அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கருஞ்சட்டைக்குச் சர்க்கார் தடை உத்தரவு

பல இடங்களில் சோதனை
சர்க்கார் உத்தரவு

2.3.48-ல் சென்னை சர்க்கார், இம்மாகாணத்திலுள்ள கருஞ்சட்டை ஸ்தாபனத்தையும் ராஷ்ட்ரிய சேவாதளத்தையும் தடை விதித்து, கிரிமினல் சட்ட திருத்தத்தின் 16-வது பிரிவின் கீழ் அறிக்கை விட்டுள்ளனர்.

நகரில் சோதனை
சென்னை கங்குராமச் செட்டித் தெரு 6-ம் எண்ணுள்ள கட்டிடத்தில் இருக்கும் “திராவிடன்” பத்திரிகாலயத்தைப் போலீசார் 2.3.48 மாலை 4.30 மணிக்குச் சோதனையிட்டு, சில கடிதங்களையும், “திராவிடன்” பத்திரிகைப் பைலையும் எடுத்துச் சென்றனர்.

பார்க்டவுடன், பொம்முசெட்டித் தெருவிலுள்ள தோழர் இ.ஈ.கூ அரசு அவர்கள் வீட்டையும், வண்ணாரப்பேட்டை மாடசாமி நாடார் தெருவில் இருக்கும் தோழர் ஓ.அண்ணாமலை அவர்கள் வீட்டையும், வடசென்னைத் திராவிடர் கழகத்தையும் மயிலாப்பூர், பிராடீஸ் தெருவிலுள்ள தோழர் M.ஓதங்கவேலர் அவர்களுடைய வீட்டையும், பெரியமெட்டு ஏகாம்பர குமரகுரு தெருவிலுள்ள தோழர் ஓ.ஆரியசங்கரன் அவர்கள் வீட்டையும் சைதாப்பேட்டை கூத்தாடும் பிள்ளையார்கோயில் தெருவிலுள்ள திராவிட இளைஞர் கழகத்தையும் போலீசார் சோதனையிட்டு, கருப்புச் சட்டைகளையும், கழக மினிட் புத்தகங்களையும் எடுத்துச் சென்றனர்.

கோயில்பட்டியில் சோதனை
2.3.48-ல் மாலை 4 மணிக்கு ஈ.கு.க அவர்களும், சர்க்கிள் இன்ஸ்பெக்டரும், சில கான்ஸ்டேபிள்களும் கோவில்பட்டியிலுள்ள திராவிடர் கழகச்செயலாளர் தோழர் கு.அருணாசலம் வீட்டையும், தோழர் வள்ளமுத்துபால்ராஜ் அவர்கள் வீட்டையும் சோதனை செய்து, திராவிடர் கழக சம்மந்தமான புத்தகங்களை எடுத்துச்சென்றனர்.

மதுரையில்
3.3.48 ல் மதுரையிலுள்ள திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளைச் சோதனை செய்ததோடு, தோழர்கள், செந“தியப்பன், எஸ்.முத்து, எஸ்.பழனிவேலு, கே.எஸ்.இராசமான், எம்.எஸ்.இராமய்யா, ஆ. சங்கரய்யா, தங்கராஜ், ல.வ.கிருஷ்ணன் ஆகியோரைப் போலீஸ் அழைத்துச்சென்று,கருப்புச் சட்டை சம்பந்தமாக விசாரித்த பின்னர் விட்டுவிட்டனர் என்று தெரிகிறது.

திருச்சியில்
2.3.48 இரவு திருச்சியிலுள்ள ஜில்லாத் திராவிடர் கழகக்காரியதரிசி தோழர். எஸ்.பிரான்ஸிஸ் வீட்டை ரிசர்வ் போலீசார் சோதனையிட்டு, கருப்புச் சட்டைகளையும், அங்கத்தினர்கள் சேர்க்கும் பாரங்களையும் எடுத்துச் சென்றனர்.

