அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘கருங்கடலில்’ டில்லி மந்திரி!

டில்லி ஆதிபத்யத்துக்கு சாவுமணி!
உரிமைப் போரின் முதல் கட்டம்
திவாகர் திகைத்த காட்சி!
தீரர்களின் வெற்றி முழக்கம்

வடநாட்டு மந்திரிகள் இங்கு வரும்பொழுது கருப்புக் கொடி பிடித்து நமது உரிமையுணர்ச்சியை வெளியிடுவதென கோவில்பட்டியில் கூடிய திராவிட முன்னேற்றக் கழக செயற் குழு தீர்மானித்தது.

9.9.50 அன்று, அதையொட்டி, சென்னைக்கு வந்த டில்லி விளம்பர மந்திரி திவாகருக்கு அவர் சென்ற விடங்களிலெல்லாம் மக்கள் கருப்புக் கொடி பிடித்து தங்கள் ஆத்திரத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகர் இந்தி பிரச்சார சபை முன்னும், மவுண்ட் ரோடு சர்க்கார் மாளிகையிலும், காஞ்சிபுரம், மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம் முதலாய வெளியூர்களிலும் கருப்புக்கொடி பிடித்து, வெற்றி முழக்கம் எழுப்பப்பட்டிருக்கிறது.

திவாகர்-தென்னாட்டைச் சேர்ந்தவர்தான். கன்னட மொழி பேசுபவர்தான். எனினும், அவருக்கு நமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளோம், கருப்புக்கொடி காட்டினோம்.

காரணம், டில்லி மத்திய சர்க்கார் தென்னாட்டைச் சீரழியச் செய்து வருகிறது. எனவே, அங்கு அங்கம் வகிக்கும். அவர்கள் சுரண்டலுக்கு ஆதரவு அளிக்கும் மந்திரிமார்களுக்கெல்லாம் கருப்புக்கொடி பிடிப்பது என்பதே, நமது முடிவாகும்.

காங்கிரஸ் பெயரில் ஆட்சியிலமர்ந்து, ஏழைகளை வேதனைக் குள்ளாக்குவதோடு, நான்கு கோடி மக்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பை அடிமையா“கிச் சுரண்டும் வடநாட்டு ஆதிபத்யத்துக்கு ‘கைலாகு’ தரும். டில்லி மந்திரிகளுக்கெல்லாம் நமது விழிப்புணர்ச்சியை அறிவிப்பதன் நோக்கம் தான் கருப்புக் கொடி பிடிப்பது.

திராவிடத்துக்கு நாம் தந்த இந்த நேரடி நடவடிக்கையில், பெருமிதமான வெற்றி கிடைத்திருக்கிறது. பூரிக்கும் அளவில், மக்கள் நமது திட்டத்தை வெற்றியாக்கித் தந்திருக்கிறார்கள்.

இக்காட்சி, விழிப்புற்ற திராவிடத்தின் வெற்றி நிகழ்ச்சியாகும்!

“அடைந்தால் திராவிட நாடு, இன்றேல் இடுகாடு” என்ற இலட்சிய கீதத்துக்கு கிடைத்துவரும் ஆதரவைப் பிரதிபலிக்கும் வீரக்குறிப்பாகும். ஆங்காங்கு கருப்புக்கொடி காட்டுவதில் மக்கள் காட்டிய ஆர்வமும், ‘வடநாட்டு ஆதிபத்தியம் ஒழிக, ‘திராவிட நாடு திராவிடருக்கே’ ‘திவாகரே திரும்பிப்போ’ என்று எழுப்பிய முழக்கமும், திராவிட விடுதலைப் போரில் ஈடுபட்டிருப்போரின் இதயங்களைத் தட்டி விடுவதாகும்!

கருப்புக்கொடி நாள் நடவடிக்கை திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் ஒத்திகை! இதில் பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, அடுத்து வரப்போகும் வெற்றிகளுக்கோர் ஆரம்பம்.

வெற்றி, கானல் நீராகாது கருப்புக்கொடிகள் நாடெங்கும் இனி டில்லி மந்திரிகள் வரும்போது பறக்கவே செய்யும்! டில்லி ஆதிபத்தியக் கும்பலில் சேர்ந்த, காங்கிரஸ் பெயருடன் சுரண்டும் சுரண்ட ஆதரவளிக்கும் மத்திய சர்க்கார் மந்திரிகளை இனி ‘கருப்புக்கொடிகள்’ தான் வரவேற்கும்!!

(திராவிடநாடு-17.9.50)