நேரிடுமோ பிறகு என்ற கவலைப்படுகிறீர்களா? வெட்கப்பட்டுத் திரும்பி ஓடுவர் கொடுங்கோலர்கள் என்றார் கவி.

“அடிமைத் தளைகள் சிதறும், உடலில் ஓட்டிய பனித்துளி சிதறுவதுபோல” என்று வீரமொழி புகன்றார். அதுகேட்டு இவேச உணர்ச்சி உண்டாயிற்று, ஆனால், தீர்மானம் செய்து கொள்ளும் நிலை பிறக்கவில்லை. எப்படி அது சாத்தியமாகும்? கொடுங்கோலரை விரட்ட அவர்கள் கொல்ல வந்தாலும், சரி என்று சாவையும் வரவேற்று நிற்க, பிறகு அடிமைத் தளைகளை உடைத்தெறிய நம்மால் எப்படி முடியும்? என்ற சந்தேகமே, பாட்டாளிகளன் பரிதாபகரமான முகத்திலே இருந்திடக் கண்டேன் கவி அதனைக் கண்டார். அவ்வளவு சந்தேகத்தையும், திகைப்பையும் ஓர நொடியில் போக்கக் கூடியதும், உலகின் கொடுங்கோலரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கக் கூடியதுமான வாசமொன்று சொன்னார் நீங்கள் பலர், அவர்களோ சிலர்! என்றார். கண்டறியதான கண்டேன், கேட்டறியா அவ்வுரை கேட்ட மக்கள், உலகே எதிர்ப்பினும் சரி, என்ற உறுதியுடன் நிற்கக் கண்டேன்.

எங்கும் போர் ஒலி

பற்பல பக்கங்களிலிருந்தும் போர் ஒலி கிளம்பிவிட்டது. அந்தப் பாட்டாளி மக்களின் உள்ளத்தைக் கிளறும் விதமாக.

ஒயோ! கடவுளே! ஏன் உணவு இவ்வளவு அதிக விலையாக இருக்கிறது? மனிதனின் சதையும் இரத்தமும் ஏன் இவ்வளவு மலிவு? என்றார் ஒரு கவி, பட்டினிச்சாவு, தற்கொலை, இவைகளுக்கு என்ன பொருள் என்பது அப்போதுதான் எனக்கு விளங்கிற்று. உலகம் என்ற இந்தக் கொடிய மார்க்கட்டிலே உணவின் விலை, மனிதனின் உயிரின் விலையைவிட அதிகம்! ஏன்? என்று கேட்டார் ஒரு கவி, ஏன்? என்று கேட்டனர் பாட்டாளிகள் ஏன்? என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் ஏன்? என்று உங்களைக் கேட்கிறேன்! உலகாள்பவர்களை நோக்கிக் கேளுங்கள்! ஏன், என்று உலகின் முதல்வனையே கேளுங்கள்.

“ரோஜா மடிந்திட முட்கள் வாழ்வது ஏன்?” என்ற கேட்டார் மற்றோர் கவி. இந்த ஒலிக்கு இடையே ஒரு கீச்சுக்குரல் கேட்டது.

“ஆண்டவனைத் தொழலாம் வாரீர். அவர் நமது விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வார்” என்று யாரோ கூறினார்.

“இரும்புச் சக்கரங்களின் இறைச்சலில் எங்கள் விண்ணப்பம் இறைவன் செவியில் ஏறுமோ என்று கேட்டார் கவி.

“எல்லாம் சரி! இம்சைக்கு ஆளானோம். உண்மை! நாம் பலர் அவர்கள் சிலர். உண்மை! நாம் உழைக்கிறோம், அவர்கள் வாழ்கிறார்கள். உண்மை! ஆனால் ஏன் நாம், இந்த நலையில் வந்தோம். ஏன் இந்தக் கொடுமையை ஏற்றுக் கொள்ளநேரிட்டது? எப்படி நாம்? ஏமாளிகளானோம்? என்று கேட்டான் ஒரு பாட்டாளி. இக்பால், ஷெல்லி மற்ற பல கவிவாணர்கள், அப்போது அங்கு இல்லை! பாட்டாளிகள், தங்களின் நிலைமைக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறியத் துடித்தனர். சுற்றுமுற்றும் பார்த்தனர், நானும் அதே சந்தேகத்தால் தாக்கப்பட்டு, நின்றேன் ஒரு உறுதியான குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன், புரட்சிக் கவிஞர்ம பாரதிதாசன் பண்ஆசைத்துக் கொண்டுவரக் கண்டேன். பாடுபட்டீர்கள், பருக்கை இலாதொரு, பட்டியின் மாடென வாழ்கின்றீர் என்றார் கவிஞர். அதைத்தான் இப்போது தெரிந்து கொண்டோம்! ஆத்திரமும் அடைந்துள்ளேம் என்றனர் பாட்டாளிகள் புரட்சிக் கவிஞர் மேலும் பாடினார்.

