அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காஞ்சிக் கடவுளுக்குக் கல்லடி

திருச்சங்கமங்கை என்னும் ஊரிலே சாக்கிய நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். இவருக்கு எந்தச் சமயம் உண்மையான சமயம் என்பது புலப்படவில்லை. உண்மைச் சமயம் எது என்பதை அறிந்து, அச்சமய வழி நிற்பதே முறை என்றெண்ணிய சாக்கியர், அதன் பொருட்டுக் காஞ்சீபுரத்தை அடைந்தார். காஞ்சீபுரத்திலிருந்து கொண்டு, பல சமயங்களையும் அவை பற்றிய விளக்கங்களையும் ஆராய்ந்தார். அவ்வாராய்ச்சியின் பயனாக அவர் பௌத்த சமயமே உண்மையான சமயம் என்பதை அறிந்து அச்சமயவழி நிற்கத் தலைபட்டார். அப்பொழுதும் அவர் தம்முடைய ஆராய்சியை மட்டும் விட்டுவிடவில்லை. மேலும் பல சமய நூல்களை ஆராய்ந்த வண்ணமாயிருந்தார். கடைசியில் அவருடைய ஆராய்ச்சியின் முடிவு, சிவநெறியே செந்நெறி என்பதை விளங்கச் செய்தது. அதனால், அவர் சைவ சமயத்தையே தம்முடைய வழிபாட்டுக்குரிய சமயமாகக் கொண்டு, அவ்வழி நின்றார். என்றாலும், அவர் தாம் முன்பு மேற்கொண்ட பௌத்த கோலத்தை மட்டும் விடவில்லை. பௌத்த கோலத்தில் நின்றுகொண்டு சிவவழிபாடு செய்ய முற்பட்ட சாக்கியர், சிவலிங்கத்தைக்கண்டு வழிபட்ட பின்னரே உணவு கொள்வது என்ற உறுதி கொண்டார். அதற்காகச் சிவலிங்கத்தைத் தேடினார். ஒருநாள், ஒரு வெளியிலே உள்ள சிவலிங்கத்தைக் கண்டார். கண்டதும் அதனை வழிபட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆனால், சிவலிங்கத்தை எப்படி வழிபடுவது என்பது தெரியவில்லை. இந்த நிலையில் அவர் எதிரே ஒரு செங்கல் தென்பட்டது. அதனை எடுத்து அங்கு காணப்பட்ட சிவலிங்கத்தின் மீது வீசி எறிந்தார். அடுத்த நாளும் அப்படியே செய்தார். அதனையே அவர் சிவலிங்கத்துக்குச் செய்யும் வழிபாடாகக் கொண்டு, ஒவ்வொரு நாளும் சிவலிங்கத்தைக் கல்லால் அடிக்கும் அரும்பணியை அயராது செய்து வந்தார். ஒருநாள் அவர் அந்தப் பணியைச் செய்ய மறந்து உண்ணப் புகுந்தார். அப்போது, “இன்று சிவலிங்கத்தைக் கல்லால் அடிக்க மறந்து விட்டோமே” என்று எண்ணிச் சிவலிங்கம் இருக்கும் இடத்தை அடைந்து, ஒரு கல்லை எடுத்துச் சிவலிங்கத்தின் மீது எறிந்தார். உடனே சிவன் அங்கு வந்து அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு சிவலோகத்துக்குச் சென்றுவிட்டார். இப்படியும் ஒரு நிகழ்ச்சி பெரிய புராணத்தில் காணப்படுகின்றது.

