அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கருப்புக் கொடி!

அவர், மெருகு குலையாத மோட்டாரில்! மேனி நலுங்காதவர் புடைசூழ! வளையாது குனியாது தங்கள் வசந்தகால வாழ்வை நகர்த்துவோர் வாழ்த்துரை பகர! வந்தார்!

வந்த இடம் உட்லண்ட்ஸ் உல்லாசிகளும், உழைப்பறியா சல்லாபிகளும், ஊர்வசி லோலர்களும், ஊர் பேர் தெரியாத விநோதப் பிறவிகளும் தினந்தினம் கூடிக்கலையும் விசித்திரபுரியல்லவா அது!

அங்கு வந்தார்-விருந்து உண்டார் சினிமாக் கலை பற்றிப் பேசினார் பிரிந்தார்.

அதே நேரத்தில், மக்கள் தார்ரோடுகளின் ஓரங்களில் நின்ற கொண்டிருந்தனர் கால் கடு கடுக்க போலீசாரோ, அவர்களை ஒரு இடத்தில் சேரவிடாதபடி விரட்டிக் கொண்டிருந்தனர். ஆனாலும் மக்கள் வந்தபடியே இருந்தனர்.

உட்லண்ட்ஸ் விருந்தினரை ஊரார் இப்படி ஏன் வரவேற்றனர் தெரியுமா? அவர் உல்லாச புரியினர் விருந்தினர். ஆனாலும் மக்களின் மந்திரி யென்று நம்பப்படுபவர் திவாகர் தான் வந்தார்.
7.7.51 ல் திவாகர் வந்தார். அவருக்கு, சென்னைத் தோழர்கள் கருப்புக்கொடி காட்ட ஏற்பாடு செய்திருந்தனர்.

மந்திரி வருமுன்னே, போலீசார் தோழர்கள், என்.வி.நடராசன் கண்ணபிரான், முனுசாமி, சி.வி.ராசன் ஆகியோரைக் கைது செய்துவிட்டனர்.

பிறகு, மந்திரியார், சுகமே திரும்பியவுடன், தோழர்கள் விடுதலை செய்தனர்.

என்ன விசித்திரம்! என்ன விந்தை!

மக்கள், கூண்டுக் கிளிகளான பிறகு தான் மந்திரிமார்கள் வெளியில் உலவ முடிகிறது!

வெட்கங்கெட்ட நிலைதான் இது என்றாலும் வெளியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை!

கருப்புக்கொடிகளை கனம்கள் காணக் கூடாது என்பதற்காக இவ்வளவு கண்காணிப்பு! தடபுடல் நடவடிக்கைகள்!

ஆனால், கனம்கள் காணாத கருப்புக் கொடிகள் அல்ல. இங்கே நாம் காட்டவேண்டும் என்று திட்டமிட்டிருப்பது.

காங்கிரசார் இன்று கனம்களாகிவிட்டாலும், இலேசுகளாக இருந்த நேரத்தில் கையாண்ட கருப்புக்கொடிதான்!

அதை மறந்தாலும், இவர்கள் பார்த்தறியாத கருப்புக் கொடியுமில்லையே நாம் காட்ட முயற்சித்தது!

திவாகரே, முன்னர் பார்த்து, ரசித்தது மட்டுமல்ல ‘நானும் திராவிடனே என்று கூறவைத்த கருப்புக்கொடி!

இவர் மட்டுமா? ஹரிகிருஷ்ண மேதாப். ஆச்சாரியார் இன்னும் பலப் பலர் பார்த்தது தான்-விவரங்கேட்டது தான்!

சென்னையிலே மட்டுமல்ல திராவிடலெங்கெங்கும் காட்டப்பட்ட கருப்புக்கொடிதான்!

இதை, கனம்கள் காணக்கூடாது என்பதற்காக சிறைப்படுத்து கின்றனர் தோழர்களே!

ஆசியாவின் ஜோதி, அகில உலகத் திருவிளக்கு, மாசிலா மாணிக்கம், இந்தியாவின் பிரதமர் நேரு கூட, கருப்புக்கொடி காணக் கூடாது என்றுதான் போலீசார் நடவடிக்கை எடுத்து விட்டனர்.

நேரு, இந்நிலையை நினைத்துப் பார்த்தால் நெஞ்சு நோகுதே என்று சோதிப்பார்.

நேரு, தங்கவயலுக்கு வருவதாகத் தெரிந்ததுமே தி.மு.க. தோழர்கள் திட்டமிட்டனர் கருப்புக்கொடி காட்ட!

