அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கனிதேடி அலுத்தபிறகு!

கனிதேடி மரமேறுவோன், முதலில் கண்ணைப் பறிக்கும் கனிகளைப் பறித்துப், பின்னர் தேடத்தொடங்கிச் செங்காயையும் பறித்துச் சேர்ப்பான் அதுவும் தீர்ந்திடின், பிஞ்சிலும் சில பறிப்பான். ஆவலின்மிகுதி. குவியலாக கனிதேட வேண்டும் என்ற விருப்பங் கொண்ட அத்தோழன் தன் விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் அளவு கனி தாங்காது மரமிருப்பது கண்டு, கனி இலையேல், செங்காய் உண்டு, பிஞ்சிலும் சில உண்டு, என்று படிப்படியாகப், பயன் குறைந்ததையும் குவிப்பதுண்டு. நண்பர் இலக்குவனார், இந்நிலை பெற்றார் என்பது இவ்விதழில்வரும் அவர் தம்வினாக்களால் விளங்கும். சீர்திருத்த மாற்றல் அரசியலார் கடனேயன்றோ, புலவர் அத்துறைபுகல் முடியுமோ? என்ற அவரது கனியே, நான் தந்த விடைக்குப்பிறகு வெறும் துவர்ப்பு என்பது தோழர் மீண்டும் வேறு வாக்கிய அமைப்புடன் விடுத்துள்ளார்.

“சமூக அமைப்பில் குறை காணப்படின் அகற்றவேண்டியது சீர்திருத்தக்காரர் முயற்சியால், ஆட்சியாளர் கடமையாகுமேயன்றி, இலக்கியம் இயற்றும் புலவர்களின் இன்றியமையாக் கடமையாகுமா?” என்றும், ‘புலவர்கள் அனைவரும் சீர்திருத்தக் கொள்கை யுடையவராகவே இருக்கவேண்டுமென்று எதிர்பார்த்தல் தகுதியாகுமா’ என்றும் கேட்டுள்ளார் இலக்குவனார். இவைகேட்கு முன், அவரே, நூல்களில் பிறரை இழிவு படுத்தும் கொள்கை காணில் ஆவனசெய்ய வேண்டியவர் அரசியலார் அல்லவா? என்று கேட்டுவிட்டார், நானும் பதில் தீட்டினேன். அக்கேள்வி கனிஎனில், பின்னர் அதே கருத்தோடுகூடிய இக் கேள்விகள் செங்காய்தானே! அத்தோடு நின்றாரா அன்பர்! கந்தமூலங்கள், சருகு எனத்தக்க வினாக்களையும் விடுகிறார்.

‘கம்பரும், சேக்கிழாரும் தமிழர்களை இழிவு படுத்துவதற் காகவா இந்நூல்களை எழுதினர்” என்று கேட்கிறார். இச்சரகு, கனிபோன்ற கேள்விகளைக் கேட்டு அலுத்தபிறகு, எண்ணிக்கையைப் பெருக்க எழுந்ததன்றி வேறென்னவென்று கேட்கிறேன். நான் வேண்டுமென்று வண்டியைக் கவிழ்த்தேன் என்று கடையாணியைச் சரிபார்த்துக் கொள்ளாத வண்டி ஓட்டி, குடைகவிழ்ந்த வண்டியிலிருந்து கீழே வீழ்ந்தெழுந்தோர் குறை கூறுகையில் கூப்பிய கையும் இளித்த முகமும் கொண்டு, சமாதானங் கூறுவது போன்றது இக்கேள்வி. தமிழரின் இழிநிலைக்குக் காரணமானதும், இழிநிலையையே உயரியது என்று பலர் கருதும் மனமயக்கத்தை ஊட்டுவதும், தமிழரை அடக்கி ஆளும் ஆரியத்துக்கு ஆக்கம் தேடுவதுமான, விளைவுகள்; கம்பரும் சேக்கிழாரும் இயற்றியன ஏடுகளாக வந்தன, வந்தபடி உள்ளன. அவர்கள் எக்கருத்துக்கொண்டு எழுதினர் என்பது அவர்களின் தனிப்பட்ட பண்பாராய்ச்சிக்குரியதே யன்றி, அவர்களின் செயலால் நேரிடும் விளைவை ஆராய்கையில் எங்ஙனம் எழும். நல்ல குணமுடையவன் ஒரு டாக்டர், அயங்கலந்த மருந்து தருவதற்குப் பதில், நச்சுக்கலந்த மருந்து தந்தான். மருந்துண்டோன் மாண்டான், மற்றவர், பின்னரும் அந்த டாக்டரின் மருந்தைப் பருகிடுவரோ! பார்வைக்கு அழகானவள் பத்தினித் தனத்தை இழந்தவள் எனில், அவளைக் கண்ணகி பூசைக்குக் காவலாக அமைப்பரோ! கம்பரும் சேக்கிழாரும் தமிழரை மறந்தோ, ஆரிய நெறியைச் சரியெனக் கொண்டோ, ஆரிய நிபந்தனையை மீறத்துணியாமலோ, ஆரியர் மகிழ வழி இது என்று கொண்டோ ஏடு எழுதி இருக்கக்கூடும் அன்று அவர்கள் கருத்துட்கொண்டதெதுவோ! விளைவு, வேதனையாக இருத்தலை இன்று காண்கிறோம், எனவே ஏடுகள் நாட்டுக்கேற்றவையாகா என்றுரைக்கிறோம்.
அவர்களின் நிலைபற்றியே தோழர் இலக்குவனார் விடுத்துள்ள வேறு இரு கேள்விகள், இதற்கு விடை தருகின்றன. எனவே எனக்கு அவர்விடும் வினா, அவர்கோரும் விடையை அவருக்குத் தரும் விந்தை நேரிடக் காண்கிறேன்.

