அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காஷ்மீரில் புதிய போர்?

ஷேக் அப்துல்லா:- `சகிக்க முடிய வில்லை அக்ரமத்தை! மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் சதா ஆபத்துதான். ஏழ்மையின் கொடுமை சொல்லுந் தரத்ததல்ல, ஒரு நூறு குடும்பத்தாரிடம் நிலம் சிக்கிக் கெண்டது, அந்தப் பண்ணைகளிலே பாடுபடும் இலட்சக்கணக்கான ஏழைகளின் வாழ்வு இருண்டுக் கிடக்கிறது. சுகபோகத்தில் மூழ்கிக் கிடக்கும் சீமான்கள், அவர்கள் புடை சூழக் கொலுவீற்றுக் கொண்டு, மக்களை மதியாது, அவர்களின் நலனைப் பற்றித் துளியும் அக்கறை காட்டாது செருக்குடன் உள்ள, மகாராஜா! இதுதானே இன்றைய காஷ்மீர்! நேருஜி! தாங்கள் பிறந்த திருநாட்டிலே இப்படிப்பட்ட கொடுமை இருக்கலாமா? இப்படி மதோன் மத்தராக உள்ள ஒருவர் மகாராஜாவாக இருப்பதை மக்கள் எப்படிச் சகிப்பார்கள்?''

நேரு: ``யார் சகிக்கச் சொன்னார்கள்? மக்களாட்சியின் மாண்பை அறிந்த யார் அப்படிச் சொல்ல முடியும்? அப்துல்லா! அந்த அக்ரம ஆட்சியை எதிர்த்துப் புரட்சி செய்யத்தான் வேண்டும். மகாராஜாக்களின் காலமல்ல இது, பாமர மக்கள் பாராளும் காலம். மக்களுக்காக மகாராஜாவேயொழிய மகாராஜாக்களுக்காக மக்களல்ல! கொடுங்கோல் மன்னன் வாழ்கிற நாட்டை விடக் கடும்புலி வாழும் காடு மேல், என்ற கோட்பாடு, நமது மூதாதையர் நாட்களிலே, இப்போது கொடுங்கோலை மக்கள் முறிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். ஆகவே அருமை நண்பனே! அஞ்சா நெஞ்சுடைய அப்துல்லாவே! ஏழ்மையால் தாக்கப்பட்டுக் கொடுங்கோன்மையால் கொட்டப்பட்டு, புழுப் போலத் துடிக்கும் ஏழை மக்களுக்கு, உரிமை எடுத்துக்கூறு, பார் பிறகு புழு புலியாகும்! மகாராஜாவைக் கண்டு மருளும் மக்களின் கண்களிலிருந்து கிளம்பும் கோபக்கனல், காஷ் மீரத்திலே தியாகத் தீயை மூட்டட்டும் அடிமை வாழ்வு பொசுக்கப்படட்டும்.''

அ:- ``அருமை அருமை, பண்டிட்ஜி! காஷ்மீர மக்கள் ஏழைகள்தான். ஆனால் ஏதுமறி யாதவர்களல்ல, எதையும் இழக்கச் சித்தமாக இருக்கிறார்கள், சுதந்திரத்தைப் பெற.''

நே:- ``அப்துல்லா! அவ்விதமானால் ஆரம்பிப் போராட்டத்தை...''

அ:- ``செய்யலாம். ஆனால்...''

நே:- ``ஏன் தயக்கம் அப்துல்லா? மன்ன னின் படை பலத்தைக் கண்டு பயமா?''

அ:- ``உயிர் எமக்கு வெல்லமல்ல, பண்டிட்ஜி! உரிமையும், கடையில் வாங்கக் கூடிய பண்டமல்ல.''

நே:- ``உனக்கா தெரியாது! உள்ள உரம் படைத்தவனே! உரிமைப் போரைத் துவக்கு.''

அ:- ``துவக்கத் தயக்கமில்லை. மக்களும் துடிக்கிறார்கள். துர்த்தனின் துரைத் தனத்தை ஒழிக்க, ஆனால்...''

நே:- ``மீண்டும் ஆனால்.... என்ன அப்துல்லா, என்ன விஷயம் சொல்!''

