அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கதிரவன் கொட்டகையில்!
வீழ்ச்சியுற்றுக் கிடக்கும் ஒரு இனம் வீரவாழ்வை மீண்டும் பெற வேண்டுமானால், அதற்கு ஒரு மார்க்கம், கிளர்ச்சி, திராவிடநாடு, திராவிடர் கழகம், திராவிடர் என்ற எண்ணமும், அதை அடிப்படையாகக் கொண்ட கிளர்ச்சியுமே, தேங்கிக்கிடக்கும் நமக்குத் தென்றல், நமது தென்றல் அவர்களுக்குப் புயலாக இருக்கிறது! குற்றம் அவர்களின் உடல், உள்ள அமைப்பையொட்டியது. பாகும் தெளிதேனும் பாலும் பழமும் காய்ச்சல்காரனுக்கு இனிக்காது. குருடன் அறியான் நீலநிற வானத்திலே நின்றாடும் நிலவின் அழகை! இரு செவியும் கெட்டோனுக்கு இசை இன்பம் தெரியக் காரணமில்லை! பட்டமும் பதவியும் பெற, பரங்கியின் பாசத்துககாக, பங்கம் மலரினும் ஏற்றுக்கொள்ளும் தங்கக் குணமுடைய, அரசியல் சிங்கங்களுக்குப் பட்டம் ஒழிப்பு, பதவி வெறுப்பு, முதலியனவற்றைக் கேட்டலே, சித்தம் சோர்வடையும் இது சகஜம், இயல்புக்கு ஏற்றபடி எண்ணம் அமைவதும், எண்ணத்தையொட்டி செயல்முறை தீட்டப்படுவதும் முறையுங்கூட. மாளிகையிலே அமர்ந்து சாளரத்தின் வழியாகக் காணும்போது, மாலையிலே மலர்ச்சோலையிலே மதிமுகவதிகளைக் கண்டு களிக்கும் மந்தாகாச குண மன்னனுக்கு, மக்களின் மண்மனையிலே கிடக்கும் கோரக் காட்சிகளைக் காண மனம் இருக்குமா? மீன்களின் சிரிப்பிலே சொக்கி நாம், நமது சிந்தனைக்குத் தளை பூட்டிக்கொண்டு, செய்வதைத் திரம் இழந்து, அவர்களுக்குத் துதிபாடித் தூபமிட்டு நிற்போம் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களிடம், இன்று நிமிர்ந்து நின்று, நினைப்பும் நிலையும் இருக்கும் விதத்தை விளம்பினால், பரிதாபம், அவர்களின் முகம் வியர்த்துக் கண்கலங்கி உள்ளம் வாடி, உடல் ஆடிடாது இருக்குமோ! அந்தக் கூத்துதான் நடந்தது, கதிரவன் கொட்டகையிலே, சென்னையில் 17ஆந் தேதி.

கொட்டகையிலே நடைபெற்ற அக்கூத்தின் சூத்திரதாரி, ஆசிரியர் பி.பா.அவர்கள். மகிழ்ச்சி ததும்ப அக்காட்சியைக் கண்டிருப்பார். ஆஹா! கூட்டமென்றால் இப்படித்தானே இருக்கவேண்டும்? அழகான காட்சி! ஆனந்தமான காட்சி டாட்ஜ் காரும், வாக்சாலும், டாக்சியும் செவர்வேயுமாக வந்து நிற்கும் நேர்த்தியும், மோட்டார் ஓட்டி முன்னால் இறங்கிக் கதவைத் திறந்து இரண்டடி பின்னாலே தள்ளி நிற்க, சுற்று முற்றம் பார்த்துவிட்டுச் சுருள் மீசையை முறுக்கியபடியோ சுருட்டுப் புகையைச் சுருளாக வெளியே விட்டபடியோ, சொகுசாகச் சீமான்கள் இறங்கும் இலட்சணமும், அவர்கள் எப்பதவியில் எவ்வளவு நாள்கள் இருந்தனர் என்பதுபற்றி எண்ணி அவர்களிடம், பதவி முன்பணிவோர் குழையும் காட்சியும், எவ்வளவு இனிப்புடைத்து! இப்படிப்பட்ட கூட்டங்களை அந்தக் கிழவர் மூலைக்கு அனுப்பி விட்டு, சிறைப் பறவைகளையும், வறுமையாளர்களையும் கூட்டம் சேர்த்து கிளர்ச்சி நடத்துவேன். பேரிடுவேன், சிறைபுகுவேன், பட்டம் பதவி வேண்டேன் என்று கூறிவிடுகிறாரே இன்றல்வோ, எனது அருமைத் தலைவர்காள்! புச்சிசெட்டியாபளையப் பூமானே வருக! சர் ஆக வேண்டியவர்களே! வருக வருக! என்று கூறி இருப்பார் மனத்திற்குள்ளும், மாலை வேளைகளிலே உலவு வேர்மன மகிழப் பேசித் தமது காலைப் போதைக் கிழக்கு மார்க்கத்தைத் தேடிக்கொள்ளும் மாவீரர்களிடமும்.