‘அவர்கள் அக்காலத்து நிலையைத் தம் இலக்கியங்களில் அமைத்தனரேயன்றிப் பிறிதல்லவே? இலக்கியங்கள் வாழ்க்கைப் படம் - காலக் கண்ணாடி அல்லவா?’ என்றும், ‘இலக்கியங்கள் இயற்றும் புலவோர் அவர் காலத்து உள்ளனவற்றைத் தாம் விரும்பாவிடினும் மறைத்துக்கூறுதல் முடியுமோ? மறைத்துக்கூறுதல் தான் பொருந்துமா?’ என்றும் நண்பர் கேட்கிறாரே என்னை. அதேதான் கம்பரும் சேக்கிழாரும் அந்த ஏடுகளை எழுதியதன் காரணமாக இருக்கும், என்ற விடையாகக் கொள்ள வேண்டுகிறேன். அதிலிருந்து ஏற்படுவதென்ன? அப்புலவர்கள் அவர் காலச் சிறையிலே உழன்றனர் என்பதுதான்! அதுமட்டுமா! பின் சந்ததியையும் சிக்கவைத்தனர்! அந்தச் சிறைக்கூடத்தை இடிக்கவேண்டுமென்பதே என்போன்றார் நோக்கம். இது தவறல்லவே!

வேறென்ன செய்ய முடியும் அப்புலவர்? என்பீர். கூறுகிறார் கேண்மின், நம் தோழர். ‘இப்புலவர்கள் வாழ்ந்த காலம் எவ்வாறிருந்தது? அந்நிலையிலும் முற்போக்கான கொள்கைகளைத் தம் இலக்கியங்களில் புகுத்தியிருக்கின்றனரென்பதையறிவீர்களா?’

அறிவேன் தோழரே! அறிந்தால்தான் அழகுபடக் கூறிடும் திறன் அவரிடம் இருந்ததைத் தெரிந்ததால்தான் அத்திறம் படைத்துக், காலச்சிறையில் உழன்றும், பகுத்தறிவுப் பலகணியைச் சற்றே திறந்தனர் என்பதையும் நான் அறிவதால்தான், அவர்களையே அவ்வளவே செய்ய வைத்தும், அத்தகையவர்களையே சிறைப்படுத்தியதும், அவர்களின் செந்தமிழ்த்திறனையே அடிமை கொண்டதுமான ஆரியத்தை, இனியும் மக்கள் கொள்வதுகூடாது என்ற கருத்துடன் அந்த ஆரியத்தைச், சிறைப்பட்ட சீரிய அப்புலவர்கள் செய்துவைத்த ஏடுகள் நாட்டிலே நிலைக்கச் செய்வதால், நெருப்பிலிடுக அந்த ஏடுகளை என்றுரைக்கிறேன். அதற்காக என்னை நிந்திப்பதா!