இங்கு பேசப்படும் சாக்கியர், முதலில் எந்தச் சமயவழி நின்றார் என்பதனை அறியப் புராணத்தில் எவ்வித சான்றும் இல்லை. திருச்சங்கமங்கை என்னும் ஊரிலே வேளாளர் மரபிலே தோன்றியவர் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு, அவரோ அல்லது அவரது பெற்றோர்களோ எந்தச் சமயத்தைச் சார்ந்தவர்கள் என்று எப்படிக் கூறமுடியும்? சாக்கியருடைய பெற்றோர்கள் கடைப்பிடித்து ஒழுகிய சமயம் எது என்பதனையும், அதனையே சாக்கியரும் கடைப்பிடித்து ஒழுகினார் என்பதனையும் வரலாறு எழுதிய சேக்கிழார் குறிப்பிடாமல், வறிதே, எந்தச் சமயவழி நின்றால் பிறப்புத் துன்பங்களை ஒழிக்கலாம் என்று கருதிய சாக்கியர், அத்துறையில் ஆராய்ச்சி செய்ய முற்பட்டார் என்று கூறுவது, ஒரு வரலாற்றை முழுவடிவத்தில் எடுத்து விளக்குவதாகவோ, அல்லது அந்த வரலாறு உண்மையென்று ஒப்புக்கொள்ளத் தக்கதாகவோ ஏற்படாது. சாக்கியர் முதலில் மேற்கொண்டிருந்த சமயம் இது, அல்லது அவரது பெற்றோர்கள் மேற்கொண்டிருந்த சமயம் இன்னது என்று கூறி, சாக்கியருக்கு அந்தச் சமய முறைகள் எதுவும் பிடிக்கவில்லை; எனவே, அவர் பிறப் பிறப்புத் துன்பங்களை நீக்கக்கூடிய சமயம் எது என்பதை அறிய ஆவல் கொண்டார்; அதற்காக ஆராய்ச்சிகள் பல செய்தார் என்று கூறப்பட்டிருந்தாலாவது, இங்குப் பேசப்படும் நிகழ்ச்சியில் ஓரளவுக்காவது உண்மை இருக்கக்கூடும் என்று கருத முடியும். அங்ஙனமன்றி, ஓர் ஊரில் ஒருவர் இருந்தார். அவருக்கு எந்தச் சமயம் உண்மையான சமயம் என்று அறிவதில் ஆவல் உண்டாயிற்று என்ற முறையில் ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கி அதற்குக் கண் மூக்கு காது வைத்து அதனை ஓர் உண்மை நிகழ்ச்சியாக்கிக் காட்ட முயல்வதை அறிவாராய்ச்சியுடைய எவருமே நம்பமாட்டார்கள்.

சாக்கியருக்குத் திடீரென்று பிறப் பிறப்புத் துன்பங்களை நீக்கிக் கொள்வதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏன் தோன்றிற்று? எப்படித் தோன்றிற்று? சாக்கியர், தாம் மேற்கொண்டிருந்த சமயத்தில் பிறப் பிறப்புத் துன்பங்களை நீக்குவதற்குரிய வழிகள் காணப்படாததால்தானே, அதற்குரிய வழிகளை வகுத்துக் காட்டும் ஒரு சமயத்தை நாட விரும்பியிருக்க வேண்டும். அப்படியானால், அவர் மேற்கொண்டிருந்த அந்தச் சமயம் யாது? தெரியாது! யாருக்கு? சேக்கிழாருக்கு. அவருக்கு மட்டுமன்று. பெரியபுராணம் எழுதுவதற்கு முதல் நூல் வகுத்துக் கொடுத்த நம்பியாண்டார் நம்பிக்கும் அந்த விவரம் தெரியாது.