“மதக் கேடர்கள் காலினில் வீழ்கின்றீர்
ஒண்ட வீடும் இலாமலே தாழ்கின்றீர்”
என்றார். ஆமாம், ஒண்டக் குடிசையும் இல்லை இழிவான நிலைமைதான். ஆனால், எங்களுக்குப் புரியவில்லை, மற்றவர்கள் கூறவும் இல்லை. எங்கள் சக்தி, அது பிறரால் சுரண்டப்படும் விதம், அவர்கள் எதிர்க்க வேண்டியதன் அவசியம், எதிர்த்தால் வெற்றி கிட்டும் என்ற உறுதிமொழி, இவைகளைப் பலரும் கூறவிட்டனர், ஆனால் எங்கள் மனதைக் குடைகிறது ஒரு சந்தேகம், அதை தெளிவாக்க வேண்டும். நாங்கள் ஏன் இந்தக் கதிக்கு ஆளானோம்? என்ன காரணம், எங்கள் ஏமாளித்தனத்துக்கு, என்று கேட்டனர்.

ஏழையின் துயருக்குக் காரணம், பாடுபட்டும் அதன் பலனை அவன் பெற ஓட்டாதபடி பிறர் சுரண்டுவது இது புரிந்துவிட்டது, எனக்கும் முதலைக்காலைப் பிடித்து இழுத்துக் கொண்டு போயிற்று, ஆள் இறந்தான். ஆனால் முதலை, எப்படி இவனைப் பற்ற முடிந்தது! இவன் அது உலவும் ஓடையிலே இறங்கினான்! அதுபோலக் கொடுங்கோலர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதால் ஏழை துயருறுகிறான். புரிகிறது! ஆனால், ஏன், அந்த ஏழை, கொடுங்கோலருக்கு இடமளித்தான், தலை சாய்த்தான்? புரியவில்லை!

பாட்டாளிகள், அதனைத்தான் கேட்டனர், பாடுபட்டீர்கள் பட்டியில் மாடென உள்ளீர் என்று பண்பாடிய பாரதிதாசனைப் பார்த்து.

“மத ஓடத்தில் ஏறிய மாந்தரே!

பலி பீடத்தில் சாய்ந்தீரே!”

என்று பதிலிறுத்தார் பாரதிதாசன். மின்னாசர வேகத்திலே உண்மை பாய்ந்தது, எங்கள் நெஞ்சிலே ஆமாம்! ஐதோ ஓர் இடம், பாவக்கடலைத் தாண்ட இதிலே ஏறிக் செல்வோம் வாரீர் என்று முன்பு ஓர்நாள் அழைத்தனர். ஏறிக் கொண்டோம். தன்னலம் என்ற தீவிலே கொண்டு வந்து தள்ளிவிட்டனர். அங்கு முதலாளித்துவ பலிபீடம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பலிபீடத்திலேதான் சாய்ந்தோம். இந்தப் பழங்கதையை மறந்து, ஏதேதோ எண்ணி நொந்தோமல்லவா! ஆம்! மத ஓடத்தில் ஏறினோம்! பலிபீடத்தில் சாய்ந்தோம்! உண்மை புலப்பட்டு விட்டது. உறுதி பிறந்து விட்டது.

கவிஞரே! என்ன செய்யச் சொல்கிறீர். கட்டளையிடுக! என்ற பெருமுழக்கம் கிளம்பிற்று. அந்தப் பேரொலியை அடக்கிக் கொண்டு கிளம்பிற்று கவிஞரின் குரல்.
“கொலை வாளினை ஏடடா!
மிகுகொடியோர் செயல அறவே!” என்றார், என்ன நேரிட்டது! புரட்சி! புலம்பிக்கிடந்த மக்களின் போர்! படை வரிசை முன்னேறிச் செல்லும் பண்ணும் பாடினார் பாரதிதாசன்.

