அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கட்டாய இந்தி வேண்டாம்!

1. தமிழ் மக்களுக்கு அவர்களின் பிறப்பு மொழியாகிய தமிழ் மொழி இருக்கிறது. எனவே அயல்மொழியான `இந்தி'யைக் கட்டாயப் பாடமாக்க வேண்டாம்.

2. தமிழ் மொழி, தொன்மையும்- இனிமை யும் வாய்ந்து, இலக்கிய இலக்கண வளம் நிறைந்தது, கலைச் செல்வமும்- நாகரிக மேம்பாடும் பெற்றுள்ளது. எனவே, இவை எதுவும் அமையப் பெறாத இந்தி மொழியைத் தமிழ் மக்களுக்குக் கட்டாயப் பாடமாக்க வேண்டாம்.

3. இந்தி மொழி, சமஸ்கிருதத்தின் மறுவடிவம், சமஸ்கிருதம் ஆரிய நாகரிகத்தை முதன்மையாகக் கொண்டது. இந்தி மொழி கற்க வேண்டுமென்பதன் நோக்கம், தமிழ் நாட்டில் ஆரிய நாகரிகத்தைப் பரப்பவேயாகும். தமிழ் மக்களுடைய நாகரிகம், வேறு மொழியாளரின் நாகரிகங்களைவிடப் பன்மடங்கு சிறந்ததெனப் பற்பல பேரறிஞர்களால் பாராட்டப்பட்டது. எனவே, தமிழ் மக்களின் நாகரிகத்தைச் சிதைத்து, ஆரிய நாகரிகத்தையே தமிழ் நாட்டில் புகுத்தும் இந்தி மொழியைத் தமிழ் மக்களுக்குக் கட்டாயப் பாடமாக்க வேண்டாம்.

4. தமிழ் மக்கள் தனியரசு கோருகின்றனர். தனியரசு ஏற்பட்டதும், தமிழ் நாட்டில் தமிழ் மொழியே அரசியல் மொழியாகத் திகழும். எனவே, இந்திமொழியைத் தமிழ் மக்களுக்குக் கட்டாயப் பாடமாக்க வேண்டாம்.

5. தமிழ்நாட்டுக்குப் புறம்பான வடநாட்ட வரின் தொடர்புக்கு ஒரு பொதுமொழி வேண்டு மென்றால், அதற்கு இப்போது இரு சாராருக்கும் தெரிந்த ஆங்கிலமே போதுமானது. எனவே அதன் பொருட்டாக இந்தி மொழியைத் தமிழ் மக்களுக்குக் கட்டாயப் பாடமாக்க வேண்டாம்.

6. இந்தி மொழியைக் கற்றுக் கொண்டால், இந்த கண்டத்துக்கு அப்பாலுள்ள அமெரிக்கா- ஐரோப்பா முதலான நாடுகளில் இருப்பவர் களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளவோ- தொடர்பை உண்டாக்கிக் கொள்ளவோ முடியாது. அதற்கும் ஆங்கிலம்தான் துணை புரியும். எனவே, தமிழ் மக்களுக்கு இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டாம்.

7. மாணவர்களுக்கு மூன்று மொழிகளை அதாவது தமிழ்- ஆங்கிலம்- இந்தி முதலான மொழிகளைக் கட்டாயப் பாடமாக்குவது அவர் களின் படிப்புக்கு, அவர்களால் தூக்க முடியாத சுமையை அவர்கள் தலைமீது ஏற்றுவதாகும். எனவே, தமிழ் மாணவர்களுக்கு இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டாம்.

8. ஒரு மொழியையே பேசிவரும் ஒரு நாட்டவரிடையே பலவகைப்பட்ட பிளவுகளும், சச்சரவுகளும் காணப்படும்போது, பல மொழி களைப் பேசிப் பல்வேறு கொள்கைகளுடன் வாழும் பல பகுதியினரையும் ஒரு பொது மொழி கற்பதனால் ஒற்றுமையாக்கி விடலாம் என்று கருதிப் பாடுபடுவது, `உமிகுற்றிக் கைசலித்த' பான்மையாக முடியுமல்லது, அதனால் யாதொரு பயனும் விளையாது. எனவே, தமிழ் மக்களுக்கு இந்தி மொழியைக் கட்டாய பாடமாக்க வேண்டாம்.