பொன்மலையில்
2.3.48ல் இரவு 12 மணிக்கு பொன்மலைத் திராவிடர் வாலிபகழக அங்கத்தினர் தோழர் கைசாலம் வீட்டில் போலீசார் சோதனையிட்டனர்.

சேலத்தில்
3.3.48 ல் சேலம் ஈ.கு.க அவர்கள், சேலம் செவ்வாய்ப் பேட்டையிலுள்ள சுயமரியாதைச் சங்கத்திற்கு வந்து, கருப்புச் சட்டை சம்பந்தமான ரிக்கார்ட்டுகள் ஏதாவது இருக்கிறதா என்று சோதனையிட்டதில், அது சம்பந்தமாக ஒன்றுமே இல்லையென்று ரிப்போர்ட் எழுதிக் கொண்டு போய்விட்டார்.

அரிசிப் பாளையத்தில்
3.3.48 ல் சேலம் அரிசிப்பாளையத்திலுள்ள திராவிடர் கழகத்தைச் சோதனையிட்ட போலீசார். அங்கு எந்த விதமான ரிக்கார்டுகளும் கிடைக்கவில்லையென்று ரிப்போர்ட் எழுதிக் கொண்டு போய்விட்டனர்.

விருதுநகரில்
3.3.48ல் விருதுநகரிலுள்ள தோழர்கள் ஏ.வி.பி.ஆசைத்தம்பி, என்.ராமசாமி, வ.ஏ.எம்.வெள்ளையப்பன், பி.இரத்னசாமி ஆகியோர்களின் வீடுகளைச் சோதனையிட்டதில், தோழர்கள் ஆசைத்தம்பி, இராமசாமி ஆகியோர் வீடுகளிலிருந்து மட்டும் சில கடிதங்களைக் கைப்பற்றிச் சென்றனர்.

கடலூரில்
3.3.48ல் கடலூர் ஓ.டியிலுள்ள பகுத்தறிவுக் கழகத்தைச் சோதனையிட்ட போலீசார், கழகத்தலைவர் தோழர் எம்.கே.வேலு அவர்கள் பெயரையும், செயலாளர் தோழர் பி.ஏ.இளங்கோ அவர்கள் பெயரையும் குறித்துக்கொண்டு சென்றனர்.

வேலூரில்
4.3.48ல் வேலூரிலுள்ள தோழர் வி.திருநாவுக்கரசு அவர்கள் வீட்டைப் போலீசார் சோதனையிட்டு, சில கருப்புச்சட்டைகளை எடுத்துச்சென்றதோடு, தோழர் சி.பி.சின்னராசு அவர்கள் வீட்டையும் சோதனையிட்டு, கருப்புச் சட்டையையும் “தீப்பொறி” பத்திரிகையையும் எடுத்துச்சென்றனர்.

செங்கற்பட்டில்
4.3.48 ல் செங்கற்பட்டிலுள்ள தோழர் எம்.சின்னையா அவர்கள் வீட்டைப் போலீசார் சோதனையிட்டு, அங்கு எதுவும் கிடைக்காமல் போகவே, பிறகு தமிழர் உணவுவிடுதியிலுள்ள ஒரு அறையைச் சோதனையிட்டு ஒரு கருப்புச்சட்டையையும் சில புத்தகங்களையும் எடுத்துச்சென்றனர்.

சோழவந்தானில்
4.3.48 ல் சோழவந்தானிலுள்ள தோழர் கூ. ஆவுடையப்பன் அவர்கள் வீட்டில் போலீசார் சோதனையிட்டதில் ஒன்றும் கிடைக்கவில்லை.

ஆலந்தூரில்
4.3.48 ல் ஆலந்தூரிலுள்ள திராவிடர் கழகச் செயலாளர் தோழர் எம்.கன்னியப்பன் அவர்கள் வீட்டைச் சோதனையிட்டதில் போலீசார் கருப்புச்சட்டைகளையும் கழகக் கொடிகளையும் சந்தாப்புத்தங்களையும் எடுத்துச் சென்றனர்.