அ:- ``மகாராஜா ஒரு இந்து- மக்கள் முஸ்லீம். ஆகையால்....''

நே:- ``பைத்யக்காரனே! இருக்கட்டுமே! இந்துவானால் என்ன?''

அ:- ``ஒரு இந்து அரசனை ஒழிக்க முஸ்லீம்கள் சதி செய்கிறார்கள் என்று, என் முயற்சியைக் கெடுக்கக் கூறக்கூடும்.''

நே:- ``யார் கூறுவர்? தூய உள்ளம் படைத்த எவரும் கூறார். எவர் அதுபற்றிக் கூறினாலும், நான் செவிகொடேன். காஷ்மீரப் பிரச்னை இந்து- முஸ்லீம் என்பதல்ல, கொடுங்கோல் புரியும் ஒரு மன்னனுக்கு எதிராக உரிமைப் போர் நடத்து கிறார்கள் மக்கள்.''

அ:- ``ஆம்! இந்த எண்ணம், நிலைத்தால் போதும்.''

நே:- ``இதிலே ஒரு மாற்றமும் இராது- பயம் வேண்டாம். உரிமைப் போரைத் தொடுப்ப தற்குத் தயங்காதே, விஷமிகளும் வகுப்பு வாதிகளும் எது வேண்டுமானாலும் பேசட்டும், கவலை வேண்டாம்- செல்லாக் காசு ஆக்குவேன் அவர்தம் பேச்சை. அப்துல்லா! மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். மகாராஜாவின் கொட்டம் ஒடுக்கப்பட வேண்டும்.''

அ:- ``சபாஷ்! நேருஜி! மகிழ்ந்தேன்! மகாராஜா ஒழிக!''

நே:- ``ஒழிக காட்டாட்சி! ஓங்குக ஜனநாயகம்! போய்வா அப்துல்லா! போரிடு, போரிடு! வெற்றி பெறு! எப்போதும் எமது உதவி உண்டு- உறுதியாக இதை நம்பு உத்தமனே! விரட்டு, மக்களைக் கெடுக்கும் மகாராஜாவை.''
* * *

காஷ்மீரத் தலைவன், ஷேக் அப்துல்லா வுக்கும், பண்டித நேருவுக்கும் பல ஆண்டு களுக்கு முன்பு இதுபோன்ற உரையாடல் நடைபெற்றது. ஷேக் அப்துல்லா, உற்சாகமாக உரிமைப் போர் துவக்கினார் - மக்கள் அவர் பக்கம் திரண்டு நின்றனர்- மன்னன் தன் படை வரிசையை ஏவினான்- சிறைக் கூடம் நிரம்பிற்று- சித்திரவதைகள் சர்வ சாதாரணச் சம்பவங்களாகி விட்டன- சொத்து பறிமுதல்- நாடு கடத்தல்- வீடு புகுந்து அடித்தல் போன்ற கொடுமைகள் பலப் பல நடந்தன.வீரம் குன்றவில்லை. தியாகம் ஓங்கிற்று! ஷேக் அப்துல்லாவின் புகழ் பரவிற்று! மகாராஜா நடத்திய மனித வேட்டைக்கு முக்கியமான துணைவராக இருந்தவர், அந்த நாட்களில் திவானாக இருந்த சர் என். கோபாலசாமி ஐயங்கார். இன்று நேரு சர்க்காரிலே ஒரு மந்திரியாக இருக்கிறாரே, அதே ஐயங்கார் ஸ்வாமிகளே தான். அடக்கு முறையினால் அப்துல்லாவின் வீரப்படையை அழித்துவிட முயன்றனர்.
* * *

அப்துல்லா அஞ்சியது போலவே, பழி சுமத்தும் படலமும் ஆரம்பமாயிற்று. இந்து மன்னரை ஒழிக்க முஸ்லிம் சதி. இது உண்மை உரிமைப் போரல்ல, வகுப்பு வெறிச் செயல், என்று விஷமப் பிரசாரம் நடைபெற்றது. அடக்கு முறையும், விஷமப் பிரச்சாரமும், வீரத் தலைவனை ஒன்றும் செய்யமுடியவில்லை. கொடுமை வளர வளர, அப்துல்லா, தணலிற் போட்ட தங்கமானார். உரிமைப் போர் பலமாக நடைபெற்றது. நேருவும், அவருடைய நண்பர் களும் ஷேக் அப்துல்லா பக்கம் நின்றனர்.
* * *

