அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கண்டார் - மகிழ்ந்தார்!

குற்றம் செய்தனரா? கிடையாது. இருந்தாலும் தண்டிக்கப்பட்டனர்! வெறும் ஆட்கள் அல்லர். வீணர்கள் அல்லர். பூமிக்குப் பாரமாக இருந்தவர்களும் அல்லர்.

தினம் தினம் வளர்ந்து வரும் புகழுடன் விளங்கினவர். தாம் தேடாப் பொருளை வகையின்றி வாரி இறைத்து, புகழைக் கடைச்சரக்காக வாங்கினவரல்லர். கற்றார் மட்டுமா அவர்களைக் காமுற்றனர்? கல்லாதாரும் - காதும் கண்ணும் பழுதுபடாதிருந்த பல்லோருந்தான் புகழ்ந்தனர்.

பரம்பரைக் குடும்பச் செல்வாக்கால் வந்த பெருமையா? இல்லவே இல்லை! சொந்த அறிவால் - அரிய முயற்சியால் புகழ் பெற்றனர். இவர்களுடைய பெற்றோர்களைத் தேடித் தெரியவேண்டிய அளவிற்கு, திறமையைத் தெளிவாகக் காட்டினர் மக்களுக்கு.

பத்திரிகைப் பலத்தால் கட்டப்பட்ட மணல்வீடா, இவர்கள்புகழ்? ஒருவரும எண்ணத் துணியார்! இவர்கள் வாழ்வைச் சிதைக்க - புகழைப் பறிக்க - நாட்டிலே பலப்பல பத்ரிரிகைகள், பரம்பரைப் பண்புப்படி இருட்டடித்தனர் எதுமறியாதார்போல்! இருந்தாலும் இவர்கள் ஆசையும் - நடிப்பும் இடம் பெற்று விட்டது தமிழர்கள் உள்ளத்தில்.

செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை! பதினான்கு ஆண்டுக்கு சுய உரிமையோடு மக்களிடம் பழகும் பேறு கிடையாது!

கலையுலகில் அவர்கள் நின்றிருந்த இடத்தை நிரப்பு, சித்தரித்து நிறுத்தப்பட்ட ஆட்கள் அனைவரும் வெறும் ஏடுபிடிகளாகப் போயினர். வான்கோழி தோகை மயில் இவதெங்கே? கரையும் காகம் ஆசையெழுப்பும் குயில் ஆகுமா?

நீதி நேராயிற்று. கலைஞர்கள் குற்றமற்றவர்களெனத் தீர்ப்புக் கிடைத்தது. சிறைக்கதவு திறந்தது. தமிழரின் இரு கண்களும் ஒளி வீசத் தொடங்கின.

நகைச்சுவை அரசர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களை வரவேற்கும் வாய்ப்பு, காஞ்சிபுரம் மக்களுக்குக் கிடைத்தது. செயலாற்றும் சிறப்பமைந்த தோழர் தங்கவேலர், அலுப்புச் சலிப்பின்றிப் பணியாற்றினார்.

செய்தி
ஏராளமான விளம்பரம். சென்னைத் தமிழ் தினசரிகள் எல்லாம் ‘வரவேற்பு’ விளம்பரத்தைப் பிரசுரித்தன. காஞ்சியைச் சுற்றி ஐம்பது மைலில் உள்ள முக்கிய நகரங்களில் எல்லாம் சினிமாக்களில் விளம்பரஞ் செய்யப்பட்டன. ஒருவாரம் வரையில் தோழர் கிருஷ்ணன் வருகையைக் குறித்துப் பேசாதார் எவரும் இலர். குறிப்பிட்ட 18-5-47 பகலுக்குமேல், கூட்டம் நடக்கும் மைதானத்தில் மக்கள் திரள ஆரம்பித்துவிட்டனர். நகைச்சுவை அரசரைப் பார்க்க, மக்களுக்கு இருந்த ஆவல் மண் உருகக் காயும் கதிரவனின் கொடுமையையும் சகித்துக் கொண்டனர்.

பலம் பொருந்திய பெரிய மேடை - அலங்காரமான பந்தல் - நூற்றுக்குக் குறையாத வரிசை வரிசையாக மின்சார விளக்குகள், புழுதி அடங்க ஊஷ்ணம் தாக்காதிருக்க தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்தது. போலீஸ் முன்னேற்பாடு உண்டு.