“வலியோர்சிலர், எளியோர்தமை வதையேபுரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா?

என்றார். கொலைவாளினை ஏடடா என்று ஆர்ப்பரித்தது அப்பெரும்படை! புரட்சி கிளம்பிவிட்டது போர் மூண்டு விட்டது.

பிணம் சிரித்தது

அந்தப் பயங்கரமான சண்டை எங்கும் நிகழ்ந்தது. ஆதிக்காரர்களின் ஆணவமும் குறையவில்லை பிடி! சுடு! விலங்கிடு! வெட்டு என்று கொடுங்கோலர் காட்டுக் கூச்சலிட்டனர். சில பாட்டாளிகளைப் பிடித்தும் கொண்டனர். இரத்தம் தோய்ந்த பாதையிலே, பாய்ந்தோடி வந்தார். ஹரிந்திரநாத் சட்டோபாத்யாயா, பட்டாளியின் படைவரிசை குலையதிருக்கும் வகையான பரணி பாடிக் கொண்டு வெட்டு! குத்து! கொல்லு! என்று கூச்சலிட்ட ஒரு கொடுங்கோலனின் கரத்தைப் பிடித்து இழுத்துக் கவ்வி. அவன், அந்தத் துணிவு கண்டு கொஞ்சம் ஆஞ்சினான். ஆனால், அவருடைய பேச்சைக் கேட்டோன் மிரட்சியால் மாண்டே போனான் எனலாம், அவர் கேட்டார்.

“சாவு, சாவு என்ற கூறி மிரட்டுகிறாயே! சாவு வரும் என்று நீ சொல்லும்போது, நாங்கள் சிரிப்பதா இல்லை, ஆச்சரியப்படுவதா? அப்பா! சாவு, சாவு, என்று சொல்கிறாயே, என்னப்பா அது! நாங்கள் எப்போது பிழைத்திருந்தோம்? இப்போது சாகடிக்கிறேன் என்று பேசுகிறாயே, நாங்களும் ஒரு நாளும் வாழ்ந்தது கிடையாதே! என்றார். அவன் திகைத்தான் யாருக்குத்தான் அந்த வார்த்தையைக் கேட்டுவிட்டுத் திகைப்பு ஏற்படாமலிருக்க முடியும்?

“சுட்டு வீழ்த்துவீர்களோ? வீழ்த்தி? உயிரையா காண முடியும்? முட்டாளே! சாவுக்கு அஞ்சமாட்டோம். உங்கள் விலங்குகளுக்கும் அஞ்சமாட்டோம்! எங்கள் நரம்புகள் அத்தனையும் விலங்குகள் என்று அறிவோம். அக்ரமக்காரரே! நாங்கள் உங்கள் அக்ரமத்தைக் கண்டு சிரிக்கிறோம், என்றார் அவன் சாய்ந்தான் கீழே மற்றோர் பக்கத்திலே ஒரு பாட்டாளி பிணமாகிக் கீழே கிடக்கக் கண்டேன். ஹரிந்திரநாத் குறிப்பிட்ட சிரிப்பு, அந்தப் பிணத்தின் முகத்திலே இருக்கக் கண்டேன். சாகுமுன்பு, கொடுமையை எதிர்த்தோம் என்ற சந்தோஷம் அந்த முகத்திலே இருந்தது.

தேவ நீதி
“வருகிறாயா, கடவுளின் கொலுமண்டபம் போகலாம்?” என்று கூப்பிடும் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன், ஆஸ்கார் ஓயில்ட் எனும் கவிஞர் நிற்கக் கண்டேன், சம்மதம் என்றேன். இருவரும் இறைவனில்லம் சென்றோம். அங்கே மனிதனை விசாரித்துக் கொண்டிருந்தார் கடவுள், கவனி. அவன் நமது இனம்! என்றார் ஆஸ்கார் ஓயில்ட் குற்றச்சாட்டுகளுக்கு அவன் மறுப்புரைக்கவில்லை. ஒப்புக் கொண்டான் தேவன் தீர்ப்புக் கூறினார்.

உன்னை நரகலோகத்தில் தள்ளப் போகிறான் என்றார் கடவுள். அந்த மனிதன் உம்மால் முடியாது என்று கடவுளிடம் கூறினான்.