இனி, ஒருவேளை, சாக்கியர் எந்தச் சமயத்தையும் மேற்கொண்டிருக்கவில்லை; ஆதலால், அவர் முதலில் கடைப்பிடித் தொழுகிய சமயம் இதுதான் என்று எப்படிக் கூறமுடியும் என்பதாகவும் சிலர் கருதக்கூடும். ஆனால், இதனை எப்படி ஒப்புக்கொள்வது? ஒரு சமயத்தையும் சாராத ஒருவருக்குப், பிறப் பிறப்புத் துன்பங்களை யாதாயினும் ஒரு சமய வழி நின்றுதான் நீக்க முடியும் என்ற எண்ணம் ஒருபோதும் உண்டாகாது. பிறப்பினாலும் இறப்பினாலும் துன்பங்களே உண்டாகின்றன என்ற கோட்பாடு சமய நூற்களில்தான் வலியுறுத்தப்பட்டுள்ளன. சமயத் தொடர்பற்ற பொது அறிவு நூல்களில் பிறப் பிறப்புக்களைத் துன்பம் தருபவை என்று கூறப்படவில்லை. எனவே பிறப் பிறப்பினால் துன்பமே உண்டாகும் என்ற விளக்கத்தைச் சாக்கியர் ஏதோ ஒரு சமய நூலில் படித்திருக்கிறார். எனவேதான் பிறப் பிறப்புத் துன்பங்களை நீக்கிக்கொள்வதற்கு வழி காட்டும் ஒரு சமயத்தை அவர் சார விரும்பினார். பிறப் பிறப்பினால் துன்பமே நேரிடும் என்ற விளக்கம், ஒரு சமயத்தையும் சாராது பொதுநெறியில் நிற்கும் ஒருவருக்கு ஒருபோதும் உண்டாகாது. அத்தகைய ஒருவர் பிறப்பையோ இறப்பையோ துன்பமாகக் கருதவும் மாட்டார். பிறப்பதும் இறப்பதும் இயற்கை என்ற அளவோடு பிறப் பிறப்பைக் குறித்த ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு, பிறந்தபின் இறக்கும் வரையில்தான் எப்படி வாழ்க்கையை நடத்திச் செல்வது? தன்னுடைய வாழ்க்கை முறை தனக்கும் பிறர்க்கு எந்தெந்த வகையில் பயன்படுகின்றது என்பனவற்றிலேயே தன்னுடைய கருத்தைச் செலுத்துவானேயன்றிப், பிறப்பதையும் இறப்பதையும் துன்பமாகக் கருதி, அத்துன்பத்தை ஒழிப்பதற்கு வழி என்ன? எந்தச் சமயத்தைப் பின்பற்றினால் இத்துன்பத்தை நீக்கலாம் என்ற பொருளும் பயனுமற்ற துறைகளிலே இறங்கித் தன் காலத்தை வீணாக்கமாட்டான். ஒரு சமய வழி நிற்பவன்தான், அச்சமயத்தில் பிறப் பிறப்புத் துன்பங்களை ஒழிப்பதற்கு வழி கூறப்படவில்லை யென்றும், அதற்கு இன்னொரு சமயத்தைக் கண்டுபிடித்தாக வேண்டுமென்றும் கவலைப்படுவான்.

இங்குப் பேசப்படும் சாக்கியருக்கும் இந்த நிலையே ஏற்பட்டிருக்க வேண்டும். இல்லையேல், பிறப் பிறப்புத் துன்பத்தினின்றும் விடுதலை அடையும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால், சாக்கியர், முதலில் எந்தச் சமயத்தைக், கடைப்பிடித்து வந்தார் என்பதைச் சேக்கிழாரோ அவருக்கு முந்திய நம்பியாண்டார் நம்பியோ கூறவில்லை. இதனை அவர்கள் ஏன் கூறவில்லை? தெரியாததால் கூறாது விட்டார்களோ, அல்லது தெரிந்தும் ‘கூறக் கூடாது’ என்ற காரணத்தால் மறைத்தார்களோ என்பது பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால், அது, மிக விரியும். எனவே சாக்கிய நாயனாரின் நிகழ்ச்சியைப் புராணத்தில் உள்ளபடியே ஆராய்வோம்.