மக்கள் ஐம்பதினாயிரத்துக்கு அதிகம். பெணகள் எண்ணிக்கையும் நான்கில் ஒன்று. எந்த அரசயில் தலைவருக்கும், இவ்வளவு மக்கள் திரண்டதில்லை. இடம்பரமான வரவேற்பு அளிக்கப்பட்டதுமில்லை.

கலைஞரைக் காணவேண்டும் - சொற்கûக் கேட்க வேண்டும் என்று மக்களுக்கு இருந்த ஆர்வம், கண்டு உணரக் கூடிய விஷயம். ஆரம்பித்தில் ஒலிபெருக்கி ஒத்துழையாமை செய்தபோது மக்கள் காட்டிய பரபரப்பை எடுத்துக் காட்டச் சொற்களுக்குச் சக்தி இல்லை.

நகைச்சுவை அரசர் சரியாக மாலை ஆறு மணிக்கு அழைத்து வரப்பட்டார் மேடைக்கு, தோழர் தங்கவேலர் அவர்களால், அவருடன் தோழர்கள் நடிகர் கே.ஆர். இராமசாமி, உடுமலை நாராயணக் கவி, திருவொற்றியூர் டி. சண்முகம், இன்னும் பலரும் வந்திருந்தனர்.

காஞ்சி நகரப் பொது மக்கள், திராவிடர் கழகம், முஸ்லீம் வாலிபர் சங்கம், முல்லை அச்சகம், விஸ்வகர்ம தொழிலாளர், திராவிட ஆராய்ச்சிக் கழகம், நாயன ஆசைக் கழகம், திராவிட மணாவர் கழகம், திராவிட ஆனந்த நாடக சபா, தையல் தொழிலாளர் சங்கம், திராவிட உடற்பயிற்சிக் கழகம், ஆண்டர்சன் பழைய மாணவர் சங்கம், உணவு விடுதி மாணிககம், இன்னும் பல சங்கங்கள், தனி நபர்கள் சார்பில் வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிக்கப்பட்டன. மலர்மாலைகளும் ஏராளமாக அணிவிக்கப்பட்ன. வரவேற்பிதழ்களைத் தோழர் அண்ணாதுரை வாசித்தார். ஏ.கே. தங்கவேலர் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

ஒலிபெருக்கி நன்றாக வேலை செய்யாத காரணத்தால், மேடைக்குப் பின்புறத்திலிருந்த கண்ணன் டாக்கீஸ் முன் மாடியில் வேறு ஒரு ஒலிபெருக்கி அமைத்துக் கூட்டம் நடைபெற்றது. அரைமணி நேரம் தோழர் கிருஷ்ணன், இயல்பான தன் நகைச்சுவைச் சொல்லால், சிறை வாழ்வைச் சித்தரித்தார். பலப்பல இடங்களில் மக்கள் கைதட்டி, கிருஷ்ணன் பரிமாறிய சுவைமிக்க சொற்களைச் சுவைத்தின் புற்றனர். “ஜென்ம தண்டனை என்ற தீர்ப்பைக் கேட்டதும் நான் ஒருநாள் உணர்வின்றிச் சோர்ந்து கிடந்தேன்; பாகவதருக்கு மூர்ச்சை தெளிய இரண்டுநாள் பிடித்தது” என்று கிருஷ்ணன் சொன்னபொழுது, கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களும், தங்களை மறந்தவர்களாய் இச்-ச் என ஒலித்தனர். இது ஒன்றே போதம்கிருஷ்ணன், பொதுவாகக் கலை உலகிற்கும், குறிப்பாகத் தமிழர்களின் கருத்துலகிற்கும் செய்த தொண்டின் பெருமையை ஆளப்பதற்கு. இரவு ஒன்பது மணிக்குத் தோழர் அண்ணாதுரையின் வந்தனத்துடன் கூட்டம் முடிந்தது.

