அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கண்ணால் கண்டும்!
பகவான், வைரநாமம், கெம்பு ஸ்ரீ சூரணம் அணிந்து, அபயஸ்தங்களில் நவரத்ன இழைப்பு வேலைப்பாடுகளும், இடையில் தங்க அரைஞாணும், மார்பிலே தங்கப் பூணூலும், விதவிதமான ஒளிவீசும் ஆபரணங்களும் அணிந்திருக்கக் கண்டு, சடாரி சாய்க்கும் ஐயரின் காதிலே வைரக் கடுக்கன் ஜொலிப்பதையும், சஹஸ்ரநாம அர்ச்சனை செய்யும்போது, மலரை வீசும் கரத்திலே டால் அடிக்கம் மோதிரத்தையும், வெள்ளிவட்டிலில் பகவத் பிரசாதத்தையும் கண்டு, பக்தி ரசத்தை உண்டு, வெளியே வருகிறீர்கள். ஒரு சை, உலர்ந்த உதடு, ஒடிந்துபோன கால், ஈமொய்க்கும் புண், ஈளை கட்டிய குரல், ஏங்கித் தவிக்கும் உருவம் கோபுரவாயிலியே குமுறிக் கையை நீட்டி, மகராசா என்று உங்களைக் கூப்பிடக் காண்கிறீர்கள்! உள்ளே, உலக ரட்சகர், ஒய்யார உடையுடன், சிங்கார நகையுடன், சீமானாக இருக்க, அவன் படைப்பிலே ஒன்று சீந்துவாரற்று, செத்திட நேரமின்றி பிச்சை எடுத்திடக் காண்கிறீர்கள். அவன் ஜோதியை உள்ளே கண்டீர்கள். அவன் ஆலய வாயிலிலே, சோக ஜெகத்தின் சேதியைக் கூறம் பராரியைக் கண்டீர்கள். கண்ணால் கண்டும், என்ன செய்தீர்கள்? கருத்துக்கு ஒரு விநாடியாவது வேலை கொடுத்தீர்களா? கொடுத்திருந்தால், உலகு இப்படியா இருக்கும்?

உள்ளே இருக்கும் ஓங்காரச் சொரூபம் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பு! வெளியே, முன் பாயிலே உருளுபவன், வேதனயில் புரள்பவன், சோற்றுக்குத் தாளமிடுபவன், கண்டது என்ன? தன்னைப் பிறப்பித்து, இக்கதியில் விட்ட தந்தையின் அரண்மனை வாயிலிலே அவன் அடி மூச்சுக்குரலால் அழுகிறான். அந்தச் சத்தம் உங்கள் காதிலே விழுந்து என்ன பலன் உண்டாகிறது?

(திராவிடநாடு - 10.01.1943)