அந்தப் பரம்பரைப் போக்குக்குப் பங்கம் விளையாதபடி பாதுகாக்க வேண்டித்தான் அன்ற பலமாகப் போலீஸ் பந்தோபஸ்து இருந்தது என்று கருதுகிறோம். பயமல்ல அதற்குக் காரணம்! அழைப்புப் பெற்றோர் வருக அல்லாதார் வெளியே செல்லுக, என்றனராம், நாட்டை இனி நடத்தப்போகும் தலைவர்கள்! விபரேடர் பத்திரிகையின் குறிப்பின்படி 60 பேருக்கு அதிகமாகவே கூடினராம் அங்கு! அதிகம் என்றே கூறுவோம். அவ்வளவு ஆற்றலுடையோர் கூறுவர் கூடினாலே போதும்.

ஏறுமெயில் ஏறிசெல்லும்
தீரமுக மொன்றே
ஏழை எளியோர் கானா
இன்பமுக மொன்றே
கூறுமதிகார மதைக்
கோருமுக மொன்றே
குன்றுநிதி கொண்டதனால்
குளிருமுக மொன்றே
மாறுபடு லோகமதில்
மருளாமுக மொன்றே
மந்திரிகளாக நகை
சிந்துமுக மொன்றே
ஆறுமுகம் போதுமினி யார்வருவர் மொன்றே
ஆர்தர்ஹோப் முன்னின்று
ஆடிவர லாமே!

என்ற திருப்புகழ் பாடித் திருப்தி பெற்றிருக்கலாம் அறுபது பேர் கூடினர், என்று அகமகிழும் அன்பர்கள், யாரைக் கண்டிக்கக் கூடினரோ, அவர் இந்த இலட்சணத்தைக் கெடுத்துப் பெருங்கூட்டத்தைச் சேர்த்துவிட்டதற்காக, அவரைத் தண்டிக்கக் கடமைப்பட்டவர்களத்ன்! ஆம், ஆறும் அறுபதும், பேரும் புகழும் தேடிக்கொள்ள ஊரார் அறியாத இடத்திலே உல்லாச வேலைக்காகக் கூடிய நிலைமை இருந்தபோது, நாடு அறியாது இவர்தம் நாட்டத்தை, இந்தப் பெரிய மனிதர்களின் பெருங்குணங்களைப் பற்றி, நாவாரப் பேசும் ஞாயிறு நோக்கிகளும், பிறரும், நலன் பல பெற்று அவர்களின் நிலை பற்றிய புலன் விசாரித்து வாழ்ந்துவந்த அந்த வளமான காலம் வரண்டுபோய், இருண்டுகிடக்கும் திராவிடத்திலே மீண்டும் ஒளி கிளம்பச் செய்தாகவேண்டும் எனற உறுதியைத் திரியாக்கி, உழைப்பை நெய்யாக்கி, அறப்போரிலே மாண்ட மாவீரர்களின் மண்டை ஓடுகளையே அகல்களாகக் கொண்டு, விடுதலை வீரர்கள் விளக்கேற்றத் தொடங்கியதும், இருள் இறந்துபடவே, இன்ப வாழ்வுக்காக இனிது வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்டு ஒரு சிறுகும்பல் கூத்திடுவது நாட்டினருக்குத் தெரியவந்தது. எனவே அக்கூட்டம், தன் குட்டு வெளிப்படுகிறதே என்று கூவுகிறது. கலக் கத்தால், காலம் மாறுகிறதே என்ற அச்சத்தால்! கதிரவ்ன் கொட்டகையிலே கூடினவர்களின் கவலை எல்லாம் கும்பலுக்கு இடந்தரக் கூடாது என்பதுதான் நல்ல நோக்கம்!