பொதுவாகக் காஞ்சிபுரம் திருவிழாக்களுக்குப் பேர் போனது. பெருங்கூட்டமாக மக்கள் கூடும் கருட சேவைக்குக் கூட இவ்வளவு கூட்டம் கூடினதில்லையெனக் கூட்டத்திற்கு வந்தவர்கள் பேசிக்கொண்டே சென்றனர். என்றும் காஞ்சி÷பரவாசிகள் 18-5-47ந் தேதியை மறக்கமாட்டார்கள்.
சென்னையிலிருந்து தோழர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் பகல் 3-30 மணிக்கே காஞ்சிபுரம் வந்துவிட்டார். தோழர் ஏ.கே. தங்கவேலர் அவர்கள் இல்லத்தில் சிற்றுண்டி அளிக்கப்பட்டது. முதல் முதலாக கண்ணன் டாக்கீசில் அதன் சொந்தக்காரர் ஏ. பாலகிருஷ்ண முதலியார் அவர்களால் மாலை அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை
தமிழ்நாட்டில் நாம் இதுவரையில் கண்டிருப்பதென்ன? அரசியல் காரணத்துக்காகச் சிறைபட்டவர், விடுதலை பெற்றதால்தான் வரவேற்புகள் அளிப்பதைப் பார்த்திருக்கிறோம். சிறையிலுள்ள அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டுமென, தொடர்ந்து வேண்டுகோள் விடுவதையும் கேட்டிருக்கிறோம். ஆனால் வேறு காரணத்திற்காகக் கைதியானவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமெனப் பலர் மனமார - நாவாரச் சிலர் - வேண்டுகோள் விடுத்ததை, இக்கலைஞர்கள் விஷயத்தில் மட்டுந்தான் கண்டோம். கட்சிப் பாகுபாடின்றித் தமிழ்நாட்டிலுள்ள சகல நகர சபைகளும் இவர்கள் விடுதலையைப் பற்றித் தீர்மானங்கள் நிறைவேற்றின. பல கழகங்களும் இதனைச் செய்ததுண்டு. இவ்வளவிற்கும் காரணம் என்ன?

கலை உலகிற்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள முற்போக்கான மன மாறுதல்தான் காரணம். இதற்கு முன்பெல்லாம் நடிகர்கள் என்றால், ஏதோ காசு கொடுத்து விட்டுக் காணவேண்டிய காட்சிப் பொருள்கள் என்றே மக்கள் நம்பி வந்தனர். ஆனால் அந்த நிலை மாற்றமடைந்து விட்டது. இத்தகைய மாற்றத்திற்கு முழுதும் பொறுப்பாளிகள் இவ்விரு கலைஞர்களும், அதிலும் தோழர் கிருஷ்ணன் ஏற்படுத்திய மாற்றம் மிக மிக அதிகம். கண்ணுக்கும செவிக்கும் மட்டும் விருந்தளிப்பவராக இல்லை இவர். நவயுகக் கருத்துக்களை ஒப்பி ஏற்கும் அளவில், கிருஷ்ணன் கலையைக் கருவியாக்கினார். இதன் பலனாகத் தான் தமிழர் உள்ளத்தில் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்று விட்டார். காண்டல்-கேட்டல் என்பதன்றி இவரை நினைக்குந் தோறும் நினைக்குந்தோறும் சிரிப்பு பீறிட்டு வருகிறது.

தங்கள் வாழ்வில் கலந்த இவரை, எவருந்தான் எப்படி மறக்கத் துணிவர்? இதன் பலனாகவன்றோ, நீதியின் முடிந்த முடிவு கிடைப்பதற்கு முன்னரே, மன்னிப்பு வேண்டுமென்று மகஜர் தயாரித்தனர் பலரும்! கலைஞர்பால் கருணை காட்டுக! எனத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு எரும் கூட்டங்கள் கூட்டித் தீர்மானித்தன. இவர்கள் விடுதலையை வரவேற்று தினசரி தலையங்மன்றோ எழுதிற்று. சண்டே அப்சர்வர் தாளும் வரவேற்புக் கூறிற்று. காஞ்சிபுரத்தில் கண்ட காட்சி, தோழர் கிருஷ்ணன் அவர்களின் சோர்வுபட்ட உள்ளத்திற்கு உற்சாகமூட்டியிருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. மேலும் தமிழர்க்கு முற்போக்கான முறையில் தம் திறமையைப் படஉலலில் சித்தரித்துக் காட்டுவார் என்பதில் நமக்கு முழுநம்பிக்கையுண்டு.

(
திராவிடநாடு - 25.5.47)