அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கட்டக்காரர் பிரிவு

கோவைக்கோமான், திராவிடத் திலகம், பழைய கோட்டைப் பட்டக்காரர், நல்லதம்பி சர்க்கரைமன்றாடியார், ஈரோட்டிலே தமது நண்பர் முருகேச முதலியார் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்த நேரத்திலே, 27-8-45 இரவு 9.30 மணிக்குத் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு நோயால் மன்பதையை விட்டு மறைந்தார் என்ற மனதைக் கலக்குஞ் செய்திகேட்டுத் திடுக்கிட்டோம். சிந்தை குழம்பிற்று. கண் கலங்கிற்ற. மணக்கோலம் காணச் சென்றமன்றாடியார் பிணக்கோலமானார் என் றசெய்தி கேட்டதும் எக்கமும் துக்கமும் எம்மைக் கப்பிக் கொண்டது. தமிழகம் தனது வள்ளலை இழந்து விட்டது! கோவை தனது கோமானைப்பறி கொடுத்துவிட்டது! விவசாய உலகம் தனது விற்பன்னரை இழந்துவிட்டது! என் செய்வது?

அன்பால் அனைவரையும் பிணைத்துக் கனிமொழி பேசிச், செல்விருந்தோம்பி வருவிருந்தை எதிர் நோக்கி நிற்கும் பண்டைத் தமிழரின் பண்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியவர் எம் அண்ணல் நல்லதம்பியார். பழைய கோட்டைக்கு யார் சென்றபோதிலும், ‘நீயார்? எங்கே வந்தாய்? எதற்காக வந்தாய்?’ என்பனபோன்ற நாகரிகமற்ற கேள்விகள் கேட்கப்படுவதே கிடையாது. முதலில் உபசரிப்பும் விருந்துமே நடைபெறும். அதன்பின்னர் தான் அவர்கள் அங்கு சென்றமைக்குரிய காரணம் வினவப்படும்.விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் முறையைப் பழைய கோட்டைக்குச் சென்றுதான் கற்றுக் கொள்ளவேண்டும். சுருங்கச் சொல்ல வேண்டுமானால், பண்டைத் தமிழரின் நாகரிகத்திற்கு உறைவிடமாக விளங்குவது கோட்டை ஒன்றுதான் என்பார்.

மன்றாடியார், சமுதாயத்துறையிலும், அரசயில் துறையிலும் போதிய பங்கெடுத்துப் பணி பல புரிந்தவர். சென்னை அரசியல் மன்ற உறுப்பினராகவும் (M.ஃ.அ.,) ஜில்லா போர்ட் தலைவராகவும், நில அடமான பாங்கின் தலைவராகவும், இன்னும் பல ஸ்தாபனங்களுக்கு நிர்வாகியாகவும் பல ஆண்டுகள் இருந்து பொதுநலப் பணியில் ஈடுபட்டுப்புகழ் பெற்றவர்.

திராவிட இயக்கத்திற்கு ஒருதிரு விளக்காக விளங்கும் இளைய பட்டக்காரர் தோழர் அர்ச்சுனன் அவர்களைப் பெற்றத் தந்த பீடுடைப்பெருந்தகையாரின் மறைவு, உண்மையிலேயே ஈடு செய்யமுடியாத ஒரு பெரும் நஷ்டமாகும். மலர் முகம் படைத்த மன்றாடியாரே, மறைந்தீர்! எம்மைப்பிரிந்தீர்! மன்றாடியார் மறைந்தீர்! எம்மைப் பிரிந்தீர்! மன்றாடியார் மறையினும் அவருடைய மங்காப்புகழ் ஒளி தமிழகத்திலே நின்றுலவி, நமக்க நல்வழிகாட்டுமாக. தங்கள் வேந்தனை இழந்து வேதனையுறும் கோவைப் பெருங்கடி மக்களுக்கும், தந்தையை இழந்து தவித்துப் புலம்பும் அவரதுதனயர் நல்ல சேனாதிபதி மன்றாடியார் முதல் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அவர்களின் துக்கத்தைத் திராவிடம்பங்கு கொள்கிறது. மறைந்தவர் அவர்களுடைய மன்றாடியாரல்ல். திராவிடரின் மன்றாடியார். எங்ஙனம் தாங்குவோம் துக்கத்தை! என்செய்வோம்!

(திராவிடநாடு - 2.9.1945)