திருச்சங்கமங்கை என்னும் ஊரில் இருந்த சாக்கியர், பிறப் பிறப்பினால் ஏற்படும் துன்பத்தை நீக்குவதற்குரிய வழி எது என்பதைத் தம்முடைய ஊரில் இருந்துகொண்டே தெரிந்துகொள்ள முடியவில்லை. பிறப் பிறப்பினால் ஏற்படும் துன்பத்தை நீக்குவதற்குரிய வழியைக் கண்டு பிடிப்பதற்கு ஓர் ஊரைவிட்டு இன்னொரு ஊருக்குப் போகவேண்டுமா? புகை வண்டி செல்லாத ஊரில் இருக்கும் ஒருவன், அதைப் பார்ப்பதற்காகப் புகைவண்டி செல்லும் ஊருக்கும் போவதுபோல், சாக்கியரும் தம்முடைய ஊரைவிட்டுக் காஞ்சீபுரம் செல்கிறார். சாக்கியருக்குக் கல்வியறிவு இல்லை; எனவே சமய நூல்களைப் படித்து அது குறித்த உண்மைகளை அறிய முடியாது போயிற்று; அதுமட்டுமன்று; அவருடைய ஊரில் சமய நூல்களைக் கற்றுத் தெளிந்த எவரும் இல்லை; அதனாலேதான் அவர் தம்முடைய ஊரைவிட்டுக் காஞ்சீபுரம் சென்றார் என்று கொள்வதானாலும், அவர் காஞ்சீபுரத்துக்குச் சென்றதற்குச் சொல்லப்பட்ட இரு காரணங்களில் பின்னதை ஒப்புக்கொண்டாலும் முன்னதை எவருமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், சாக்கியர் கல்வியறிவில் சிறந்தவர் என்பது மட்டுமன்று, அவர் ஓர் ஆராய்ச்சி நிபுணர் என்றும் பெரிய புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது. எனவே, அவர், கல்வியறிவு இல்லாத காரணத்தால் காஞ்சீபுரம் சென்றார் என்று கூறமுடியாது. ஒரு வேளை தம்மைப் பார்க்கிலும் கல்வியறிவிலும், சமய ஆராய்ச்சியிலும் திறமையுடையோர் காஞ்சீபுரத்தில் இருக்கின்றனர்; எனவே அங்கு சென்று தம்முடைய ஐயப்பாட்டினை நீக்கிக் கொள்ளலாம் என்று எண்ணிக் காஞ்சீபுரம் சென்றார் என்றால், அதனை யாரும் தவறென்று கொள்ள மாட்டார்கள்.

இனிக், காஞ்சீபுரம் சென்ற சாக்கியர், பல வழிகளில் தம்முடைய ஆராய்ச்சியைச் செய்து, பௌத்த சமயத்தைத் தழுவி, அச்சமய வழி ஒழுகினார் என்றும், அந்த நாளிலும் அவர் தம்முடைய ஆராய்ச்சியை நிறுத்தாமல் நடத்தி வந்தார் என்றும், கடைசியில், சைவசமயமே தம்முடைய எண்ணத்தை நிறைவேற்றி வைக்கக்கூடிய ‘சிறந்த’ சமயமெனக் கண்டு, அச்சமய வழி நின்றார் என்றும் கூறப்படுகின்றது. இது, ஒரு கால், அவர் செய்து முடித்துள்ள ஆராய்ச்சியின்படி, அவரால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாக இருக்கலாம். இதனையும் நாம் தவறென்று கூறவில்லை. ஆனால்; அவர் தம்முடைய ஆராய்ச்சியை ஏன் இந்த அளவோடு நிறுத்தினார் என்பதுதான் எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

முதலில் அவரால் செய்யப்பட்ட ஆராய்ச்சி, அவருக்குப் புத்த சமயத்தையே உண்மையான சமயம் எனக் கொள்ளும்படி செய்தது. அதன்படி அவர் புத்தசமயத்தைத் தழுவி, அச்சமயத்திற்குரிய வடிவத்தையும் பூண்டு, அவ்வழி நிற்பாராயினார். ஆனால் தம்முடைய ஆராய்ச்சியை மட்டும் நிறுத்தவில்லை. புத்த சமயத்தைத் தழுவியும், அதுவே பிறப் பிறப்புத் துன்பத்தை ஒழிப்பதற்கு வழி அமைத்துத் தந்தும், அச்சமய வழி நிற்கும் உறுதியை அளித்த பின்னரும், தம்முடைய ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்திய சாக்கியரின் போக்கு விந்தையாகவே இருக்கிறது.

தம்முடைய ஐயப்பாட்டினை நீக்கிக்கொள்ள விரும்பிய சாக்கியர், பௌத்த சமயத் துறையில் புகுந்து ஆராய்ந்ததன் பயனாக அவருடைய ஐயம் ஒருவாறு நீங்கிப், பௌத்த சமயமே தாம் வழிபடக்கூடிய சமயம் என்ற முடிவுக்கு வந்தாராயினும், அதனையே முடிந்த முடிபாகக் கொள்ளுதல் கூடாது; மேலும் பல சமயங்களை ஆராய வேண்டுமென்ற எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி போடாமல் அதனை வளர்த்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று, அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிப்பது போல், புத்த சமயத்தைத் தழுவியதோடு மட்டும் நின்று விடாமல், அச் சமயத்துக்குரிய வடிவத்தையும் கொண்டது ஏன்?