ஆந்திரநாட்டு அண்ணல் பு.ராமச்சந்திர ரெட்டியார் அவர்களைக் காணவேண்டுமென்று, நமது மக்கள் பல காலமாக ஆவலாக இருந்திருப்பார்கள், ஏன்? திருவாரூர் மாநாட்டிலே கண்டது அவருடைய முகத்தை, அதற்கு பிறது, கண்டோமில்லை இதுவரை தர்மம் நசித்து அதர்மம் மேலோங்கும் போது மட்டுமே நாம் அவதரிப்போம் என்றாராமே பரந்தாமன். அதுபோல் கட்சியின் புனருத்தாரணத்திற்கு மட்டுமேதான் இத்தகைய மாவீரர்கள், முன் வருவர்! மற்ற நேரத்திலே மாடும் மனையும் மக்களும் சுற்றமும், வேலையும் பிறவும், மலை போலக் குவிந்துவிடும், என செய்வர், எங்குச் செல்வர்!

சண்டே அப்சர்வர் ஆசிரியரின், பெருமிதமான வெற்றி இது என்றும் நாம் கூறுவோம். அரக்கர்கள் செய்யும் கொடுமையால், அரிபரந்தாமா! நாங்கள்படும் துயரம் ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனாலும கூற முடியாது என்று தேவர்கள் வேண்ட, அரைகடலிலே ஆலிலை மேல் அறிதுயிலிலிருந்து அரி கண்களைத் திறந்து, திருவாய் மலர்ந்தருளுகிறார். தேவாதி தேவர்களே! அஞ்சற்க! அபயம் அளித்தேன்! விரைவிலே நாம் ஸ்ரீமகாலட்சுமியுடன் பூலோகத்திலே அவதரித்து சத்யத்தை சட்சித்து அசத்தியத்தை அழிப்போம், சென்று வாருங்கள் என்று.

அதுபோல நண்பர் பி.பா.வின் பஜனைக்கு, அறிதுயிலிலிருந்த அந்தத் தலைவர்கள், மனம் இரங்கியது, ஆசிரியரின் வெற்றிதான். அது வரையிலே அவர் திருப்தி பெறலாம்!

நாம் அந்தப் பெருந்தலைவர்களைக் குறை கூறுகிறோம் என்று எவரும் எண்ணற்க! அன்றைய கூட்டத்திலே, அன்பர் பு.ராமச்சந்திரர் ஆற்றிய உரையை ஆதாரமாகக் கொண்டே நாம் இதுபோலக் கூறினோமேயன்றி வேறில்லை.

We have been inert from
The party point of view

என்பது, புனருத்தாரணக் கூட்டத்தில் தலைமை தாங்கிய பூமானின் பொன்மொழி! வாய்மையை மறவாத அவருடைய குணத்தை நாம் பாராட்டுகிறோம்.

கட்சியைப் பொறுத்த மட்டிலே நாம் இதுவரை மந்தமாக, இருந்து வந்துவிட்டோம் என்பது அவருடைய வாசகத்தின் பொருள்! புன்னகையை அடக்கிக்கொண்டு, மேலும் கொஞ்சம் கேளுங்கள் பிறகு ஒரே அடியாகச் சிரிக்கலாம்.

யாரைக்குறை கூறுவது? எல்லோரையும்தான்! தலைவர்கள் எதிரிலே தற்புகழ்ச்சி செய்வதும் தாளம் போடுவதும், தலைமறைந்ததும் குறை கூறுவதும் குண்டுணி பேசுவதுமாக இருந்தவர்களை எல்லாம் குற்றங்கூற வேண்டியதுதான். கட்சியினால் பலன்களைப் பெற்றுக்கொண்டு, அவை கட்சியினால் கிடைத்தவை என்று ஒப்புக்கொள்ளவோ, மற்றவர்களுக்கும் அவை கிடைக்கச் செய்வோம் என்ற எண்ணங் கொள்ளவோ மனமின்றி இருந்தவர்களை எல்லாம் குறைகூற வேண்டியததுன்.

இந்தப் படப்பிடிப்பிலே, நாடு காணும் முகங்கள், எவை எவை! அவைகளை நம்பித்தான், புனருத்தாரணம் ஆரம்பமாகிறது எவ்வளவு பொருத்தம், எவ்வளவு முறை!