மேலும் தோழரே, அங்ஙனம் கூறத் துணிவு பிறந்தமைக்குள்ள பல காரணங்களிலேயே நான் காண்கிறேன். ‘இப்புலவர்கள் தம் நூல்களில் கூறியவாறுதான் மக்கள் நடக்க வேண்டுமென்று மதத்தலைவர்போல் கட்டளையிடுகின்றனரா? இவர்கள் கூறியுள்ளன இன்று சட்டமாகக் கொள்ளப்படுகின்றனவா? என்று கேட்டீர். இல்லை என்பதே என் விடை. இல்லாததால்தான், அந்த ஏடுகளை ஆராயவும், ஆபாசங்காணின் கொளுத்துவதன்மூலம் கண்டிக்கவும், எவருக்கும் உரிமை உண்டு என்கிறேன். அவர் எழுதியவை இன்று ‘கட்டளை’யென்று நீரும் நானும் கருதுவதில்லை. உமது புலமை உமக்குத் தெளிவைத் தருவதால், அந்த ஏடுகளிலே உள்ளவை ‘மதக்கட்டளை’ என்று கொள்ள மாட்டீர்; நான் சீர்திருத்த நோக்கமுடையேன், எனவே மதக் கட்டளை எதுவும் என்மனக் கட்டளையைத் தடுக்கவிடேன். பெரும்பாலான மக்கள் நிலை அஃதோ! அவர்களின் நிலைமாற வேண்டாமா! அதற்கென்ன வழியெனில், அவர்கள் முன்னிலையில், அந்த ஏடுகளை எரியிட்டு, ‘இதோ காணீர்! இவை மதக் கட்டளையுமல்ல. என்னை அங்ஙனம் கொள்ள வேண்டுமென்று இவ்வேடுகளை எழுதினோரும் கூறினாரில்லை, அவைகளிலே வரும் கருத்துகள் சட்டமுமாகா’ என்று கூறவேண்டும், அதில் நீர் சேரவேண்டாமோ கூறுமே!

காமுற்றவளின் அங்கங்களைச் சிதைப்பதும், தவமியற்றிய தமிழன் தலையை வெட்டுவதும், அண்ணனைக் கொன்று தம்பிக்குப் பட்டம் சூட்டுவதும், தம்பியின் துரோகத்தைத் துணைக்கொண்டு அண்ணன் தலையைக்கீழே உருட்டுவதும், சட்டமாக இரா! எனவே புலவர், தம் ஏடுகளில் சட்டமென்று கூறிடவில்லை. பிள்ளையைக் கறியாக்கும் பக்தரும், பெண்டை அனுப்பி முக்தி கோருவோரும், இன்று இல்லை, மனித அறிவு வெகுதூரம் முன்னேறியதால், அந்த அறிவுப் பெருக்கத்துக்குத் தடையாக அந்த ஏடுகள் உள்ளனவே, அறிந்தோர், உரைக்காரோ!

தோழரின் சிந்தனைக்கு அதிக சுமைக் கூடாது. மற்றுமுள நான்கு கேள்விகள், அவரது ஆராய்ச்சியின் பிழிவுகள். ‘தொண்டர் புராணமென்று சேக்கிழாரும், இராமகாதை என்று அவரும் தத்தம் நூலுக்குப் பெயரிட்ட கருத்து என்ன? என்று கேட்கிறார். என்ன கருத்து? தொண்டர் வாழ்ந்த மறை இது, தேவன் திருவிளையாட்டு இது என்பதை நாட்டாருக்கு உணர்த்துகின்றனர் என்று கருதுகிறேன். தொண்டர் நிலையும், தேவன் திருவிளையாட்டும், அந்த ஏடுகள் கூறுவன போன்றிருக்கக் கூடாதென்பதற்கே, அந்த ஏடுகளை நெருப்பிலிட வேண்டுமென்று கூறுகிறேன்.