துறையூரில்
3.3.48 ல் துறையூரில் தோழர்கள் தூ.வி.நாராயணன் அவர்கள் வீட்டையும், டி.எம்.பாலசுந்தரம் வீட்டையும், கு.கிருஷ்ணசாமி வீட்டையும் டி.ஆர்.வீரண்ணன் வீட்டையும் சோதனையிட்டனர்.

திருப்பூரில்
3.3.48ல் திருப்பூர்த் திராவிடர் கழகத்தைப் போலீசார் சோதனையிட்டு, அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று எழுதிக் கொண்டு போய்விட்டனர்.

திண்டிவனத்தில்
4.3.48 ல் திண்டிவனத்திலுள்ள திராவிடர் கழகத்தையும், தோழர்கள் அப்பாண்டநாதன், பழனி ஆகியவர்கள் வீடுகளையும் சோதனையிட்டு கழக சம்பந்தமான புத்தகங்களை எடுத்துச் சென்றனர்.

வாணியம்பாடியில்
போலீஸ் ஸர்க்கிள் இன்ஸ்பெக்டர் தனது பரிவாரத்துடன் வாணியம்பாடி ‘திராவிடர் கழகம்’ கட்டிடத்தில் சோதனை செய்தார். அவ்விடமிருந்து யாதொன்றும் பறிமுதல் செய்யப்பட வில்லை. அதன் பிறகு மாலை 5 மணிக்கு தோழர் சி.கோவந்தராஜன் வீட்டில் சோதனை போடப்பட்டத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை.

விழுப்புரத்தில்
விழுப்புரம் டாக்டர் தியாகராசன் வீடு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் மூவர், போலீஸ் கான்ஸ்டேபிள் சிலருடன் சோதனை இடப்பட்டது. கழக சம்பந்தமான ரசீதுகள், சில கடிதங்கள், மாநாட்டு சம்பந்தமான குறிப்புகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். 1.15 மணி நேரம் சோதனையிட்டார்கள்.

நடராசன் வீடு சோதனை இடப்பட்டது. ஒன்றும் கிடைக்கவில்லை.

ப. நடராசன் வீடு சோதனையிடப்பட்டது.

இராசிபுரத்தில்
3.3.48 இரவு சுமார் 7 மணிக்கு இராசிபுரம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ‘பெரியார் மாளிகை’ என்ற வீட்டுக்கு வந்து இயக்க கமிட்டி உறுப்பினர்கள் யார் யார் என்பதை விசாரித்துச் சென்றார்.

கழகம்
சேலம் குகை திராவிடர் கழகத்தை 3.348 ல் சேலம் நகர போலீஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். இயக்க, புத்தகங்களும் பத்திரிகைகளும் மட்டும் இருந்தன. ஒன்றும் எடுத்துக்கொண்டு போகப்படவில்லை.

தர்மபுரியில் சோதனை
இன்று காலை 9.30 மணிக்கு தர்மபுரி நகர திராவிடர் கழகத் தலைவர் திரு.பி.பொன்னுசாமி வீட்டையும் அச்சகத்தையும் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சோதனையிட்டார்கள். திராவிடர் கழக மினிட் புத்தகத்தையும் சில கழக மீட்டிங் விளம்பரத் துண்டுகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

சிதம்பரத்தில்
4.3.48 காலை மணி 8-க்கு சிதம்பரம் திராவிடர் கழகத்தை சோதனை செய்வதாய் போலீசார் டவுன் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எம்.கே.சுந்தரம் வீட்டையும், பக்கத்தில் 4 மைலில் உள்ள சாலியந் தோப்பு கிராமத்தில் சிதம்பரம் திராவிடர் கழகத் தலைவர் தோழர்.கு.கிருஷ்ணசாமி வீட்டையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் போதிய சகாக்களுடன் வந்து சோதனை போட்டு, விசாரித்துச் சென்றார்கள். யாதொரு ஆட்சேபகரமான பொருளும் கிடைக்கவில்லை.
(திராவிடநாடு 7.3.48)