ஓ! இந்தப் படப்பிடிப்பிலே, பெரியாரையும் சேர்த்துத்தான் இருப்பார் தலைமை பூண்ட தனவான், என்று கூடு தேடும் குருவிக் கூட்டம் கூவும், அந்தச் சந்தேகத்திற்கு இடம் வைக்காதபடி, அன்பர் ராச்சந்திரரெட்டியார். ஈ.வெ.ரா.விடம் எனக்குப் பெருமதிப்பு உண்டு. கட்சியின் பெருந் தலைவர்களிலே அவர் ஒருவர் என்றும் கூறினார். சுயநலமிகளுக்குச் சூடும் தந்தார், தளராது உழைக்கும் பெரியாருக்குத் துதியும் பாடினார். அது பிடிக்குமா சர்.பாத்ரோவுக்கு கட்சியினால் பலன் பெற்றவர்கள், பிறருக்கு எவையும் கிடைக்கும்படிச் செய்ய மனமில்லாதவர்கள், கட்சி வேலையைக் கவனியாது கண்மூடி மௌனியாகிக் கிடந்தவர்கள். என்றெல்லாம் புட்சி ரேட்டி பாளையத்தார் பேசுவது நம்மை குறித்துத்தானோ, என்று சர் பாத்ரோ எண்ணியிருந்திருக்கக் கூடும், பட்டமும் பதவியும் பெற்ற பழங்கிழவரல்லவா அவர். எனவே வெகுண்டார் நாவை ஏவினார், வசையைக் கக்கினார், இந்த வயோதிகப் பருவத்திலே.

சுயமரியாதை இயக்கமாம், சுயமரியாதை யாருக்கய்யா இல்லை. சுயமரியாதை! உலகிலே வேறு எங்கேனும் உண்டா இதுபோல் சுயமரியாதைக் கட்சி என்று கோபித்துக் கூறினாராம். கூறிவிட்டு ஒரு அருமையான நகைச்சுவைக்கு எந்நாட்டு ஏடுகளிலும் காணக்கிடைக்காத ஒரு வாசகத்தை வீசினாராம் இந்த ராமசாமி நாயக்கருடைய வேலைத் திட்டம் இருக்கிறதே, இதனால் மன எழுச்சி பெற்றவர்கள் ஒருவராவது உண்டா? என்று கேட்டாராம் எவ்வளவு உயர்தரமான இடத்திலே உதித்திருக்கிறது இந்த உணறல்! என்ற உண்மையிலேயே ஆச்சரியப்படவேண்டி இருக்கிறது.

மன எழுச்சி, சுலபமாக ஏற்படக்கூடியதல்ல! மதிவேண்டும், முதலில் எண்ணமும் வேண்டும் பெயரியார் ராமசாமி, ஞானப்பாலை, உண்டவரல்லர். எலும்பை பெண்ணுருவாக்குவதுபோல, முதலை உண்ட பாலகனை எழுப்பியதுபோல, திராவிட இயல்பை இழந்தவர்களை வீரர்களாக்கவோ பதவிப் பாம்பினால் தீண்டப்பட்டவரை உயிர்ப்பித்துப் பணியாளராக்கவோ, அவரால் முடியாதுதான்! மரக்கட்டைகளைச் சித்திரமாகச் செதுக்கி, வர்ணம் தீட்டி, வகை வகையான ஆடை அணி பூட்டி உயிருள்ளதுபோலச் செய்ய முடியுமே தவிர, உயிரையே ஊட்ட முடியாது. மக்கட் பிறவியிலும் மரக்கட்டைபோல, மன எழுச்சிக்கே இராயக்கற்றவர்கள் உண்டு பெரியாரின் பெருந்தொண்டு அவர்களை நல்வழிப்படுத்தவில்லை. மக்கள் மன எழுச்சி பெற்றனர். இன எழுச்சியை இன்று காண்கிறோம். பெர்ணாம் பூருக்கும் டெல்லிக்கும் இடையே உள்ள இருப்புப் பாதையே இகலோக சுகசாதனம் என்ற கருதும், சர்.பாந்ரோ இதனை அறியார்! அவர் நாடு சுற்றாப் பெரியார்! நாம் அறிவோம், நாடு அறியும், பெரியாரின் பெருவெற்றி எதுவெனில், மக்களிடை அவர் உண்டாக்கிய மன எழுச்சிதான்!