கற்பனையும், உயர்வு தாழ்வு கூறுவதுமான மேனாட்டு ஏடுகள் இல்லையோ என்பது பிறிதோர் கேள்வி. உண்டு, அவை மத நூற்களாக, மகத்துவ ஏடுகளாக, பேறுதரும் ஏடுகளாகக் கருதும் மக்கள் இல்லை. நினைப்பு இல்லை. நிகழ்ச்சியில்லை. எனவே அங்கு நெருப்பு எழவில்லை. அங்கும் போப்பாண்டவரின் பாவமன்னிப்புச் சீட்டுகளை, மதசீர்திருத்தவாதிகள் தீயிலிட்டதும், லூதரின் நூலை, கத்தோலிக்கர் கொளுத்தியதும், சரிதம், சீர்திருத்தக்காரர்கள் நினைப்பதுபோல் இவைகளைக் கற்பனை இலக்கியமென்று பொது மக்கள் கருதத், தீயிலிடல் எவ்வளவு தூரம் பயன்படும்? என்று கேட்கிறார். மக்களைத் திகைப்பிலாழ்த்தும் முதலில், பிறகு எண்ணிடச்செய்யும், எண்ணம் திண்ணமாக எழுச்சியைத் தகும், விழிப்பை அளிக்கும், வீறுகொள்ளச்செய்யும், ஆரிய சூதை வெளியாக்கும், காரியவாதிகளவர், என்ற கருத்தைத் தரும், ஆபாசத்தை அகற்றிடவைக்கும், அறிவுத் துறையைத் திறந்து வைக்கும். இவையும் இவற்றினும் அதிகமும் தீ பரவினால் ஏற்படும். வேறு ஆக்க வேலைகள் இலவா? இது அடுத்த கேள்வி, உண்டு! ஆக்க வேலைக்கு ஊக்கமூட்டுவதே, தீயிடும் செயல். ஆக்கவேலைக்கு ஊக்கம் பிறந்ததும் இன்று நம்மைக் குத்தும் பேனா முனைகள், அத்துறைபுகும். அதற்கு வழிகோலுவதே, இன்றைய வேலை. இறுதியாக, ‘இந்நூல்களைப் பற்றி வரலாற்று ஆராய்ச்சி யாளர் கருத்து என்ன என்பதாகும்! இவை, ஆரிய மார்க்கத்தைத் தமிழகம் ஏற்றுக் கொள்ளுமாறு ஆரியர் துவக்கி நடத்திய கலைக் கொலையின் கருவிகள் என்பதே ஆராய்ச்சி முடிவு! இலக்குவனாரின் கேள்விகள் தீர்ந்தன. அவரது இன்றைய மனநிலை பற்றி எழுதிடின் நான் என்றும்போலவே, கவனித்துப் பதில் இறுப்பேன் என்பதைக்கூறி இதை முடிக்கிறேன்.

தோழர் இலக்குவனாருக்கு விடுத்த விடைகளைப் படித்தபிறகு அவர் மனம் மாறினாரா? என்று திருவாரூர் இள நண்பர் கருணாகரன் என்பார் என்னைக் கேட்கிறார். எனக்கும் அதை அறிய ஆவல்தான், ஆனால், தோழர் இலக்குவனார் தமது கருத்தை இனியும் தெரிவிக்க வேண்டும், திருவாரூர் தோழரின் கேள்விக்குப் பதில் அப்போதுதான் கிடைக்கும். அந்த இள நண்பர், இராமனைப் போற்றும் பகுதிகள் வேறு இலக்கியங்களிலே வருகையிலே என்ன செய்வது என்றும் கேட்கிறார். கம்ப இராமாயணம் காற்றிலே பறந்தோடினால், கிளைகள் தானாகச்சாயும்! மேலும், நான் முதலிலிருந்தே கூறி வருகிறேன், இராமாயணத்தை மதநூலெனக் கொண்டு மக்கள் தலைமீது வைத்துக்கொண்டு தாண்டவமாடுவது போல, வேறு எந்தக் கற்பனைக் கதையையும் கற்பனையைத் தழுவி இலக்கியத்தையும் மதநூலெனக் கொண்டு மனமயக்க மடைவ தில்லை. மற்ற எந்த இலக்கியத்தை மக்கள் படிப்பதனாலும், பார்ப்பனர்களுக்கு ஆதிக்கமும் வருவாயும் அதிகரிப்பதில்லை. ஆரிய உயர்வுக்கு அடிகோலும் “கைங்கரியத்தை” இராமாயணமே செய்கிறது, எனவேதான் அதனைக் கண்டிக்கின்றனர், சுயமரியாதைக்காரர்கள்.