பதினேழாண்டுகள் இந்தப் போர் நடந்து வந்தது. காஷ்மீரம், மிகப் பெரும்பாலான முஸ்லீம்கள் வாழும் நாடு - மன்னர் இந்து- சுபாவமோ காட்டுக் காலத்தது, மக்கள் அனை வரும், ஜனநாயக ஆட்சி முறையைப் பெற்றே தீருவதென்று பணிபுரிந்து வந்தனர். இதற்கிடை யில், ஏகாதிபத்யம் கடையைக் கட்டிக் கொண்டது, இந்தியா விடுதலை பெற்றது, நேரு சர்க்காரும் ஏற்பட்டது. அப்துல்லாவின் அகமகிழ்ச்சிக்கு அளவிருக்க முடியாதல்லவா! பதினேழாண்டு களாக, பல்வேறு தொல்லைகளைச் சகித்துக் கொண்டு மன்னரை எதிர்த்து நடத்திக் கொண்டு வரும் உரிமைப் போருக்கு, இனி உருவான உடனடியாக உதவி கிடைக்கும்- மன்னன் மருண்டு ஓடுவான்- மக்களாட்சி மலரும் புது மணம் வீசும்- காஷ்மீரம் களிக்கும் என்றெல்லாம் அப்துல்லா எண்ணினார். மகாராஜாவின் நிலைமை, மிக ஆபத்தானதாக விட்டது. அது போது மேலும் ஒரு உறுதியான உடனடி முயற்சி செய்யப்பட்டிருந்தால், மகாராஜா மருண்டோடி விட்டிருப்பார். ஆனால்....
* * *

பாகிஸ்தான் காஷ்மீரத்தைக் கை வசப் படுத்தத் திட்டமிட்டுக் கொந்தளிப்பை உண்டாக்கிற்று- மலை ஜாதியினர், காஷ்மீரத்தின் மீது பாய்ந்தனர்- களமாகிவிட்டது காஷ்மீர். இந்திய சர்க்காரின் படைகள் விரைந்தன. இதனைத் தடுக்க- போர் நடந்து வருகிறது.
* * *

கொந்தளிப்பு ஏற்பட்டதும் மகாராஜா காவடி தூக்கினார் டில்லிக்கு. சிறையிலிருந்த அப்துல்லா வையும், அவர் நண்பர்களையும் வேண்டினர். விசித்திரமான கூட்டுறவு ஏற்பட்டது. கொடுமை புரிந்து வந்த மகாராஜாவுக்கு அவருடைய கொடுமைகளான அப்துல்லாவும், டில்லி தர்பாரின் யோசனையின்படி, கூட்டுறவாளர் களாயினர். இந்தியப்ப் படையின் உதவி சரிந்து கொண்டிருந்த சமஸ்தானத்துக்குக் கிடைத்தது. பாகிஸ்தான் எண்ணத்தைக் குலைக்க, இந்த முயற்சி தேவைப்பட்டது- காஷ்மீரம் பாகிஸ்தானி டம் சிக்காதிருக்கச் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு இந்திய சர்க்காருக்கு ஏற்பட்டது- ஆனால் இதே நடவடிக்கை மக்களின் வெறுப்பைக் கிளப்பிய, கொடுங்கோலனுக்கு நல்லதாகி விட்டது. காஷ்மீரம் காப்பாற்றப்பட வேண்டும்! பாகிஸ்தானின் திட்டம் தகர்த்தப்பட வேண்டும்! மலை ஜாதியினர் ஓட்டப்பட வேண்டும்!- என்ற முழக்கமும், நோக்கமும் முன்னணிக்கு வந்தன- மன்னனின் கொடுங் கோன்மை- மக்களின் வறுமை, அவதி, அப்துல்லாவுக்கு அவர் செய்த கொடுமைகள், ஆகியவைகள் பின்னணிக்குச் சென்றன. சீமான்களின் செருக்கு, மறக்கப்பட்டுவிட்டது- மன்னனின் கோலாகலம் மறைக்கப்பட்டு விட்டது- மக்களின் மனதில், காஷ்மீரம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரே எண்ணம் ஏற்பட்டது.