17.09.44 லே கூடினரே அவர்களுக்கு நினைப்பூட்டுகிறோம். ஆரியம் அலற, திராவிடம் மலர, ஊர் - குடிகெ உழைக்கும் உலுத்தமுறை உலர ஆரம்பமாகி, மதி மணம் வீசி, மாற்றானுக்கு இடங்கொடேல் என்ற குணம் நாட்டிலே தோன்றி இருப்பது. அந்த மன எழுச்சியினால் தான் தமிழர் பெரும்படைகள் உலவியதும், தமிழர் அறப்போர் தொடுத்ததும், தவம் செய்கோலத்தினர் தாயகப் பணிக்குத் திருப்பியதும்! அந்த மன எழுச்சியினால் தான் தாய்மார்கள் சிறைக்கோட்டம் புகுந்ததும், பால்மணம் மாறாப் பச்சிளங் குழந்தைச் சிறையிலோ தொட்டிலில் கிடந்ததும் அந்த மன எழுச்சியின் பாற்பட்டவைகளே, மனையும் மகிழ்வும் துறந்து களியும் கல்லும் கலந்து உண்டு கட்டுக்காவலில் காளைகள் கிடந்ததும், மன எழுச்சியினால், தாளமுத்துவும் நடராஜனும் மாண்டது அந்த மன எழுச்சியினால்தான். கருப்புக் கொடிகள் தமிழகமெங்கும் பறந்திடக்கண்டு கண்டறியாதன கண்டோம் என்று காங்கிரசார் கதறியது இந்த மன எழுச்சியைக் கண்டதன் விளைவுதான். நாடெங்கும் நற்றமிழர் கூட்டம் கிளம்பிற்று ஊரெங்கும் உரையாடல் பெரியாரின் பெருந்தொண்டுபற்றியே, ஏடுகளெல்லாம் இது பற்றியே எழுதலாயின. எட்டாத இடமில்லை, கிட்டாத கீர்த்தி இல்லை, தொட்டது துலங்கிற்று, பட்டமரம் துளிர்த்தது, பகைவர் குளிர்கொண்டனர். அந்த எழுச்சியினால், சர்.பாத்ரோ கேட்கிறார், யாராவது பெரியாரின் திட்டத்தால் மன எழுச்சி பெற்றனரா என்று!

நாம் அறைகூவி அழைக்கிறோம், இந்த வாசகத்தை மக்களின் மாபெரும் கூட்டத்திலே, சர்பாத்ரோ, வந்துகூறிப் பார்க்கும்படி எவ்வளவுதான் கசப்பு, பட்டம் பதவி போய்விடுவதால் ஏற்படினும் இவ்வளவு கீழ்த்தரமான பேச்சு, சர். பாத்ரோவிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் ஆயாசப்படுவார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் ஆயாசம் அறிவை அறவே அழிக்கும் என்று நாம் நினைக்கவில்லை.

இப்போது, கட்சியிலே, இவர்கள் புகுத்தப்போகும் புதுமுறுக்கு எந்த அளவுக்கு வேலைசெய்யும் என்பது பற்றிய ஆரூடத்திலே நமக்கு அக்கரை இல்லை. அன்று வாக்களிக்கப்பட்ட 2045 ரூபாயும், அடுதது சேலத்திலே அவர்கள் கூட்டப் போவதாகக் கூறும் மாநாடும், புதுத் தலைவர் பிரஷ்டையும், மதத்தைக் கலவாத அரசியல் வேலையும் கட்டுப்பாடு பிறவும், எப்படி இருக்கும் என்பதை நாம் யூகித்துக் கொள்ள முடியும்.

தேர்தலால் வருவதல்ல தலைமைப் பதவி. மக்ளின் அன்பும் ஆதரவும் அதற்கு வேண்டும் என்று மதிமொழி புகன்றார் அன்பர் பு.இராமசந்திரர், அம்மொழி வழிபார்க்கும் எவரும் தமக்கு முன்னால், வெகுதூரத்திலே ஓர் உருவம் தடி ஊன்றிக்கொண்டு, சால்வை நெகிழ, தாடி அசைய, நடந்து செல்வதைக் காணலாம்.