முடியாதா? என்ன சொன்னாய்? உன்னை என்னால் நரகத்துக்கு அனுப்ப முடியாது என்றா சொல்லுகிறாய்? ஏன் முடியாது? என்று இறைவன் கொஞ்சம் கோபத்துடனேயே கேட்டார். பூலோகத்திலேயே, கோர்ட்டை ஆவமதிப்பது குற்றமாயிற்றே, இந்த மனிதன் தேவநீதி சபையிலே, ஆவமதிப்பாக நடந்து கொண்டால் கடவுளுக்குக் கோபம் வராமலிருக்குமா? ஆகவேதான் கடவுள் கோபமாகவே கேட்டார். ஏன் உன்னை என்னால் நகரத்துக்கு அனுப்ப முடியாது என்று கடவுளே கலங்கும்படிப் பதில் கூறினான் அந்த மனிதன்.

“ஐனா? கடவுளே! நான் நரகத்தில்தானே எப்போதும் வசித்து வருகிறேன். இனி என்ன தாங்கள் புதிதாக அனுப்புவது! அதனால்தான் தங்களால் என்னை நரகத்துக்கு அனுப்ப முடியாது என்று கூறினேன் என்றான், என்ன யோசித்தாரோ இறைவன், நானறியேன் மறுபடி பேசினார், சரி! நரகத்துக்கு அனுப்ப முடியாது என்று வைத்துக் கொள்வோம். என்னால் நிச்சயமாக உன்னைச் சுவர்க்கத்துக்கு அனுப்ப முடியும் என்று கூறினார்.

போக்கிரித்தனமான மனிதன், அதற்கு சும்மா இல்லை. உம்மால் அதுவும் முடியாது! என்றான். ஏன் என்றார் இறைவன். சுவர்க்கம் என்றால் எப்படி இருக்கும் என்று எனக்கு எப்போதும் தெரிந்ததில்லையே அப்படி இருக்க, நீர் என்னை அனுப்புகிற இடம் சுவர்க்கம்தான் என்று நான் எதைக் கொண்டு நிச்சயப்படுத்திக் கொள்வது. ஆகவேதான் என்னைச் சுவர்க்கத்துக்கு அனுப்பவும் உம்மால் முடியாது என்று சொன்னேன் என்றார் ஆம்மனிதன். தேவநீதி மன்றத்திலே பேச்சில்லை. ஆஸ்கார் ஓயில்ட் என்னைச் சீண்டினார். அவன் எனது மாணாக்கன் என்றார். ஓஹோ! அதனால்தான், கடவுளே சரி என்று ஒப்புக்கொள்ளக்கூடிய விதமாகப் பேசினான் என்றேன்.

அழிவு, புதுமை
உலகம் அழிந்துவிட்டது என்ற ஓலம் கேட்டது நாங்கள் இருவரும் வேகமாக தெய்வ சபையை விட்டு வெளியேறினோம், உலகிலே எங்கு பார்த்தாலும் புகைமயமாக இருக்கக்கண்டோம்! ஆடடா! கடைசியில், உலகையே அழித்துவிட்டார்களே என்றுகூறி நான் விசாரித்தேன். ஒரு கணந்தான். மறுகணம், மதுரமான பண் செவியிலே வீழ்ந்தது, புரட்சிக் கவிஞர் பாடுகிறார்.

புதியதோர் உலகு செய்வோம்.

விழித்துக் கொண்டேன்

என்னங்க இது, புதிய உலகம் பழைய உலகம்னு கூவுகிறீர்கள் என்று கேட்டாள் மனைவி, ஏன்துயிலையும் கனவையும் கலைத்துவிட்டு கண்ணே! நான் கவனவிலே கவிதாமண்டலம் சென்று வந்தேன் என்றேன். அவள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. அது அவள் குற்றமுமல்ல அவள் மட்டுமா, நம்மிலே எவ்வளவு பேர்களுக்கு இக்பாலும், ஷெல்லியும், பைரனும், பாரதிதாசனும், ஆஸ்கார் ஓயில்டும், ஹரிந்திரரும் தெரியும்! நமக்கெல்லாம் இவர்களுடைய கவிதை உலகில் உலவ நேரம் இல்லையே! இன்னமுந்தான் நாம் முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவணச் சிந்துகளிலேயே காலத்தைக் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். புத்துலகக் கவிகளைக் காண நேரம் எது.

(திராவிடநாடு - 25.5.47)