இது மகாராஜாவின் நிலைமையை மேலானதாக்கி விட்டது. காஷ்மீர மக்களின் கண்ணில் படப் பயப்பட்டுக் கொண்டிருந்த மன்னர், கட்டளைகள் பிறப்பிக்கும் நிலை பெற்றார்! அப்துல்லாவை அழித்தொழிக்க விரும்பியவர், அவரைக் கொண்டு, டில்லி சர்க்காரின் உதவியைப் பெற்றார்! பவனிகள் வரலானார்! டில்லியில் மதிப்புக் கிடைத்தது! பறி போக இருந்த பட்டமும் பதவியும் நிலைத்ததுடன் அதைக் காப்பாற்றுவதற்காகக் காஷ்மீர் மக்களும் இந்திய சர்க்கார் அனுப்பிய படை வீரர்களும் இரத்தம் சிந்துகின்றனர். திடீரெனத் தனக்கு மதிப்பு உயர்ந்ததால், மகாராஜாவின் மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருப்பதுடன், தன்னைக் கவிழ்க்கக் கடுவேகத்துடன் வந்த புரட்சிப் புயலையே தந்திரமாகத் தனக்கு மகிழ்ச்சி தரும் தென்றலாக்கிக் கொண்டு பெருமை அடைகிறார்.

நாட்டைக் காக்க, இரத்தம் சிந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

நாட்டைப் பற்றி நல்ல முறையில் பேசி, நானிலத்தின் அன்பைப் பெற்றுத் தர நேரு இருக்கிறார்.
நாட்டிலே நல்லாட்சி நிறுவ வேண்டு மெனப் போராடி வந்த அப்துல்லாவின் நேசமும் கிடைத்துவிட்டது.

இவ்வளவு மகத்தான இலாபம் பெற்று விட்டார் மகாராஜா. ஷேக் அப்துல்லாவிடம் நாட்டு நிர்வாகம் தரப்பட்டிருக்கிறது.
* * *

பதினேழாண்டுகளாக,கொடுங்கோலாட் சியை வீழ்த்தப் போரிட்டு அலுத்துள்ள அப்துல்லாவுக்கு, இப்போது அதே ஆட்சியை நடத்தி வந்த அதிபரைக் காப்பாற்றும் வேலையும் அதேபோது, பாகிஸ்தான் படைகளை விரட்டும் வேலையும் சேர்ந்து வந்தழுத்துகிறது. அவருடைய நோக்கத்தின்படியும், காஷ்மீர் மக்களின் கோரிக்கையின்படியும் காரியம் நடக்க வேண்டுமானால், காஷ்மீரைக் கவ்விக்கொள்ள வரும் மலை ஜாதியினரை விரட்டும் மகத்தான வேலையோடு வேலையாக, பதினேழாண்டு களாக, மக்களைக் கொடுமைப்படுத்தி வந்துள்ள மகாராஜாவையும் விரட்டியிருக்க வேண்டும். கொடுமை ஒழிந்தது, கொடுங்கோல் முறிந்தது, என்ற களிப்பு, காஷ்மீர மக்களுக்குப் புத்துணர்ச்சி யூட்டும், இப்போது அவர்கள் காட்டும் உணர்ச்சியைப் போல ஆயிரமடங்கு அதிகமான உணர்ச்சியை அவர்களால் காட்டமுடியும்.