தேவன், இராமன்! அவன் பட்டாபிஷேகம் தடைப்பட்டு காடேக வேண்டி நேரிடுகிறது. நானும் வருவேன் என்று ஜானகி கிளம்பும்போது இராமன், பிராமணர்களுக்கு, ஆபரணங்களைக் கொடுத்துவிடும்படி கூறினான் - இது இராமகாதை, ஏன் தோழர்களே, அந்தச் சமயத்திலும், இராமர், பிராமணருக்கு அந்தத் தானம் தரவேண்டும்! மிதுலைக்கு அனுப்பக்கூடாதா? அயோத்தியிலேயே, ஏழை எளியவருக்குக் கொடுக்கலாகாதா! பரதனிடந்தான் இருக்கட்டும் என்று, ராஜாங்க பொக்கிஷத்திலே சேர்ப்பிக்கக் கூடாதா? வழிச் செலவுக்கு உபயோகப்படட்டும் என்று கையிலே எடுத்துக் கொண்டே புறப்படக்கூடாதா! பிராமணருக்குத் தானம் செய்தார்! மகாவிஷ்ணுவின் அவதாரம் என்றும், சற்குணரென்றும், சத்தியவானென்றும் போற்றப்படும் இராமனே, பிராமணருக்குத் தானம் கொடுத்தார் என்பதைப் “புண்ணிய கதை” “மோட்ச சாம்ராஜ்யந்தரக்கூடிய புராணம்” “பாராயணத்துக் கேற்றது” என்று கொண்டாடப்படும் புத்தகத்தின் மூலம் மக்கள் சதாகேட்டுக் கேட்டு வருவார்களானால், தமிழ் மக்களே! ஏன், வீணாக நீங்கள் அர்த்தமற்ற சடங்குகள் செய்து, அனாவசியமாக உங்கள் பொருளைப் பிராமணருக்குத் தருகிறீர்கள்” என்று சுயமரியாதைக் காரன் எத்தனை நாள் கூவினாலும், பலன் ஏற்படுமா! இராமபிரானே பிராமணருக்குத் தானந்தந்தார் - கடவுளே இந்த வழிகாட்டினார் - சுயமரியாதைக்காரர் பிராமணருக்குத் தானந்தர வேண்டாம் என்று கூறுவது எப்படிச் சரியாக இருக்கும் என்று பாமரர் எண்ணுகிறார்கள். ஏதேனும் இலக்கியத்திலே, எவனாவது ஓர் அரசன், பிராமணருக்குத் தானம் தந்ததாகக் காணப்படும். அது படித்தோரும், இவ்வளவு பிடிவாதமாக, பிராமணபக்தராக மாட்டார்கள் ஏனெனில், அரசன் ஓர் மனிதன் என்ற மனப்பான்மையுடனேயே மக்கள் அந்த இலக்கியத்தைப் படிப்பார். இராமனோ, தேவன், என்ற நம்பிக்கையுடன் இராமாயணத்தைப் படிக்கின்றனர். அந்த “நம்பிக்கை” சீர்திருத்தவாதியின் முயற்சிகளைக் கெடுத்து விடுகிறது. எனவே அத்தகைய நம்பிக்கையை ஊட்டும் “ஏடு” கண்டிக்கப்பட வேண்டும் என்று கிளர்ச்சி செய்கின்றனர்.