புத்த சமயத்தை ஆராய்ந்து, அதுவே உண்மைச் சமயம் எனக் கண்ட நீ ஏன் அச்சமயத்துக்குரிய வடிவங்கொள்ள மறுக்கிறாய்” என்று அவரை யாராவது கேட்டார்களா? அப்படி யாராவது கேட்டிருந்தாலும், “நான் புத்த சமயத்தை ஆராய்ந்து, அதில் சில உண்மைகள் இருப்பதை ஒப்புக் கொண்டேனாயினும், இன்னும் என்னுடைய ஆராய்ச்சி முடிவடைந்து, நான் கொண்ட ஐயம் நீங்கவில்லை; எனவே நான் இந்த அளவோடு திருப்தி அடைந்து என்னுடைய எண்ணம் நிறைவேறி விட்டதாகப் பாசாங்கு செய்யமாட்டேன்; இன்னும் பல சமய உண்மைகளையும் ஆராயப் போகின்றேன்; என்னுடைய ஆராய்ச்சி எதைச் சரியென்று எனக்கு அறிவிக்கின்றதோ, அதனையே நான் பின்பற்றுவேன்; அதற்கிடையில், அவ்வப்போது என்னுடைய ஆராய்ச்சியால் கிடைக்கும் சிற்சில உண்மைகளை வைத்துக் கொண்டு அவையே முடிந்த முடிபெனக் கொள்ள மாட்டேன்.” என்று கூறியிருக்கலாம். இங்ஙனம் செய்வதைத்தானே ஓர் ஆராய்ச்சியாளன், தன்னுடைய ஆராய்ச்சியின் பயனாகக் கொள்ள முடியும் - கொள்ள வேண்டும். இங்ஙனமன்றிப், பச்சோந்திக் கோலம் கொள்பவனை ஓர் உண்மையான நோக்கத்தோடு ஒன்றை ஆராய்கின்றான் என்று அறிவுடைய உலகம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது.

இனிப், பௌத்த சமயத்தை ஆராய்ந்து, அதுவே உண்மைச் சமயமெனக் கண்டறிந்து, அச்சமயத்துக்குரிய நெறிகளைக் கடைபிடித்து அச்சமய வழி ஒழுகிய சாக்கியர், மேலும் தம்முடைய ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தியதன் பயனாகச் சைவ சமயமே உண்மைச் சமயமெனக் கண்டறிந்து அச்சமயவழி ஒழுக முயல்கிறார். முயன்றவர், தாம் முன்னர் மேற்கொண்ட புத்த சமயத்துக்குரிய கோலத்தை மட்டும் மாற்றவில்லை. புத்த வடிவத்தில் நின்று கொண்டே சைவசமய வழிபாடு செய்ய முற்படுகின்றார். ஒன்றைப் பொய்யென்றும் இன்னொன்றை மெய்யென்றும் கண்டு, ஒரு முடிந்த முடிபுக்கு வந்த ஒருவர், பொய்யைப் புறக்கணித்துவிட்டு மெய்யைப் புறக்கணித்துவிட்டு மெய்யைக் கொள்வதே முறை; அதுவே நேர்மையுங்கூட. அங்ஙனமின்றிப், பொய்யைப் போர்த்துக் கொண்டு மெய்யைக் கடைப்பிடிப்பதாகச் சொல் கொள்வது நடிப்பு மட்டுமன்று; நாட்டை ஏமாற்றும் நயவஞ்சகமு மாகும்.

புத்த சமயத்தை ஆராய்ந்து அதன்படி ஒழுகிய சாக்கியர், சைவ சமயத்தை ஆராய்ந்த போது ஏன் அச்சமய முறைப்படி ஒழுக அச்சப்பட்டார் என்பது தெரியவில்லை. ஒரு நேர்மையான ஆராய்ச்சியாளன், தான் கண்டறிந்த உண்மையை மற்றவர்களும் தெரியும்படி செய்வதே முறை. அவர்கள் அந்த உண்மையைத் தெரிந்தும் அதனை ஏற்க மறுப்பார்களானால், “அவர்கள் அந்த உண்மையை அறிந்துகொள்ளும் பக்குவத்தை அடையவில்லை” என்று அதற்குரிய பக்குவத்தை அவர்களுக்கு உண்டாக்க முயலவேண்டும். தான் கண்டறிந்த ஒன்று களங்கமற்ற உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதனை மக்கள் உடனுக்குடன் உணர மறுத்தாலும், படிப்படியாக அதன் உண்மையை உணர்ந்து அதன்படி ஒழுகத்தலைப்படுவர். இந்தச் சிறந்த முறையையே உண்மைக்காக உழைக்கும் ஆராய்ச்சியாளர் கடைப் பிடிக்கின்றார்கள். இதில் வெற்றியும் பெற்றார்கள் - பெறுகின்றார்கள்.