மலை ஜாதியினர் செய்யும் அட்டூழியத் தைக் கண்டு ஆத்திரம் கொண்ட காஷ்மீரிகள். அத்தகைய கொடியவர்களை விரட்டியாக வேண்டும் என்று வீராவேசமாகப் போரிடுவது இயற்கை என்றபோதிலும், அதேபோது அவர் கள் தங்கள் வீரமும், தியாகமும் யாருக்குப் பயன்படுகிறது, எத்தகைய ஆட்சியை நிலை நிறுத்த வழி செய்கிறது என்பதை எண்ணும் போது அவர்களுக்கு விசாரமும் பயமும் இயற்கையாக ஏற்படுகிறது. மலைஜாதியினரை விரட்டியான பிறகு, மகாராஜா பழையபடி தர்பார் செலுத்துவாரே என்று பயப்படுகிறார்கள். இந்தக் கவலையும், கிலியும் போர்க்களத்திலேயும் நாட்டிலேயும் ஏற்படாமலிருக்க முடியாது. பதினேழாண்டுகளாக உரிமைப் போர் நடாத்திய மக்கள், ஏன் இனியும் இந்த மகாராஜாவை இருக்க அனுமதிக்க வேண்டும் என்று ஏக்கத்துடன் எண்ணாமலிருக்க முடியாது.

மகாராஜாவின் பவனிகள்- விருந்துகள்- அவரும், நேருவும், கலந்து பேசுவது- அவர் டில்லி விஜயம், என்ற செய்திகளைப் படிக்கும் போது, காஷ்மீர் மக்களுக்கு, அவரால் வெஞ் சிறையில் தள்ளப்பட்ட வீரர்களுக்கு அல்லற் பட்ட அப்துல்லாக்களுக்கு, மனவேதனை ஏற்படாமலிருக்க முடியுமா. மகாராஜாவாம் மகாராஜா! மலைஜாதியினர் பாய்ந்து வந்ததும் தலைநகரை விட்டு, தலை தப்பினால் போதும் என்று ஓடிய இந்தத் தர்பார் சுந்தரரை, ஏன் இன்னமும் தாங்கிக் கொண்டிருக்கவேண்டும். நாட்டுக்கு ஆபத்து வந்தபோது, ஓட்டம் பிடித்த இந்த ஒய்யார புருஷனை, நாம் ஏன் இன்னமும் காப்பாற்றுவது! நாட்டைக் காப்பாற்ற வேண்டும்- அது கடமை- ஆனால் நாட்டு மக்களைக் கேட்டினில் ஆழ்த்திய இந்த மன்னனைக் காப்பாற்ற வேண்டியதும் நமது கடமையா? இதற்கு நமது கடமையா? இதற்கு நமது இரத்தத்தை ஏன் சிந்த வேண்டும், என்று மக்கள் எண்ணாதிருக்க முடியுமா?
* * *

காஷ்மீர் மக்களின் மனம் மட்டுமல்ல, அவர்களுடைய தலைவருக்கும் இதே கருத்து இருக்காமலிருக்க முடியாது. ``மகாராஜாவுக்கு டில்லி வட்டாரத்தில் கிடைத்துவரும் செல் வாக்கைக் கண்டு மக்கள் மனம் புழுங்குகிறார் கள்'' என்று ஷேக் அப்துல்லாவே கூற நேரிட்டிருக்கிறது.

``மகாராஜாவின் போக்கு எனக்குத் திருப்தி தருவதல்ல, ஸ்ரீநகருக்கு ஆபத்து என்ற உடனே இந்த மகாராஜா ஓடிவிட்டார். இந்த மகாராஜாவின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்தே இந்த பதினே ழாண்டுகளாகக் காஷ்மீர் மக்கள் போராடி வந்துள்ளனர். மகாராஜாவோ, மறுபடியும் பலம் பெற்று வருகிறார், இந்தியாவிலே அவருடைய நண்பர்கள் பலர் அவருக்கு உதவி செய்கிறார் கள்'' என்று ஷேக் அப்துல்லா சென்ற கிழமை டில்லியில் பத்திரிகை நிருபர் ஒருவரிடம் கூறினார்.
காஷ்மீர் சமஸ்தானாதிபதி சம்பந்தமாக மட்டுமல்ல, பொதுவாகவே, சமஸ்தானாதிபதிகள் விஷயமாக இந்திய சர்க்கார் கொண்டுள்ள போக்கு ஷேக் அப்துல்லாவுக்குத் திருப்தி அளிக்கவில்லை.

``சுதேச சமஸ்தானாதிபதிகளுக்கு அவர் களின் சொந்தச் செலவுக்காகக் கொள்ளைப் பணத்தைத் தர, இந்திய சர்க்காரின் சமஸ்தான இலாகா முன்வந்தது கண்டு, சமஸ்தான மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்'' என்றும் அவர் நிருபரிடம் கூறியிருக்கிறார்.