பட்டம் பதவிகளை விட்டுவிடுவதென்பது, கேவலம் காங்கிரசின் செயலைக் காப்பி அடிப்பது. காங்கிரஸ் இயக்கமோ கண்டனத்துககு ஆளாகிவிட்டது என்று கதிரவன் கொட்டகைக் கூட்டத்திலே. தலைவர் கூறினாராம். காங்கிரஸ் செயலைக் கேவலமென்று கருதுவதோ, அவர்களின் முளையைப் பின்பற்றுவது பேதைமை என்று பேசுவதோ, காங்கிரஸ் கண்டனத்துக்கு ஆளானது என்று கூறுவதோ, மாளிகைக்கு பேச்சு, மக்கள் மன்றத்திலே அது நிலைக்காது.

காங்கிரஸ் ஆங்கிலேயரைக் கண்டிக்கிறது, நாம் காங்கிரசல்லாதார். எனவே நாம் ஆங்கிலேயனின் அடிவருட வேண்டும் என்று கூறுவது திராவிடப் பண்பை இழந்தோரின் பேச்சு என்போம். காங்கிரஸ் பட்டம் பதவி கூடாது என்று கூறுகிறது. நாம் காங்கிரசின் விரோதிகள். எனவே நாம் பட்டத்தைச் சூட்டிக்கொண்டு பதவியிலே புரளத்தான் வேண்டும் என்று தர்க்கிக்கிறாரா. அன்பர். பு.இரமச்சந்திரர் என்று கேட்கிறோம் உன்று கூறுவோம் அவருக்கம் அவருடைய மனப்போக்கை ஆதரிப்போருக்கும், காங்கிரசைக் கண்டிக்க ஒரு கூவும் படை தேவை, அது நாம்தான். இதற்காகச் சர்க்கார் நாம் கேட்காமலே கூட நமக்குப் பட்டம் அளிப்பர். பதவி தருவர், அவைகளைப் பெற்று, விருந்துபசாரத்தின்போது பார்ப்பனரல்லாதாரின் பரிதாபகரமான நிலைமையைப் பற்றிப் பேசிவிட்டு, பின்னர் பதஞ்சலி சாஸ்திரியாரோ, பங்கஜவல்லித் தாயாரோ கேட்டுக் கொண்டதற்காக மனமிளகி ஆரியவேத இதிகாசாதிகளை ஏற்றுக்கொண்டு, சடங்கு சம்பிரரதாயங்களிலே ஈடுபட்டு வருவோம் என்று கருதுபவர்களுக்கு இனிப் பொதுவாழ்க்கையிலே ஈடுபட்டு வருவோம் என்று கருதுபவர்களுக்கு இனிப் பொதுவாழ்க்கையிலே இடமில்லை! சந்தேகமிருந்தால் பரீட்சித்துக்கொள்ளலாம், செலவு சற்று அதிகமாகும்! சொல்லும் செயலும் உன்றாக இருக்கவேண்டும், அரசியலைச் சூதாட்டமாக்கக் கூடாது, ஆங்கிலேயனின் அடிவருடக் கூடாது. இன எழுச்சிக்கான வேலைசெய்தல் வேண்டும் இவைகளே, திராவிடம் கேட்பது - எதிர்பார்ப்பது.

நமக்கும் காங்கிரசுக்கும் இரண்டே அடிப்படை மாறுபாடுகள்
1. பார்ப்பனிய ஒழிப்பு
2. திராவிட நாடு தனிநாடாதல்

இவ்விரண்டிலே பன்றி மற்றவற்றிலே மாறுபாடு இல்லை. நாம் சர்க்காருக்குக் கங்காணிகளாகிக் காங்கிரசை எதிர்ப்பவர்களல்லர். நாம் திராவிடக் காங்கிரஸ் என்றால் அதிலேயும் குற்றமில்லை. நாம் திராவிடர் நமக்குத் தேவை திராவிடநாடு, இதனை நாம் திராவிடர் கழகமூலம் ட்கிறோம். போருக்கும் கிளர்ச்சிக்கும் புறம்பாக இருக்கவேண்டுமென்று விரும்பும் பூமான்களும் சீமான்களும் கதிரவன் கொட்டகையிலோ காமக் கோட்டத்திலோ, பதவிவுரியிலோ கூடட்டும, வெள்ளையரின் வரம் தேடட்டும், வாழட்டும், நம்மிடம் என் வம்புக்கு வரவேண்டும் என்றே கேட்கிறோம்.

(திராவிடநாடு - 27.08.44)