பரதா! நீ சொல்வது, பாமரர் மனப்பான்மை பற்றித்தானே. நாங்கள் அத்தகையவர்களல்லவே! நாங்கள், இராமகாதையையோ, மற்றப் புராணங்களில் வரும் கற்பனைகளையோ நம்புகிறோமா! இலக்கியச்சுவைதானே கொள்கிறோம் - என்று வாதிடும் தமிழ்ப் புலவர்களை நானறிவேன். அவர்கள், இச்சமயம் செய்யவேண்டிய அருமையான பணியை உணராது, வீணாகச் சுயமரியாதைக்காரர்மீது மோதிக்கொள்வது கண்டே நான் வருந்துகிறேன். இராமகாதை வெறுங் கற்பனை என்பதை இப்புலவர்கள், பொதுமக்களிடம் எடுத்துரைக்க முன்வருவதில்லை. காரணம் என்ன? தாங்கள் கற்பனை என்று நன்கு கண்டதை மக்கள் உணராது, இராம காதையை அப்படியே நம்பிக் காரியங்கள் நடத்துவதைக் கண்டும், அதைத் தடுக்க இப்புலவர்கள் சிறுவிரலையும் அசைப்பதில்லை. ஏன்? என்று நான் கேட்கிறேன். அது எமது வேலையல்ல! என்று புலவர்களிலே சிலர் கூறுவர், சீற்றத்தோடு. “சரி, பண்டிதரே! மற்றவர் அக்காரியத்தைச் செய்யும்போது, நீவிர், வாய்மூடிக்கிடக்கலாகாதா? வெறும் இலக்கியத்துக்காகவே மேற்படி ஏடுகளைப் படிக்கும் நீவிர், அந்த ஏடுகளிலே காணப்படும் அறிவீனங்களை ஞானமார்க்கமென்று நம்பும் மக்களைத் திருத்த, மேற்படி ஏடுகளைத் தீயிலிட்டு, மக்களை அதன்மூலம் தெளியவைக்க வேண்டும் என்று கருதும் சுயமரியாதைக்காரர் கிளர்ச்சி செய்யும்போது நீங்கள் ஏன் குறுக்கிட்டு, வைதிகர் மனமகிழ, பாமரர் நிலைகெட, வேலை செய்கிறீர்கள்’ என்று கேட்கிறேன். ‘நாங்கள் சும்மா இருக்க முடியவில்லையே? என்றால், அதற்கும் ஒன்றுரைக்கிறேன்’ வைதிகர், பாமரர் ஆகியோரின் எதிர்ப்பை, தூற்றலை, நாங்கள் தாங்கிக்கொள்கிறோம். அந்த ஆபத்தான வேலை உமக்கு வேண்டாம். உங்களின் கீர்த்தி குன்றாமல், நீங்கள் பாதுகாப்பான இடத்திலேயே இருங்கள். கல்லும் மண்ணும், வசைவும் விழும் இடத்தில் நாங்கள் நிற்கிறோம். நின்று எமது கட்சியை நிலைநாட்டுகிறோம். உண்மையை உரைக்கிறோம். நீங்கள் அந்தத் தீவிர வேலையில் இறங்காது தனியிடமிருந்து, ‘தீயராம் சுயமரியாதைக்காரர் கூறுவது, நிற்க வேண்டுமானால் நாமும் சில ஆபாசங்களை ஒழிக்கத்தான் வேண்டும். நமது புராணாதிகளிலே அறிவுள்ளனவற்றை மட்டுமே நாம் வைத்திருக்க வேண்டும், மற்றவற்றைத் தள்ளவேண்டும்’ என்று பேசுங்கள், எழுதுங்கள், புதுக்கருத்து வளர்ச்சிக்கான நூற்களை இயற்றுங்கள். அதைச் செய்யத் தொடங்கினால், எம்முடன் வாதிடவும் போரிடவும், நேரமிராது! நாமிருவரும் போரிடுகையிலே, இருவரையும் சேர்த்து ஏய்க்க ஆரியத் திருக்கூட்டம் தயாரிலிருக்கிறதே, அதுவும் தோற்கும். அது, செய்ய ஏன் நீங்கள் தயாரில் இல்லை? ஏன், ‘நாங்கள் வைதிகப் பித்தரல்லர் என்று வாயளவில் சொல்லிவிட்டு, வைதிகருக்கு வக்காலத்து வாங்கிடும் செயல்புரிகிறீர்கள் என்று கேட்கிறேன்.

காங்கிரஸ் ‘ஐயர்’ பேசுவது லிபரல் ‘ஐயருக்கு’ப் பிடிக்காது. ஆனால் இரண்டு ஐயர்களும், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் ஐயர் சர்க்காரை மிரட்டி, ஆரிய இனநன்மை தேடுவார், லிபரல் ஐயர் சர்க்காருக்கு லாலிபாடி, ஆரிய இன நலனைப் பெறுவார். வேறு வேறு துறை என்று கருதுவரே தவிர மோதிக்கொள்ளமாட்டார். அதுபோல் நீங்கள், இலக்கியமூலம் மக்களை முன்னுக்குக் கொண்டுவரும் கருத்துகளை எடுத்துரைத்து, புராணக் கருத்தைப் பொசுக்குங்கள், நாங்கள் இலக்கியமென்ற போர்வையிலே மக்களை வஞ்சிக்கும் ஆரியத்தைத் தீயிலிடுகிறோம். தீ, கலைக்கு அன்று, கலை என்ற சீலையால் மூடிவைக்கப்பட்டுள்ள ஆரியத்துக்கு இதை உணரலாகாதா!

14.3.1943