``மன்னவர்களின் சார்பிலே நின்று பணியாற்றுவதை ஏதோ ஓர் புனிதமான மதக் கடமை என்று அந்த இலாகாவில் உள்ள அதிகாரிகள் எண்ணுகிறார்கள்'' என்று கேலி செய்கிறார். ``இந்த விஷயத்திலே, வகுப்பு வாதமே கிடையாது! இந்து மன்னரானாலும் சரி, முஸ்லிம் மன்னரானாலும் சரி! மன்னர் என்றால் அவரை ஆதரிப்பது என்ற அளவிலே சமஸ்தான இலாகா வேலை செய்கிறது'' என்றும் ஷேக் அப்துல்லா வேதனையை வேடிக்கை கலந்த மொழியிலே தெரிவிக்கிறார். இந்த வேதனையுடன் மற்றோர் வேதனையும் ஷேக் அப்துல்லாவைத் தாக்கு கிறது.
* * *

``படைகளை அனுப்பி, நான் மலைஜாதி யினரை ஒடுக்கி, காஷ்மீரைக் காப்பாற்ற முடியும்- செய்கிறேன். ஆனால் அப்துல்லா! காஷ்மீர் மக்களின் ஆதரவைத் திரட்டி மக்களின் அணிவகுப்பை அமைக்க வேண்டியது உன் பொறுப்பு'' என்று பண்டித நேரு, ஷேக் அப் துல்லாவிடம் கூறினார். புதிய கொந்தளிப்பு ஏற்பட்டதும், காஷ்மீர் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்ட அப்துல்லா, இந்த அரிய யோசனையை யும் ஏற்றுக்கொண்டு, ஆவன செய்ய முனைந்தார். அதன் பலன் என்ன? வீண் பழி சுமத்தப்படுகிறது. அவர் மீது மனம் நொந்து இதனை அவர், சென்ற கிழமை கூறினார்.

``மக்களின் மனதுக்கு மகிழ்ச்சியூட்டி, புதிய நம்பிக்கை ஏற்படச் செய்வதற்காக, நான், பல காலமாகக் கூறிவந்த சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்பட்டேன். இதிலே முக்கியமானது, காஷ்மீரில் உள்ள ஜாகீர்தாரி முறையை ஒழிப்பது, இதன் பலனாக, ஏழை உழவர்களுக்கு நன்மையும், நியாயமும் கிடைக்கிறது. பண்ணையில் அடிமை களாகிப் பதை பதைத்து வாழ்பவர்களுக்குக் கொஞ்சம் சுகம் கிடைக்கும் திட்டம் இது. இதனை செய்த உடனே ஜாகீர்தார்கள் சீறினர். அந்தச் சீற்றத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்தியாவிலே சிலர், இந்தத் திட்டத்தை வகுப்பு வாதம் திட்டம் என்று கூறுகிறார்கள்- விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். நான் இந்துக்களைக் கெடுத்து முஸ்லீம்களுக்கு நன்மை தேடுகிறேன் என்றும் பழிசுமத்துகிறார்கள். ஏழை மக்களை ஜாகீர்தார்களின் பிடியிலிருந்து விடுவிக்க நான் முயன்றால், இப்படிப் பேசுகிறார்கள். இந்த அளவு நன்மையும் செய்யாவிட்டால் காஷ்மீர மக்களின் மனம் எப்படிக் களிக்கும்!'' என்று சோகத்துடன் பேசினார் ஷேக் அப்துல்லா.

ஜாகீர்தார்களில், பெரும்பாலானவர்கள் இந்துக்கள் உழவர்கள், முஸ்லிம்கள். - ஷேக் அப்துல்லா, இந்து- முஸ்லிம் என்ற நோக்கம் கொண்டவரல்ல- ஆனால் சீமான்களிடம் சிக்கிச் சீரழிவுபடும் ஏழையை காப்பாற்ற, ஜாகீர் முறையை ஒழிக்கலானார். இதற்கு, இந்தப் பழி!

