அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கண்ணீர் துடைக்க!
“அம்மா! சோச்சி....”

“சீ! சனியனே, சும்மா கிட!”
தான் பெற்றெடுத்த தங்கம், அழுது கண்ணீர் வடித்து, துவண்டு சுருண்டு கிடக்கும் அதைக் கண்டதும் அவளது இதயத்திலே ஒரு புயல்! ‘ஏனிந்த உலகில் பிறந்தோம்’ என்ற ஏக்கத்தைத் தூக்கிக்கொண்டு அவளது பெருமூச்சுகள் பேசுகின்றன. பெருமூச்சுகளா, அவை? அல்ல, அல்ல பட்டினி வயிற்றின் அடியிலிருந்து கிளம்பும் அனல் வீச்சுகள்! அதன் கொடுமையை அவளால் தாங்க முடியவில்லை. ‘பாழும் தெய்வமே’ என்று நொந்து கொள்ளவும் சக்தியில்லாத நிலை தள்ளாடுகிறாள்-இடுப்பிலே குழந்தை!

பார்வையிலோ பசி வெறி! துடிக்கும் இதயம்! கொதிக்கும் கும்பி! காற்றிலே அவளது, வறுமையின் கதையைச் சொல்வது போல, பறக்கும் கூந்தல்! ஏழைகளுக்கு இது என்று கூறும், கந்தல் ஆடை!
சாகிறார்கள்-பட்டினியால்!
வீதிகளிலே அலைகின்றனர்
“வேலை கிடைக்குமா வேலை?” என்று கூவியவண்ணம்!
குடும்பங்கள் குட்டிச் சுவர்களாகி விட்டன!
பலர்-பரதேசிகள் உருவில்!
நாடோடிகள்-அவர்கள் குடும்பம்!
நடுத்தெருவில் பெண்கள்!

என்ற வேதனைக் காட்சிகள், விபரீதம் உருவாகிக் கொண்டிருப்பதை, படிப்படியாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்தக் காட்சிகளை நாமும் அப்போதைக்கப்போது, செய்திகளாக மட்டுமல்ல, “பாருங்கள் இந்தப் பரிதாபத்தை” என்று படங்களாக எடுத்துப் பிரசுரித்தோம். அப்போதாவது இந்த ஆளவந்தார் கண்களில் நாட்டின் வேதனை, படாமலா போய்விடும் என்ற ஆசையால்.

கண்ணில் தென்பட்டதோ, இல்லையோ! எதற்கும் வாயைத் திறவாமலே காலந் தள்ளும் இந்த சர்க்கார் பேசாமலே இருந்தது! குமுறும், எரிமலை வெடிக்காமலா போகும்? அதுவும் ஏழை எரிமலை!!

விளைவாக சேலம் நெசவாளர்கள். 10.1.51 அன்று, “நூல் கொடு! பஞ்சநிவாரணம் செய்!” என்று முழக்கமிட்ட வண்ணம் கலெக்டர் அலுவலக முன் மறியல் துவக்கினர். அமைதியோடு மறியல் துவக்கி நெசவாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மதிக்க மறுத்த, காங்கிரஸ் ஆட்சி-அவர்களின் பட்டினிக் குரலை, தனது அடக்கு முறையால் அடக்கிவிட எத்தனித்தது!

144! பாய்ந்தது

ரிசர்வ் பட்டாளம் குவிந்தது

ஊர்வலமோ பொதுக்கூட்டமோ நடத்தக்கூடாது என்றனர்-மக்கள் சர்க்காரின் தடையைச் தூசெனமதித்தனர்.

ஊர்வலம்-நடத்தினர். மாபெரும் ஊர்வலம், தடையுத்தரவை மீறி, நகரமெங்கும் சென்றது.

“துப்பாக்கி! பார்-சுடுவோம்” என்று போலீசாரை அணிவகுத்து நிறுத்தினர்.

“சுடு! பரவாயில்லை பட்டினியால் உயிர்போவதிலும் பாய்ந்தது குண்டு-செத்தோம் நிமிடத்தில்” என்று கூறியவண்ணம், மார்பைக் காட்டி நின்றனர் பலர்.