ஆனால் இங்கு பேசப்படும் ஆராய்ச்சியாளரான சாக்கியர், தாம் கண்டறிந்த உண்மையைப் பிறர் அறியாதபடி மறைக்கிறார், சைவ சமயத்தை ஆராய்ந்ததில் தாம் கண்ட உண்மையை மறைத்ததோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை. தம்மை ஒரு புத்த சமயத்தைச் சார்ந்தவனாகவே பிறருக்குக் காட்டியும் கொண்டார். சைவ சமயத்தைப் பின்பற்றுவதற்கு அறிகுறியாகக் காட்டப்படும் திருநீற்றையோ அக்கமணியையோ அவர் அணியவில்லை. அதற்கு மாறாக அவர், புத்த சந்நியாசிகள் அணியும் மஞ்சள் உடையையே அணிந்திருந்தார். என்றாலும் அவர் தன்னை ஒரு சைவனாகவே நினைத்துக்கொண்டாராம். எப்படியிருக்கிறது ‘சைவ மெய்யன்பரின்’ கோலம், பாருங்கள்.

இவ்வளவோடும் அவர் நின்று விடவில்லை. சைவ சமயத்தை ஆராய்ந்து அதுவே உண்மைச் சமயமெனக் கண்டறிந்த சாக்கியர், அச்சமயக் கடவுளை வழிபட்ட முறைதான் விந்தையிலும் விந்தையாகும். ஒரு சமயத்தை ஆராய்ந்து அதில் புதைந்தும் பொதிந்தும் கிடந்த உண்மையைக் கண்ட ஒருவருக்கு, அச்சமயக் கடவுளை எப்படி வழிபடுவது என்பதும் தெரிந்திருக்க வேண்டு மன்றோ! ஆனால் இங்கு பேசப்படும் ஆராய்ச்சியாளருக்கு, சைவசமயமே மற்றைச் சமயங்கள் எல்லாவற்றையும்விட மேலானது - உயர்ந்தது என்ற ‘உண்மை’ புலப்பட்டதேயொழிய, அதனை எப்படி வழிபடுவது என்பது அவருடைய ஆராய்ச்சிக்கு எட்டவில்லையாம். அதனால், அவர் சிவலிங்கத்தைக் கண்டதும் அதனை எப்படி வழிபடுவது என்று தெரியாமல் திகைத்து நின்றாராம். உடனே அவர் எதிரில் ஒரு செங்கல் தென்பட்டதாம். அதனை எடுத்துச் சிவலிங்கத்துக்குக் குறிபார்த்து அதன்மீது வீசியெறிந்தாராம். பின்னர் செங்கல்லால் சிவலிங்கத்தை அடிப்பதையே தொண்டாகவும் கொண்டாராம்.

சைவசமய நூல்களையும், பிற சமய நூல்களையும் ஐயந்திரிபற ஆராய்ந்து கடைசியாகச் சைவசமயம் ஒன்றில்தான் உண்மை ததும்பி வழிவதைக் கண்டறிந்த சாக்கியருக்கு, அச்சமயக் கடவுளை எப்படி வழிபடுவது என்பது மட்டும் தெரியாமல் திகைத்தார் என்பதை எவராவது நம்ப முடியுமா?