இந்திய சர்க்கார், ஷேக் அப்துல்லாவின், இந்த நடவடிக்கைகளை எதிர்ப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற இதம் தரும் திட்டங்களை நிறைவேற்ற முடியாமற் போய்விட்டால் ``நான் பதவியிலிருந்து பயன் இல்லை! காஷ்மீர் பிரதம மந்திரி பதவியை ராஜிநாமச் செய்துவிடலாமா என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்'' என்று ஷேக் அப்துல்லா பத்திரிகை நிருபர் மாநாட்டில் பேசியிருக்கிறார். இப்போதுள்ள நிலையில், காஷ்மீரில் உள்ள சீமான்களின் மனதைப் புண்படுத்தவே கூடாது. காஷ்மீரத்தில் ஒரு நூறு ஜாகீர்தார்கள் இருந்துகொண்டு, `தர்பார்' செலுத்துகிறார்கள் என்றபோதிலும், இப்போது முறைகளை மாற்றி அவர்களைப் புண்படுத்தக் கூடாது, என்று அப்துல்லாவுக்கு இந்திய சர்க்கார் கூறுகின்றனராம். இவர்களின் மனம் புண்படக் கூடாது என்று இவ்வளவு அக்கறை காட்டுகிறதே இந்திய சர்க்கார். இவர்களின் பண்ணைகளிலே பாடுபடும் ஏழை அரிஜனங்கள் பல இலட்சம் பேர் உள்ளனரே. அவர்களிடம் அக்கறை காட் வேண்டாமா? - என்று ஷேக் அப்துல்லா கேட்கிறார். பண்டித நேரு சொன்னபடி, மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டுமானால், பொருளா தார சம்பந்தமாக, ஏழையை வாழவைக்கும் சம தர்ம திட்டத்தை நிறைவேற்றியாக வேண்டும்- இதற்கு இந்திய சர்க்கார் குறுக்கிடக் கூடாது, என்று ஷேக் அப்துல்லா கூறுகிறார்.

டில்லியில், காஷ்மீர் மகாராஜாவுக்கு ஏற்பட்டிருக்கும் செல்வாக்கு, இப்போது ஷேக் அப்துல்லாவையே வேதனையிலாழ்த்தக் கூடிய தாகி விட்டது. பட்டேலின் பிடியிலுள்ள சமஸ்தான இலாக்கா, மக்களின் உரிமைகள், நலன்களைவிட, மகாராஜாக்களின் சுகபோகத்தைக் காப்பதி லேயே, அதிக அக்கறை செலுத்துகிறது. எனவே, ஷேக் அப்துல்லாவைப் போல, சமதர்ம நோக்குடையவர்களின் போக்கை, எதிர்க்கிறது. இப்போதுள்ள நிலைமை முற்றுமானால், ஷேக் அப்துல்லா, பதவியை இராஜிநாமா செய்ய வேண்டியும் நேரிடக் கூடும் என்று தெரிகிறது மகாராஜா நீக்கப்பட வேண்டும்- அதிகாரம் மிக மிகக் குறைக்கப்பட வேண்டும்- சீமான்களின் ஆதிக்கம் ஒழிய வேண்டும்- சமதர்ம திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்- என்பவை ஷேக் அப்துல்லாவின் திட்டங்கள்.

இவைகளைக் கடந்த 17 ஆண்டுகளாகக் கூறியே அவர் காஷ்மீர் மக்களின் தலைவரா னார்- அவர்களின் நம்பிக்கையாளரானார்.

இன்று, பட்டேல் தர்பாரிலே காஷ்மீர் மகாராஜாவுக்கும், அவருடைய அலங்காரப் பொம்மைகளுக்கும் இடமும், செல்வாக்கும் கிடைத்திருக்கிறது. அப்துல்லா மீது சந்தேகமும், பழியும் சுமத்தப்பட்டு வருகிறது. அவருடைய மனக்குமுறல் ஓரளவுக்கு வெளிவந்திருக்கிறது. இதன் விளைவும், முடிவும் எவ்விதமிருக்குமோ! ஷேக் அப்துல்லா, ராஜிநாமா செய்துவிடக் கூடும் என்று எண்ணம் வலுத்துவருகிறது.

(திராவிட நாடு - 17.10.1948)