9. தென்னாட்டவர் இந்தி கற்று விட்டால், வடநாட்டில் உத்தியோகம் பார்க்க முடியும். இல்லையேல் முடியாதென்றும் கூறப்படுகின்றது. இக்கூற்றுக்குப் பொருளே இல்லை. மாகாணங்கள் தனித் தனியாகப் பிரிய வேண்டுமென்ற கொள்கை அசைக்க முடியாததாகி விட்டது. இந்த நிலையில் வடநாட்டில் உத்தியோகம் பெறக் கூடியவர்கள் இருக்க முடியுமா. யாரோ ஒருவர், இப்போது வெளிநாட்டுத் தூதுவர்களாக இருப்பது போல் இருக்கும் நிலையே மாகாணப் பிரிவினை ஏற்பட்ட பின் இருக்கும் இந்த நிலை ஏற்படும் போது (ஏற்பட்டே தீரும்) தென்னாட்டு மாணவர்கள் அனைவரும் இந்தி கற்பதால் ஏற்படும் பயன் ஒன்றுமே இல்லை. எனவே, தமிழ் மக்களுக்கு இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டாம்.

10. தமிழ்நாட்டில் இந்தி கட்டாயப் பாட மாகக் கூடாதென்பதைத் தமிழ் மக்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே, ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறை சென்றும், இரு தமிழ் இளைஞர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தும் தெரிவித்து, அதனை விருப்பப் பாடமாக்கும் நிலையினை அரசாங்கத்துக்கு உண்டாக்கி இருக்கின்றனர். எனவே மீண்டும் தமிழ் மக்களுக்கு இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டாம்.

11. தமிழ்நாட்டில் இந்தி கட்டாயப் பாடமா வதை எதிர்த்துத் தமிழ் நாட்டின் பேரறிஞர்களான மறைமலை அடிகளாரும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும் தங்கள் கருத்தைத் தெரிவித்திருப்ப தோடு, இந்தியன் சோஷியல் ரிபார்மர்' என்ற தாளின் ஆசிரியர் தோழர் நடராசன் அவர்களும், டி.ஆர். வெங்கட்டராம சாத்திரியாரும், டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரும், டாக்காப் பல் கலைக் கழகத் துணைத் தலைவர் இராமேசு சந்திரமஜும்தார் அவர்களும் இன்னும் பல மொழி வல்லுநரும் உலக அனுபவம் பெற்றவர் களும் தங்களின் ஆணித்தரமான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர். எனவே, தமிழ் மாணவர்களுக்கு இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டாம்.

12. காந்தியடிகளின் சீடர்களில் குறிப்பிடத் தக்கவரான தோழர் வினோபாபாவே அவர்கள், வடநாட்டிலுள்ளவர்கள் தமிழ் மொழியை அவசியம் கற்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள காந்தியடிகளின் சீடர்கள் எவரும் தோழர் வினோபாபாவே கூறிய கருத்தை ஆதரித்ததாகத் தெரியவில்லை. இவர் களுக்குத் தங்கள் தமிழ் மொழி வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் விருப்பமோ, ஆர்வமோ இருப்பதாகவுந் தெரியவில்லை என்ற இந்த அசைக்க முடியாத அடிப்படைக் காரணங்களை எடுத்துக்காட்டியே தமிழ்நாட்டில் இந்தி மொழியைக் கடடாயப் பாடமாக்க வேண்டாம் என்று கூறுகின்றோம்.

எனவே, சென்னை அரசாங்கம், இங்குக் கூறப்பட்டுள்ள காரணங்களைப் புறக்கணித்துத் தமிழ் மக்கள் விரும்பாத இந்திக் கட்டாயக் கல்வி முறையைத் தமிழ் மாணவர்கள் தலையில் சுமத்துமானால், அது, தமிழ் மக்களை வலிந்து சவாலுக்கு இழுப்பது போலாகும் என்பதைச் சென்னை அரசாங்கத்துக்குக் கூறி, வேண்டாம் இந்த விரும்பத்தகாத திட்டம். விட்டுவிடுங்கள் என்று எச்சரிக்கிறோம்.

(திராவிட நாடு - 11.7.1948)