இனி, இந்நிகழ்ச்சியால் பெறப்படும் உண்மை என்னவென்றால், சாக்கியர் என்பவர் ஒரு நேர்மையான ஆராய்ச்சியாளர் என்பதும், அவர் பல சமயங்களை ஆராய்ந்ததில் புத்த சமயமே ஓரளவுக்கு உண்மையான சமயமாக அவருடைய ஆராய்ச்சிக்கு எட்டியதென்பதும்; அதனாலேயே அவர் புத்த சமயத்தைத் தழுவினார் என்பதும்; புத்த மதத்தைத் தழுவிய பின்னரும், வேறு பல சமய நூல்களை ஆராய்ந்ததில் சைவ சமயமே மிகவும் அருவருப்பான சமயமாகத் தெரிந்ததென்பதும், அதனாலேயே அவருக்கு அளவு கடந்த சினம் ஏற்பட்டுச், சிவலிங்கத்தைக் காணும் போதெல்லாம் அதனைக் கல்லால் அடித்தார் என்பதும் சிறிதும் ஐயுறவுக்கு இடமின்றி அறியப்படும் உண்மையெனக் கொள்க. இதனால், நாம் பௌத்த சமயத்தை ஆதரிப்பதாகவோ அன்றிச் சைவ சமயத்தை வெறுப்பதாகவோ எவரும் கருதிவிடக் கூடாது. நாம் எந்தச் சமயத்தையும் சாராது, எதனையும் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ச்சி வாயிலாக உண்மையை அறிய விரும்புவதே எம்முடைய நோக்கமாகும். பெரிய புராணத்தில் காணப்படும் இந்நிகழ்ச்சி, நாம்மேலே தீட்டி யுள்ள உண்மைகளையே புடம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.

இனிப், புத்த சமயத்தைச் சார்ந்து நின்று அச்சமய வழி ஒழுகிய ஒருவரின் நிகழ்ச்சி, சைவ சமய நூலான பெரிய புராணத்தில் எப்படி இடம் பெற்றதென்றால், பெரிய புராணம் என்பதாக ஒரு நூலை வெளியிட்டு அதன் வாயிலாகச் சைவ சமயத்துக்கு உயர்வு தேட முயன்றவர்கள், பல கதைகளைப் புனைந்தும், மாற்றியும், திரித்தும் தமக்கேற்றபடி தொகுத்துக் கொண்டார்கள். திரித்துக் கூறப்பட்ட கதைகளில் சாக்கியர் நிகழ்ச்சியும் ஒன்று. புத்த சந்நியாசி ஒருவருடைய வரலாற்றைத் தலைகீழாக்கி, அதனை ஒரு சிவனடியாரின் வரலாறாக மாற்றிவிட்டனர் என்ற உண்மை, இந்நிகழ்ச்சியை ஆராய்ச்சியுணர்வோடு படிக்கும் எவருக்கும் எளிதில் விளங்கக்கூடிய ஒன்றாகும். இல்லையேல், பாலால் முழுக்காட்டிப் பச்சிலையாலும் மலராலும் அருச்சித்து வழிபடவேண்டிய சிவலிங்கத்தை ஒருவன் கல்லால் அடித்தான் என்றும், “இளங்குழவிகள் எது செய்யினும், அது, பெற்றோர்களுக்கு இன்பூட்டுவதுபோல், இச் செய்கை சிவனுக்கும் இன்பூட்டிற்று” என்றும் மனமறிந்த பொய் கூறுவார்களா? சாக்கியர் சிவலிங்கத்தைக் கல்லால் அடித்தற்குரிய காரணத்தை விளக்கவந்த சேக்கிழார் இவ்விதம் கூறியுள்ளார். என்னே சேக்கிழாரது அறிவுத்திறன்! சாக்கியர், பெற்றோர்மீது கல்வீசி மகிழும் குழந்தைப் பருவத்தினரல்லவே! அவர் பல சமய உண்மைகளை ஆராய்ந்தறிந்த மூதறிஞர். அறிவில் மட்டுமன்று - ஆண்டிலும் முதியவர். அப்படிப்பட்டவர், சிவலிங்கத்தை வழிபடும் முறை எது என்பதைத் தெரியாது, ஒரு குழந்தைபோல், கண்ணுக்குத் தென்பட்ட ஒரு கல்லை எடுத்துச் சிவலிங்கத்தின்மீது குறி பார்த்து அடித்தார் என்பதையும், அது, அளவு கடந்த அன்பின் மேலீட்டால் செய்யப்பட்ட ஒரு செயல் என்பதையும் யார் நம்புவார்கள், அறிவுக் குருடரைத் தவிர!

4.4.1948