15.7.51 மாலையில் தான், பண்டிதநேரு தங்கவயலுக்கு மறுநாள் வருவதாகவும், பொதுக் கூட்டத்தில் பேசுவதாகவும் தெரிந்தது.

உடனே செயற்குழு கூடிற்று, செயற்குழு உறுப்பினர்களில் பதினெட்டுப்போர் கருப்புக்கொடி காட்டத் தீர்மானிக்கப்பட்டது.

தோழர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் தோழர்கள் டி.கே.சின்னத்துரை, ஆதிமூலம், கெங்காதரம், ஆறுமுகம், இராபர்ட் வில்லியம், ஜி.ஸி.எம்.சாமி, கே.ஸி.இரத்தினம், கே.எஸ்.இரத்தினம், சின்னராஜன், கே.ஸி.சுப்ரமணி, கோவிந்தராசன், பூசாமி, செல்லப்பன், ராஜகோபால், கண்ணன், நாராயணசாமி, கோபால் ஆகியோர் கருப்புக்கொடி காட்ட உறுதியெடுத்துக் கொண்டனர்.

அன்றே நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர்கள் தில்லை-வில்லாளன், சின்னத்துரை இந்த தீர்மானத்தை விளக்கினர்.

கழக நிலையத்தில் கூடியிருந்த நேரத்தில் போலீசார் இரவு 10.10 மணிக்கு தோழர்கள் பதினெட்டுப் பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தங்கவயலில் மறுநாள் பண்டித நேரு பவனி வருகிற நேரத்தில் நம் தோழர்கள் காராக்கிருகத்தில் கிடந்திருப்பார். பொது மக்கள் மட்டும் ஆச்சரியத்தோடு பார்த்திருப்பார்.

சுதந்திரம், சுதந்திரம் என்றனரே, இதோ தன் சொந்த எண்ணத்தை எடுத்துக்காட்டக் கூடாதென பதினெட்டுப் பேர் சிறையிலிருக்கின்றனரே என்று தானே எண்ணுவர்.

நேருவுக்கு, கருப்புக்கொடி புதிதல்ல! அவர் இந்தோனேஷியாவில் காணவில்லையா? கண்டார்.

தங்கத்தின் ஒளியை மட்டும் பார்த்தால் மட்டும் போதுமா? அதனை பயங்கரச் சுரங்கங்களில் தங்கள் வாழ்வையே பணயம் வைத்து வேலை செய்யும் சுரங்கத் தொழிலாளியின் மேனி கருப்பையுந் தான் பார்க்க வேண்டும்!

கருப்பைக் காணாமல் தடுத்துவிட்டதாக ஆட்சியாளர் கருதலாம். ஆனால், இந்த சேதி நேருவுக்கு அறிவிக்கிறபொழுது, அவர் முகத்திலே இருளடையாதா? அந்தக் கருப்பு போதுமே! அதைக் காண்கிற ஆட்சியாளர்களின் இதயத்திலே புகையடையுமே அந்தக் கருப்பு போதாதா!

தோழர்களை அடைத்து வைத்து விடலாம்-ஆனாலும், அவர்கள் எண்ணத்தில் கருப்புக்கொடி காட்டுவது என்று முடிவேற்பட்டதே அதனை யார் மாற்ற முடியும் நினைத்துப் பார்க்கட்டும்.

கருப்புக்கொடிகளைக் காணாது செய்து விடுவதால் மட்டும், மக்களிடம் வளர்ந்து வரும் வெறுப்பை மறைத்துவிடமுடியுமா?

கருப்புக்கொடி காட்டுவது, உலக நாடுகளால், ஒப்புக்கொள்ளப்பட்டு, நடைமுறையில் பல நேரங்களில், பல இடங்களில் செயலாக்கப்பட்ட அடிப்படை உரிமை!

கருப்புக்கொடி காட்ட விடாமல் தடுப்பதால், ஆட்சியாளரின் ஆணவம் புரிகிறது. சரி, அதே நேரத்தில் அலங்கோலமும் தெரிகிறதே மறக்கவேண்டாம்.

கருப்புக்கொடி திவாகர் பார்க்காமலிருக்கலாம். நேருவின் கண்களில் படாமலிருக்கலாம் ஆனால், அந்தக் கொடி சொல்ல நினைத்த சேதியை நாட்டு மக்கள் அறிவார்களே! நினைவிருக்கட்டும்.

தங்க வயல் தருகிற போதனை இதுதான் ஆட்சியாளருக்கு!

(திராவிடநாடு 22.7.51)