சட்டம் மிரண்டது!

“பொதுக்கூட்டம் நடத்தவாக்கூடாது? பேச்சுரிமையுமா, இல்லை!” என்று கேட்டவண்ணம், திராவிட முன்னேற்றக் கழகச் செயல்வீரரும், நெசவாளர் தலைவருமான சேலம் ஏ.சித்தையன், நெசவாளர் தலைவர் பூர்ணையா ஆகியோர் 144 ஐ மீறினர்.

அவரைத் தொடர்ந்து, பலர் தடையை மீறினர்.

சிறை-நிரம்பியது!

கிழவர், குமரர், தாய்மார், குழந்தைகள் எல்லாம் சிறையில்!

நூற்றுக்கணக்கானோர், சிறைக்குள்!

சட்டமும் அடக்குமுறையும் தூள் தூள்!!

கட்டுக்கடங்காநிலை.

தனது தர்பார் மூலம், வலிமைக் கிளர்ச்சியை அடக்கமுனைந்த சர்க்கார் மிரண்டது. பாய்ந்தது! அதன் விளைவாக.

144 வாபஸ்
தலைவர்கள் விடுதலை.
வாரம் 2.8.0 பஞ்சப்படி.

ஆகிய கோரிக்கைகளை, ஏற்றது! ‘விரைவில்’ எல்லோருக்கும் நூல் கிடைக்கச் செய்கிறோம்” என்று உறுதியும் தந்திருக்கிறது, சர்க்கார்.

சேலம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சென்னைமாகாணத்தின் பல பாகங்களிலும் நெசவாளத் தோழர்கள் உரிமைப்போர், துவக்க முரசொலித்துவிட்டதாக அறிகிறோம்.

பிரகடகோட்டையா (ஆந்திரா)
அக்கலக்கோட்டை
திருச்செங்கோடு
கடையநல்லூர்
அருப்புக்கோட்டை
ஸ்ரீவில்லிபுத்தூர்
காஞ்சிபுரம்
நெல்லூர்
சங்கரநயினார் கோவில்
மதுரை
ஈரோடு
இடைப்பாடி
உறையூர்
துறையூர்

முதலிய பல இடங்களில், உரிமைப்போருக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டு விட்டதாகவும், அறிகிறோம்.

நெசவாளர் கோரிக்கை, நியாயம் நிரம்பியது மட்டுமல்ல, இந்த நாட்டில் பிறந்த எந்த மனிதனுக்கும் அளிக்கப்பட வேண்டிய சாதாரண வசதியாகும்.

“வேலைக்கு நூல் கொடு!” நெசவாளர், சர்க்காரைப் பார்த்து இதுதான் கேட்கிறார்கள்.

ஆனால் நம்ம சர்க்காரோ, அசையவில்லை! இரங்கவில்லை! தர்பார் நடத்தியும் தடைகளைப் போட்டும் நிலைமையைச் சமா‘த்து விடலாம் என்று இறுமாந்து கிடந்தனர்.

மதோன்மத்த நிலையில் கிடந்த மாகாண சர்க்காரை, சேலம் விழிப்புறச் செய்திருக்கிறது.

விழித்த நிலையில் மீண்டும் தூங்கிவிடாமல் சென்னை மாநிலத்திலுள்ள எல்லா நெசவாளர்களுக்கும் உடனடிப் பரிகாரமாக பஞ்ச நிவாரணமும் அதே நேரத்தில் அவர்கள் தொழிலுக்குத் தேவையான நூலும் கிடைக்குமாறு செய்தல் வேண்டும்.

மத்திய சர்க்காரை வலியுறுத்தி, மாகாணத்துக்குத் தேவையான நூல் வகைகளைப் பெறும் ஆயத்தத்தில், மாகாண சர்க்கார் முயலவேண்டும்.

வாய்ப் பந்தல், இவ்விஷயத்தில் பலன் தராது. இதைக் கவனத்திலிருந்து, சர்க்கார் முன்வர வேண்டும். கலங்கி வாழ்விழந்து திண்டாடுவோரின் கண்ணீர் துடைக்க.

(திராவிடநாடு 18.2.51)